உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Monday, November 15, 2010

குழந்தைகள் பற்றிய எதிர்ப்பார்ப்புகளை நாம் வளர்த்துக் கொள்வது சரியா?

எல்லா பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றிய கனவுகள் உண்டு. அதற்காகவே அல்லும் பகலும் அயராது பாடுபடுபவர்களும் உண்டு. நான் பேசிப்பார்த்த வரையில் தன் குழந்தை ஓர் டாக்டராக, சாப்ட்வேர் என்ஜினியராக, ஐ.பி.எஸ் தேர்வு பெற்ற போலிஸ் அதிகாரியாக, ஓர் கலெக்டராக பிற்காலத்தில் உருவாக வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களே பெரும்பான்மையாக உள்ளனர். சிறுவயதில் நி..றை..ய சாப்பிடும் கொழுகொழு குண்டு குழந்தையாக தன் குழந்தை இருக்க வேண்டும் என நினைக்காத பெற்றோர்கள் மிக குறைவு. எல்லா போட்டிகளிலும் கலந்து கொண்டு தன் குழந்தை அனைத்திலும் முதல் பரிசே பெற வேண்டும் என எண்ணாத பெற்றோர்களே இல்லை எனலாம்.

ஒரே குழந்தை கொண்ட பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் எல்லை கடந்ததாக உள்ளன. ஓர் தாய் தன் மகனை பாட்டு, நடனம், யோகா, கராட்டே, கீ போர்டு, கையெழுத்து, டென்னிஸ் என இன்னும் பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பிக் கொண்டிருப்பதை பெருமையாகவும் மகன் மீது தனக்குள்ள அக்கறையின் வெளிப்பாடாகவும் கூறிக்கொண்டிருக்கிறார். அப்பையனுக்கு அதிகபட்சம் 9 வயதிருக்கலாம். இந்த வயதில் இவையெல்லாம் சுமையாக இருக்குமே தவிர சுகமாக இருக்க வாய்ப்பில்லை. வெகு விரைவிலெயெ இவற்றின் மீதெல்லாம் வெறுப்பு ஏற்பட்டு நான் எந்த பயிற்சி வகுப்புக்கும் செல்ல மாட்டேன் என அப்பையன் கூற வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பெற்றோர்களின் நேரப் பற்றாக்குறை காரணமாக சகோதர சகோதரிகளைக் கொண்ட குழந்தைகள் இது போன்ற தொந்தரவுகளிலிருந்து ஓரளவு தப்பித்துக் கொள்கிறார்கள்.

பெற்றோர்களுக்கு என்ன அனுபவங்களும் விஷய ஞானங்களும் உள்ளனவோ அதைப் பொறுத்தே அவர்கள் தங்கள் குழதைகள் பற்றி ஏற்படுத்திக் கொள்ளும் எதிர்பார்ப்புகளும் அமையும். இவ்வுலகில் தனக்கு தெரியாத விஷயங்களை தன் குழந்தை மீது எந்த பெற்றோரும் திணிக்க வாய்ப்பே இல்லை. நல்ல விஷயங்களுக்கும் இதுவே விதி. டாக்டர், என்ஜினியர், போலிஸ் அதிகாரி, கலெக்டர் போன்ற உத்தியோகங்களெல்லாம் அனைவருக்கும் தெரிந்தவை அதனாலேயே அதையே அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கான குறிக்கோளாக கொள்கிறார்கள். ஆனால் அதைவிட தெரியாத, அதிக சம்பாத்தியம் கொடுக்கக்கூடிய, மதிப்பும் மரியாதையும் வாய்ந்த எத்தனையோ உத்தியோகங்கள் இந்த உலகில் உள்ளன. உங்களுக்கு அவையெல்லாம் தெரியாது என்பதற்காக உங்கள் குழந்தை அவ்வுயர்ந்த உத்தியோகங்களை அடையக்கூடாதா?

ஓர் தந்தை தினமும் தன் மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவது வழக்கம். வகுப்பறைக்குள் சென்று புத்தகப்பைகளை வைத்துவிட்டு என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள வகுப்பறையை நோட்டமிடுவார் தந்தை. ஒரு நாள் வகுப்பறை சுவர்களில் நான்கு அட்டைகள் ஒட்டப்பட்டிருந்தது. அதில் பல மாணவ மாணவிகளின் பெயர்கள் எழுதப்பட்டு அதற்கு நேராக ஒவ்வொரு மாதத்திற்கும் உரிய கட்டத்தில் புள்ளிகள் வைக்கப்பட்டிருந்தன. சில மாணவ மாணவிகள் அதிக புள்ளிகளையும் பெற்றிருந்தனர். தந்தை தன் மகன் பெயரை நான்கு அட்டைகளிலும் தேடினார். எதிலும் அவர் மகன் பெயர் இல்லை. இவ்வட்டைகள் மாணவர்களின் எதோவொரு செயலை குறிப்பதாக இருக்கலாம். சிறப்பாக செய்துள்ளவர்களுக்கு புள்ளிகள் அளித்து பாராட்டுகிறார்கள் போல், நம் மகன் அதில் இடம் பெறவில்லை ஆயினும் மகனிடம் இதுபற்றி கேட்க வேண்டாம். அவன் மனம் கஷ்டப்படும் என தனக்குத்தானே பேசிக்கொண்டு தந்தை சென்று விட்டார். அதன் பின் ஒவ்வொரு நாளும் அவ்வறிவிப்பு அட்டைகளை பார்ப்பது அவருக்கு வழக்கம். அப்படி பார்த்துக்கொண்டிருக்கையில் சில மாதங்களுக்கு பிறகு ஒரு நாள் திடீரென அவர் மகன் பெயர் ஓர் அட்டையில் கடைசியாக எழுதப்பட்டு இருந்தது. பெயருக்கு நேராக ஓர் புள்ளியும் வைக்கப்பட்டு இருந்தது. அதைப் பார்த்து மகிழ்ந்து போன தந்தை தன் மகனிடம் இந்த அட்டைகளில் பெயர்கள் எழுதி வைத்திருக்கிறார்களே! எதற்காக? என தன் மகனை கேட்டார். மகன் ஆசிரியர் சொன்ன வேலைகளை சரியாக செய்யாத மாணவ, மாணவியரின் பெயர்கள் அவ்வட்டைகளில் எழுதப்படும். ஒவ்வொரு மாதத்திலும் எத்தனை தவறுகள் செய்கிறார்களோ அதற்கேற்றவாறு புள்ளிகளும் வைக்கப்படும். அவைகள் “கரும்புள்ளிகள்” நான் கரும்புள்ளிகள் வாங்காமல் இருந்தேன். சென்ற மாதம் ஓர் தவறு செய்ததால் என் பெயரும் எழுதப்பட்டு கரும்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என சோகமாக கூறி முடித்தான். தந்தை எதுவும் பேச முடியாமல் வாயடைத்து நின்று விட்டார்.

இப்படித்தான் பெற்றோர்களின் பல எதிர்பார்ப்புகள் குழந்தைகளுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. நம் மன எண்ணமே அவர்களை எதிர் மறையாக உருவாக்கலாம். எனவே குழந்தைகள் பொருட்டு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வது தவறு. சிறுவயது முதலே “நீ இதுவாக வேண்டும்” என ஏதோவொன்றை கூறி அவர்களை வளர்ப்பது தவறு. ஏனெனில் பெரியார்களாகும் போது ஏதோவொரு காரணத்தினால் நினைத்தது போல் நடக்கவில்லையெனில் அதை அவர்களால் ஏற்று வாழ இயலாது.

இவ்விஷயத்தில் பெற்றோர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்?

பரந்த உலகத்தில் இருப்பவற்றை எல்லாம் திறந்த உள்ளத்துடன் நம் குழந்தைகளுக்கு காண்பிக்க வேண்டும். உலகத்தில் இத்தனையும், இன்னும் பலவும் உண்டு. தேவையானவற்றை தேடிப் பெறு அதற்கு தேவைப்பட்ட உதவியை நாங்கள் செய்கிறோம். என உங்கள் குழந்தைக்கு கூற வேண்டும். அதுவே பெற்றோர் கடமையும். அப்போதுதான் பெற்றோரை விட பல மடங்கு உயர்ந்தவராக குழந்தைகள் உருவெடுப்பார்கள். அதற்கு மாறாக நம் அனுபவமும், அறிவும் என்ற வட்டத்திற்குள் குழந்தைகளை அடைக்கக்கூடாது.

Sunday, September 12, 2010

குழந்தைகளுக்கு கழிவறைப் பழக்கங்களை எந்த வயதில் கற்றுக்கொடுக்கலாம்?


குழந்தை பிறந்த நாள் முதல் சிறுநீர் கழிப்பதும், மலம் கழிப்பதும் கட்டுப்பாட்டில் இல்லாத அனிச்சை சொல்களாகும். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் கழிவு நீக்கம் செய்து கட்டுப்பாடு இல்லாமல் வளரும் குழந்தைகளின் அந்நடத்தையை நெறிப்படுத்தி அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சரியான கழிவறை நடத்தையை குழந்தை கற்றுக்கொள்வது பெற்றோரின் மகிழ்ச்சியை அதிகரிக்கும். சரியான சமயத்தில் கழிவறைப் பழக்கங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது, அவர்களின் பிற்கால ஆளுமை வளர்ச்சியை நிர்ணயிக்கும் என்பது உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டின் கருத்து.

கழிவறைப் பழக்கங்களை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கும் வயது வெவ்வேறு நாடுகளில் வேறுபடுகிறது. நான்கரை மாதத்திலேயே இவ்வேலையை தொடங்கிவிடும் பெற்றோர்களும் உண்டு. சிலர் எட்டு மாதத்திலும், சில பெற்றோர் ஒரு வருடம் முடிந்தவுடனேயும் குழந்தைகளின் கழிவு நீக்க நடத்தையை நெறிப்படுத்தத் துவங்குகின்றனர். ஆனால் 18 மாதங்கள் முடிந்தவுடன் இப்பயிற்சியை பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்கத்துவங்குவது பொருத்தமானதாகும். குழந்தை தன் உடலியக்கத்தில் நடைபெறும் மாற்றங்களை புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவு வளர்ச்சியும், தன் உடல் தசைகளை கட்டுப்படுத்தும் திறனைப் பெற்றிருப்பதும், உட்கார்ந்து எழுவது போன்ற உடல் திறனை பெறுவதும் கழிவறை பழக்க பயிற்சிக்கு அவசியம். இம்மூன்றும் 18 மாதங்கள் முடிந்தவுடன்தான் சாத்தியம் என்பது குழந்தை மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் கருத்து.

பதினெட்டு மாதத்திற்கு முன்பாக விரைவிலேயே கழிவறை பழக்க பயிற்சியை துவங்குவது குழந்தைகளின் மனதில் அதிர்ச்சியை உண்டாக்கும். பெற்றோர் மிகுந்த கண்டிப்புடன் கழிவறைக்குத்தான் செல்ல வேண்டும் என திடீரென கட்டாயப்படுத்துவதும், குழந்தைகள் அவ்வாறு செய்யவில்லை எனில் அவர்களை தண்டிப்பதும் உடனடியாக குழந்தைகளிடத்தில் ஆளுமைப் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும். படுக்கையில் சிறுநீர் கழித்தல், கழிவறையைக் கண்டு பயம் கொள்ளுதல், பிடிவாத குணம், மிக மிக சுத்தமாக இருப்பது ஆகியவை 18 மாத காலத்திற்கு முன்பே கழிவறைப் பழக்கத்தை திணிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளில் சில. பிற்காலத்தில் பிறர் ஏற்றுக்கொள்ளும் நடத்தையை தெரிந்துகொண்டு அதை மட்டுமே வெளிப்படுத்துவர்களாக உருவாகும் இக்குழந்தைகள் எல்லா விஷயத்திலும் தயக்கம் கொண்டவர்களாக இருப்பர்

கட்டாயப்படுத்தாமல் படிப்படியாக குழந்தைகளின் கழிவறை நடத்தைகளை நெறிப்படுத்துவது மிகவும் எளிமையானது. குழந்தைகளுக்கு அவர்களே எளிதாக கழட்டிக் கொள்ளும் வகையில் எலாஸ்டிக் வைத்த உடைகளை அணிவிப்பது, உட்கார்ந்து மலம் கழிக்க வசதியாக உபகரணங்களை பயன்படுத்துவது ஆகியவை அவசியம். குழந்தைகளின் நடத்தையை மிக உன்னிப்பாக கவனித்துக்கொண்டே வரும் பெற்றோர் சிறுநீர் கழிக்கவோ அல்லது மலம் கழிக்கவோ குழந்தைகள் விரும்புகிறார்கள் என்ற அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்களை கழிவறைக்கு தூக்கிச் செல்ல வேண்டும். குழந்தை தானே கழிவறை செல்ல வேண்டும் என்று தெரிவித்தாலோ அல்லது நாம் எதிர்பார்த்த வகையில் தன் உடையை கழற்றினாலோ, கழிவறையை நோக்கிச் சென்றாலோ அந்நடத்தையை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். தொடர்ந்து இவ்வாறு பழக்கப்படுத்தி வந்தால் விரைவில் குழந்தைகள் தங்கள் கழிவறை நடத்தையை மேம்படுத்திக் கொள்ளும்.

கழிவறைப் பழக்கத்தை கற்றுக் கொடுப்பதிலிருந்தே பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு முறையையும், அவர்களின் ஆளுமையையும் அறியலாம். குழந்தைகளின் கழிவறை நடத்தையை நெறிப்படுத்துவதில் மிகுந்த கண்டிப்புடன் நடந்துகொள்ளும் பெற்றோர். பிற எல்லா விஷயத்திலும் அவ்வாறே நட்ந்து கொள்வர். மிதமிஞ்சிய கண்டிப்பு சிறந்த ஆளுமையை உருவாக்காது. குழந்தையின் கழிவறைப் பழக்கத்தை நெறிப்படுத்துவதில் கரிசனத்துடன் நடந்து கொள்ளும் பெற்றோர் குழந்தைகளின் எல்லா விஷயத்திலும் பாசத்துடனும் அரவணைப்புடனும், அதே சமயத்தில், நல்ல பழக்கங்களை உருவாக்குவதில் உறுதியாகவும் இருப்பர்.

விரைவிலேயே நல்ல கழிவறை நடத்தையை கற்றுக் கொண்ட குழந்தைகள் தானே தன்னை கவனித்துக் கொள்ள முடியும் என்ற உணர்வு பெற்று தனித்தியங்கும் ஆளுமைப்பண்பினை வளர்த்துக்கொள்ளும். பெற்றோர்களையே எல்லாவற்றிற்கும் சார்ந்திராமல் தனிமனிதனாக உருவாக சரியான வயதில் கழிப்பறை நடத்தைகளை கற்றுக் கொடுப்பதை துவங்குங்கள்.

Sunday, July 25, 2010

குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா?


பெண்களின் கல்வியறிவு அதிகமாகி இருப்பதாலும், அதிகமான பெண்கள் வேலை வாய்ப்பை தேடிக் கொண்டு திருமணம் செய்து கொள்வதாலும், கூட்டுக் குடும்ப முறை மெல்ல சிதைந்து தனிக்குடும்பங்கள் அதிகரித்து விட்ட காரணத்தினாலும் நீண்டகாலமாக வெளிநாடுகளில் மட்டுமே பிரபலமாக இருந்த குழந்தை காப்பகங்கள் நம்நாட்டிலும் தற்போது மிகவும் பிரபலம். தாய் தந்தையரை விட்டு வெகுதொலைவில் வாழும் ஆண் – பெண் இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை காப்பகங்களில் விட்டு செல்வதைத் தவிர மாற்று வழிகள் தற்போது இல்லை என்றும் நிலை. சிகரெட் குடிப்பதை உடல் நலத்திற்கு தீங்கானது என்ற அறிவிப்பை படித்துக்கொண்டே புகைபிடிக்கும் ஒருவரின் மனநிலை எவ்வளவு குழப்பத்தில் இருக்குமோ அதே அளவு குழப்பத்துடன் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை காப்பகங்களில் விட்டு விட்டு வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

காப்பக குழந்தைகளின் தாய்மார்களுகு உள்ள பொதுவான பயங்கள் பின்வருமாறு:

ஒரு நாளில் அதிகமான நேரம் தன்னைவிட்டு பிரிந்திருந்தால் தன் மீது உள்ள பாசம் குறைந்து விடுமோ?

குழந்தைகளின் அறிவு வளர்ச்சியும் பேச்சு வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுவிடுமோ?

நம் குழந்தை பிற குழந்தைகளிடம் இருந்து தவறான பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொண்டு விடுமோ?

பணத்துக்காக குழந்தைகளை கவணிக்காமல் விட்டு விட்டு வேலைக்குச் செல்வது சரியா? தவறா?

மேற்கண்ட சந்தேகங்கள் குழந்தைகளை காப்பங்களில் விடும் பெற்றோர்களை கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும்.

குழந்தைகளை வீட்டில் வைத்து வளர்க்கும் போது பெற்றோர் அவர்களுடன் அடிக்கடி பேசவும், அவர்களுடன் விளையாடவும், அவர்களின் தேவைகளை உடனுக்குடன் கவணித்து நிறைவேற்றவும் முடியும். உணவளிக்கும் போதும் உடைமாற்றும் போதும், உறங்கவைக்கும் போதும் குழந்தையுடன் அன்னை எதையேனு பேசிக்கொண்டே காரியங்களை கவணிப்பார். இதன் மூலம் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி, புரிந்து கொள்ளும் திறன் மற்றும் பேச்சுத்திறன் ஆகியவை இயல்பாக வளர்ச்சி அடையும். பல காப்பகங்களில் ஒருவர் பல குழந்தைகளை கவணிக்கும் நிலை உள்ளது. அக்காப்பகங்களில் வளரும் குழதைகளுக்கு மேற்சொன்ன வளர்ச்சிகள் இயல்பாக இராது.

குழந்தைகள் எவ்வளவு நேரம் காப்பகங்களில் இருந்தாலும் அன்னை மீதுள்ள பாசப்பினைப்பு குறைய வாய்ப்பில்லை. அன்னையர் குழந்தைகளை கவணிக்கும் போது உணர்ச்சிமயமாகி அன்பைப் பொழிவர் குழந்தைகளை ஆர்வமூட்ட குழந்தைகளே எதிர்பார்க்கா வண்ணம் வெவ்வேறு விதமாக நடந்து கொள்வர். அதனால் அன்னையருக்கும் குழந்தைக்குமான உறவு சுவாரசியமாக இருக்கும். காப்பகங்களில் கவணித்துக்கொள்ளும் தாதியர் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட வேலையை செய்வதால் அவர்களின் நடவடிக்கைகள் உணர்ச்சி குன்றியதாகவும் இயந்திரத்தனமாகவும் இருக்கும். அவ்வாறில்லாமல் நல்ல தாதியராக இருந்தாலும் கூட குழந்தை அன்னையோடும் தாதியோடும் சேர்ந்த பாசப்பிணைப்பை வளர்த்துக்கொள்ளுமே தவிர அன்னையிடம் ஒருபோதும் பாசம் குறைய வாய்ப்பில்லை. மனதில் அலுப்பு ஏற்படும் போதும், உடல் சோர்வடையும் போதும் மனதில் ஏதேனும் கலக்கம் ஏற்படும் போதும் குழந்தை தானாக தாயைத் தேடி வருவதிலிருந்து அன்னை மீதுள்ள பாசத்தை தெரிந்து கொள்ளலாம்.

கோபமுடன் நடந்துகொள்வது, பிடிவாத குணம், அவளவுக்கு அதிகமாக மற்றவரை சார்ந்திருப்பது ஆகிய குணங்களை காப்பக குழந்தை பிற குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது. குழந்தைகள் வீட்டில் இந்த குணங்களுடன் நடந்து கொண்டால் உடனுக்குடன் கண்டிகப்படுவர். ஆனால் காப்பாங்களில் அவ்வாறு கண்டித்து தேவையற்ற நடத்தைகளை திருத்த வாய்ப்பு குறைவு.

சூழ்நிலைக் கட்டாயத்தால் குழந்தைகளை காப்பகங்களில் விட்டு விட்டு வேலைக்கு செல்வது தவறாகாது. சிறப்பாக நடத்தப்படும் முழுமையான கவணிப்புள்ள காப்பகங்களில் குழந்தைகளை விடுவது நன்மையைக் கொடுக்கும். மூன்று அல்லது நான்கு குழந்தைகளை ஒருவர் கவணித்துக் கொள்ளும் காப்பகங்களிலேயே குழந்தைக்கு முழுமையாக கவணிப்பு கிடைக்க வாய்ப்புண்டு. அவ்வாறான காப்பகங்களில் வளரும் குழந்தைகள் பலவிதமான தூண்டுதல்களைப் பெற்று புதிய திறன்களை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளைப் பெறும். வீட்டில் வளர்க்கப்படும் குழந்தையைவிட சிறந்து விளங்கும்.

ஒரு வேளை முழுமையான கவணிப்பற்ற காப்பகங்களில் குழந்தை விடப்பட்டு வளர்ச்சியில் பின்னடைவு இருந்தால் உடனடியாக அக்குழந்தையை வீட்டில் வளர்க்க வேண்டும். அது முடியாது என்றால் வேறு நல்ல காப்பகத்திற்கு மாற்றிவிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குழந்தையின் வளர்ச்சி முழுமையாக இருக்க வாய்ப்புகள் உண்டு.

Tuesday, July 20, 2010

உங்களின் சிறு குழந்தை அதிக துறுதுறுப்புடனும் கவனக்குறைவுடனும் உள்ளதா?


குழந்தைகள் ஓடியாடி விளையாடிக் கொண்டு துறுதுறுவென இருப்பது நன்று. அது அவர்களின் உடல் நலத்தையும் அறிவு வளர்ச்சியையும் நமக்கு உணர்த்துவதாக அமையும். ஆனால் சில குழந்தைகள் மிக அதிக துறுதுறுப்புடனும், மிகுந்த கவனக்குறைவுடனும் காணப்படுவர். இது ஒரு உளவியல் நோயாகும்.

· பள்ளியில் கொடுக்கப்படும் படிப்பு தொடர்பான வேலைகளை அதிக பிழையுடன் செய்தல்.
· ஒரு விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே அதை பாதியில் விட்டு விட்டு அடுத்த விளையாட்டில் ஈடுபடுதல்
· பெற்றோர்களும் பிறரும் என்ன சொல்கிறார்கள் என்று காது கொடுத்து கேட்காமல் தன் போக்கில் விளையாடுதல்.
· அறிவுரைகளை பின்பற்றாமல் இருத்தல்.
· எந்த வேலைகளையும் முடிக்காமல் அறைகுறையாக விட்டுவிடுதல்.
· தன் பொருட்களை அடிக்கடி தொலைத்துவிடுதல்.
· அன்றாட வேலைகளை கூட மறந்துவிடுதல்.
· சுலபமாக கவணத்தை சிதற விடுதல்.
· எப்போதும் ஓடிக் கொண்டும் எதன் மீதாவது ஏறிக்கொண்டும் இருத்தல்.
· பள்ளிக்குப் போகும் குழந்தையாக இருந்தால் தன் இடத்தில் அமறாமல் ஓடிக் கொண்டு இருத்தல்.
· ஏதாவது கேள்வி கேட்கும் போது கேள்வியை முடிக்கும் முன்பே பதில் கூறுதல்.
· வரிசையில் காத்திருக்காமல் அங்குமிங்கும் ஓடுதல், பொறுமையிழந்து காணப்படுதல்.

இது போன்ற அறிகுறிகள் தொடர்ந்து காணப்பட்டால் இந்நோய்க்கு கவணக்குறைவும்-மீச்செயலும் கலந்த நோய் (Attention-Deficit-Hyperactive Disorder -ADHD) என்று பெயர். பொதுவாக இந்நோய் 7 வயதிற்கு முன்பாகவே தொடங்கிவிடும். பள்ளி செல்லும் குழந்தைகளில் ஐந்து சதவீதம் பேருக்கு காணப்படும் இந்நோய் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளிடமே அதிகம் காணப்படுகிறது.

இக்குழந்தைகள் அதிக கவணக் குறைவுடன் காணப்படுவர். தன் மனம்போன போக்கில் விளையாடிக்கொண்டும். ஏதேனும் காரியங்களை செய்து கொண்டும் இருப்பர். எப்போதும் அளவுக்கதிகமான வேகத்துடன் அதிகமான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பர். பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்க மாட்டார்கள். சூழ்நிலையில் உள்ள தூண்டுதல்களால் மிக எளிதாக கவணச்சிதைவுக்கு உட்படுவர். இக்குழந்தைகளுக்கு செய்யும் செயல்களோடு ஒன்றிப்போகும் ஆற்றல் இராது. எச்செயலையும் தொடங்கி முடிக்குமளவுக்கு தனித்திறமை இல்லாத இக்குழந்தைகள் சமூகத்திறமையும், கல்வி கற்கும் திறமையும் குன்றியவர்களாக இருப்பர். பிற குழந்தைகள் விளையாடும் போது இவர்கள் குறுக்கீடு செய்வதால் மற்ற குழந்தைகளால் இவர்கள் புறக்கணிக்கப்படுவர்.

இக்குழந்தைகளின் நடத்தையை சரிபடுத்த மிகுந்த பொறுமையும் மதிநுட்பகும் அவசியம். மூளையின் செயற்குறைபாட்டினாலும் உடலியல் காரணங்களாலும் இந்நோய் ஏற்பட்டாலும் கூட தொடர்ந்து மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்த முயற்சிப்பது நல்லதல்ல. அதற்கு மாறாக அவர்களின் நடத்தைகளை மாற்றுவது நல்லது. இக்குழந்தைகள் அமைதியான, நாம் விரும்பும் நடத்தையை வெளிப்படுத்தும்போது அவைகளை ஊக்குவிக்க வேண்டும். விரும்பத்தகாத நடத்தைகளை கண்டும் காணாதது போல் அலட்சியப்படுத்த வேண்டும். அவ்வாறு நடந்து கொள்வது நல்ல நடத்தைகளை அதிகப்படுத்த உதவும்.

இக்குழந்தைகளை பெற்றோர்கள் தானாக விளையாடிக் கொண்டிருக்கிறது என்று நினைத்து விட்டுவிடாமல் அடிக்கடி அவர்களின் செயல்களில் குறுக்கிட்டு அவர்களை கவணிக்க வேண்டும். அவர்களின் நடத்தையை சரிசெய்ய வேண்டும். இக்குழந்தைகள் பிற குழந்தைகளோடு விளையாடும்போது பெற்றோர் அருகில் இருந்து மற்றவர்களைப் போல விளையாட நெறிப்படுத்த வேண்டும்.

பிறரோடு பேசுவது, பழகுவது போன்ற சமூகத்திறன்களை இக்குழந்தைகளுக்கு தொடர்ந்து கற்பித்து வர வேண்டும். மேலும் அவர்களை தான் நடந்து கொள்ள வேண்டிய விதம் பற்றி வாய்விட்டு கூறச் செய்ய வேண்டும். உதாரணமாக “நான் வேகமாக ஓடி கீழே விழுந்து விடுகிறேன்”, இனி மெதுவாக ஓட வேண்டும், அம்மா அழைத்தால் திரும்பிப் பார்ப்பதில்லை, இனி திரும்பிப் பார்க்க வேண்டும். என தனக்குத் தானே பேசி தன் நடத்தையை மேம்படுத்த இக்குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்.

மற்ற குழந்தைகளின் பெற்றோர்களை விட கவணக்குறைவும் மீச்செயலும் கலந்த நோய் கொண்ட குழந்தைகளின் பெற்றோர் அதிக மன அழுத்தம் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். இன்னும் சில குடும்பத்தில் தாங்கள் செய்யும் எல்லாவற்றிற்க்கும் இக்குழந்தைகளே காரணம் எனக்கூறி இவர்களை பலிகடாவாக்கும் பெற்றோர்களும் உண்டு. எனவே பெற்றோர்கள் உளவியல் ஆலோசனை பெறுவது கட்டாயம். அத்தகைய ஆலோசனை குழந்தையின் நோயை விரைவில் குணமாக்க உதவும்.

நோய் மிகத் தீவிரமாக உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையளித்து கல்வியும் கற்பிக்க சிறப்பு பள்ளிகள் உள்ளன. உளவியல் முறைப்படி நடத்தப்படும் இப்பள்ளிகளிலும் சேர்த்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கலாம். ஆனால் அந்த அளவுக்கு நோய் தீவிரமானதாக இருக்க வேண்டும். சேர்க்கப்படும் சிறப்புப் பள்ளிகள் தரமானவையாகவும் இருக்க வேண்டும்.

Monday, July 19, 2010

குழந்தைகளுக்கு எவ்விதமான உடைகளை அணிவிக்க வேண்டும்?


ஆள் பாதி; ஆடை பாதி என்பது பெரியவர்களுக்கு மட்டுமல்ல. நம் குழந்தைகளுக்கும் பொருந்தும். நல்ல ஆடைகளை அணிந்திருக்கும் குழந்தைகள் மற்றவர்களை கவரும் விதத்தில் நல்ல தோற்றத்தினை பெற்றிருக்கும்

நம் குழந்தைகளுக்கு நாகரீகமான ஆடைகளை அணிவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பல பெற்றொர்கள் குழந்தைகள் தங்கள் உடலை காத்துக் கொள்ளத்தான் ஆடை என்பதை மறந்து பொருத்தமில்லாத உடைகளை அணிவித்து அவர்களை அவஸ்தைக்கு உள்ளாக்குகிறார்கள். கையும் முதுகும் இல்லாத கவுன் ஒன்றை அணிந்து கொண்டு குளிர்காலத்தில் நடுங்கிக்கொண்டே செல்லும் குழந்தையை நீங்கள் பார்த்திருக்கலாம். முழுக்கை பணியனும் காலைத் தடுக்கிவிடும் மிக நீள பேண்டும் அணிந்து கொண்டு செல்லும் பையன்கள் பலர். இத்தகைய குழந்தைகளின் பெற்றோர் தங்கள் கெளரவத்திற்காகவே குழந்தைகளுக்கு இது போன்ற ஆடைகளை அணிவித்து வசதிக் குறைவை உண்டாக்குகிறார்கள்.

குழந்தைகளுக்கு என வாங்கப்படும் ஆடைகளின் நிறம் அவர்களின் இயற்கையான நிறத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். உடலுக்கு பொருத்தமில்லாத நிறங்களில் உடைகளைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. மிக விலையுயர்ந்த ஆடைகளை வாங்குகிறோம் என்ற எண்ணத்தில் இரண்டு மூன்று வருடங்களுக்கு அணிவிக்க வசதியாக பெரிய அளவு துணிகளை வாங்குவதையும், உடை தைப்பதையும் தவிர்த்து அந்தந்த வயதுக்கேற்ற அளவு உடைகளையே வாங்கவும் தைக்கவும் வேண்டும்.

வீட்டில் உள்ள சகோதரர்கள் அனைவருக்கும் அல்லது சகோதரிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியான உடைகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு ஓரே மாதிரியான உடைகள் பொருத்தமில்லாமல் போவதோடு குழந்தைகளின் தனித்தன்மையையும் பாதிக்கும்.

சில பெற்றொர்கள் தன் முதல் குழந்தையின் ஆடைகள் நன்றாகவே இருக்கின்றன என்பதால் அதையே தங்கள் இரண்டாவது குழந்தைக்கும் அணிவிக்கின்றனர். இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். முதல் குழந்தையின் உடைகளை இரண்டாவது குழந்தைக்கு அணிவிப்பதில் சில உளவியல் பிரச்சனைகள் உள்ளன. எந்த குழந்தையும் தன் உடைகளை தன் கண் முன்னே பிறர் அணிவதை விரும்பாது. அவ்வாறு தன் உடைகளை பிற குழந்தை அணிந்திருப்பதை பார்க்கும் குழந்தை தனக்குள்ள முக்கியத்துவம் பறிபோய் விட்டதாக எண்ணிக் கொள்ளும். ஆண் குழந்தையின் உடைகளை பெண் குழந்தைக்கு அணிவிப்பதும், பெண் குழந்தைகளின் உடைகளை ஆண் குழந்தைக்கு அணிவிப்பதும் பால் சார்ந்த நடந்தைகளை கற்றுக் கொள்வதில் ஊறுபாடுகளை உண்டாக்கும். ஆண் உடைகளையே அணிந்து வளரும் பெண் குழந்தை ஆண் தன்மையுடன் வளர வாய்ப்புண்டு. அதைப்போன்றே பெண் உடைகளை அணிந்து வளர்க்கப்பட்ட எண்ணற்ற ஆண் குழந்தைகள் பிற்காலத்தில் பெண்களாகவே மாறிவிட்ட நிகழ்வுகளும் உண்டு. எனவே உடைகள் நன்றாக இருக்கின்றன என்பதற்காக அவைகளை அணிவித்து உள்ளத்திலும் வளர்ச்சியிலும் குறைபாடுகளை உண்டாக்கக் கூடாது.

நவீனம் என்ற பெயரில் சிறு குழந்தைகளின் உடல் தெரியும் உடைகளை தேர்ந்தெடுக்கக் கூடாது. உடலை சரியான முறையில் மறைக்காத இவ்வுடைகள். உடல் நலக் கேட்டை உண்டாக்கும். பிற்காலத்தில் சமுதாயத்திற்கு பொருந்தாத கவர்ச்சியான உடைகளை அணிய இதுவே அடிப்படை காரணமாகவும் அமையலாம்.

இறுக்கமாகவும் இல்லாத மிகத் தளர்வாகவும் இல்லாத, மிகமிக விலையுயர்ந்ததாகவும் இல்லாத தரக்குறைவாகவும் இல்லாத முழு உடலையும் மறைத்து தொந்தரவு தராத, உடல் முழுவதையும் வெளிக்காட்டாத நல்ல உடைகளையே குழந்தைகளுக்கு என வாங்க வேண்டும்.

நல்ல உடைகளை அணிவித்து உடை பற்றிய விழிப்புணர்வை சிறுவயதிலேயே குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தி விட்டால் அது பிற்காலத்தில் நேர்த்தியாக உடையணிந்து வாழ்க்கையில் மதிப்பும் மரியாதையுடனும் வாழ அவர்களுக்கு உதவும்.

Monday, June 28, 2010

குழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கலாமா!


அன்மையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று குழந்தைகள் நர்சரி பள்ளிக்கு செல்லும் முன் 5000 மணி நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துவிடுகின்றனர் என்று தெரிவிக்கிறது. இது கல்லூரியில் ஓர் பட்டம் பெறுவதற்கு படிப்பதற்காக செலவிடும் நேரத்திற்கு சமமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. நம் நாட்டிலும் இதே நிலைமைதான் என்பதில் சந்தேகமில்லை. வீட்டுக்கு வீடு தொலைக்காட்சியும் கம்ப்யூட்டரும் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க விடாமல், கம்ப்யூட்டரில் விளையாடாமல் தடுப்பது இயலுமா என்பது சந்தேகத்திற்குரிய விஷயமாகி விட்டது.

குழந்தைகள் அளவுக்கு அதிகமாக தொலைக்காட்சி பார்பதானாலும், கம்ப்யூட்டரில் விளையாடுவதானாலும் பல தீய விளைவுகள் உண்டாகின்றன. உடல் பருமன், சோம்பேறித்தனம், புதுவித சிந்தனை வளர்ச்சியடையாமை ஆகியவை அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளிடம் காணப்படலாம். இக்குழந்தைகளுக்கு பிறரோடு தொடர்பு கொள்ளும் திறன் குறைவாக இருக்கும். எனவே குறைவான நண்பர்களை பெற்றிருப்பர். விரைவிலேயே கண் பார்வை குறைபாடு ஏதேனும் ஏற்பட வாய்ப்புண்டு. இக்குழந்தைகளால் படிப்பில் ஆர்வத்தைக் கண்பிக்க இயலாது. பிற்காலத்தில் இவர்கள் யதார்த்த வாழ்க்கையை எதிர்கொள்ள இயலாமல் துன்புறுவர். அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் பின் விளைவுகள் இவை.

அதே சமயத்தில் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை முற்றிலும் பார்க்காத குழந்தைகளுக்கு சில சங்கடங்கள் உண்டாகும். வகுப்பில், பிற இடங்களில் தன் வயதையொத்த குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் சில கதாப்பாத்திரங்களைப் பற்றியோ அல்லது கதைகளைப் பற்றியோ பேசிக் கொண்டிருக்கும் போது தொலைக்காட்சி பார்க்காத குழந்தைகள் எதுவும் புரியாமல் தவிக்கலாம். குழந்தைகளின் தற்போதைய பேஷன் என்னெவென்று தெரியாமலும், பயன்படுத்தும் பொருட்கள் என்னவென்று தெரியாமலும் இக்குழந்தைகள் தவிப்பர்.

குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதால் பல நல்ல பலன்களும் உண்டு. உதாரணமாக தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளின் பேச்சுத் திறன் சிறப்பாக வளர்ச்சியடையும், அதிகமான புதிய சொற்களை விரைவாக கற்றுகொள்வர். மொழி வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். மேலும் உடையணியும் விதம், பிறரிடம் எப்படி பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வது தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளிடம் சிறப்பாக இருக்கும்.

மேலும் குறிப்பிட்ட நன்மைகள் அனைத்தும் குழந்தைகள் எந்த நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே அமையும். அதிகமான வீடுகளில் பெற்றோர் சினிமா நிகழ்ச்சிகளையும் நெடுந்தொடர்களையுமே ஓட விடுகின்றனர். அதனால் குழந்தைகளும் இவைகளையே பார்த்து பெற்றோர்களைப் போல நடந்து கொள்கின்றனர். சினிமா நிகழ்ச்சிகள், நெடுந்தொடர்கள் ஆகியவற்றை தவிர்த்து குழந்தைகள் சேனலை அதிகம் பார்க்கும்படி செய்ய வேண்டும். அதிலும் புதிய பொருட்களை உருவாக்குவது, சித்திரம் வரைவது, வாழ்த்து அட்டைகளை உருவாக்குவது, அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய தகவல் தரும் நிகழ்ச்சிகள், விலங்குகளின் வாழ்க்கையைப் பற்றிய நிகழ்ச்சிகள், பிற நாடுகள், மக்களின் பழக்க வழக்கங்கள் பற்றிய நிகழ்ச்சிகள், மற்றும் சுற்றுலா தலங்கள் பற்றிய நிகழ்ச்சிகளை பெற்றோர் தேர்ந்தெடுத்து குழந்தைகளை பார்க்கச் செய்ய வேண்டும். அவ்வாறு நிகழ்ச்சிகளை தினமும் குறிப்பிட்ட நேரம் பார்க்கச் செய்வது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு பெற்றோர் செய்யும் உதவியாக அமையும்.

எப்போதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே பார்த்துக் கொண்டிருப்பது, கம்ப்யூட்டரில் விளையாடிக் கொண்டிருப்பது தவறு. தொலைக்காட்சியே பார்க்காமல் இருப்பதும் தவறு தேர்ந்தெடுத்த நிகழ்ச்சிகளை குழந்தைகளை தினமும் பார்க்கச் செய்வது அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு வித்திடுவதாக அமையும். உங்கள் வீட்டுக்குள் வரும் உலகத்தை உங்கள் குழந்தைகளுக்கு காட்டுவதாக அமையும்.

Wednesday, June 23, 2010

குழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருப்பது எப்படி?


குழந்தைகள் சில குணங்களை பிறப்பிலேயே மரபுத்தன்மைகளின் காரணமாக பெற்றிருக்கும். வளர வளர அக்குணங்கள் ஆளுமைப் பண்புகளாக உருவெடுக்கும். பிறப்பில் அமைந்த குணங்களை தவிர்த்து பிற நடத்தைகள் அனைத்தையும் குழந்தைகள் வளர வளர பிறைப் பார்த்து கற்றுக் கொள்கின்றனர். பெற்றோர், குடும்பத்திலுள்ள பிற உறுப்பினர்கள், குழந்தை வளரும் சூழ்நிலையில் உள்ள மற்றோர்களின் நடத்தைகளைப் பார்த்து குழந்தைகள் தன் நடத்தைகளை வடிவமைத்துக் கொள்கின்றனர்.

பார்த்துக் கற்றல் கோட்பாடு தற்கால உளவியலில் மிக முக்கியமான ஒன்றாகும். நம் நடத்தைகள் அனைத்தும் சமூக சூழலில் பிறரோடு ஏற்படும் தொடர்பின் மூலம் உருவானவை என்பதே இக்கோட்பாட்டின் மையக் கருத்தாகும். குழந்தை அப்பாவைப் போல நடப்பது, அம்மாவைப் போல சிரிப்பது, தாத்தாவைப் போல உட்காருவது, பாட்டியைப் போல் தூங்குவது ஆகியவை இக்கோட்பாடு உண்மை என்பதற்கு சில உதாரணங்கள். பிறரின் நடத்தையை பின்பற்றுவது குழந்தையின் வாழ்க்கையில் பிறந்து ஆறு வாரங்களுக்குப் பின் துவங்குகிறது. குழந்தை அம்மா சிரிப்பதைப் பார்த்து அதைப் போன்றே திருப்பி சிரிப்பது தான் முதல் பார்த்துக் கற்றுக்கொள்ளும் நடத்தை. ஏழு அல்லது எட்டு வயதிற்குள் அநேகமாக எல்லா நடத்தைகளையும் குழந்தை பிறரைப் பார்த்து கற்றுக் கொண்டு விடுகிறது. அதற்குப் பின்னர் குழந்தையின் எல்லா புதிய நடத்தைகளுக்கும் ஏழு அல்லது எட்டு வயதிற்குள் கற்றுக் கொண்ட நடத்தைகளே அடிப்படையாக அமையும். எனவே ஏழு அல்லது எட்டு வயது வரை குழந்தைகள் முன் மிகவும் எச்சரிக்கயாக நடந்து கொள்ள வேண்டும்.

பெரியவர்களைப் போலன்றி குழந்தைகள் கூர்ந்து கவனிக்கும் திறமை பெற்றவர்கள். எனவே அவர்கள் கவனிக்கவா போகிறார்கள் என்று அஜாக்கிரதையாக நடந்து கொள்வது கடும் பின் விளைவுகளை உண்டாக்கும் பேசும் போது நாம் பயன்படுத்தும் சொற்கள், பிறரிடம் பேசும் முறை, பிறரிடம் பேசும் விதம், உடையணியும் முறை, வீட்டிலும் வெளியிலும் சாப்பிடும் முறை போன்றவற்றை மிகுந்த கவனமுடன் தீர்மானித்து பெற்றோர்கள் தங்கள் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இவ்விசயத்தில் அநேக பெற்றோர்கள் தவறிழைக்கின்றார்கள். உதாரணமாக

· இரட்டை வேடம் போடுதல்
· குழந்தைகள் முன் பிறரிடம் போய் பேசுதல்
· கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துதல்
· குழந்தைகளுக்கு தெரியும் வகையில் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடுதல்
· குழந்தைகள் முன்னிலையில் உறவினர் மற்றும் பிறறைப் பற்றி தவறாக விவாதித்தல்
· குழந்தைகள் முன்னிலையில் சுயநலமுடன் நடந்து கொள்ளல்
· குழந்தைகள் முன் சிகரெட் குடித்தல் மற்றும் பாலியல் சரசங்களில் ஈடுபடுதல்
· மனைவி-கணவன் தகறாறு செய்து கொள்ளல்
· மனைவி கணவனையும், கணவன் மனைவியையும் மரியாதை இன்றி நடத்துதல்

போன்றவைகள் குழந்தைகள் மனதில் நன்கு பதிந்து அவர்களும் அவ்வாறே நடந்து கொள்கிறார்கள்

மேலே குறிப்பிட்டவைகளை விட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆளுமை வெளிப்பாடு. பெற்றோர் எத்தகைய ஆளுமைகளை குழந்தைகள் முன் வெளிப்படுத்துகிறார்களோ அவ்வாறான ஆளுமையே குழந்தைகளுக்கும் அமையும். எடுத்துக்காட்டாக மிகவும் சிக்கலான சூழ்நிலை ஒன்றை சமாளிக்க இயலாமல் ஒரு தந்தை மனமுடைந்து போகிறார் என்றால் அவருடைய குழந்தையும் பிற்காலத்தில் அதைப் போன்றே கடும் சூழ்நிலைகளை சமாளிக்க இயலாமல் வருந்தும். எனவே எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களாகவும், ஏற்று நடக்கும் மனப்பாங்கு உடையவர்களாகவும் நம்மை முதலில் மாற்றிக் கொண்டு பின் அவ்வாளுமையை குழந்தைகள் முன் வெளிப்படுத்துவது நன்று.

நாம் மட்டுமே முயன்று குழந்தைகளின் நடத்தையை முழுமையாக மாற்றியமைக்க இயலாது. எனவே நம்மைத் தவிர வேறு பலர் நல்ல பழக்கங்களை கொண்டவராக இருப்பதை நாம் அறிய நேரிட்டால் நம் குழந்தைகளுக்கும் அதைக் காண்பித்து “நீயும் அதைப் போன்று நடந்து கொள்வது விரும்பத்தக்கதாகும்” என்று கூறுவது நல்ல பயனை அளிக்கும். நாம் என்னதான் முயன்றாலும் நம்மால் கைவிடமுடியாத கெட்ட பழக்கங்கள் சில நம்மிடம் இருக்கலாம். அதை நம் குழந்தைகள் பின்பற்றும்போது “என்னால் கைவிட முடியாத இந்நடத்தையால் நான் துன்பமடைந்து கொண்டு இருக்கிறேன்.” நீ அதை பின்பற்ற வேண்டாம் என் நல்ல நடத்தைகளை மட்டும் நீ பின்பற்றினால் நான் மகிழ்ச்சி கொள்வேன் என்று வெளிப்படையாக குழந்தைகளிடம் கூறிவிட வேண்டும்.

ஒரு தாய் தன் அறிவுரையையும் கேட்காமல் அதிகமாக சர்க்கரை உண்ணும் தன் மகனை பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் அழைத்துச் சென்று அதிக சர்க்கரை உண்பதை கைவிடுமாறு தன் குழந்தைக்கு அறிவுறுத்த வேண்டினார். அதைக் கேட்ட இராமகிருஷ்ணர் ஒரு வாரம் கழித்து குழந்தையை அழைத்து வருமாறு அப்பெண்மணியைக் கேட்டுக் கொண்டார். அவ்வாறே ஒரு வாரம் கழித்து அழைத்துச் செல்லப்பட்ட அப்பையனிடம் “சர்க்கரை அதிகமாக உண்பது உடலுக்கு கேடு, எனவே அதை விட்டுவிடு என்று இராமகிருஷ்ணர் அறிவுரை கூறினார். அதைக் கேட்ட அப்பையனின் தாய் இந்த அறிவுரையை சென்ற வாரமே நீங்கள் என் குழந்தைக்கு வழங்கியிருக்கலாமே சுவாமி? என்று பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரிடம் வினவினார். இராமகிருஷ்ணர் சென்ற வாரம் வரை நானும் அதிக சர்க்கரை உண்டு வந்தேன், நான் தவறு செய்து கொண்டு குழந்தைக்கு அறிவுரை கூறக் கூடாது. எனவேதான் என்னை முதலில் திருத்திக் கொண்டு என்னிடம் வந்தவரை திருந்துமாறு இப்போது கேட்டுக் கொள்கிறேன் என்று பதிலளித்தார். குழந்தைகளுக்கு நல்ல முன் மாதிரியாக இருப்பது என்பது இதைப் போன்று நாமும் உண்மையான நல்ல பழக்கங்களை கொண்டிருப்பது அல்லது உண்மையாகவே நம் தவறுகளை திருத்திக் கொள்வது என்பதுதான். மாறாக குழந்தைகளுக்குத் தெரியாமல் நீங்கள் தவறு செய்தால் அதை உணர்ந்து கொண்ட குழந்தை உங்களுக்குத் தெரியாமல் அதே தவறை செய்யும்.

Monday, June 21, 2010

குழந்தைகளின் இடக்கை பழக்கம் தவறானதா?


குழந்தைகள் பிறந்த பின்னர் வளர வளர பல திறன்களைக் கற்றுக் கொள்வார்கள். குழந்தைகள் வளரும் சூழ்நிலை, அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் ஆகியவற்றைப் பொறுத்து குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் திறன்கள் அமையும். மரபுப்பண்புகளின் மூலம் பிறப்பிலேயே அமைபவை என சில திறன்கள் உண்டு. அத்தகைய திறமைகளில் ஒன்றுதான் கைத்திறன். ஏதாவது ஒரு கையினை எழுதுதல், விளையாடுதல் போன்ற நம் பெரும்பான்மையான செயல்களுக்கு மற்றொரு கையை விட அதிகமாக பயன்படுத்துவது கைத்திறன் என்கிறோம். இடதுகையினை அதிகமாக பயன்படுத்துவதினால் அது இடது கைத்திறன் எனவும் வலது கையினை அதிகமாக பயன்படுத்தினால் அது வலதுகைத்திறன் எனவும் அழைக்கப்படும். உலகில் மிகக் குறைவான் சதவீதம் பேரே இடது கைத்திறன் பெற்றுள்ளனர். பெரும்பான்மையானவர்கள் வலது கைத்திறன் கொண்டவர்கள்தான் அதன் காரணமாக வலது கையினை பெரும்பானமையாக பயன்படுத்துவதே சரி என்ற எண்ணமும் இடது கையினை பயன்படுத்துவது தவறானது என்ற எண்ணமும் பெற்றோர்களிடம் நிலவி வருகிறது. எனவே இடது கைத்திறன் குழந்தைகளின் பெற்றோர் மிகுந்த கவலைக்குள்ளாகி தங்கள் குழந்தைகளை வலது கையினை பயன்படுத்துமாறு பணிக்கின்றனர்.

உண்மையில் இடது கைப் பழக்கத்தினால் எந்த பாதிப்பும் கிடையாது. இடது கையினை பயன்படுத்துவதால் செயல்படும் வேகமும் குறையாது வலது கைத்திறன் கொண்ட குழந்தைகள் எவ்வளவு திறமையுடனும் வேகத்துடனும் எல்லா செயல்களையும் செய்கிறார்களோ அதே திறன்டனும் வேகத்துடனும் இடது கைத்திறன் குழந்தைகள் செயல்புரிவர். இடது கைக்காரர்களால் வலது கைத்திறனாளிகள் போல் வேகமாக செயலாற்ற முடியாது என்று பெற்றோர் கொண்டிருக்கும் தவறான கருத்தினால் இடதுகை குழந்தைகளை வலது கையைப் பயன்படுத்தி செயலாற்ற கட்டாயப் படுத்தும் போதுதான் அவர்களின் செயலாற்றும் வேகம் குறைந்து போகிறது. இயல்பான கைத்திறனையும் பயன்படுத்தாமல், புதிய கையினையும் பயன்படுத்த பழக வேண்டி இருப்பதாலேயே செயல்திறன் குறைந்து விடுகிறது.

நாம் முன்பே கண்டது போல் ஓர் குழந்தை தன் வலது கையினை அதிகமாக பயன்படுத்துமா அல்லது இடது கையினை அதிகமாக பயன்படுத்துமா என்பது மரபு நிலையினால் தீர்மானிகப்படுகிறது. தற்கால மருத்துவ ஆய்வுகள் கருவிலிருக்கும் மூன்று மாத குழந்தை வலது கையினையோ அல்லது இடது கையினையோ தன் வாயில் வைத்து சூப்புவதை கண்டறிந்துள்ளன. எனவே இப்பழக்கம் பிறப்பதற்கு முன்பே, கருவிலிருக்கும்போதே தொடங்கிவிடுகிறது என்பதை நாம் அறிய வேண்டும். தற்காலத்தில் சினிமா போன்ற ஊடங்களில் இடது கைத்திறன் கொண்டவர்களை மிக ஸ்டைலானவர்களாக முன்னிலை படுத்தப்பட்டு வருகிறது. எனவே இடதுகைத்திறன் குழந்தைகளின் பெற்றோருடைய மனக்கவலை சற்றே குறைந்து, இடதுகை பழக்கத்தை வரவேற்கும் மனப்பான்மை அதிகரித்துள்ளது.

Sunday, June 20, 2010

குழந்தைகள் விரல் சூப்புவது ஏன்?


குழந்தைகள் விரல் சூப்புவதால் அவர்களின் பற்கள் வெளியே நீட்டிக்கொண்டு வந்து விடும். விரல் சூப்பும் குழந்தைகளின் வாய் கூர்மையாகி முக அமைப்பும் மாறி விடும். இப்பழக்கம் எதேச்சையாக ஏற்படுவது அல்ல. விரல் சூப்பும் பழக்கம் வலுவான உளவியல் காரணங்களைக் கொண்டுள்ளது.

குழந்தை பிறந்த பின்பு சரியான நேரத்திற்கு குறிப்பறிந்து பாலூட்ட வேண்டியது தாயின் கடமையாகும். சில குழந்தைகளுக்கு குறைவான அளவு உணவே போதுமானது. இதையும் தாய் புரிந்து கொள்ள வேண்டும். சரியான அளவு உணவைப் பெறும் குழந்தை எந்தவிதப் பிரச்சனையுமில்லாமல் வளர்ச்சியடையும். சில வேலைகளில் தாய் தன் குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக உணவளிக்கலாம். உதாரணமாக குழந்தை பசி, வயிற்று வலி, உடல் அசெளகரியம், பயம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக அழலாம். ஆனால் குழந்தை அழும்போதெல்லாம் அது பசிக்கு மட்டுமே அழுகிறது என நினைக்கும் தாய் அக்குழந்தை அழும்போதெல்லாம் அதற்கு பாலூட்டி விடுகிறார். இதனால் குழந்தை அளவுக்கு அதிகமான திருப்தியைப் பெறுகிறது. இன்னொரு புறம் வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு வீட்டிலிருந்து கவணித்து உணவளிக்க முடியாமல் புட்டிப் பாலை தயார் செய்துவிட்டு கிளம்பி விடுவர். அதிகமான உணவு தேவைப்பட்டாலும் குழந்தைகளுக்கு கிடைக்காது. இத்தகைய குழந்தைகள் தேவைக்கும் குறைவான உணவைப் பெற்று திருப்தியின்றி வளர்ந்து வரும். இவ்வாறு அளவுக்கு அதிகமான திருப்தியோ அல்லது திருப்தியின்றியோ வளரும் குழந்தைகள் எப்போதும் எதையாவது உண்று கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு கொண்டவர்களாக வளர்கின்றனர். அதன் காரணமாகவே எதையாவது மென்று கொண்டே இருக்கின்றனர். உண்க எதுவும் கிடைக்காத குழந்தைகள் கைவிரலை சூப்பத் தொடக்கி விடுகின்றனர். இதற்கு வாய்சார்ந்த நடத்தை என்று பெயர்.

கைசூப்புவது உணவுப் பற்றாக்குறை என்பதற்கு இப்பழக்கம் எழ்மை நிலையிலுள்ள குழந்தைகளிடையே தான் அதிகமாக காணப்படுகிறது என்ற உண்மையே சான்றாகும். இப்பழக்கத்தைப் போக்க தேவையான அளவு குழந்தைக்கு உணவளிக்க வேண்டும். தொடர்ந்து உணவளித்து வந்தால் பற்றாக்குறை நீங்கி உண்க வேண்டும் என்ற உணர்வு குறைந்து விடும். அப்போது கைசூப்பும் பழக்கம் தானாகவே மறைந்து விடும். குண்டான குழந்தைகள் கைசூப்பிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் கொழுப்பு சத்தற்ற, உடல் பருமனை உண்டாக்காத உணவுகளை தொடர்ந்து அளித்துவர வேண்டும். உணவு உண்ணும் செயலால் உண்டாகும் திருப்தி உயர்ந்தபட்ச அளவை தொட்டவுடன் குழந்தைகள் தானாகவே உண்பதை நிறுத்திக் கொண்டுவிடும். அப்போது விரல் சூப்புவதையும் விட்டு விடும். அதற்கு மாறாக விரல் சூப்பும் குழந்தைகளை அடிப்பதால் பலன் கிடைக்காது. விரலுக்கு வேப்பெண்ணையை தேய்த்து விட்டாலும், கசப்பினை சூப்பி துப்பிவிட்டு பின் மீண்டும் விரல் சூப்ப குழந்தைகள் ஆரம்பித்துவிடும்.

Tuesday, June 15, 2010

முதலில் நல்ல மதிப்பெண் பெற்று படிக்கும் குழந்தைகள் போகப்போக சரியாக படிக்காதது ஏன்?


குழந்தைகளின் படிக்கும் திறமை அவர்களுக்கு இயற்கையிலேயே அமைந்துள்ள நுண்ணறிவையும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களுக்கு அளிக்கும் பயிற்சியையும் பொறுத்து அமையும். பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் தொடக்க காலத்தில் பெற்றோர் குழந்தையின் கல்வியில் அதிகம் ஆர்வம் காண்பிப்பர். குறிபாக மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு சொல்லிகொடுப்பது முறையாக நடந்து கொண்டிருக்கும். தொடக்ககால ஆர்வமும், குழந்தைகளின் பாடங்கள் பெற்றோரல் கற்பிக்கக் கூடிய வகையில் மிக எளிமையானதாகவும் இருப்பது ஆகியவை அவ்வாறு முறையாக வீட்டில் குழந்தைகளுக்கு கற்பிப்பதற்கு காரணங்கள் எனலாம். குழந்தை அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்லும்போது பாடங்கள் பெற்றோரால் புரிந்து கற்பிக்க முடியாத வகையில் கடினமாகி விடுவதாலும், குழந்தையின் கல்வி மீது இருந்த தொடக்க கால ஆர்வம் குறைந்து போவதாலும் வீட்டில் கற்பிப்பதை பெற்றோர்கள் மெதுவாக கைவிட்டு விடுகின்றனர். அதற்கு பதிலாக குழந்தைகளை டியூசன் போன்ற பிற வகுப்புகளுக்கு அனுப்பி விடுகின்றனர். பள்ளியில் சொல்லிக் கொடுத்தாலும் பெற்றோரின் கவனிப்பும் அக்கறையும் குழந்தைகள் நன்கு படிக்க அவசியமாகும். இதன் காரணமாகவே நாளாக நாளாக குழந்தைகளின் படிப்பார்வம் குறையத் தொடங்குகிறது.

பெண்களுக்கு 10 வயதிலிருந்து 13 ½ வயது வரையும் ஆண்களுக்கு 11 வயதிலிருந்து 14 ½ வயது வரையும் பூப்பெய்துவதற்கான பாலியல் மாற்றங்கள் உடலில் நடந்து கொண்டிருக்கும். இச்சயமத்தில் விவரிக்க இயலாத அளவுக்கு ஹார்மோன் மாற்றங்கள் உடலுக்குள் நடந்து கொண்டிருக்கும். இதனால் குழப்பமான மனநிலை, எதிலும் கவனம் செலுத்த இயலாத மனநிலை ஆகியவற்றுடன் குழந்தைகள் இருப்பர். அதனால்தான் 8ம் வகுப்பு வரை முதல் மதிப்பெண்ணே பெற்றுவரும் ஓர் மாணவனோ மாணவியோ ஒன்பதாம் வகுப்பு முதல் பல பாடங்களில் மிகக் குறைவான மதிப்பெண் எடுப்பதும் தோல்வியடைவதும் நடைபெறுகிறது.

பெற்றோர்கள் பாலியல் முதிர்ச்சியினால் குழந்தைகளின் உடல், மன நிலையில் ஏற்படும் மாற்றங்களையும் அதனால் அவர்கள் கல்வித் திறன் குறைவதையும் கவணத்தில் கொண்டு குழந்தைகளை படிபடி என்று துன்புறுத்தாமலும், குறைந்த மதிப்பெண் பெற்று வரும்போது அவமானப்படுத்தாமல் ஆறுதளாக இருப்பதும் குழந்தைகள் தன் குறைபாட்டிலிருந்து மீண்டு வர உதவியாக இருக்கும். மேலும் எல்.கே.ஜி படிக்கும் போது குழந்தைகளின் படிப்பில் காட்டிய அதே ஆர்வத்தை இறுதிவரை கொண்டிருப்பது குழந்தைகளின் மதிப்பெண் குறையாமல் காக்க உதவும்.

Sunday, June 13, 2010

குழந்தைகள் கோபத்தில் தலையில் அடித்துக் கொள்வது, தலையை சுவரில் மோதிக் கொள்வது ஏன்?


சில குடும்பங்களில் வளரும் குழந்தைகள் மிகுந்த கோபம் கொண்டவர்களாக வளர்கின்றனர். ஆக்ரோஷமாக வளரும் இக்குழந்தைகள் ஏதேனும் பிரச்சனை வரும் போது தலையை சுவரில் மோதிக் கொள்வதும் கைகளால் தன் முகத்தில் தானே அறைந்து கொள்வதும் சாதாரணமான நடத்தையாகும். குழந்தைகளின் இக் கோப நடத்தையை எப்படி சரி செய்வதென்று தெரியாமல் பெற்றோர் மனக்கலக்கம் அடைந்து இருப்பர்.

தலையில் அடித்துக் கொள்ளும், தலையை சுவரில் மோதிக் கொள்ளும் குழந்தைகளின் பெற்றோர்களில் தாயோ, தந்தையோ யாராவது ஒருவர் மிகுந்த கோபம் கொண்டவர்களாக இருப்பர். பெற்றோர்களின் இக்கோபத்தை பார்த்தே குழந்தை ஆக்ரோஷமாக நடந்துகொள்ள பழகிக்கொள்கிறது. மேலும் குடும்பத்தின் ஒற்றைக் குழந்தைகளே இது போன்ற நடத்தைகளில் ஈடுபடுகின்றன. ஒரு குழந்தை என்பதால் அதிகமான செல்லம் கொடுக்கும் பெற்றோர் குழந்தை எதைச் செய்தாலும் அவர்களிடம் எதிர்மறையாக நடந்து கொள்வதில்லை. அதன் காரணமாக குழந்தைகளின் கோப நடத்தை அதிகமாகிக் கொண்டே செல்லும்.

கூட்டுக் குடும்பத்தில் வளரும் குழந்தைகளும் இவ்வாறு நடந்து கொள்ளலாம். தாத்தா, பாட்டி மற்றும் மற்ற உறவினர் நிறைந்துள்ள பெரிய வீட்டில் வளரும் குழந்தை சுவரில் தலையை முட்டிக் கொள்வது போன்ற நடத்தையில் ஈடுபடுவதை அனைவரும் சிலாகித்துப் பேசுவது குழந்தைகளின் இவ்வெதிர்மறை நடத்தையை அதிகரிக்கும். தன் நடத்தையைப் பற்றி பிறரிடம் குடும்ப உறுப்பினர்கள் பேசுவதை கேட்கும் குழந்தைகள் அனைவரின் கவணமும் தன்மீது இருப்பதாக நினைத்துக் கொள்ளும். பின்னர் எப்போதெல்லாம் தன் மீது பிறரின் கவனம் குறைந்து விட்டது என குழந்தை நினைக்கிறதோ அப்போதெல்லாம் ஆக்ரோஷமான எதிர்மறை நடத்தைகளை வெளிக்காண்பிக்கும்.

குழந்தைகளின் இவ்வாறான நடத்தையை குறைக்க நினைக்கும் பெற்றோர்கள். குழந்தைகள் தங்கள் தலையில் அடித்துக் கொள்ளும் போதும், தலையில் முட்டிக் கொள்ளும் போதும் அந்நடத்தையை கண்டு கொள்ளாமல் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். “நீ இவ்வாறு நடந்து கொள்வது எனக்கு பிடிக்காது” என்று குழந்தையிடம் தெளிவாக கூற வேண்டும். இந்நடத்தையைப் பற்றி கவலையடைந்திருப்பதாகவோ காட்டிக் கொள்வதோ அல்லது இதுபற்றி பிறரிடம் சொல்வதோ கூடாது. கூட்டுக் குடும்பமாக இருந்தால் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக குழந்தையின் இந்நடத்தை மீது கவனம் செலுத்துவதை புறக்கணிக்க வேண்டும். மாறாக குழந்தை இவ்வாறு நடந்து கொள்வதை குறைக்க வேண்டி அக்குழந்தையை அடிப்பதும் ஏசுவதும் குழந்தையின் கோப நடத்தையை அதிகப்படுத்தவே செய்யும்.

Friday, June 11, 2010

குழந்தைகள் எப்போதும் மூக்கை குடைவது ஏன்?

நன்கு படித்து திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் பணி புரியும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஒர் பெண் தன் குழந்தையிடம் பல கெட்ட பழக்கங்கள் காணப் படுவதால் மிகுந்த மனக்கவலை அடைந்திருப்பதாக தெரிவித்தார். நான்கு வயது நிரம்பிய அவரின் மகன் அடிக்கடி மூக்கில் விரலை நுழைத்து குடைந்து கொண்டிருக்கின்றான் என்பதும் அப்பையனிடம் காணப்படும் பல கெட்ட பழக்கங்களில் ஒன்று என்றும் அப்பெண் தெரிவித்தார். யார் இருக்கிறார்கள், யார் பார்க்கிறார்கள் என்ற கவலை இன்றியும், வீடு, பொது இடம் என எங்கும் அடிக்கடியும் தன் மூக்கை குடைந்து கொண்டிருக்கும் அப்பையனின் நடவடிக்கையில் அத்தாய் மனமுடைந்து போய் காணப்பட்டார். இக்கெட்ட பழக்கத்தை போக்க என்ன செய்வதென்று தனக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

வசதியான வீட்டுக் குழந்தையானாலும், ஏழைக் குழந்தையானாலும், படித்தவரின் குழந்தையானாலும், படிக்காதவரின் குழந்தையானாலும் சிறு வயதில் மூக்கை குடைவது இயல்பானதே. பிறரை பார்த்தே இப்பழக்கத்தை முதன் முதலாக குழந்தைகள் கற்றுக்கொள்கின்றன. வீட்டில் பெற்றோரோ அல்லது வேறு யாரேனுமோ மூக்கை குடைவதை பார்க்கும் குழந்தை தானும் அதுபோலவே செய்ய ஆரம்பிக்கின்றது. மூக்கை குடையும் போது, தோலை சொரியும் போது கிடைக்கும் சுகத்தைப் போல் ஒருவித இன்பம் கிடைக்கும். இவ்வின்பத்தை அனுபவித்து பழகிய குழந்தை தொடர்ந்து மூக்கை குடைந்து கொண்டே இருக்கும். மூக்கை குடைவதற்கு வேறு எந்த காரணமும் கிடையாது. வளர்ச்சியடையும் போது பிறர் முன்னிலையில் மூக்கை குடையக் கூடாது என்று விவரம் தெரிந்து குழந்தைகள் தானாகவே மூக்கை குடைவதை நிறுத்திக் கொள்வர்.

மூக்கில் புண் உண்டாகும் வரை குடைந்து கொண்டே இருந்தாலோ அல்லது குடைந்த கையை கழுவாமலேயே திண்பண்டங்களை உட்கொண்டாலோ தான் இந்நடத்தையை ஓர் பிரச்சனை என எடுத்துக் கொள்ள வேண்டும். மாறாக பிறர் முன்னிலையில் தன் குழந்தை மூக்கை குடைந்து கொண்டிருக்கிறதே என எண்ணி பெற்றோர் அவமானமும் கவலையும் அடையத் தேவையில்லை ஏனென்றால் எல்லா குழந்தைகளுக்கும் இப்பழக்கம் உள்ளதால் யாரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

மூக்கை குடையும் பழக்கத்தை குழந்தைகள் தீவிரமாக கொண்டிருந்தால் பெற்றோர் “மூக்கை குடைவது ஓர் தீய பழக்கம்” என்று குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்லிவர வேண்டும். அவர்கள் மூக்கை குடையும் போது அன்போடு விரல்களை எடுத்துவிட வேண்டும். குழந்தைகள் முன் பெரியவர்கள் மூக்கு குடைவதை அடியோடு நிறுத்தி விட வெண்டும். தொடர்ந்து இவைகளை கடைபிடித்து வந்தால் விரைவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாறாக பெற்றோர் அவமான உணர்ச்சி கொண்டு மூக்கு குடையும் குழைந்தைகளை அடிப்பதாலோ, திட்டுவதாலோ அல்லது பிறவகை தண்டனைகளை கொடுப்பதாலோ எந்தவித பயனும் ஏற்படாது.

Thursday, June 10, 2010

நன்றாக படிக்கும் குழந்தை படித்ததை எழுத சங்கடப்படுவது ஏன்?


உங்கள் குழந்தை எவ்வளவு படிக்கக் கொடுத்தாலும் சலிக்காமல் படித்துவிட்டு விளையாடப் போய்விடும். ஆனால் எழுத்து வேலை கொடுத்தால் எழுத சங்கடப்பட்டுக் கொண்டு, மிகக் குறைவாக எழுதிவிட்டு விளையாடப் போய் விடுகிறதென்றால் அதற்கு சில காரணங்கள் இருக்கலாம்.

சிலர் குழந்தைகளை மிக இளம் வயதிலேயே பள்ளியில் சேர்த்து விடுவர். உதாரணமாக 2½ வயதிலேயே பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் உண்டு. அவ்வாறு மிக இளம் வயதிலேயே பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு பெண்சிலைப் பிடித்து எழுதும் வலிமை விரல்களில் இருக்காது. பள்ளியில் அக்குழந்தைகளுக்கு அதிக எழுத்து வேலைகள் கொடுக்கப்பட்டால், விரல்களில் வலி ஏற்பட்டு எழுத்துப் பணிகளின் மீது இளம் வயதிலேயே வெறுப்பு உண்டாகிவிடும். அதனால் பின்னர் அவர்கள் எழுதுவதை தவிர்ப்பர். அவர்களின் கையெழுத்தும் அழகாக இருக்காது.

சில குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் தொடக்கத்தில் அதிகமாக விளையாட அனுமதிப்பர். சிறு வயதில் விளையாட விடுவோம். பின்னர் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்லும் போது அதிக நேரம் படித்தால் போதும் என்ற எண்ணத்திலேயே அவ்வாறு பெற்றோர்கள் நடந்து கொள்கின்றனர். ஆனால் ஆரம்ப காலத்தில் நன்கு விளையாடிப் பழகிய குழந்தை நீண்ட நேரம் ஓரிடத்தில் அமர்ந்து எழுதும் திறமையை வளர்த்துக் கொள்ளாமல் எழுத்துப் பணிகளை புறக்கணித்து விட்டு விளையாட்டிலேயே ஆர்வம் காட்டும்.

இக்குறையைப் போக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்:

தன் குழந்தை எழுதுவதை தவிர்க்கிறது என்று அதை பிறரிடம் சொல்லி கவலைப்படுவதை தவிர்த்து விட்டு சிறிது சிறிதாக எழுதும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும். 10 நிமிடங்கள் எழுதி முடித்தவுடன் சிறிது ஓய்வு கொடுத்து விட்டு மிண்டும் எழுதுமாறு குழந்தையை பணிக்க வேண்டும்.

குழந்தை எழுதும் சமயத்தில் ‘நீ எழுதிக் கொண்டிரு, ஒரு சிறிய வேலையை முடித்து விட்டு வந்து விடுகிறேன்’ என்று பெற்றோர் போய்விடக்கூடாது. குழந்தை எழுதி முடிக்கும் வரை அதன் அருகிலேயே அமர்ந்திருக்க வேண்டும். பெற்றோர் வேறு வேலைக்கு சென்று விடுவதாலேயே குழந்தையும் விளையாட ஓடிவிடுகிறது.

எழுதும் இடத்தில் பிற எந்த பொருட்களும் இல்லாதவாறு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் மேஜை முழுவதும் புத்தகங்களையும் பொருட்களையும் பரப்பி வைத்துக் கொண்டு எழுதுமாறு பெற்றோர் கட்டாயப்படுத்துகின்றனர். அவ்வாறான சூழ்நிலையில் எழுதும் குழந்தைகளின் கவனம் பல்வேறு பொருட்களின் மீது குவிந்து எழுத்துப் பணி தடைபடும்.

பெற்றோர் குழந்தைகளுக்கு அழகிய, மனதை கவரும் விதத்திலான எழுது பொருட்களை வாங்கி அன்பளிப்பாக கொடுக்க வேண்டும். புதுவகையான எழுது பொருட்களை வாங்கிக் கொடுப்பது குழந்தையின் எழுதும் ஆர்வத்தை தூண்டும்.

Wednesday, June 2, 2010

ஏதோ ஒரு பாடத்தில் மட்டும் ஆர்வம் அதிகமாக இருப்பது ஏன்?


ஒரு குழந்தை கணக்கு பாடத்தில் ஆர்வம் அதிகம் கொண்டதாகவும் மொழி, வரலாறு போன்ற பாடங்களில் ஆர்வம் குறைந்தும் காணப்படும். இன்னொரு குழந்தை வரலாறு பாடத்தில் ஆர்வம் கொண்டதாகவும் பிற பாடங்களில் ஆர்வம் குறைந்தும் காணப்படும். இதற்கு காரணம் அவர்களின் நுண்ணறிவாகும்.

மனிதனின் நுண்ணறிவு பல கூறுகளால் ஆக்கப்பட்டது. நுண்ணறிவைப் பற்றிய உளவியல் கோட்பாடு ஒன்றின் படி நம் அனைவரின் நுண்ணறிவும் இரண்டு கூறுகளால் ஆக்கப்பட்டது என கொள்ளப்படுகிறது. வாழ்வதற்கு தேவையான அடிப்படை அறிவை வழங்கும் பொதுக் காரணி ஒன்றும், ஏதேனும் ஓர் சிறப்பு திறமைக்கு காரணமான சிறப்பு காரணி ஒன்றும் நம் நுண்ணறிவில் உள்ளது. இதன் படி பள்ளி சென்று படிப்பதற்கு தேவையான பொது நுண்ணறிவு காரணியும் அதோடு ஏதோ ஒரு பாடத்தில் சிறந்து விளங்கக் காரணமாக சிறப்பு காரணியும் எல்லா குழந்தைகளுக்கும் இருக்கும். அதன் காரணமாகவே எல்லா பாடங்களையும் படிப்பதோடு கணக்கு, அறிவியல் அல்லது மொழிப்பாடம் என ஏதோ ஒன்றில் மாணவர்கள் அதிக ஆர்வமும் தனித்திறமையும் பெற்று விளங்குகிறார்கள். சில குழந்தைகள் எந்த பாடத்திலும் ஆர்வமில்லாமல் ஒவியம், இசை, நடனம் சமூக சேவை என வேறு எதேனும் விஷயங்களில் ஆர்வம் கொண்டிருக்கலாம்.

குழந்தைகளின் ஆர்வத்தை கண்டறிய உளவியல் நாட்டச் சோதனைகள் பல உருவாக்கப்பட்டுள்ளன. இந்நாட்டச் சோதனைகள் குழந்தைகள் என்ன துறையில் அல்லது பாடத்தில் ஆர்வம் உள்ளவர்களாக விளங்குகிறார்கள் என்பதை கண்டறியும் திறன் படைத்தவை. அதைப் போன்ற நாட்டமுள்ள பாடங்களில் கவனம் செலுத்திப் படித்தால் பிற்காலத்தில் என்னென்ன பணிக்கு செல்லலாம் என்று தெரிந்து கொள்ள வசதியாக “பணி விவர அகராதிகளும்” உருவாக்கப்பட்டுள்ளன. வளர்ந்த நாடுகளில் தங்கள் குழந்தைகள் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே இச்சோதனைகளுக்கு அவர்களை உட்படுத்தி ஆர்வங்களை கண்டறிந்து விடுகிறார்கள் பின் அதற்கேற்ற படிப்புகளையும் வேலைகளையும் தேர்ந்தெடுக்க குழந்தைகளுக்கு பெற்றோர் உதவி செய்கிறார்கள்.

சிலர் நன்றாக நிறைய பேசும் இயல்பு கொண்டவர்களாக இருப்பர். அவர்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் நாலு பேரிடம் பேசிக்கொண்டிருக்கவே விருப்பப்படுவர். பேசாமால் இருக்கச் சொன்னால் அவ்வாறிருக்க அவர்களால் முடியாது. அதைப் போன்றே பேசாமல் அமைதியாக இருக்கும் சுபாவம் கொண்டவர்களை கலகலவென பேச கட்டாயப்படுத்தினால் அது அவர்களால் முடியாது. இதைப் போன்றதே பொறியியல் துறைகளில் ஆர்வமில்லா ஒருவரை அத்துறை சார்ந்த படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவதும்.
தற்போது பெற்றோர்கள் நாட்டில் என்ன துறையை எல்லோரும் தெர்ந்தெடுத்து படிக்கிறார்களோ அதே துறையை தம் குழந்தைகளையும் தேர்ந்தெடுத்து படிக்க வெண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள். அவ்வாறு கட்டாயப்படுத்துவது முட்டாள்தனம். எந்த துறையை சார்ந்த படிப்பை தேர்ந்தெடுத்து படித்தாலும் அதில் முன்னேற வாய்ப்புகள் உள்ளன. அதை புரிந்து கொள்ளாமல் ஆர்வமில்லா குழந்தையை இலட்சக்கணக்கில் பணத்தை நன்கொடையாக கொடுத்து குறிப்பிட்ட பாடப்பிரிவில் சேர்த்து விட்டாலும் அவர்களால் அதில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற முடியாது. சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும்!.

Monday, May 31, 2010

மதிப்பெண் குறைந்து போக யார் காரணம்?


ஒருவர் தேர்வில் மதிப்பெண் பெறுவதை பல காரணிகள் நிர்ணயிக்கின்றன. மாணவ/மாணவியரின் நுண்ணறிவு, பாடத்தின் கடிணத்தன்மை, தேர்வில் கேட்கப்படும் கேள்விகளின் கடினத்தன்மை, விடைத்தாள் திருத்தும் ஆசிரியரின் மனநிலை, அவர் விடைத்தால் திருத்தும் சூழ்நிலை ஆகியவை தேர்வு மதிப்பெண்ணை தீர்மாணிக்கும் விஷயங்கள் ஆகும். ஆயினும் இரண்டு காரணிகள் முக்கியமானவை அவை மாணவ/மாணவியின் நுண்ணறிவு மற்றும் தேர்வுக்கான தாயாரிப்பு ஆகியவை ஆகும்.

மாணவ நுண்ணறிவு பிறப்பிலேயே நிர்ணயிக்கப்பட்டதாகும். பெற்றோரின் நுண்ணறிவும் அவர்களின் மரபு காரணிகளும் சேர்ந்தே ஒருவரின் நுண்ணறிவு நிர்ணயிக்கப்படுகிறது. அதை நாம் மாற்ற இயலாது. எனவே இதுவரை படிக்காத குடும்பத்திலிருந்து வரும் மாணவனோ மாணவியோ மிக அதிக நுண்ணறிவுடன் இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பதற்கில்லை. ஆயினும் சில வேளைகளில் படிப்பறிவே இல்லாத பின்புலத்தில் இருந்து வந்த ஓர் மாணவனோ/மாணவியோ மிக அதிக நுண்ணறிவுடனும் இருக்கலாம். அவ்வாறு நடப்பது விதிவிலக்கேயன்றி எப்போதும் அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை. அதே போன்று நன்கு படிப்பறிவு கொண்ட பின்புலத்தில் இருந்து வந்த மாணவனோ/மாணவியோ குறைந்த நுண்ணறிவு கொண்டிருக்கவும் வாய்ப்புண்டு. பரம்பரையாலும் பிறப்பினாலும் நிர்ணயிக்கப்படுகிற இந்நுண்ணறிவின் தாக்கம் ஒருவரின் கல்வியில் 49 சதவீதமாகும்.

மீதமுள்ள 51 சதவீத தாக்கத்தை ஏற்படுத்துவது மாணவ/மாணவியரின் கடின உழைப்பும் பயிற்சியுமாகும். நுண்ணறிவு இல்லாத மாணவ/மாணவியர் கூட கடும் பயிற்சியின் மூலம் அதிக மதிப்பெண் பெற வாய்ப்புண்டு. அவ்வாறு கடினமாக உழைப்பது ஒரே நாளில் நடக்கக் கூடிய விஷயமல்ல. பெற்றோர்கள் சிறு வயதிலிருந்தே தன் குழந்தையை கடினமாக உழைத்து படிக்க பழக்கியிருக்க வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரம் தனக்கு என்ன வேலையிருந்தாலும் அதை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு குழந்தைகளின் படிப்புக்காக உதவி செய்ய அவர்களுடன் அமர வேண்டும். படிக்கும் போது கவனச் சிதைவு ஏற்படாவண்ணம் நல்ல சூழலை அமைத்துக் கொடுப்பதோடு விரைவாக படிக்கும் முறைகளையும் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். மேலும் குழந்தைகளை தானே முயன்று கற்றுக்கொள்ள உதவி மட்டுமே செய்ய வேண்டும். மாறாக பெற்றோர் எக்காரியத்தையும் செய்து கொடுக்கக் கூடாது. உதாரணமாக ஓர் படத்தை எப்படி வரைவது என சொல்லிக் கொடுத்து குழந்தைகளையே வரையச் செய்ய வேண்டுமே தவிர பெற்றோரே வரைந்து கொடுக்கக் கூடாது. தொடர்ந்து பல ஆண்டுகள் இவ்வாறு செய்து வந்திருந்தால் முக்கியமான தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதென்பது மிகவும் எளிமையானதாக இருக்கும்.

ஆனால் இன்றைய பெற்றோர் பலர் குழந்தைகளை கஷ்டப்படுத்தக் கூடாது என்று நினைத்துக் கொண்டு சிறு வயதிலிருந்தே குழந்தைகளின் படிப்பு தொடர்பான எல்லா வேலைகளையும் பெற்றோர்களே செய்து விடுகின்றார்கள். குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதுமில்லை அவர்கள் கற்றுக் கொள்ள வாய்ப்பு கொடுப்பதுமில்லை. வேறு சில பெற்றோர்களோ குழந்தைகளில் தன்னம்பிகையை வளர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு அவர்களின் படிப்பு முதற்கொண்டு எவ்விஷயத்தையும் கண்டுகொள்வதில்லை. அவர்களின் விஷயங்களில் தலையிடுவதில்லை. அவர்கள் நன்றாக படித்தால் பிற்காலத்தில் அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும். படிக்காவிட்டால் எப்படியோ பிழைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று கூறி விலகிக் கொள்கிறார்கள். இவ்விரண்டு அணுகுமுறைகளுமே தவறாகும். அத்தகைய அணுகுமுறையில் ஏதோவொன்றை கடைபிடித்ததன் விளைவே குழந்தைகள் குறைந்த மதிப்பெண் பெறுவது. விதையொன்றைப் போட்டால் சுரையொன்று வராது என்பது போல பள்ளியில் சேர்த்து விட்டு பல வசதிகளை செய்து கொடுப்பதினால் மட்டுமே மதிப்பெண் கிடைக்காது. பெற்றோரின் அர்ப்பணிப்பும் அவசியம்.

வயதாகியும் குழந்தைகள் பேசாமல் இருப்பது ஏன்?


குறிப்பிட்ட வயதை அடைந்த பின்னரும், காதுகேளாமை, ஆடிசம் என்ற உளவியல் பிரச்சனை, மனவளர்ச்சி குறைபாடு ஆகிய பிரச்சனைகள் ஏதுமில்லாத போதும் குழந்தைகள் மற்ற குழந்தைகளைப் போல் பேசாமல் இருந்தால் அக்குழந்தைக்கு மொழியை பேசுவதில் குறைபாடு உள்ளது எனக் கொள்ளலாம். இக்குறைபாடு உள்ள குழந்தைகளால் ஓர் மொழியின் வர்த்தைகளை உச்சரிப்பதை கற்றுக் கொள்ளவும் அம்மொழியின் இலக்கணத்தை கற்றுக் கொள்ளவும் இயலாது.

குழந்தைகளுக்கு ஏன் இக்குறைபாடு ஏற்படுகிறது என்பதற்கான காரணம் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை. ஆயினும் மூளையே இதற்கான முக்கிய காரணம் என்று அனுமானிக்கப்பட்டுள்ளது. பேச்சுக் குறைபாடு கொண்டுள்ள குழந்தைகளின் மூளையில் ஏதேனும் பிறழ்வு இருக்கக்கூடும் என்று யூகிக்கப்பட்டுள்ளது. எத்தகைய பிறழ்வு என்பதை தற்போதைய மருத்துவ அறிவியல் இன்னும் கண்டறியவில்லை அதைப் போன்றே ஏதேனும் ஒரு மரபணு பேச்சுக் குறைபாட்டுக்கு காரணமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆயினும் அது எந்த மரபணு என்று இன்னும் கண்டறியப்படவில்லை. பொதுவாக பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளிடமே இக்குறை அதிகமாக காணப்படுகிறது.

எல்லா குழந்தைகளும் எவ்வயதில் பேச ஆரம்பிக்கின்றனவோ அதே வயதில் பேச்சுக்குறைபாடு உள்ள குழந்தைகளும் பேச ஆரம்பிக்கின்றன. ஆனால் இவர்கள் பேச்சு வளர்ச்சியில் சாதாரணமாக குழந்தைகளைவிட மிக குறைவான முன்னேற்றத்தையே அடைகிறார்கள். வார்த்தைகளை உச்சரிப்பது இத்தகைய குழந்தைகளுக்கு மிக கடினமாக இருக்கும். இக்குறைபாடு குழந்தைகள் ஆறு-ஏழு வயதை அடையும் வரையில் கூட நீடித்து அவர்களின் படிக்கும் மற்றும் எழுதும் திறனைக்கூட பாதிக்கலாம். மற்ற குழந்தைகளைப் போல இயல்பாக ஒரு மொழியை கற்றுக்கொள்ள பேச்சுக் குறைபாடு உள்ள குழந்தைகளால் இயலாது. காது கேளாமை இல்லாத நிலையிலும் பேச்சுக் குறைபாடுள்ள குழந்தைகளால் வார்த்தைகளின் ஒலிகளை பிரித்தறிந்து கொள்ள இயலாது. இத்தகைய குழந்தைகளுக்கு மொழியின் ஓசை, இலக்கணம், போன்றவற்றை பற்றிய ஒட்டு மொத்த புலன்காட்சி நன்கு வளர்ச்சியடையாமலும் இருக்கும்.

பேச்சுக் குறைபாடுள்ள குழந்தைகள் நாளடைவில் தன்னுடைய குறையை உணர்ந்து கொண்டு வயதாக வயதாக பிறரிடம் பேசாமல் விலகிச் செல்ல முயற்சிப்பர். இதனால் அவர்களின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சியும் பாதிக்கக்கூடும்.

இக்குறையை போக்க குழந்தைகளின் சூழ்நிலையில் மொழியின் பங்கு அதிகமாக இருக்குமளவுக்கு பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் எவ்வாறு வார்த்தைகளை உச்சரிப்பது மற்றும் வாக்கியமாக பேசுவது ஆகியவைகளை பெற்றோர் முன்மாதிரியாக இருந்து கற்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். இவைகளே குழந்தைகளின் பேச்சு வளர்ச்சியை அதிகப் படுத்துவதில் நல்ல பலனை அளிக்கும். எனவே மிக விரைவில் தன் குழந்தைக்கு பேச்சு குறைபாடு உள்ளதா என்று கண்டறிந்து சிகிச்சையளித்தல் முக்கியமாகும். பெற்றோர்கள் இரண்டு வயது முதல் மூன்று வயதான தங்கள் குழந்தைகு என்னென்ன வார்த்தைகள் தெரியும் என்பதையும் இரண்டு வார்த்தைகள் கொண்ட வாக்கியங்கள் எத்தனை தெரியும் என்பதையும் கண்டறிய வேண்டும். குழந்தைக்கு 50 வார்த்தைகளுக்கும் குறைவாகவும், இரண்டு சொல் வாக்கியங்கள் ஒன்று கூடவும் தெரியவில்லை என்றால் அக்குழந்தை பேச்சுக் குறைபாடு உள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். பொதுவாக இரண்டு வயதில் அதிகமாக காணப்படும் இக்குறைபாடு 3 அல்லது 4 வயதாகும் போது மெதுவாக குணமாக ஆரம்பிக்கிறது அதற்கு காரணம் பேச்சுக் குறைபாட்டை உண்டாக்கும் சில ஊறுபாடுகள் தானாகவே சரியகிவிடுவதாகும்.

Friday, May 28, 2010

குழந்தைகளுக்கு திக்குவாய் ஏன் ஏற்படுகிறது


தட்டுத்தடங்கல்களோடு சரளமாக பேச முடியாத குறைதான் திக்குவாயாகும். திக்குவாய் உடல்ரீதியான பிரச்சனை இல்லை. வாயும் தொண்டையும் நன்றாக இருக்கும் போதே பலருக்கு திக்குவாய் ஏற்பட்டிருக்கிறது. திக்கித்திக்கி பேசுவது மனரீதியான பிரச்சனையின் காரணமாகத்தான். திக்குவாயர்கள் பேசும்போது திக்கித்திக்கி பேசுவார்கள். ஆனால் பாட்டு பாடச் சொன்னால் திக்காமல் தெளிவாக பாடி முடித்து விடுவார்கள். பேசும் போது தானாக யோசித்து பேச வேண்டியுள்ளது. எனவே எங்கே நாம் தவறாக பேசி விடுவோமோ, பிறர் நம்மை தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்ற பயத்தில் பேச்சு சரளமாக வருவதில்லை. ஆனால் பாட்டு யாரோ பாடியது. எனவே அதைப் பாடும் போது எவ்வித மன பயமும் இன்றி தெளிவாக திக்காமல் பாடி விடுகிறார்கள். இதிலிருந்தே திக்குவாய் மனம் தொடர்பான நோய் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

குழந்தைகளை அடக்கி அடக்கி வளர்த்தல் திக்குவாய் ஏற்பட முதல் காரணம் ஆகும். ‘அதைச் சொல்லாதே, இதைச் சொல்லாதே, சத்தம் போடாதே’ என்று எப்போதும் குழந்தைகளை மிரட்டிக்கொண்டே இருப்பது குழந்தைகளின் ஆழ்மனதில் கட்டுப்பாட்டை உண்டாக்கி இயல்பாக தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த இயலாத நிலைக்கு அவர்களை இட்டுச் செல்கிறது. ஒருவர் தன் சகோதரரை எதிர்த்து பேசாதே என்று சாட்டையை கையில் வைத்துக் கொண்டு மிரடிக் கொண்டே இருந்தார். அப்பையன் வளர வளர திக்குவாய் தோண்றி பெரியவனானதும் நல்ல திக்குவாயனாக மாறிவிட்டான். சிறு வயதில் மிரட்டிக் கொண்டே இருந்ததே இதற்கு காரணம்.

பழக்கத்தின் காரணமாகவும் குழந்தை பருவத்தில் திக்குவாய் உருவாகி பின் வாழ்க்கை முழுவதும் தொடரலாம். வீட்டில் தாத்தா, பாட்டி அப்பா அம்மா என யாராவது ஒருவருக்கு திக்குவாய் பழக்கம் இருந்தால் அவ்வீட்டில் வளரும் குழந்தை அவர்கள் பேசுவதை கூர்ந்து கவணித்து தானும் திக்கித்திக்கி பேச கற்றுக் கொண்டு விடும். ஒருவர் சிறுவயதில் தன் நண்பனுக்கு திக்குவாய் இருந்ததால் அவனை கேலி செய்யும் விதமாக திக்கி திக்கி பேசி கிண்டலடித்தார். பின்னர் அதுவே இவருக்கும் பழக்கமாகிப் போய்விட வயதாகிய காலத்தில் இன்னமும் திக்கி திக்கி பேசிக் கொண்டிருக்கிறார்.

மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மை சமூக சூழலில் ஒருவரை திக்கிப் பேச காரணமாக அமையலாம். கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் வகுப்பில் எழுந்து நின்று பிறர் முன்னிலையில் பேசும் போது மட்டும் திக்கிப் பேசுவார். ஆனால் வகுப்பிற்கு வெளியே தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவருக்கு திக்குவாய் இருக்காது. இயல்பாக பேசுவார் பிறர் முன்னிலையில் பேசும் போது தவறாக பேசி விடுவோமோ என்ற தாழ்வு மனப்பான்மையே திக்கிப் பேசுவதற்கு காரணம்.

திக்குவாய் குணமாகக் கூடிய ஓர் உளவியல் பிரச்சனை. குழந்தைகளுக்கு திக்குவாய் உள்ளது என்பதை கண்டறிந்து கொண்டால் உடனே உளவியல் மருத்துவரை அணுக வேண்டும். அத்தகைய குழந்தைகளுக்கு பேச்சு தொடர்பான உடல் உறுப்புகளில் எவ்வித குறையும் இல்லை எனச் சோதித்து தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பின்னர் குழந்தைகள் திக்கிப் பேசினால் உடனே அதை திருத்தி நன்றாக பேச செய்ய வேண்டும். அதட்டிப் பேசாமல் அன்புடன் இதைச் செய்வது நன்று. அத்தகைய குழந்தைகளை பெற்றோர் தம் முன்னிலையில் பிறரிடம் பேச வைக்க வேண்டும். அதிகமான அளவுக்கு வெளியிடங்களுக்கு அழைத்து சென்று பிறரிடம் பயமின்றி உடையாட பெற்றோர் உதவ வேண்டும். திக்குவாய் குறையை குழந்தை முன்னிலையிலேயே அனைவரிடமும் சொல்லி கவலைப்படுவதை தவிர்ப்பது நன்று. மேலும் குழந்தை திக்காமல் நன்றாக பேசும் சமயங்களில் குழந்தையை முதுகில் தட்டிக் கொடுப்பது, தலையை தடவுவது போன்ற செயல்களின் மூலம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

நன்கு வளர்ந்த பெரியவர்களுக்கு திக்குவாய் இருப்பின் அவர்களும் இக்குறையை போக்கிக் கொண்டு நன்றாக பேச முடியும். இவர்கள் முதலில் மனதை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எவ்வித மனப்பதட்டமும் இல்லாத நிலையில் என்னால் பிறர் முன்னிலையில் திக்காமல் தெளிவாக பேச முடியும் என்று தனக்குத்தானே சுய கருத்தேற்றம் செய்து கொள்ள வேண்டும். தினமும் ஏதாவது ஒரு புத்தகத்தில் ஐந்து பக்கங்களை மிக மிக மெதுவாக ஒரு ஸ்டூலின் மீது ஏறி நின்று காலையிலும் மாலையிலும் படித்து வர வேண்டும். இவ்வாறு படிக்கும் முறைக்கு நீட்டிப் படித்தல் என்று பெயர். ஸ்டூலின் மீது ஏறி நின்று படிக்கும் போது முன்னால் நிறைய பேர் அமர்ந்திருப்பதாக கற்பனை செய்து கொண்டு படிக்க வேண்டும்.

திக்குவாய் உள்ளவர்கள் மேற்கண்ட பயிற்சிகளோடு ‘எனக்கு உள்ள திக்குவாய் பிரச்சனையிலிருந்து நான் வெளிவந்தே தீருவேன்’ என்று மனதினுள் பெருங்கோபம் கொள்ள வேண்டும். அவ்வுறுதியினை வலிமையாக்கும் விதமாக நீண்ட தூரம் நடைப் பயிற்சி செய்தல், நீண்ட நேரம் நீந்துதல், நீண்ட நேரம் கயிறு தாண்டுதல் போன்ற உடற்பயிற்சிகளை செய்யலாம்.

மேற்கண்ட பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் திக்குவாய் பிரச்சனையை விரைவில் தீர்த்துவிடலாம். தற்காலத்தில் உளவியல் வல்லுநர்கள் மேற்கண்ட பயிற்சிகளை அளிப்பதன் மூலம் ஆறே நாட்களில் திக்குவாயை குணமாக்குகிறார்கள். உங்களுக்கு திக்குவாய் இருந்தால் நீங்களும் முயன்று முன்னேறலாமே!.

ஊனமுற்ற குழந்தைகளை வளர்ப்பது எப்படி?


அரிதரிது மானிடராய் பிறத்தல் அரிது, கூன் குருடு செவிடின்றி பிறத்தல் அதனினும் அரிது என்பது அவ்வையார் கருத்து. மனிதப் பிறப்பில் குறைகள் எதுவுமின்றி பிறப்பது நன்று. ஆனால் சில குழந்தைகளுக்கு ஏற்படும் குறைகள் அக்குழந்தைகளையும் அவர்தம் பெற்றோர்களையும் கடும் துன்பத்திற்குள்ளாக்குகிறது.

பொதுவாக கண் பார்வை குறைபாடு, செவிட்டுத் தன்மை, உடல் உறுப்புகள் குறைபாடு ஆகியவை உடற்குறைகள் எனப்படும். இவற்றோடு மிக முக்கியமான இன்னொன்று மனவளர்ச்சி குறைபாடு ஆகும். இத்தகைய குறைகள் கொண்ட குழந்தைகளை ஊனமுற்றோர் என்றும் உடற்-மன குறையுடையோர் என்றும் அழைத்து வந்தோம். ஆனால் தற்போது இவர்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

உடற்குறைபாடுகள் குழந்தைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படலாம். சில குழந்தைகளுக்கு பிறந்தபின் இடையில் ஏற்படலாம். பிறப்பிலேயே குறைகொண்ட குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை போன்ற மனப்பிரச்சனைகள் பிறந்த பின் இடையில் ஊனம் ஏற்பட்ட குழந்தைகளை விட குறைவாக இருக்கும். ஊனமுற்ற குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர் நினைப்பது போல மிகவும் கஷ்டமானது அல்ல. மாற்றுத்திறனாளிகள் என்ற பெயருக்கேற்ப அவர்களுக்கு எதேனும் வேறு சிறப்பு திறன்கள் இருக்கும். ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறகும் என்பது போல கண் பார்வை குறையுடையோருக்கு காது மிக நன்றாக கேட்கும். காது கேட்காதவர்களுக்கு கூர்நோக்கும் திறன் இருக்கலாம். எனவே உடற்குறையுடைய குழந்தையினிடத்தில் உள்ள மாற்றுத்திறனை பெற்றோர் கண்டறிந்து அதனை ஊக்கப்படுத்த வேண்டும். ஊனமுற்ற குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களுக்கு சாதாரண குழந்தைகளை போல் எல்லா விவரங்களையும் தெரிவித்து சமூகத்தில் பிறரோடு பழகும் நாட்டமுள்ள குழந்தைகளாகவும், தன்னம்பிக்கை உள்ள குழந்தைகளாகவும் வளர்க்க வேண்டும். நிறைய ஊனமுற்ற குழந்தைகள் பிற்காலத்தில் கஷ்டப்படுவது தன்னம்பிக்கை இன்மையால் தான். கண் தெரியாவிட்டால் தடவி படித்துக் கொள்ளலாம். ஓர் ஆள் உதவிக்கு வைத்துக் கொண்டு எல்லா வேலைகளையும் செய்து கொள்ளலாம். காது கேட்காவிட்டால் ஒரு கருவி மாட்டி கேட்டுக் கொள்ளலாம். கால் இல்லாவிட்டால் மரக்கால் வைத்து நடக்கலாம், ஓடலாம். ஆனால் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் இவை எதையுமே செய்ய இயலாது.

சில ஊனமுற்ற குழந்தைகள் வளர வளர தங்கள் ஊனத்தை ஏற்க மறுத்து சாதாரணமானவர்களை விட அதிக திறமையுடன் நடந்து கொள்ள முயற்சிப்பார்கள். அதனால் பிறரின் வசைவுக்கும் ஆளாவார்கள். மொண்டிக்கு முந்நூறு குறும்பு என்று கூறுவது இதனால்தான். ஊனமுற்றவர்கள் தங்கள் உடலின் குறையை மனதளவில் ஏற்க மருப்பதால் தான் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். எல்லா ஊனமுற்ற குழந்தைகளுக்கும் தனக்களிக்கப்பட்ட உடலை குறையோடு ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை உண்டாக்க பெற்றோர்கள் சிறுவயதிலிருந்தே முயற்சிக்க வேண்டும்.

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை அதிகமாக சொல்லிக் கொடுக்க வேண்டியவர்கள், செய்து காண்பித்து பயிற்சி கொடுக்க வேண்டியவர்கள், எதுவுமே செய்ய முடியாத மிக குறைந்த மன வளர்ச்சி கொண்டவர்கள் என மூன்று பிரிவாக பிரிக்கலாம். இதில் சொல்லிக் கொடுத்து மேம்படுத்த வேண்டிய குழந்தைகளுக்கு பெற்றோர் அதிக முயற்சி எடுக்க வேண்டும். அவர்களுக்காக அதிக நேரம் செலவிட வேண்டும். தொடர்ந்து அவர்களுக்கு சொல்லிக்கொடுத்துக் கொண்டே இருப்பதன் மூலம் சாதாரண குழந்தைகள் போலவே அவர்களை வளர்க்கலாம். பயிற்சி கொடுத்து மேம்படுத்த வேண்டியவர்களுக்கு உளவியலரின் உதவியை நாடி சரியான பயிற்சி கொடுத்து அவர்களை மேம்படுத்த வேண்டும். ஒன்றுமே செய்ய முடியாத குழந்தைகளை போற்றி பாதுகாத்து வளர்க்க வேண்டும். அவர்களின் இறுதிக்காலம் வரை நலமுடன் இருக்க ஆவன செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை.

ஊனமுற்ற, மன வளர்ச்சி குறைந்த குழந்தைகளின் பெற்றோர் தாழ்வு மனப்பான்மையும், செய்வதறியா மனநிலையும், அவநம்பிக்கை கொண்டவர்களாகவும் மாறி விடுகிறார்கள். இதன் காரணமாக சிறிது காலம் ஊனமுற்ற குழந்தைகளை பற்றி கவலைப் பட்டு விட்டு பின்பு பற்றில்லாமல் வாழத் தொடங்கிவிடுகிறார்கள். இதன் காரணமாகவே பல ஊனமுற்றவர்கள் பிற்காலத்தில் முன்னேற்றமின்றி தாழ்ந்த நிலையில் உள்ளனர். எனவே ஊனமுற்ற குழந்தைகளைக் கொண்ட பெற்றோர் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாறிவிட வேண்டும். குழந்தைகளுக்காக அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஊனமுற்றவர் பற்றி நிறைய விவரங்களை தேடிச் சென்று பெற வேண்டும். குறையுடையோர் நிறைவடைய உதவ வேண்டும். மண் சரியில்லை என்றாலும் அதை வீணாக்குவதும் பானையாக்குவதும் குயவனின் கையில் தானே உள்ளது!.

Saturday, May 15, 2010

குழந்தைகள் சரியாக சாப்பிடுவதில்லை என பெற்றோர்கள் புகார் செய்வது எதனால்? குழந்தைகளை நிறைய சாப்பிடவைக்க என்ன வழி?

எல்லா பெற்றோர்களுக்குமே தங்கள் குழந்தைகள் நிறைய சத்துள்ள உணவுவகைகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வளரவேண்டும் என்ற ஆசை சற்று அதிகமாகவே இருக்கும். அதற்காக தனக்கு உணவில்லாவிட்டாலும் பரவாயில்லை, குழந்தைகளுக்கு எவ்வளவு செலவானாலும் சத்தான உணவழிக்க வேண்டும் என பாடுபடுகிறார்கள். ஆனால் குழந்தைகளோ பெற்றோர் கொடுக்கும் உணவு வகைகளை தீண்டுவதே இல்லை. எதைக் கொடுத்தாலும் வேண்டாம் என அடம்பிடித்து சாப்பிட மறுக்கிறார்கள். இது பெற்றோருக்கு மிகுந்த மன வேதனையை அளிப்பதோடு குழுந்தையை அடித்தல், குழந்தை சாப்பிடாததால் அதனுடன் பேசாமல் இருத்தல் போன்ற எதிர்மறை விளைவுகளையும் உண்டாக்குகிறது.

ஏன் குழந்தைகள் சாப்பிடுவதில்லை என்பதை தெரிந்துகொள்ள ஒரு உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும்.

· குழந்தைகளுக்கு மிக அதிக உணவு தேவையில்லை. உதாரணமாக ஒரு பெரிய சாக்லெட் சாப்பிட்டால் அதற்கு மதிய உணவு தேவைப்படாது. எனவே மதிய உணவு கொடுத்தால் அதை சாப்பிட மறுப்பதில் வியப்பேதும் இல்லை.

· பெற்றோர்களுக்கு மற்ற குழந்தைகள் சாப்பிடும் அளவோடு தன் குழந்தை சாப்பிடும் அளவை ஒப்பிட்டு பார்க்கும் பழக்கம் உண்டு. அவ்வாறு ஒப்பிட்டு பார்க்கும் போது எப்போதும் அடுத்த குழந்தையை விட தன் குழந்தை குறைவாகவே உண்பதாக தோண்றும். இது ஒரு மாயத் தோற்றமே.

· தன் குழந்தை “நன்றாக சாப்பிடுகிறது” என பிறரிடம் சொன்னால் கண் திருஷ்டி ஏற்பட்டுவிடும் என்று நினைத்துக்கொண்டு பல பெற்றோர்கள் “என் குழந்தை சாப்பிடுவதே இல்லை” என குழந்தையின் முன்பாகவே பிறரிடம் சொல்லிக்கொண்டு இருப்பார்கள். அதை கூர்ந்து கவனிக்கும் குழந்தைகள் சாப்பிடுவதை தவிர்க்க ஆரம்பிக்கின்றன.

· குழந்தைகள் ஒரே உணவை எப்போதும் விரும்பி உண்பதில்லை அவர்களின் உடலில் என்ன சக்தி குறைவாக உள்ளதோ அந்த சக்தி அதிகமாக உள்ள உணவை விரும்பி சாப்பிடுவார்கள். உடலில் பற்றாக்குறையாக இருந்த சக்தி தேவையான அளவு சேர்ந்தவுடன் அந்த சக்தி இருக்கும் உணவை விரும்ப மாட்டார்கள். உதாரணமாக முட்டையில் உள்ள சக்தி குறைவாக இருக்கும் ஓர் குழந்தை முட்டையை தொடர்ந்து சில காலத்திற்கு விரும்பு சாப்பிடும். அக்குழந்தைக்கு முட்டையில் உள்ள சக்தி தேவையான அளவு உடலில் சேர்ந்தவுடன் முட்டையை அறவே வெறுக்க ஆரம்பித்துவிடும். எனவே ஒரே வகையான உணவை சாப்பிடுமாறு குழந்தையை கட்டாயப்படுத்தக்கூடாது. ஓர் உணவை சாப்பிடவில்லை எனில் வேறு உணவை கொடுத்து உண்ணச் சொல்ல வேண்டும்.

· தேவைக்கு அதிகமான உணவைக் கொடுத்தால் “உடல்பருமன்” ஏற்பட்டு குழந்தைகள் பெரியவர்களாகும் போது அதுவே அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக மாறிவிடும். எனவே உணவுப் பண்டங்களை திணித்து உடல் நோயை உண்டாக்க வேண்டாம்.

Friday, May 14, 2010

தகவல் தொழில்நுட்ப வசதிகளால் குழந்தைகள் தவறான விசயங்களை கற்றுக்கொள்வதை தடுப்பது எப்படி?


குழந்தைகளுக்கு உலக அறிவை புகட்ட வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். இப்பரந்த உலகை காணும் வண்ணம் குழந்தைகளுக்கு அறிவுக் கதவுகள் அனைத்தையும் திறந்து விட வேண்டும். அப்போதுதான் பிற்காலத்தில் குழந்தைகளால் பெற்றோர் துணையின்றி தனித்து இயங்க முடியும். ஆனால் சில வேளைகளில் குழந்தைகள் தன் வயதில் தெரிந்து கொள்ள தேவையில்லாத விஷயங்கள் பலவற்றை தெரிந்து கொள்கிறார்கள். வன்முறை உணர்வுகள், பாலியல் விஷயங்கள், தவறான நடத்தைகள், கொலை, கொள்ளை, கடத்தல் என பலவற்றை உதாரணமாகக் கூறலாம். தற்போது அடைந்துள்ள அறிவியல், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் மிக எளிதாக குழந்தைகள் இவற்றை தெரிந்து கொள்கிறார்கள்.

இது போன்ற எதிர்மறை விளைவுகள் எதுவுமின்றி சரியான அறிவு வளர்ச்சிக்கு வித்திடுவது பெற்றோரின் கையில் தான் இருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் உள்ளுணர்வின் ஆசைகலை கட்டுப்படுத்தவும், தள்ளிப் போட்டு சிறிது நேரத்திற்கு பிறகு தீர்த்துக்கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும். உதாரணமாக உறவினர் ஒருவரைப் பற்றி மிகக் கோபமாக பெற்றோர் விவாதிக்கும் போது குழந்தைகள் அருகில் இருந்து கவனித்தால் அவ்வுறவினர் மீது அவர்களும் குரோதத்தை வளர்த்துக்கொள்வார்கள். எனவே குழந்தைகள் அருகில் இருந்தால் சற்று நேரம் கழித்து அவர்கள் இல்லாத போது உறவினர் பற்றி பேசிக் கொள்ளலாம்.

குழந்தைகள் இருக்கும் போது தொலைக்காட்சி பார்க்கும் பெரியவர்கள் தேர்ந்தெடுத்த நல்ல நிகழ்ச்சிகளை ஓடவிட்டு அறிவை விருத்தியாக்கலாம். நாளிதழ்கள், மாத, வாராந்திர பத்திரிக்கைகளை தரமான, அறிவு வளர்ச்சிக்கு உதவுபனவா என தேர்ந்தெடுத்து வாங்கி வீட்டில் போட வேண்டும். மழை காலத்துக்கு குடை; வெயில் காலத்திற்கு வெள்ளை சட்டை என சூழ்நிலைக்கேற்ப மாற்றி பயன்படுத்துவது போல் மேற்சொன்ன யாவற்றையும் குழந்தைகளின் அந்தந்த வயதுக்கேற்ப பொருத்தமானவைகளாக தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்த வேண்டும்.

Thursday, May 13, 2010

குழந்தைகளின் வெட்கத்தைப் போக்கி சிறந்த ஆளுமை பண்புகளை வளர்ப்பது எப்படி?


குழந்தைகள் வளர்ச்சியடையும் போது அவர்கள் சமூகத்தில் பிறருடன் பழக வேண்டி இருக்கிறது. சமூக சூழ்நிலைகளில் பிறரை சந்திக்க நேரிடும்போது குழந்தைகளுக்கு வெட்க உணர்வு ஏற்படுவது இயற்கையான ஒன்றாகும். சாதாரணமாக ஓர் குழந்தை தன் வீட்டில் உள்ள அம்மா, அப்பா, மற்ற பிற குடும்ப உறுப்பினர்களுடன் இயல்பாக பழகும். நன்றாக வாயடிக்கும் ஆனால் புதியவர் ஒருவர் பெயரைக் கேட்டாலோ அல்லது வேறு விஷயங்களை விசாரித்தாலோ அவர்கள் முன் பேசவும், ஏதாவதொன்றை செய்யவும் மிகவும் வெட்கம் கொள்ளும்.

இரண்டு வழிகளில் வெட்கம் குழந்தைகளின் ஆளுமையில் இடம் பிடிக்கிறது. முதலாவதாக பரம்பரையின் காரணமாக பிறப்பிலேயே ஏற்படும் வெட்கமாகும். குழந்தையின் அப்பா, அம்மா கூச்ச சுபாவமுள்ளவர்களாக இருந்தால், அல்லது அவர்கள் குடும்பத்தில் சிலருக்கு கூச்ச சுபாவம் இருந்திருந்தால் அப்பண்பு குழந்தைகளுக்கும் கடத்தப்படும். இவ்வாறு பிறப்பால் கூச்ச சுபாவத்தைப் பெற்ற குழந்தைகளின் நரம்பு மண்டலம் எளிதில் தூண்டப்படுபவையாக அமைந்துள்ளன. எனவே சிறிய தூண்டுதல்கள் கூட எளிதான நரம்பு மண்டலத்தைத் தூண்டி கூச்சத்திற்கான எதிர்வினைகளை தோற்றுவிக்கின்றன.

இரண்டாவது சமூக சூழ்நிலைகளால் ஏற்படும் கூச்சம். பிறர் ஓர் குழந்தை பேசும் போது எப்படி அதை அங்கீகரிக்கிறார்கள். அல்லது அலட்சியப்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து கூச்ச சுபாவம் ஏற்படலாம். உதாரணமாக முதன் முதலாக ஓர் குழந்தை பலர் உட்கார்ந்திருக்கும் இடத்தில் இயல்பாக பேசியது. உடனே அங்கிருந்தவர்கள் “எப்படி பெரிய மனுஷி மாதிரி பேசுகிறார் பார்” எனக் கூறி ஓவென சிரித்து விட்டனர். இதைப் பார்த்த அக்குழந்தைக்கு அவமான உணர்ச்சி ஏற்பட்டது. அன்றிலிருந்து நான்கு பேர் புதியவர் இருக்கும் இடத்தில் பேசுவதை தவிர்த்தது. இவ்வாறு சூழ்நிலையில் உள்ள புதியவர்கள் குழந்தைகளிடத்தில் கூச்ச சுபாவத்தை ஏற்படுத்தலாம்.

மரபு நிலையில் வந்த கூச்சம், அல்லது கற்றுக் கொண்ட கூச்சம் என எதுவாயினும் அதை பின்வரும் வழிகளில் போக்கலாம்.

குழந்தைகள் அசட்டுத்தனமாகப் பேசினாலும், முதிர்ந்தவர்களைப்போல் பேசினாலும் அதை அங்கீகரிக்க வேண்டும் மாறாக பலர் முன்னிலையில் அவமானப்படும்படி கிண்டல் செய்யக்கூடாது.

கூச்ச சுபாவமுள்ள குழந்தைகளுக்கு பெற்றோர்கள் வீட்டில் உள்ள போது வெளி இடங்களில் பிறருடன் பேசுவது எப்படி, நடந்து கொள்வது எப்படி, பள்ளியில் பலர் முன்னிலையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது எப்படி என பயிற்சி கொடுக்க வேண்டும். இப்பயிற்சியை திரும்பத்திரும்ப பல முறை தொடர்ந்து அளித்து வந்தால் கூச்சம் வெகுவாக குறைந்து விடும்.

கூச்சம் ஒருவரின் ஆளுமையையும் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்காத வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் கூச்சம் பல தீய செயல்களை செய்யவிடாமல் நம்மைத் தடுத்து அரண்போல் காக்கும். காந்தியடிகள் கூட தான் பல தவறுகளை செய்யாமல் இருக்க தன்னிடம் இருந்த கூச்சமே காரணம் என கூறியுள்ளார்.

கூச்சம் ஓர் பிரச்சனையாக உருவெடுத்து ஆளுமை வளர்ச்சியில் குறுக்கிடும் போது குழந்தைகளை உளவியல் நிபுணர்களிடம் அழைத்துச் சென்று “சமூக திறன்கள் பயிற்சி” அளிக்க வேண்டும். அதன் மூலம் குழந்தைகள் விரைவில் கூச்சத்திலிருந்து விடுபடுவார்கள்.

Tuesday, May 11, 2010

படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்?
படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோயை ஆங்கிலத்தில் என்யூரிசிஸ் என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். குழந்தைகள் படுக்கை, உடைகள் அல்லது பொருத்தமற்ற இடங்களில் தன்னிச்சையாகவோ அல்லது அனிச்சையாகவோ சிறுநீர் கழித்துவிடுவதே இந்நோயாகும். அல்சீமர் என்னும் நோயோ அல்லது பிற வகையான மறதி நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களும் படுக்கை அல்லது உடைகளில் சிறுநீர் கழிக்கும் நோய் கொண்டுள்ளனர். பகலிலும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளும் இருந்தாலும். பெரும்பாலும் இறவிலேயே படுக்கையில் சிறுநீர் கழிக்கும் இந்நோய் கிருஸ்து பிறப்பதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காணப்படுகிறது. குழந்தை வளர வளர இந்நோய் தானாகவே சரியாகிவிடும். அல்லது சிகிச்சையின் மூலம் சரியாக்கி விடலாம். ஒரு சில குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை ஐந்தாறு மாதங்கள் நிறுத்தி பின் மீண்டும் தொடரும் வாய்ப்புகளும் உண்டு. பொதுவாக ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தால் தான் அது பிரச்சனை. ஐந்து வயதுக்குற்பட்ட குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தால் அது நோயல்ல. அது பற்றி கவலைப்பட தேவையில்லை.

படுக்கையில் சிறுநீர் கழிக்க குறிப்பிட்ட உடலியல் அல்லது உளவியல் காரணத்தை தனித்து கூற இயலாது. பல காரணிகள் கூட்டாக இந்நோயை தோற்றுவிக்கின்றன. இந்நோய் உள்ள ஒரு சில குழந்தைகளினால் சிறுநீரகமும், சிறுநீர் பையும் சற்றே பிறழ்வான செயல்பாடுகளை கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதைப் போன்றே சிறுநீர்பை நிறைந்து விட்டதை சற்றே தாமதமாக உணர்ந்து கொள்ளும் நரம்பு மண்டலமும் இந்நோய்க்கு காரணமாக அமைகிறது. மேலும் பெற்றோர் சிறுவயதில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோயை கொண்டிருந்ததும் குடும்பத்தில் யாரேனும் பிற உறுப்பினர்கள் இந்நோய் கொண்டிருந்ததும் தற்போது குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்க காரணமாக இருக்கலாம். குழந்தையின் மனதில் ஏதேனும் ஒரு மன அழுத்தத்தை உண்டாக்கக்கூடிய நிகழ்வு பதிந்திருப்பது படுக்கையில் சிறுநீர் கழிக்க காரணமாக அமைக்கிறது. பொதுவாக படுக்கையில் சிறுநீர் கழிப்பது வேறு ஏதோ ஒரு மனப்பிரச்சனையின் அறிகுறியாகும்.

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகள் அவமானமும், பிறர் முன் தலைகுனிவும் கொள்வர், ஏணிப்படுக்கையில் படுப்பதையும் தவிர்ப்பர். தனித்திருத்தல், பிறருடனான பொருத்தப்பாட்டு பிரச்சனைகள், குறைவான தன்-மதிப்பு ஆகியவை படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளின் பிற உளவியல் பிரச்சனைகளாகும். எனவே இந்நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது அவசியமாகும்.

வெளிநாட்டில் இந்நோயை குணப்படுத்த அறிவியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நவீன சிகிச்சைகள் அளிக்கின்றனர். குழந்தையின் உள்ளாடையில் ஓர் அல்ட்ரா சவுண்ட் கருவியை பொருத்திவிடுவர். இக்கருவி குழந்தையின் சிறுநீர்ப்பையின் அளவை கண்காணிக்கும். சிறுநீர்ப்பை முழு அளவை எட்டியவுடன் எச்சரிக்கை மணியை இக்கருவி எழுப்பும் உடனடியாக மணி சத்தம் கேட்ட குழந்தை எழுந்து சென்று சிறுநீர் கழித்து விட்டு வரலாம்.

இன்னொரு முறையில் குழந்தையின் உள்ளாடையில் எச்சரிக்கை மணியுடன் கூடிய பஞ்சடை (pad) வைக்கப்படும். எப்போதெல்லாம் இப்பஞ்சடை ஈரமாகிறதோ அப்போதெல்லாம் எச்சரிக்கை மணி ஒலிக்கும். உடனே குழந்தை எழுந்து சென்று சிறுநீர் கழித்து விட்டு வரும். நாளடைவில் மணி அடிக்காமலேயே எழுந்து சென்று சிறுநீர் கழிக்க குழந்தை கற்றுக் கொள்ளும்.

படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த பின்வரும் சில எளிமையான முறைகளை நாம் கையாளலாம்.

இரவில் கடிகாரத்தில் குறிப்பிட்ட நேர இடைவெளிக்கு எச்சரிக்கை மணி ஓசை எழுப்பச் செய்து, குழந்தையை விழிக்க வைத்து, கழிவறைக்குச் சென்று சிறுநீர் கழிக்க வைத்து விட்டு வரலாம். சில நாட்கள் இவ்வாறு செய்தால் விரைவில் குழந்தை தானாக எழுந்து சென்று சிறுநீர் கழிக்க பழகிக்கொள்ளும்.

குழந்தைகள் தூங்கப் போக சில மணி நேரம் இருக்கும்போது நீரோ அல்லது பிற திரவ உணவுகளையோ கொடுப்பதை தவிர்க்கவும்.

பெற்றோர் குறிப்பிட்ட இடைவெளியில் சில மணி நேரத்திற்கு ஒருமுறை குழந்தையை எழுப்பி “சிறுநீர் கழிக்க வேண்டுமா” என வினவலாம். ஆம் எனில் கழிவறைக்குச் சென்று சிறுநீர் கழித்துவிட்டு வர உதவலாம்.

சிறுநீர் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்ற முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை பெற்றோர் குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தலாம்.

குழந்தைகள் இரவில் படுக்கையிலும் உடைகளிலும் சிறுநீர் கழிக்காத சமயங்களில் அந்நடத்தையை பாராட்டுவதும், சாக்லேட் போன்றவைகளை பரிசளிப்பதும் இந்நோயை விரைவில் குணமாக்கும்.

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோயை குணமாக்க மேற்சொன்ன எல்லா முறைகளை விட சிறந்த முறை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அன்பையும் மனரீதியான அரவனைப்பையும் அளிப்பதுதான்.

Monday, May 10, 2010

புதிதாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு ஆசிரியர் மீதுள்ள பயத்தை போக்குவது எப்படி?


முதன் முதலாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அனைவருமே மிக மகிழ்ச்சியாக வகுப்புகளுக்கு செல்வதில்லை. பல குழந்தைகள் ஒரு சில நாட்களுக்கு பள்ளி செல்லும் போது பயம் கொண்டர்வர்களாகவே செல்கிறார்கள். குறிப்பாக சில குழந்தைகள் ஆசிரியர்களைப் பார்த்து பயம் கொண்டு, அதனால் பள்ளிக்கு செல்ல பயம் கொள்கிறார்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டில் வளர்க்கும்போது சாப்பாடு ஊட்டும் போது அல்லது தங்களுக்கு குழந்தைகளை பணிய வைக்க வேண்டும் என்று நினைக்கும் போது அக்கம் பக்கத்தில் உள்ள யாரையாவது காட்டியோ, அல்லது குறிப்பிட்டு சொல்லியே பயமுறுத்தி வளர்ப்பது, குழந்தைகளை பிறரோடு சேர்ந்து வெளியிடங்களில் விளையாட அனுமதிக்காமல் வளர்ப்பது, பூச்சாண்டி வருகிறார் என்று கூறி வித்தியாசமாக பிம்பம் ஒன்றை குழந்தைகள் மனதில் வளர்ப்பது ஆகியவை குழந்தைகளின் ஆசிரியர் பற்றிய பயத்திற்கு அடிப்படை காரணங்களாகும்.

சில பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன் ஆசிரியர் சொல்லும் படி நடந்து கொள்ள வேண்டும், இல்லையெனில் அடித்து விடுவார் என்று எச்சரிக்கையாக கூறி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவர். இவ்வாறு கூறுவது ஆசிரியரை சந்திக்கும் முன்பே அவரைப் பற்றிய பய உணர்வை ஏற்படுத்த வழி வகுக்கும். சில ஆசிரியர்கள் முதல் நாள் பள்ளி திறந்த உடனேயே கையில் குச்சியும் முகத்தில் கடுகடுப்புமாக குழந்தைகள் முன் பூதம் போன்று தோன்றுவர். இத்தகைய ஆசிரியர்கள் இறுகிய மனம் கொண்ட குழந்தைகளின் மனதில் பள்ளியிறுதி காலம் வரைக்குமான பயத்தை உண்டாக்கி விடுவார்கள்.

சில குழந்தைகளுக்கு செனோ போபியா என்னும் புதியவர்கள் பற்றிய காரணமில்லாத, புரியாத பயம் இருக்கலாம். இரண்டு வயதுக்கு முன்பாக தாய் குழந்தையை பிரிந்து வேலைக்கு செல்வது, அம்மா வீட்டில் வளர்ப்பது, பச்சிளம் குழந்தையாக இருந்தபோது சிறிது நேரம் அழவிட்டு குழந்தையின் பசியாற்ற பால் ஊட்டுவது ஆகியவையே புதியவர்களை பார்த்து காரணமின்றி பயம் கொள்ள வைக்கின்றன. இத்தகைய குழந்தைகளை வளர்ப்பு முறையை மாற்றி கவனத்துடன் வளர்த்தால் புதியவர்கள் பற்றிய பயமின்றி வளர்க்கலாம்.

ஓர் குழந்தை தன் ஆசிரியருக்கு பூங்கொத்து ஒன்றை அன்பளிப்பாக கொடுக்க வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிச் சென்றது. வகுப்பறைக்கு சென்றவுடன் நேராக ஆசிரியரிடம் சென்று பூங்கொத்தை கொடுத்தது. வகுப்பாசிரியர் குழந்தையை வாழ்த்தி பூங்கொத்தை பெற்றுக் கொள்ளாமல் “நீயே வைத்துக்கொள்” என்று கூறினார். குழந்தையின் முகம் வாடிவிட்டது. பேசாமல் பூங்கொத்தை தன் பைக்குள் வைத்துக்கொண்டு தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டது. மாலை வீட்டுக்கு வரும் நேரத்தில் குழந்தையின் தந்தை அக்குழந்தையை நேராக பள்ளி முதல்வரின் அறைக்கு அழைத்துச் சென்று அப்பூங்கொத்தை பள்ளி முதல்வருக்கு அளிக்கச் செய்தார். முதல்வர் மிகுந்த மகிழ்ச்சியுடன் “கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும் குழந்தாய்” என்று கூறி பெற்றுக் கொண்டார். அக்குழந்தை “நன்றி அம்மா” என்று கூறியது. அம்மா என்றழைப்பதும் அலறி ஓடுவதும் ஆசிரியரின் நடத்தையிலும் உள்ளது.

Friday, May 7, 2010

குழந்தைகளை உயரமாக வளர வைப்பது எப்படி?


தம் குழந்தைகள் உயரமாக வளர வேண்டும் என்ற ஆசை எல்லா பெற்றோருக்கும் உண்டு. உயரமானவர்களுக்கு சமூக சூழ்நிலைகளில் கூடுதல் முக்கியத்துவம் உண்டு. நான்கு பேர் மத்தியில் உயரமான ஒருவர் நிற்கும் போது இயல்பிலேயே உயரமானவர் மனதில் உயர்ந்த மனப்பான்மையும் குட்டையானவர் மனதில் தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுகிறது. மேலும் உயரமானவர்கள் தலைமைப் பண்பை எளிதில் வளர்த்துக்கொள்ள அவர்களின் உயரமே காரணமாக அமையும் சூழ்நிலைகளும் உண்டு.

உயரம் பாரம்பரியத்தினால் தீர்மானிக்கப்படுகிறது. கூர்ந்து நோக்கினால் தந்தையைப் போன்ற உயரத்தை ஆண் பிள்ளைகளும் தாயை போன்ற உயரத்தை பெண் பிள்ளைகளும் அடைகிறார்கள். தந்தை உயரமாக இருக்கும் சமயத்தில் மகன்கள் அதைவிட சற்று உயரமாகவும் தாய் குட்டையாக இருந்தால் மகள் அதைப் போன்றே குட்டையாகவும் வளர வாய்ப்புண்டு. மரபணுக்களால் ஒருவரின் உயரம் தீர்மானிக்கப்பட்டாலும் நம் முயற்சிகளின் மூலமும் குழந்தைகளின் உயரத்தை அதிகப்படுத்தலாம்.

உயரத்தை அதிகப்படுத்துவதில் சத்தான உணவு வகைகள் முக்கிய பங்காற்றுகின்றன. சரிவிகிதத்தில் தயாரிக்கப்படும் பானங்கள், மீன் எண்ணை, வைட்டமின் ஏ மற்றும் டி கொண்ட மாத்திரைகள், புரோட்டின் நிறைந்த எல்லா உணவுப் பொருட்கள் ஆகியவை உயரத்தை அதிகப்படுத்த வல்லவை. புரோட்டின் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொண்டதன் மூலம் ஜப்பானியர்களின் சராசரி உயரம் தற்போது அதிகரித்துள்ளது.

உணவோடு உடற்பயிற்சிகளும் சேர்ந்தால் விரைந்து உயரத்தை அதிகரிக்கலாம். ஓடுதல், கயிறு தாண்டுதல், உட்கார்ந்து எழுதல், உயரத்தில் உள்ள கம்பிகளை பிடித்து தொங்குதல், கதவில் கால்களை முன்னோக்கி மடக்கி கொண்டு தொங்குதல் போன்ற பயிற்சிகளை குழந்தைகளுக்கு கற்பித்தால் விரைவில் உயரமாக வளர்ந்து விடுவார்கள். ஆனால் அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி குழந்தைகள் உயரமாக வளர காரணமாக அமைந்தாலும் பிற்காலத்தில் ஏதேனும் பின் விளைவினை ஏற்படுத்திவிடும். எனவே அளவான உடற்பயிற்சி அளிப்பது நல்லது.

குழந்தைகள் உயரம் குறைவாக இருப்பது போல் தோண்றினால் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது மருத்துவரிடம் கூறி வயதுக்கேற்ற சராசரி உயரம் தம் குழந்தைகளுக்கு உள்ளதா என்று சோதித்துக் கொள்ளலாம். சராசரி உயரத்திற்கு குறைவாக இருந்தால் உடனடியாக உணவு அளித்தலையும், உடற்பயிற்சியையும் ஆரம்பிக்கலாம்.

குட்டையாக இருப்பவர்கள் குறுகிய மனதையும், உயரமாக இருப்பவர்கள் உயர்ந்த, பரந்த மனப்பான்மையையும் உயர்ந்த இலட்சியங்களையும் கொண்டிருப்பதாக உளவியல் கருத்து. எனவே உயரமானவர்களாகவும் உயர்ந்த மனப்பான்மையும் கொண்டவர்களாக உங்கள் குழந்தைகளை உருவாக்குங்கள்.

Monday, April 26, 2010

புத்தக விமர்சனம்


நான் படிக்கும் காலத்தில் வேலைக்குச் செல்வதைப் பற்றி முதன்முதலாக சிந்தித்த போது ஏற்பட்ட முதல் பயம் எப்படி நேர் முகத் தேர்வை எதிர் கொண்டு வேலை வாய்ப்பை பெறப் போகிறோமோ என்பது தான். பின்னர் கல்லூரியில் நேர்காணல் பற்றி வகுப்பு எடுத்த எனது பேராசிரியர் நேர்காணல் பற்றி சில சுவையான விசயங்களைச் சொன்னார். அப்போது நேர்காணல் பற்றி மனதில் இருந்த பயம் இலேசாக குறைந்தது. ஆனால் பின்னர் வேலைக்காக நேர்காணல்கள் பலவற்றிற்கு சென்ற போதெல்லாம் தோல்விகளே கிடைத்தன. கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள திரு.எஸ்.எல்.வி. மூர்த்தி எழுதிய இண்டர்வியூ டிப்ஸ் போன்ற புத்தகம் ஒன்றை அப்போது படித்திருந்தால் மிகவும் உதவியாக இருந்திருக்கும் என்பது என் தற்போதைய எண்ணம்.
பியூன் வேலை முதல் ஐ.ஏ.எஸ் தேர்வு வரை நேர்காணலை எதிர்கொள்ளும் இளைஞர்களின் பயத்தைப் போக்கும் அடிப்படைப் புத்தகம் இது.

புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் நேர்காணலின் இன்றைய முக்கியத்துவத்தை ’எல்லாம் இண்டர்வியூ மயம்’ என்று ஆசிரியர் விளக்கியிருக்கிறார். தங்க மெடல் ராஜா வேலை கிடைக்காமல் இருக்கும் போது அண்ணாசாமி நான்கு வேலைகளை கையில் வைத்துக் கொண்டு எதை தேர்ந்தெடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் என்று விளக்கியிருப்பது நடைமுறை யதார்த்தம் ஆகும். ஸ்டைலான, குதிரைக் கொண்டை போட்ட, உயர்ந்த குதி வைத்த செருப்பணிந்து வரும் ஓர் அழகி ‘அண்ணாச்சி, போத்தாலை இருக்கா? என்று கிராமத்து பாஷையில் பேசி தன் படிமத்தை கெடுத்துக் கொள்வது போலத் தான் நன்கு படித்த ஆனால் ஆளுமை அமையப் பெறாதவர்கள் நேர்காணலில் தோல்வியுறுவதும்.

அத்தியாயம் இரண்டில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்ப படிவம் அனைவரும் பிரதி எடுத்து எழுதி பழகும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. கல்லுரி படிப்பை முடித்து முதன் முதலாக நேர்காணலுக்கு செல்லும் மாணவர்கள் இவ்வாறு செய்வது நன்மையானது. நான்காம் அத்தியாயத்தில் ஆசிரியர் தற்கால நேர்காணல் முறைகளை விளக்கியிருக்கிறார். இந்த அத்தியாயத்தின் சிறப்பு நேர்காணல் பற்றி எழுதப் பட்டுள்ள வேறு எந்த தமிழ் புத்தகத்திலும் குறிப்பிடப்படாத ரோஷாக்கின் மைத்திட்டு சோதனை என்னும் உளவியல் சோதனைகளை விளக்கமாக சோதனையில் பயன்படுத்தப்படும் மைத்திட்டுக்களோடு விளக்கி இருப்பது புத்தகத்தின் தனித்துவத்தை நிலைநாட்டுகிறது. தமிழ் வாசகர்களுக்கு மைதிட்டு சோதனைகள் இப்புத்தகத்தின் மூலமாகத் தான் அறிமுகம் ஆகிறது என்பது எனதுள்ளல்.

அத்தியாயங்கள் ஐந்தும் ஆறும் இண்டர்வியூ என்னும் சித்ரவதையில் உங்களிடம் கேட்கப்படும் கேள்விகளையும் அக்கேள்விகளை தகர்க்க மனிதர்களுக்கு உள்ள முப்பத்திநான்கு திறமைகளையும் பட்டியலிடுகின்றன. இவற்றைப் படித்த ஓர் இளைஞனுக்கு ஓரளவேனும் நம்பிக்கை மனதில் ஏற்படும். அதுவே நேர்காணலை துணிவுடன் எதிர் கொள்ள போதுமானது.

புத்தகத்தின் பக்கம் நூற்றி ஐந்தில் ஓர் ஆர்ச்சரியம்! நேர்காணல் என்றாலே நம்மை கேள்விகளால் துளைத்தெடுத்து விடுவார்கள் என்று நிலவும் பொது நம்பிக்கையை தகர்த்து நேர்காணலை எதிர்கொள்ளும் தனியாட்களும் நேர்காணல் நடத்துபவர்களை கேள்விகள் கேட்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாதிரிக்கு பல கேள்விகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இது போன்று திருப்பி கேள்வி கேட்கும் மன நிலை மிகவும் அவசியம். எனக்குத் தெரிந்து எவ்வளவு சம்பளம் தருவீர்கள் என்று கேள்வி கேட்கவே பலர் பயந்த நிலையில் நேர்காணலை எதிர் கொள்ளும் இயல்பினராக உள்ளனர்.

நேர்காணலுக்குச் செல்லும் போது அணிய வேண்டிய உடைகளைப் பற்றி ஆசிரியர் எழுதியிருப்பது மிகவும் அவசியமானதாகும். மாதிரி நேர்காணல் பலவற்றை நான் நடத்திய போது மாணவர்கள் அதிகமாக கேட்ட கேள்வி நேர்காணலுக்கு செல்லும் போது அணிந்து செல்ல வேண்டிய உடைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தான். படித்து பயன் பெற வேண்டிய பகுதி இது. புத்தகத்தின் இறுதி அத்தியாயம் நேர்காணலில் கேட்கப்படும் பொதுவான கேள்விகளை பற்றியது. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பொருத்தமான பதில்களும் தரப்பட்டுள்ளன. பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள புத்தகங்களும் இணைய தளங்களும் நேர்காணல் பற்றி அதிக தகவல் வேண்டுபவர்களுக்கு உதவியாக இருக்கும்.

இன்னின்ன கேள்விகள் கேட்க வாய்ப்புகள் உள்ளன என்று உத்தேசித்து அக்கேள்விகளுக்கான விடைகளை மட்டும் தயார் செய்து எழுத்து தேர்வில் வெற்றி பெற்றுவிடும் அறிவாளிகள் எதை வேண்டுமானாலும் கேட்கும் நேர்காணலில் தோல்வியுறுவது தவிர்க்க முடியாதது. அக்குறையை போக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டிய புத்தகங்களில் இப்புத்தகமும் ஒன்றாகும். இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இங்கே செல்லுங்கள்: URL http://nhm.in/shop/978-81-843-186-0.html

Wednesday, March 24, 2010

புத்தக விமர்சனம்


வாழ்நாளின் பெரும் பகுதியை நாம் எதைப் பற்றி சிந்திப்பதில் செலவிடுகிறோமோ, எதைப் பற்றிய விழிப்புணர்வு இன்றி கடனே என்று செய்து கொண்டிருக்கிறோமோ அந்த வேலையை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் புத்தகம் “வேலையில் முன்னேற” ஆகும். டாக்டர் கேரன் ஒடாஸோவின் புகழ்பெற்ற புத்தகத்தை அக்கலூர் ரவி மொழி பெயர்த்திருக்கிறார். கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.

வேலையைப் பற்றி ஒவ்வொரு கால கட்டத்திலும் ஓர் மனப்பாங்கு மக்களிடையே நிலவி வந்திருக்கிறது. அம்மனப்பாங்குகளே மனிதர்களின் பணி ஆர்வத்தை கூட்டவோ குறைக்கவோ செய்திருக்கின்றன. மனதையும் உடலையும் மெம்படுத்தவோ சீர்கெடவோ செய்திருக்கின்றன. வேலைப் பற்றிய குறிப்பிட்டுச் சொல்லும் விதமான மனப்பாங்கு எனில் சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் நிலவிய பிராட்டஸ்டன்ட் பணி ஒழுக்கத்தை கூறலாம். அதன்படி மனிதர்கள் ஒவ்வொருவரும் ஏதேனும் பணிக்கு செல்ல வேண்டும். பணியாற்றுவது கடவுளுக்கு செய்யும் சேவையைப் போன்றது. எனவே செய்யும் வேலையை மமொத்து அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்ய வேண்டும் என்பது மையக் கருத்தாக கொள்ளப்பட்டது. இத்தகைய பணி ஒழுக்கத்தை பின்பற்றிய மக்கள் போட்டி பொறாமையின்றி ஓர் நியதியோடு பணியாற்றி வந்தனர். ஆனால் தற்கால பணிகளின் தன்மை முற்றிலும் மாறியிருக்கிறது. தனியாள் சாதனையை மையப்படுத்தி, போட்டியையும் கடும் உழைப்பையும் கொண்டவையாக தற்காலப் பணிகள் அமைந்திருக்கின்றன. எனவே இப்பணிகளின் தன்மைக்கேற்ப தங்களை உருமாற்றிக்கொள்வது மனிதர்களுக்கு அவசியமாகிறது. அதற்கு இப்புத்தகம் உதவியாக இருக்கிறது. பல நுட்பங்களை விளக்குகிறது.

பன்னிரண்டு பகுதிகளைக் கொண்டதாகவும் ஒவ்வொரு பகுதியும் பல தலைப்பிட்ட கட்டுரைகளைக் கொண்டதாகவும் பிரித்தமைக்கப்பட்டுள்ளது. கட்டுரைகளின் தலைப்புகள் அனைத்துமே ஓர் தன்னம்பிக்கை புத்தகத்தின் தலைப்புகளைப் போல் இருக்கின்றன. தாமரை இலைத் தண்ணீர், நல்ல வேலிகள் ஆகியவற்றை உதாரணமாகக் கூறலாம்.

நேரந்தவறாமை முக்கியம் என்பதை ஆசிரியர் ஓர் கட்டுரையில் வலியுருத்தியிருக்கிறார். தாமதம் என்ற ஒரே ஓரு காரணத்தினால் மட்டும் வேலையில் முன்னேறாதவர்கள் பலர் உண்டு. அதே சமயத்தில் சரியான நேரத்தில் வேலையை முடிப்பவர்கள் அந்த ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே உயர்ந்ததும் உண்டு. பல பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட பணியை சரியான நேரத்தில் முடிப்பவர்கள் எனக் கணக்கிட்டால் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே தேறுவர். சரியான நேரத்தில் முடித்துக் கொடுக்காதவர்களின் பணியை குறிப்பிட்ட காலத்திற்குள் பணியை முடித்தவரிடம் ஒப்படைத்ததையும், அதனால் நேரத்திற்குள்ளாக பணியை முடித்தவர் கூடுதல் பணப்பயனை பெற்றதையும் நான் கண்கூடாக கண்டிருக்கிறேன். சரியான நேரத்தில் ஓர் பணியை முடித்துக் கொடுத்த போது ஓர் அதிகாரி என்னை பாராட்டவும் செய்திருக்கிறார். அத்தகைய நேரந் தவறாமல் காரியத்தை முடிக்கும் பல விஷயங்களை ஆசிரியர் புத்தகத்தில் எழுதிருக்கிறார்.

உதவியாளர்களை மதியுங்கள் என்ற கட்டுரை பல நல்ல வெற்றியாளர்கள் தங்கள் உதவியாளர்களை கையாளும் விதத்தை எடுத்துக் கூறுகிறது. உதவியாளர்கள். நம் மன அழுத்தத்தைன் குறைக்கவும், வேலைகளை எளிதாக்கவும் சிரமமின்றியும் திறமையாகவும் முடிக்க உதவி செய்பவர்கள். தன் மீது மட்டுமே நம்பிக்கை வைத்துக்கொண்டு எந்த வேலையையும் பிரித்துக் கொடுக்காத ஒருவர் நல்ல பணியாளராகவோ அல்லது மேலாளராகவோ விளங்க முடியாது என்பது மேலாண்மைத் தத்துவம். ஆசிரியர் தெளிவான உத்தரவுகள் குறிப்பிட்ட காலக் கெடு, போன்றவைகளை உதவியாளர்களுக்கு குறிப்பிடாதது, உதவியாளர்களை பாராட்டாமலும், குறை கண்டுபிடிப்பதும் உதவியாளர்களை தொடர்ந்து பாராமறிக்க முடியாமல் போவதற்கு காரணம் என்று குறிப்பிடுகிறார். மேலும் உதவியாளர்களை பெரிதாக நாம் பதிப்பதென்பது அவர்கள் முன்னேறுவதற்கு நிழலாக, வாய்ப்பாக இருப்பதும் கூடத்தான் என்ற உயர்ந்த பண்பையும் குறிப்பிடுகிறார்.

தாராளமாக வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு எதையும் முடிக்காமல் இருக்கும் குழப்பவாதிகளுக்காக வேலைகளை வரிசைப்படுத்திக் கொள்ளும் முறையை வரைபடம் மூலம் விளக்கியிருப்பது அனைவருக்கும் உதவும். அடுத்த அத்தியாயத்திலேயே அடிக்கடி வேலைகளை நம்மிடம் தள்ளிவிடும் சுமையிறக்கிகளை சமாளிக்க, மறுப்பது எப்படி என்று கற்றுக் கொடுக்கிறார். அனைவருமே மறுக்கக் கற்றுக் கொள்வது அவசியமே இல்லையெனில் இரண்டு மூன்று பேர் செய்ய வேண்டிய வேலைகளை ஒருவராக செய்து ஓய்ந்து போக வேண்டியதுதான். தானாக வருவதை தடுப்பது ஒரு பக்கம் என்றால் அடுத்தவர் வேலையை ஆர்வக்கோளாரின் காரணமாக இழுத்துப் போட்டு கொண்டு விழிப்பதையும் ஆசிரியர் எழுத தவறவில்லை. அத்தகையோரை உங்களது திறமையைக் காட்டுவதற்காக மற்றவர்களின் வேலைகளுக்குள் கவனமின்றி கூட நுழைந்து விடாதீர்கள் என்று எச்சரிக்கிறார்.

சிறப்பாக பைலிங் செய்வது, உரையாடல்களில் கொக்கிகளைப் பயன்படுத்து போன்ற நடைமுறை உத்திகள், மனநிலை உருவாக்கம், வேலையை விளையாட்டாக கருதிக் கொள்வது போன்ற உளவியல் விஷயங்களையும் ஆசிரியர் நூலில் விவரித்துள்ளார். ஒரு தனிமனிதனின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் பணி பற்றி ஒருவர் அறிந்து கொள்ள விரும்பும் விஷயங்களையும், தனது பணியில் முன்னேற துடிப்பவர்களுக்கு தேவையான எல்லா விஷயங்களையும் உள்ளடக்கிய முழுமையான நூலாக “வேலையில் முன்னேற” நூல் வெளியிடப்பட்டிருக்கிறது.

நூலின் இறுதி சூத்திரம் வேலை தேட வேண்டிய தருணம் ஒரே வேலையை செக்கு மாடு போல் செய்து கொண்டிருப்பவர்களுக்கான விழிப்புணர்வை உண்டாக்கும் சூத்திரம் ஆகும். இந்த நல்ல புத்தகத்தை நாம் அனைவரும் படிக்க வேண்டிய தருணம் இது. படித்து விசயங்களை அறிந்து கொண்டதோடு விட்டுவிடாமல் ஒவ்வொரு சூத்திரங்களாக நம் வாழ்வில் அவற்றை பயன்படுத்திப் பார்க்க வேண்டும். ஏனெனில் எந்த ஒரு விசயமும் அதற்குண்டான பயன்பாட்டை அடையும் போதுதான் முழுமை பெரும். இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இங்கே செல்லுங்கள்: URL IS: http://nhm.in/shop/978-81-317-2962-5.html

Tuesday, February 23, 2010

புத்தக விமர்சனம்

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ஆர்.முத்துகுமார் அவர்கள் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல் “அத்வானி”. சமகாலத்தில் வாழும் குறிப்பிட்டு சொல்லும் தலைவர் ஒருவரைப் பற்றிய நூல் இது. அத்வானியின் சுவாசம் ஹிந்துத்வா, உயிர் ஆர்.எஸ்.எஸ் என்று அறிமுகப்படுத்தி அத்வானியை ஓர் இந்து தலைவராக சித்தரிக்க முயற்சி செய்வது போல் நூலை கொண்டு சென்ற ஆசிரியர் முடிவில் அவர் ஓர் செயல்வீரர் என அத்வானியின் ஓர் ஆளுமைப் பண்பையே நிலைநாட்டியிருக்கிறார். நூலில் அவர் தன் சொந்த மாகாணத்திலிருந்து புறப்படது முதல் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது வரையிலான நிகழ்வுகள் விவரிக்கப்பட்டுள்ளன. விவரிக்கப்பட்ட நிகழ்வுகளைக் கொண்டு ஆராயும் போது செயல் புரிய வேண்டும் என்ற மனத்தீ அத்வானிக்குள் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பதை நன்கு உணர்ந்து கொள்ளலாம்.

ஓர் பள்ளி ஆசிரியராக தன் பணியைத் தொடங்கியவர் ஒரு நாட்டின் பிரதமர் வேட்பாளராக ஆறிவிக்கப்படும் அளவுக்கு உயர்கிறார் என்றால் அவர் உழைப்பு சாதாரணமாக இருக்க முடியாது என்பதற்கு உதாரணமாக இராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களில் கட்சியை வளர்க்க அத்வானி பட்ட கஷ்டங்களை உதாரணமாகக் கொள்ளலாம். ”பின் வாங்குவதில் அவருக்கு உடன்பாடில்லை, உழைப்பு, கடும் உழைப்பு, வெறித்தனமான முதலீட்டைச் செய்தார்” என்ற ஆசிரியரின் வரிகள்தான் அத்வானியின் உயர்வை விளக்கும் சொற்கள்.

தீதையாள், நானாஜி தேஷ்முக், அடல் பிகாரி வாஜ்பாய், குஷாபாவ் தாக்ரே போன்ற தலைவர்களுடன் பழகி பணியாள் போல் வேலை செய்த அனுபவமே அத்வானியை விரைவிலேயே தலைவராக உயர்த்தியது எனக் கொள்ளலாம். ஆயினும் தான் தலைவராக விரும்பவில்லை, தொண்டராக பணியாற்றவே விருப்பம் என்பதை அத்வானியின் ஆழ்மனம் பலமுறை தெரிவித்திருப்பதை பல நிகழ்வுகளின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. வாஜ்பாயே நீங்கள் தான் தலைவர் என்று சொன்ன போது கூட “இல்லை எனக்கு சரியாக பேசத் தெரியாது” என்று யதார்த்தமாக மறுத்ததை அதற்கு ஓர் உதாரணமாகக் கொள்ளலாம்.

பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை விளக்கும்போது “இம்மாதிரி எல்லாம் நடக்கும் என்பதை இவர் எதிர் பார்த்தாரா இல்லையா?” என்று குறிப்பிடுகிறார். அதுபோலவே அத்வானி நடக்குமா என்று நினைக்காத பலவும் அவர் அரசியல் வாழ்க்கையில் நடந்துள்ளன என்பதை புத்தகம் முழுவதும் விவரிக்கப்பட்டுள்ள நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. கரசேவை ஊர்வலமும் அவ்வாறே நடந்திருக்க வேண்டும். அவர் போட்ட திட்டம் அந்த அளவுக்கு செயல்படுத்தப்படும் என்று அவரே எதிர்பார்த்து இருக்க மாட்டார். அத்வானியின் ரத யாத்திரை பாரதிய ஜனதா கட்சியை இந்த அளவுக்கு உயர்த்தி முக்கியத்துவம் வாய்ந்த ஓர் கட்சியாக மாற்றும் என்று வாஜ்பாய் கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார். அதைப் போலவே புத்தகத்தின் இறுதி பத்தியில் கூறியிருப்பதைப் போல “தோற்றால் நிச்சயமாக கட்சியை பின்னால் இருந்து இயக்க மாட்டார். இளைய தலைமுறைக்கு வழிவிட்டு விடுவார்” என்பதும் இவ்வளவு விரைவிலேயே நடக்கும் என்பதை அத்வானி எதிர்பார்த்து இருக்க மாட்டார்.

இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஓர் அரசியல் தலைவரைப் பற்றிய புத்தகம் என்பதால் சுதந்திரத்திற்கு முன்பிருந்து தற்காலம் வரையிலான அரசியல் நிகழ்வுகளை கூறாமல் அத்வானியின் வரலாற்றை மட்டும் எழுதுவது சாத்தியமில்லை. எனவே புத்தகம் எல்லா முக்கிய அரசியல் நிகழ்வுகளையும் விலாவரியாக அலசுகிறது. அந்த வகையில் முதல் அத்தியாயத்திலேயே பாபர் மசூதி இடிப்பை நேரலை ஒலிபரப்பு போன்று விளக்கியிருக்கிறார் ஆசிரியர். மகாத்மா காந்தி படுகொலையின் உண்மை நிலை, எமர்ஜென்சி காலத்து கொடுமைகள், காங்கிரஸ் ஆட்சி இழக்கும் போதெல்லாம் நடந்த எதிர்கட்சி கூட்டனி உருவாக்கங்கள் என எல்லா நிகழ்வுகளும் மிக தெளிவாக சுருக்கமாகவும் அத்வானியின் வரலாற்றோடு சம்பந்தப்படுத்தி விளக்கப்பட்டுள்ளது.

புத்தகத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிவது பிரமோத் மகாஜன் என்னும் இளைய தலைமுறை தலைவரின் மாபெரும் ஆளுமை. அத்வானியின் பாத யாத்திரை திட்டத்தை இரத யாத்திரையாக மாற்றியதே பிரமோத் மகாஜன் தான் என படிக்க நேரும் போது மறைந்த அத்தலைவரின் செயலூக்கத்தை எண்ணி வியப்படையாமல் இருக்க முடியவில்லை. பிரமோத் மகாஜன் போன்ற இளம் தலைவர்கள் இல்லாதது கூட அத்வானியின் பிரதமர் கனவு நிறைவேறாமல் போனதற்கு ஓர் காரணமாக இருக்கலாம் என்று ஓர் உணர்வு ஏற்படுகிறது.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அத்வானியை மதவாதி, ஓர் இனத்திற்கு எதிரானவர், ஆபத்தான மற்றும் சிக்கலான நேரங்களில் நொறுங்கிப் போய்விடக் கூடியவர் என்றெல்லாம் உருவகப்படுத்தினாலும் கூட அவர் மதச்சார்பற்றவர் என்பதே மிகப் பெரிய எதிர்மறை கூறாக அமைந்து விட்டது. ஆனால் ஒரு மனிதனின் குழந்தைப் பருவம் இறுதி வரை அம்மனிதரின் ஆளுமையிலும் அவர் புரியும் செயல்களிலும் தாக்கம் செய்து கொண்டே இருக்கும் அந்த வகையில் பார்க்கும் போது பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் அத்வானிக்கு ஏற்பட்ட வாலிப வயது அனுபவங்களே அவரின் வயோதிக காலத்திலும் வழிநடத்திக் கொண்டு இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளலாம். அடிபட்டவர்கள் விரைவில் மறந்து விடுவதில்லை.

அத்வானியால் எழுதப்பட்ட எனது தேசம், எனது வாழ்க்கை என்ற மிகப் பெரிய நூலில் காணப்படும் எல்லா விசயங்களும் இந்நூலில் காணப்படுகின்றன. ஒரு மிகப் பெரிய செயல் வீரரை பற்றி அறிந்து கொள்ள உதவும் சிறந்த நூல் இதுவாகும். இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இங்கே செல்லுங்க URL: http://nhm.in/shop/978-81-8493-140-2.html

Tuesday, January 12, 2010

கட்டாய ஹெல்மெட் சிலர் எதிர்ப்பது ஏன்? - தினமலர் 05.01.2010

ஆயிரம் தாலி கழற்றும் அதிர்ச்சி - ஜுனியர் விகடன் 30-12-2009 page 1

ஆயிரம் தாலி கழற்றும் அதிர்ச்சி - ஜுனியர் விகடன் 30-12-2009 page 2

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP