உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Monday, August 20, 2012

உங்கள் குழந்தை வீட்டுப் பொருட்களை பிறருக்கு கொடுக்க சம்மதிப்பதில்லை. ஏன்?


ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தாய், தந்தை, குடும்பத்தில் உள்ளவர்கள் ஆகியோரோடு தன் வீட்டில் உள்ள பொருட்களின் மீதும் உணர்ச்சி பிணைப்பு ஏற்படும். வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களைப் போலவே பொருட்களுடனும் மன ரீதியான பிணைப்பை குழந்தைகள் இந்த வயதில் ஏற்படுத்திக் கொள்ளும். அம்மா அருகில் இருந்தால் குழந்தைகளுக்கு எத்தகைய தைரிய உணர்வு ஏற்படுமோ அதே போன்ற தைரிய எண்ணம் ஒரு சில பொருட்கள் குழந்தைகளின் அருகில் இருக்கும்போதும் ஏற்படும். குழந்தைகள் விடாமல் ஒரு பொம்மையை கட்டிபிடித்துக் கொண்டே இருப்பது இந்த காரணத்தினால் தான். அப்பொம்மையை யாரேனும் பிடுங்கி விட்டால் குழந்தையின் மனம் நிலைகுலைந்து போய்விடும். பொம்மையில் தொடங்கும் இந்த பழக்கம் நாளடைவில் வீட்டில் உள்ள பல பொருட்களுக்கும் பரவிவிடும். வேறு யாரேனும் வீட்டுப் பொருட்களை எடுத்து செல்லும்போது குழந்தைகள் அதை அனுமதிக்காததற்கு இதுவே காரணம்.

தொடக்கத்தில் சிறு குழந்தையாக இருக்கும்போது பிறருடன் தன் பொருட்களை பகிர்ந்து கொள்ளும் குழந்தை வயதாக வயதாக சற்று சுயநலம் மிகுந்ததாக மாறிவிடும். இது குழந்தையின் தவறல்ல. எல்லாக் குழந்தைகளின் இயல்பும் இதுதான். சில வருடங்கள் நிலவும் சுயநல எண்ணம் குழந்தையின் ஆளுமையை விட்டு விலகி விடலாம் அல்லது ஆளுமையில் நீடித்து நிலைத்து விடலாம். பெற்றோர் குழந்தையின் சுயநலப் போக்கை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இது அமையும். ஒரு சில பெற்றோர் தன் குழந்தை வீட்டில் உள்ள பொருட்களை வேறு யாரையும் எடுக்க அனுமதிப்பதில்லை என்பதை கண்டு கொண்டவுடன் அதனை எல்லோரிடமும் பெருமையாக சொல்லிக் கொண்டே திரிவர். அதனைக் கேட்பவர்களும் ஆச்சரியத்துடன் ஏதேனும் பொருட்களை எடுப்பது போல் எடுத்து குழந்தையின் நடத்தையை சோதிப்பர். அப்போதெல்லாம் குழந்தை எப்பாடுபட்டாவது தன் பொருட்களை காப்பாற்றிக் கொள்ளும். எல்லாம் முடியும் தருவாயில் ‘பிற்காலத்தில் நன்றாகப் பிழைத்துக் கொள்வாய்’ என குழந்தையை பாராட்டி விட்டு பிறர் சென்று விடுவர். இதுபோன்ற பாராட்டுக்கள் குழந்தையின் தக்கவைத்துக் கொள்ளும் நடத்தையினை ஊக்குவித்துக் கொண்டே இருக்கும். நாளடைவில் அக்குணம் ஆளுமையில் ஒரு கூறாகவே மாறிவிடும். வேறு சில பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் தக்கவைத்துக் கொள்ளும் நடத்தையினை கண்டு கொள்ளவே மாட்டார்கள். அதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவும் மாட்டார்கள். குழந்தையும் வளர வளர தன் குணத்தினை மாற்றிக் கொண்டு பிறருடன் தன் பொருட்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்து விடும். பிற்காலத்தில் தன் அனுபவத்தின் துணை கொண்டு எதனைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், எதனை தனக்கென வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தானாகவே குழந்தை கற்றுக் கொள்ளும்.

உங்கள் குழந்தை பொருட்களை யாருக்கும் தராவிட்டாலும், அல்லது பிறரின் குழந்தை அதுபோல் நடந்து கொண்டாலும் அதனைப் பெரிதாக்காதீர்கள். அந்நடத்தையை கண்டும் காணததும் போல் அலட்சியப்படுத்தி செல்வதே போதுமானது.

Thursday, August 16, 2012

குழந்தைகள் பிற குழந்தைகளை அடிப்பது எதனால்?


கோபம் என்னும் உணர்ச்சி மனிதனின் மனதில் இயற்கையாகவே உண்டு. பிறப்பிலேயே நாம் பெறும் பல குணங்களில் கோபமும் ஒன்று. குழந்தகளுக்கு அது சற்று அதிகம். பக்குவப்பட்ட மனிதன் கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு வெளிக்காட்டுவதில்லை. குழந்தைகளுக்கு எந்த உணர்ச்சியையும் அடக்கத் தெரியாது. கோபத்தையும் எல்லா உணர்ச்சிகளையும் போலவே வெளிப்படுத்தி விடுகிறார்கள். நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் திடீரென அடித்து சண்டை போட்டுக் கொள்வது இதனால் தான். உணர்ச்சித் தூண்டலுக்குக் காரணமான அமிக்டாலா என்னும் மூளைப் பகுதி பெண்களை விட ஆண்களுக்கு சற்று பெரிதாக இருப்பதால் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளிடம் இக்கோபம் சற்று அதிகமாகவே காணப்படும். குழந்தைகள் கோபப்பட்டு அடிக்கடி பிற குழந்தைகளை அடித்து விடுவதால் பிரச்சனைகளும் அதிகம்.

கோபம் இயற்கையான குணம் என்றாலும் அதன் வெளிபாடு கற்றுக் கொள்வது தான். பெற்றோர்களாகிய நாம் நம் குழந்தைகளுக்கு கோபத்தை வெளிப்படுத்தும் விதங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். அதைச் சரியாக கற்றுக் கொடுக்காத போது தான் பல பிரச்சனைகள் தோன்றுகின்றன.

ஒரு வீட்டில் செல்லப் பிள்ளையாக ஒரு குழந்தை ஒன்று வளரலாம். அவ்வீட்டில் வளரும் வேறு சில குழந்தைகளை இக்குழந்தை அடிக்கும் போது சம்மந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர் உடனடியாக அவ்வாறு பிறரை அடிப்பது தவறு என்பதை தன் குழந்தைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். ஏன் சண்டை வந்தது, எதற்காக அடிதடி நடந்தது என்பதை பெற்றோர் நன்கு ஆய்வு செய்ய வேண்டும். பிரச்சனைகள் தோன்றும்போது அடிக்காமல் தன் நோக்கத்தை எவ்வாறு நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதை குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும். கூட்டுக் குடும்பத்தில் குழந்தைகள் அடிப்பது, கடிப்பது, கிள்ளுவது போன்றவைகளெல்லாம் சாதாரணமாக நடக்கக் கூடியவை. இவைகள் நடக்கும் போது அவரவர் குழந்தைகளை பெற்றோர் கண்டிப்பதில்லை. தன் குழந்தை தவறு செய்யும் போதெல்லாம் ‘குழந்தைகள் என்றால் அப்படித்தான் இருக்கும்’ என்று சாக்குபோக்கு சொல்லும் பெற்றோர்களே அதிகம். அதே பெற்றோர் பிற குழந்தைகள் தவறு செய்து தன் குழந்தைக் பாதிக்கப்படும்போது குழந்தைகளை கண்டித்து வளர்ப்பதில்லை என்று பிற குழந்தையின் பெற்றோர்களிடம் ஆதங்கப்படுவர். இந்த மனப்பான்மை அறவே கைவிடப்படவேண்டிய ஒன்று. யார் குழந்தை என்ற கேள்வியை விட்டுவிட்டு பொதுவான மனநிலையில் பிரச்சனைகளை அணுகினால் ஒரே வீட்டில் எல்லா குழந்தைகளுமே மகிழ்ச்சியாக வளர முடியும். பெற்றோர்களிடையேயும் சங்கடங்கள் வளராது.

சிறு குழந்தைகள் நான்கு பேர் ஒன்று சேர்ந்து எப்போது விளையாடினாலும் பெற்றோர் யாராவது ஒருவர் அவர்களின் அருகில் இருந்து மேற்பார்வையிடுவது நல்லது. தீவிரமாக கண்காணித்து வரும்போது எந்த குழந்தையாவது கோபம் கொண்டு வெறிச்செயல்களில் ஈடுபட்டாலும் துவக்கத்திலேயே அதனை தடுத்துவிட வேண்டும். தொடர்ந்து பிரச்சனைகள் இன்றி விளையாட ஏதுவான சூழ்நிலையை உருவாக்க பெற்றோர் உதவ வேண்டும். சிறுவயதில் இவ்வாறு விளையாட பழக்கி விட்டால் பின்னர் பெரியவர்களானதும் நல்ல நட்புடன் மற்றவர்களுடன் இருக்கும் குணம் குழந்தையின் ஆளுமையில் ஊறிப்போய்விடும்.

உங்கள் அக்கா, தங்கை, அண்ணன், தம்பியின் குழந்தைகள் உங்கள் குழந்தைகளை அடித்து விளையாடுகிறார்கள் என்றால் அதைக் கண்டு மன எரிச்சல் அடைய வேண்டாம். நேரடியாக அவர்களின் குழந்தைக்கு நல்ல பழக்கத்தை சொல்லிக் கொடுக்கும் உரிமையும், அதையும் மீறி தவறு செய்யும் போது கண்டிக்கும் கடமையும் உங்களுக்கு உண்டு. அதை விடுத்து எப்போது போய்த் தொலைவார்கள் என்ற எண்ணமும், அவர்கள் குழந்தைகளை கண்டிக்க மாட்டார்களா என்ற மனப் பொருமலும் கொண்டால் பெற்றோர்களிடம் வெறுப்பு அதிகமாகுமே தவிர மகிழ்ச்சி நிலவாது. உங்கள் மற்றும் அவர்கள் குழந்தைகளுக்கு பிற குழந்தைகளுடன் எப்படி விளையாடுவது என்ற திறமை வளராது.

நம் குழந்தை என்ற பாசத்தின் போர்வையில் குழந்தைகளின் ஆளுமையை அழிப்பது பெற்றோர் தான். நல்ல குழந்தைகளை உருவாக்குவது என்ற குறிக்கோளை மையமாகக் கொண்டு குழந்தைகளை வளர்த்தால் வருங்கால மனங்கள் வளமானதாக இருக்கும்.

தவறான வழிமுறைகளை கடைபிடித்து வன்முறைக் குழந்தைகளை உருவாக்காதீர்.Tuesday, August 14, 2012

நாகரீகம் என்ற பெயரில் குழந்தைகளை அசௌகரியத்திற்கு ஆளாக்கலாமா?


நம்மை விட நம் குழந்தைகளை சிறப்பாக வளர்க்கவே நாம் அனைவரும் விரும்புகிறோம். அதிலும் குழந்தைகள் அழகாக இருக்க வேண்டும் என்பதில் நமக்கு அலாதிப் பிரியம். குழந்தைகளை நாகரீகமாக வளர்க்க வேண்டும் என்பதற்காக பலவற்றை நாம் அவர்கள் மீது திணிக்கிறோம். குழந்தைகளுக்கான உடைகள் அவைகளில் ஒன்று. பாவாடை சட்டையும், வேட்டியும் சட்டையும் போட்டு வளர்ந்த பெற்றோர்க்கு தன் குழந்தைக்கு நவ நாகரீக உடைகள் அணிவித்து வளர்க்க வேண்டும் என்று ஆசை இருக்கலாம். இதுபோன்ற பெற்றோர்களே தற்போது அதிகம். இவர்கள் தங்கள் பையன்களுக்கு வாங்கும் துணிகள் எல்லாம் கரடுமுரடாக, பதினைந்துக்கும் மேற்பட்ட பொத்தான்களுடன் இருக்கின்றன. பெண் குழந்தைகளுக்கு வாங்கும் துணிகள் எல்லாம் கையில்லாமல், முக்கால்வாசி முதுகு தெரியும்படி, தொப்புளுக்கு மேலே இருக்குமாறு பார்த்தே வாங்குகிறார்கள். இவைகளை சின்ன வயதில் போட்டு அழகு பார்த்தால் தான் உண்டு என்பதே இந்த உடைகளை வாங்குவதற்காக பெற்றோர் கூறும் வியாக்கியானம். ஆனால் இதுபோன்ற உடைகளை எல்லா சூழ்நிலைகளிலும் அணிவிக்க முடியாது. விஷேசங்களுக்கு செல்லும் போதெல்லாம் இருப்பதில் புதிய உடையை அணிவித்து குழந்தைகளை கூட்டிச் செல்வது தான் நம் கலாச்சாரம். குளிர்காலத்தில் அப்படி வெளியே செல்லும் குழந்தைகள் எல்லாம் கையில்லாமல், முதுகு போர்த்தாமல் நடுங்கிக் கொண்டுதான் செல்கிறார்கள். வெயில்காலத்தில் மோட்டா சட்டை பேண்டுகளை அணிந்து செல்லும் பையன்கள் ஏராளம். விவரம் இல்லாததால் பெற்றோர் சொல்லும் துணிகளை அணிந்து கொள்ளும் இக்குழந்தைகள் விவரம் தெரியும் பருவத்தில் நிச்சயமாக அசௌகரியத்தை உண்டாக்கும் இத்துணிகளை அணியவே மாட்டார்கள்.

குழந்தைகளின் ஆடைகள் காட்டன் துணியினால் தைக்கப்பட்டிருக்க வேண்டும். மெல்லியதாக இளகும் தன்மையுடன் இருந்தால் மிகவும் நல்லது. தலை வழியாக போட்டு கழட்டும் உடைகள் என்றால் எளிதாக போட்டு கழட்டும் வண்ணம் இருக்கிறதா என்பதை குழந்தைகளுக்கு போட்டுப் பார்த்து வாங்க வேண்டும். குளர் காலம், வெயில் காலம், மழைக் காலம் என எல்லா சூழ்நிலைகளிலும் அணியும் வண்ணம் பொதுவான வடிவமைப்பில் உள்ள துணிகளை வாங்குவதே சிறந்தது. குழந்தைகளுக்கு அதிகப்படியான உடைகள் தேவைப்படுவதால் பொதுவான வடிவமைப்பில் உள்ள துணிகள் அத்தேவையை நிறைவேற்றும். நூற்றுக்கு தொன்னூற்றி ஒன்பது பெற்றோர் குழந்தையின் அளவைவிட இரண்டு சைஸ் அதிகம் உள்ள துணிகளையே வாங்குகிறார்கள். குழந்தைகள் வளர வளர சரியாகிவிடும் என்னும் எண்ணமே அதற்குக் காரணம். இவ்வளவு விலை கொடுத்து வாங்குகிறோம், ஐந்தாறு வருடங்களுக்காவது போட வேண்டாமா என்ற ஆதங்கம் இன்னொரு காரணம். ஆனால் எந்த உடையும் அவ்வளவு வருடங்களுக்கு வராது. தற்போது தயாரிக்கப்படும் எல்லா ரெடிமேட் ஆடைகளும் 25 அல்லது 30 சலவைகளுக்கு மட்டுமே தாங்கும் வண்ணம் தயாரிக்கப்படுகின்றன. அதற்கு மேல் தாங்குவது நம் அதிஷ்டத்தைப் பொறுத்தது. எனவே மிகப்பெரிய சைஸ் உடைகளை வாங்கி பின் குத்துவது, கயிறு கட்டி இறுக்குவது, காலுக்கு கீழே மடித்து விடுவது போன்ற செய்து குழந்தைகளை தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களின் தற்போதைய அளவு உடைகளை வாங்கி அடிக்கடி அணிவிப்பதே நல்லது. அப்படி செய்யும் போது குழந்தை வளர்ந்து உடை சிறியதாக ஆவதற்கும், உடை பழையதாகி கிழிவதற்கும் சரியாக இருக்கும்.

தேவைக்கு அதிகமாக குழந்தைகளின் தலையில் எண்ணெய் பூசுவது இன்னொரு தொந்தரவு. சின்ன வயதில் அதிக எண்ணெய் தடவினால் தலைமுடி அதிகமாக வளரும் என்பது பெற்றோர்களின் எண்ணம். அதில் உண்மையில்லை. எவ்வளவு எண்ணெய் பூசினாலும் குறிப்பிட்ட அளவு வளர்ச்சியே இருக்கும். முடி வளர்ச்சி ஜீன்களாலும், குரோமோசோம்களாலும் தான் தீர்மாணிக்கப்படுகிறது. தலையில் முடியை அழகாக சீவி நல்ல தோற்றத்தை உண்டாக்கும் அளவுக்கு எண்ணெய் தடவினால் அதுவே போதும்.

பெண் குழந்தைகளுக்கு கண்ணுக்கு மை தீட்டுவது, உதட்டுக்கு சாயம் பூசுவது போன்றவற்றை சிறு வயதிலிருந்தே அறிமுகப்படுத்துவதில் தவறில்லை. ஆனால் அவைகளை அளவுக்கு மீறி பயன்படுத்துவது குழந்தைகளின் தோலுக்கு எதிர் விளைவுகளை உண்டாக்கும்.

குழந்தைகளுக்கு அணிவிக்கும் செறுப்புகள் அதிக இறுக்கமானவையாக இல்லாமல் இருக்க வேண்டும். ஷூக்களும் அப்படியே வாங்கப்பட வேண்டும். சாக்ஸ் இல்லாமல் கண்டிப்பாக ஷூ அணிவிக்கவே கூடாது. அப்படி அணிவிக்கப்பட்ட செறுப்பு, ஷூக்களையும் ஒரு மணிக்கு ஒரு முறை கழட்டி கால்களின் இறுக்கத்தை தவிர்ப்பது நல்லது.

திருமணம் போன்ற விஷேசங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றால் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அவர்களை சிறுநீர் கழிக்க அழைத்துச் செல்ல வேண்டும். சற்று விபரம் தெரியும் வயது குழந்தைகள் என்றால் சிறுநீர் வருகிறதா என்பதை இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கேளுங்கள். அவர்களுக்கு அடிக்கடி குடிக்க தண்ணீர் கொடுப்பதும் அவசியம். தேவையான அளவு தண்ணீர் கொடுப்பது குழந்தைகள் சோர்வடையாமல் இருக்க உதவும்.

நம் குழந்தைகள் நாகரீகமாக இருப்பது நல்லது தான். ஆனால் அவஸ்தைக்குள்ளாகக் கூடாது என்பதில் உறுதியாயிருங்கள்.

Friday, August 10, 2012

குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பது எப்படி?


நாம் வாழக்கூடிய சமூகம் எதை சரி என்று சொல்லுகிறதோ செய்யவும், எதை தவறு என்று சொல்கிறதோ அதை செய்யாமல் இருக்கவும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதே ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பது. குழந்தையின் வாழ்க்கையில் ஒருவயது முடிந்தவுடன் ஒழுக்கத்தை கற்றுக் கொள்வது தொடங்குகிறது. முதலில் பெற்றோரின் கட்டுப்பாடுகளின் மூலமும் பின்னர் தன் சொந்த அறிவின் மூலமும் குழந்தைகள் ஒழுக்கம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்கிறார்கள். சொந்த அறிவின் மூலம் ஒழுக்கம் என்றால் என்ன என்பதை குழந்தைகள் தெரிந்து கொள்ளும் முன்பே, பெற்றோர்கள் கட்டுப்பாடுகள் மூலம் பலவற்றை கற்றுக் கொடுத்து விடுகிறார்கள். குழந்தைகளின் ஒழுக்க நடத்தைகளில் 90 சதவீதம் இவ்வாறே கற்றுக் கொள்ளப்படுகிறது. இக்காரணத்தால் இரண்டு வயது வரையிலான குழந்தைகளின் நடத்தை ஒழுக்கங்களை உருவாக்கும் பெற்றோர் நல்ல நடத்தைகளை ஊக்குவிக்க வேண்டும். வார்த்தைகளால் பாராட்டுதல், திண்பண்டங்களை பரிசாக அளித்தல், விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுத்தல் போன்றவற்றின் மூலம் ஒழுக்கமான நடத்தைகளை ஊக்குவிக்கலாம். விரும்பத்தகாத நடத்தைகளை ஒதுக்கும் விதமாக முகம் சுளித்தல், முகத்தை திருப்பிக் கொள்ளுதல், பாராட்டு வார்த்தைகளை கூறாமல் இருத்தல் ஆகியவற்றைக் கடைபிடிக்கலாம். எந்த காரணத்தைக் கொண்டும் குழந்தைகள் ஒழுக்கம் தவறி நடந்தார்கள் என்பதற்காக அடித்தல், சூடு வைத்தல், கிள்ளி வைத்தல் போன்ற தண்டனைகளை அளிக்கக் கூடாது. தண்டனைகள் ஒருபோதும் கெட்ட பழக்கங்களை குறைத்து நல்ல பழக்கங்களை அதிகரிப்பதில்லை என்பதே உளவியல் ஆய்வுகளின் கண்டுபிடிப்பு.

பெற்றோர் ஒரு நடத்தை தவறானது என்று குழந்தைக்கு சொல்லிக் கொடுத்துவிட்டால், அதற்குப்பின் எல்லா சமயங்களிலும் அது தவறானதே என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். வீட்டின் நடுகூடத்தில் சிறுநீர் கழிப்பது தவறு என்று குழந்தையிடம் சொல்லி விட்டால் அதற்குப் பின் எப்போது குழந்தை நடுக்கூடத்தில் சிறுநீர் கழித்தாலும் அதனை ஏற்கக்கூடாது. ஒரு சமயத்தில் அதனை கண்டித்துவிட்டு, இன்னொரு சமயத்தில் அதனை கண்டிக்காமல் விட்டால் குழந்தைக்கு நடுக்கூடத்தில் சிறுநீர் கழிப்பது சரியா அல்லது தவறா என்பதில் குழப்பம் ஏற்பட்டு விடும். ஒருசமயத்தில் அதட்டும் அம்மா, இன்னொரு சமயத்தில் அதைப் பற்றி கேட்பதேயில்லை. என்பதை உணரும் குழந்தை அடுத்த முறையும் நடுக்கூடத்தில் சிறுநீர் கழித்துப் பார்க்கும். இதுவே தொடர்ச்சியாக நடக்கும். பல குழந்தைகள் பெற்றோர் என்ன சொன்னாலும் தன் தவறான நடத்தையை மாற்றிக் கொள்ளாததற்கு காரணம் இதுவே. ஒழுக்கம் பற்றி பெற்றோர் தாம் சொன்ன கருத்தை எப்போதும் உறுதியாக கடைபிடிப்பது அவசியம்.

நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்வதற்கு பெற்றோர் குழந்தைகளுக்குச் செய்யும் உதவி, குழந்தை நல்ல பழக்கங்களை கடைபிடிக்கும்போது அதைப் பாராட்டுதல், கெட்ட பழக்கங்களை குழந்தை வெளிக்காட்டும் போது அவற்றை ஆதரிக்காத முகபாவம், எது நல்லது-எது கெட்டது என்பதில் பெற்றோர் தொடர்ந்து உறுதியாக இருப்பது ஆகியவை குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்று கொடுப்பதின் அடிப்படை விதிகள்.

இரண்டு வயது வரையிலான குழந்தைகள் அவர்களைப் பாராட்டிப் பேசுவதை புரிந்துகொள்ளும் திறனைப் பெற்றிருக்க மாட்டார்கள் என பல பெற்றோர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் குழந்தைகளைப் பாராட்டிப் பேசுவதை பெற்றோர் தவிர்த்து விடுகிறார்கள். பாராட்டிப் பேசுவதை புரிந்து கொள்ளாவிட்டாலும், பெற்றோரின் முகத்தில் ஏற்படும் நல்ல முகபாவங்களைக் கொண்டு அம்மா, அப்பா பாராட்டுகிறார்களா அல்லது திட்டுகிறார்களா என்பதை குழந்தைகள் புரிந்து கொள்ளும். எந்தெந்த நடத்தைகளுக்கு பெற்றோரின் முகபாவம் மகிழ்ச்சியாக இருக்கிறதோ அந்நடத்தைகளை குழந்தை திரும்பத்திரும்ப வெளிக்காட்டும். பெற்றோரின் முகம் சுணக்கமடையும் நடத்தைகளை குழந்தை கைவிட்டு விடும். ஆறு மாதத்திலேயே இது தொடங்கி விடுகிறது. ஆதலால், பெரியோர்களைப் பாராட்டுவது போலவே குழந்தைகளையும் பாராட்டிப் பேசுவது ஒழுக்க நடத்தையை கற்றுக் கொள்ள உதவும்.

இரண்டு வயதிலிருந்து ஆறு வயதுக்குள்ளான குழந்தைகள் நல்ல பழக்கங்களை பெற்றோரின் அறிவுறுத்தலுக்காக கடைபிடிக்கத் தொடங்குவர். அவர்களின் அறிவு வளர்ச்சி முழுமை பெறாத இக்கால கட்டத்தில் எதற்காக ஒரு பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற கேள்வி அவர்களின் மனதில் தோன்றுவதில்லை. காரணம் தெரியாமலேயே நல்ல பழக்கங்களை கடைபிடிக்கும் வயது இது. ஒரு நல்ல நடத்தையால் என்ன நன்மை என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் இச்சமயத்தில் சொல்லி கொடுத்தால் அந்நடத்தை அவர்களின் ஆளுமையில் வேறூன்றி ஆயுட்காலம் முழுமைக்கும் நிலைத்து நிற்கும்.

பள்ளிக்குச் செல்லும் வயதுக்கு முன் குழந்தைகளிடம் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றலாம். சொன்னபடி கேட்காமல் சொல்வதற்கு எதிராக நடப்பது பொதுவான ஒன்று. அவ்வாறு நடக்கும் போது பெற்றோரின் அதிகப்படியான கவனம் கிடைப்பது, அறியாமை, பொறுப்பான வேலை எதுவும் இல்லாமை ஆகியவையே குழந்தைகள் அப்படி நடப்பதற்குக் காரணம். இதனைப் புரிந்து கொள்ளாமல் கடுமையாக அடித்தல் போன்ற தண்டனைகள் குழந்தைகளை கெட்டவர்களாகவும் பெரும்கோபம் கொண்டவர்களாகவும் உருவாக்கிவிடும். சில குழந்தைகள் சிறிய தவறுக்கு இவ்வளவு பெரிய தண்டனை எதற்கு? பெற்றோர் எச்சரித்திருந்தால் அதுவே போதுமே என்று நினைப்பதும் உண்டு.

ஆறு வயதிற்கு மேற்பட்ட பதிமூன்று வயதிற்குப்பட்ட சில குழந்தைகள் அதிக அடாவடித்தனம் செய்வதும் சாதாரணமானதே. பள்ளியின் விதிமுறைகளை மீறி ஆசிரியர்களின் கோபத்துக்கு ஆளாவது அதிக குழந்தைகளிடம் தற்போது காணப்படுகிறது. பள்ளியின் மீது குழந்தைப் பருவத்தில் இருந்த பயம் குறைந்து போவதும், பள்ளி வாழ்க்கை அலுப்பைத் தருவதாக இருப்பதுவுமே இதற்குக் காரணம். நாளாக நாளாக இக்குழந்தைகள் தானாகவே சரியாகிவிடுவர். அதற்குள் பெற்றோர் பெரிய பிரச்சனையை உண்டாக்கி பெற்றோர்-குழந்தை உறவு பாதிக்கும் நிலைக்குப் போய்விடும். பெற்றோர் குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப பொறுமை காப்பது நன்று. குழந்தைப் பருவத்தில் சில கெட்ட பழக்கங்கள் இருந்தாலும் கூட பெற்றோர் பொறுமையுடன் இருப்பது வாலிப பருவத்தில் அவர்கள் தங்கள் சொந்த அறிவின் துணைகொண்டு ஒழுக்கமானவர்களாக வளர உதவும்.Thursday, August 9, 2012

குழந்தைகளுக்கு தோல்வி ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்?


நாணயத்தை சுண்டினால் பூ, தலை என இரண்டில் ஏதாவது ஒன்று தான் விழும் என்பது போல் முயற்சியின் விளைவுகள் இரண்டு தான். ஒன்று வெற்றி, மற்றொன்று தோல்வி. கரும்பின் சுவை போன்று இனிப்பானது வெற்றி. கசக்கும் இயல்பு கொண்டது தோல்வி. பெற்றோர்களாகிய நாம் தோல்விகளாலேயே துவண்டு போய் இருப்பதால் நம் குழந்தைகளும் தோல்வியடைவதை விரும்புவதில்லை. அனுபவம் என்னும் அகராதியை வைத்துக் கொண்டு குழந்தைகளின் ஒவ்வொரு முயற்சிக்கும் ஏதேனும் வகையில் உதவி அவர்களுக்கு வெற்றியை அளிக்க முயற்சிக்கிறோம்.

ஒரு சிறுவன் போட்டி ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்தான். மைதானத்தில் அமர்ந்து அவனின் பெற்றொர் மகன் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அச்சிறுவன் விளையாடும் போது ஒரு பாயிண்ட் எடுத்து விட்டால் பார்த்துக் கொண்டிருக்கும் பெற்றோர் துள்ளிக் குதிப்பதும், ஏதேனும் தவறு செய்து விட்டால் உடனே வெளியிலிருந்து கடிந்து கொள்வதுமாக பெற்றோரின் நடத்தை இருந்தது. கிட்டத்தட்ட சிறுவன் தோற்பது உறுதியாகிவிட்ட நிலை நிலவிய போது பெற்றோரின் முகம் பெரும் சோகத்தில் இருந்தது. விளையாட்டின் முடிவில் தோற்ற அந்த சிறுவனின் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருக்க அவனின் பெற்றோர் ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தனர். என்னுடைய மதிப்பீட்டின் படி சிறுவன் விளையாட்டில் தோற்றதைவிட பெற்றோரிடம் அவமானப்பட நேரிட்டதே என்பதற்காகத்தான் அழுவது போல் தெரிந்தது. ஏனென்றால் பெற்றோருடன் வராத சிறுவர்கள் தோற்றபோது பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் தங்கள் நண்பர்கள் போட்டியில் விளையாடுவதுப் பார்த்து அவர்களை மகிழ்ச்சியுடன் ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தனர். குழந்தைகளுக்கு ஏற்படும் தோல்விகளை பூதாகரமாக்குவது பெற்றோர்தான் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

நல்ல பெற்றோரின் கடமை வெற்றி தோல்வி பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதல்ல. மாறாக முயற்சி என்றால் என்ன என்பதை சொல்லிக் கொடுப்பது தான். விளையாட்டு, போட்டி, வாழ்க்கை என எல்லாவற்றிலும் முயற்சிப்பதே முக்கியம் என்பதையும், அறிவுப்பூர்வமாக முயற்சி செய்வது எப்படி என்பதையும், கடினமாக உழைப்பது எப்படி என்பதையுமே குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

முயற்சியின் முடிவு வெற்றியாக அமைந்துவிட்டால் குழந்தை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்த்த வேண்டுமே தவிர, அதனைப் பெரிதுபடுத்தி குழந்தையின் மனதில் கர்வம் ஏற்பட பெற்றோர்க் காரணமாக இருக்கக் கூடாது. முடிவு தோல்வி என்றால் முயற்சி சரியான பாதையில் இல்லை என்பதை பெற்றோர் உணர்த்த வேண்டும். தோல்வியைக் காட்டி குழந்தைகளின் மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தக் கூடாது.

சிறுவயதில் எளிய காரியங்கள் செய்யும் போது குழந்தைகள் தோல்வியை சந்திப்பது நல்லது. தோல்வி என்றால் என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்ள இவ்வனுபவங்கள் உதவும். வெற்றிக்கான முயற்சிகளை எவ்வாறு எடுக்க வேண்டும் என்பதை இத்தோல்விகள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும். பிற்காலத்தில் பெரிய முயற்சிகளில் தோல்வியடையும் போது மனம் கலங்காமல் மீண்டும் முயற்சிக்கும் மனப்பான்மை வளரும். இக்கால கட்டத்திலோ சிறுவயதில், சின்னசின்ன முயற்சிகளில் பெற்றோர் உதவியுடன் ஏராளமான வெற்றிகளை குழந்தைகள் பெறுகின்றனர். எல்லோராலும் சாதிக்கக் கூடிய இவ்வெற்றிகளால் பயன் ஏதும் இல்லை. இதே குழந்தைகள் பெரியவர்களானதும் ஒரே தோல்வியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். அவர்களால் தனித்து முயற்சி செய்யவும் முடிவதில்லை. தோல்வியைத் தாங்கிக் கொள்ளவும் இயலவில்லை.

ஒரு குழந்தை எல்லா முயற்சிகளிலும் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது என்றால் பெற்றோர் சற்று உஷாராக இருக்க வேண்டும். அக்குழந்தையின் மனதில் தோல்வியே எனது வாழ்க்கை என்ற மனப்பான்மை உருவாக வாய்ப்புண்டு. அந்த மனப்பான்மை உருவாகிவிட்டால் அதற்குப் பின் குழந்தை எந்த முயற்சியையும் எடுக்காமல் வாழ்க்கையில் எது நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குப் போய்விடும். இது போன்ற குழந்தைகளின் பெற்றோர் குழந்தைகளை புதிய முயற்சி எடுப்பதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். பழைய சூழ்நிலையில் ஏற்பட்ட தோல்விகள் புதிய சூழ்நிலையில் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதையும், புதிய சூழ்நிலை எவ்வாறு மாறியிருக்கிறது என்பதையும், குழந்தைக்கு அறிவு வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது என்பதையும் உணர்த்துவது பெற்றோரின் கடமை.

வெற்றியடைந்து விட்டால் வியாக்கியானம் பேசுவதும், தோல்வியடையும் போது துவண்டு போவதும் குழந்தைகளின் இயல்பு. பெற்றோர் இரண்டையுமே ஊக்குவிக்கக் கூடாது. வெற்றி தோல்வியை வைத்து குழந்தைகளை மதிப்பிடக் கூடாது. ஒரு குழந்தை வெற்றி பெறலாம் அல்லது தோற்கலாம். அவைகளுக்காக நம் குழந்தைகளுக்கு பாசத்தைக் காட்டுவதை விட அவர்கள் நம் குழந்தைகள் என்பதற்காக பாசத்தைக் காட்டினாலே உங்கள் குழந்தை வெற்றிக் குழந்தையாக வளரும்.

Wednesday, August 8, 2012

முதல் குழந்தை மற்றும் இரண்டாவது குழந்தை இடையே ஏற்படும் உளவியல் பிரச்சனைகள்


முதல் குழந்தை இருக்கும் போது தாய் இரண்டாவது பிரசவத்திற்கு தயாராவது முதல் மனைவி இருக்கும்போது இரண்டாவது மனைவியை திருமணம் செய்ய ஒரு கணவன் முயற்சி செய்யும் போது முதல் மனைவியின் மனதில் என்ன உணர்வுகளைத் தோற்றுவிக்குமோ அதே உணர்வுகளை முதல் குழந்தையின் மனதில் தோற்றுவிக்கும். தனக்கு இருக்கும் முக்கியத்துவம் பறிபோவதை எந்த குழந்தையும் விரும்புவதில்லை. அதே நேரத்தில் புதிய குழந்தையை கவனிக்கும் விஷயத்தில் காட்டும் அக்கறையை முதல் குழந்தையையும் கவனிக்கும் விஷயத்தில் பெற்றோர்களும், வீட்டில் உள்ள மற்றவர்களும், உறவினர்களும் காட்டுவதில்லை. இதனை கவனிக்கும் முதல் குழந்தை இதுவரை எனக்கு முழுமையாக கிடைத்து வந்த கவனிப்பை பறித்துக் கொண்டது புதிதாக வந்த குழந்தைதானே என நினைத்து அக்குழந்தையின் மீது வெறுப்பையும் பொறாமையையும் வளர்த்துக் கொள்கிறது. முதல் குழந்தைக்குத் தோன்றும் இம்மனநிலையை ‘உடன்பிறந்தோரிடம் நிலவும் பகைமை’ என உளவியல் கூறுகிறது. புதிய குழந்தையின் மீது பகைமை உணர்ச்சி அதிகமாகும் போது பெரிய குழந்தை யாருமில்லா நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் பாப்பாவை கிள்ளி வைப்பது போன்ற நடத்தைகளில் ஈடுபடலாம். பிற்காலத்தில் இரு குழந்தைகளுக்கு இடையே நிலவும் பிரச்சனை பூதாகரமாக விஸ்வரூம் எடுத்து அடிக்கடி அடித்துக் கொள்வது, அதன்பின் பெற்றோரிடம் புகார் சொல்வது என பெற்றோருக்கு தீராத தலைவலியைக் கொடுக்கும். இரண்டு வயது முதல் நான்கு வயது வரையிலான கால கட்டத்தில் குழந்தைகளிடம் இப்பிரச்சனை அதிகரிக்கும்.

இரு குழந்தைகளுக்கு இடையே நிலவும் பகைமை உணர்ச்சி இயற்கையானது என்றாலும் அதற்கு குழந்தைகள் காரணம் அல்ல. பெற்றோர் இரு குழந்தைகளையும் நடத்துகின்ற விதமே அதற்குக் காரணம். தாய் புதிதாகக் பிறந்த குழந்தையை கையில் வைத்திருக்கும்போது தாயை கட்டி அணைத்துக் கொள்ள முதல் குழந்தை ஓடிவரும் போது அதன் நெஞ்சில் கையை வைத்து தடுக்கும் தாய்மார்கள் உண்டு. அத்தோடு நிற்காமல் ‘இப்படி ஓடிவருகிறாயே, பாப்பா மீது விழுந்தால் என்ன ஆகும்’ தூரப்போ’ என துரத்துவதும் உண்டு. அப்போது தான் இது நாள் வரை ஓடிவந்து கட்டியணைத்தால் ஒன்றும் சொல்லாத அம்மா இப்போது மட்டும் துரத்துவது ஏன்? புதிய பாப்பா தானே அதற்கெல்லாம் காரணம் என்று சிந்திக்கும் குழந்தை பாப்பா மீது வெறுப்பை வளர்த்துக் கொள்ளத் தொடங்குகிறது. வீட்டுக்கு வரும் உறவினர், நண்பர்கள் என அனைவரும் புதிய குழந்தையைப் பற்றியே பேசுவது முதல் குழந்தையின் மனதில் உள்ள பகைமைக்கு தூபம் போடும். பின்நாட்களில் இரண்டு குழந்தைகளும் சண்டை போடும் போது பெற்றோர் தலையிட்டு முதல் குழந்தைக்கு பரிந்து பேசுவது இப்பகைமை உணர்ச்சியை எண்ணெய் விட்டு எரிய வைக்கும்.

பெற்றோர் இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொண்டவுடன் இரண்டு குழந்தைகளையும் சமமாக நடத்துவது அவசியம். முதல் குழந்தையின் முக்கியத்துவம் குறையாமல் பார்த்துக் கொள்வது ஓர் கலை. சின்ன சின்ன நடவடிக்கைகளின் மூலம் எளிதாக இரண்டு குழந்தைகளையும் சமமாக நடத்தலாம். தாய் பாப்பா தூங்கிக் கொண்டிருக்கும் போது முதல் குழந்தையை சற்று நேரம் மடியில் எடுத்து வைத்து பேச்சுக் கொடுத்து கொஞ்சலாம். முதல் குழந்தைக்குப் பிடித்தமான ஏதேனும் பொருட்களை வாங்கி வைத்திருந்து புதிய பாப்பா தூங்கும் சமயத்தில் ஆர்ச்சரியப்படுத்தும் வகையில் அளிக்கலாம். வெளியே குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது எதிர்படுவோர் புதிய குழந்தையைப் பற்றி மட்டுமே பேசினால் அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் முதல் குழந்தையைப் பற்றிய பேச்சும் வருமாறு பார்த்துக் கொள்ளலாம். இரண்டு குழந்தைகளுக்கும் ஏதேனும் வாங்கி வந்தால் அதை முதல் குழந்தையிடமே கொடுத்து நீ எடுத்துக் கொண்டு பாப்பாவுக்கும் கொடுத்து விடு எனக்கூறி முதல் குழந்தையின் முக்கியத்துவத்தை அதிகரிக்கலாம். இரண்டு குழந்தைகளும் சண்டை போட்டுக் கொண்டு பிரச்சணை பெரிதாகும் போது எப்போதும் சிறிய குழந்தைக்கு மட்டும் பரிந்து பேசுவதை நிறுத்திக் கொண்டு இருவருக்கும் பொதுவாகப் பேசலாம் அல்லது நடுநிலைமை வகித்து ஒருவரையும் திட்டாமல் இருக்கலாம். இது போன்று இன்னும் ஏராளமான முறைகளில் நடந்து கொள்வதன் மூலம் முதல் குழந்தையின் மீதான கவனம் குறையவில்லை என்பதை பெற்றோர் உணர்த்தி விடலாம்.

இவ்வாறு பெற்றோர்களால் சமமாக நடத்தப்படும் குழந்தைகளிடையே சகோதரப் பாசம் அதிகரித்து நல்லுறவு நீடிக்கும். உடன் பிறந்தோரிடம் நிலவும் இந்நல்லுறவு இரு குழந்தைகளின் மொழி வளர்ச்சி, அறிவு வளர்ச்சி ஆகியவற்றுக்கு துணைநிற்கும். அன்பு, பாசம் ஆகியவற்றின் ஆதாரமாக அமையும். விளையாட்டு, நகைச்சுவையுணர்வு ஆகியவற்றை வ:ளர்க்க உதவும்.
Tuesday, August 7, 2012

குழந்தைகளுக்கு கனவு வருமா? அதனால் ஏதேனும் பாதிப்புகள் உண்டா

ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது தொடர்ச்சியான கற்பனைகள், சிந்தனைகள் அல்லது மனவெழுச்சிகள் மனதில் தோன்றி கடந்து செல்வதையே கனவுகள் என்கிறோம். கனவுகள் எல்லா மனிதர்களுக்கும் தோன்றும். பிறந்து இரண்டு வாரங்கள் முடிந்தவுடன் கனவுகள் மனதில் தோன்றத் தொடங்கி விடுகின்றன. விழித்திருக்கும் போது குழந்தையைச் சுற்றி நடக்கும் விஷயங்களே தூங்கும்போது கனவுகளாக உருவெடுக்கின்றன. அதனால் இரண்டு வாரம் முடிந்தவுடன் தொடங்கும் ஆரம்பகால கனவுகள் சாதாரணமானவையாகவே இருக்கும். குழந்தையின் விழிப்புணர்ச்சி அதிகரிக்கத் தொடங்கும்போது கனவுகளின் வீரியம் மற்றும் தன்மையும் மாறத் தொடங்குகிறது. அதிக அனுபவமில்லா காலத்தில் குழந்தையின் மனதில் தோன்றும் கனவுகள் பெரும்பாலும் நல்ல கனவுகளே. இக்கனவுகள் குழந்தையின் சிந்திக்கும் திறனை மேம்படுத்த உதவுகின்றன. குழந்தை காணும் கனவுகளின் அளவுக்கும் அக்குழந்தையின் சிந்தனை மற்றும் அறிவு வளர்ச்சிக்கும் நெருங்கியத் தொடர்பு உள்ளதாக உளவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெற்றோரின் அரவணைப்பில் இருக்கும் வரை நல்ல கனவுகளையே காணும் குழந்தைகள் ஓடியாடி விளையாடத் தொடங்கியவுடன் பல்வேறு அனுபவங்களைப் பெறத் தொடங்கி விடுகிறார்கள். அதுமுதற்கொண்டு குழந்தைகளின் எதிர்மறை அனுபங்களையும் அடிப்படையாகக் கொண்டு பயமுறுத்தும் கனவுகளும் வர ஆரம்பித்து விடும்.

குழந்தைகளுக்கு பயத்தை உண்டாக்கும் பயங்கரக் கனவுகள் 18 மாதத்தில் தொடங்குகிறது. ஆழ்ந்த தூக்கத்தில் குழந்தைகள் இருக்கும் போது பல பயமுறுத்தும் கனவுகள் அவர்களுக்குத் தோன்றலாம். பதினெட்டு மாதத்தில் தொடங்கும் இப்பயங்கர கனவுகள் மூன்று முதல் நான்கு வயது வரையிலான காலகட்டத்தில் மிக அதிகமாகத் தோன்றும். கற்பனை உணர்ச்சி உச்சகட்டத்தில் இருக்கும் இச்சமயத்தில் குழந்தைகள் தங்கள் பகற்கனவை தூக்கத்திலும் தொடர்வர். மிகப் பெரிய பூதமோ அல்லது ஆபத்தை உண்டாக்கும் விலங்குகளோ குழந்தைகளின் கனவில் தோன்றி அவர்களை பயமுறுத்தும். தப்பிக்கவே முடியாத ஆபத்தில் மாட்டிக்கொண்டு உதவி ஏதும் கிடைக்காத நிலையில் இருப்பது போன்று குழந்தைகள் பீதியடைந்து போவர். வாரத்திற்கு குறைந்தது ஒன்று அல்லது இரண்டு முறை இது போன்ற கனவுகள் குழந்தைகளுக்கு தோன்றலாம். எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகள் படிக்கும் குழந்தைகள் தெளிவான கற்பனைத் திறனைப் பெற்றிருப்பர். அவர்களின் அன்றாட வாழ்க்கை அதிக செயல்பாடுகள் கொண்டதாகவும், அவர்கள் வளரும் சூழ்நிலை அதிக பயமுறுத்தும் தூண்டல்கள் நிறைந்ததாகவும் இருக்கும். உடன் பிறந்தோர் மற்றும் வயதினையொத்த பிற குழந்தைகள் குழந்தைகளின் மனதில் அதிக பயத்தை உண்டாக்கும் வகையில் நடந்து கொள்வர். எல்லாவற்றிற்கும் மேலாக பெற்றோரை விட்டுப் பிரிந்து பள்ளிக்குச் செல்வது குழந்தைகளின் மனதில் பிரிவு பயத்தை உண்டாக்கி விடும். இவையனைத்தும் சேர்ந்து இரவில் தூங்கும் குழந்தையின் மனதில் பீதியைக் கிளப்பும் கனவுகளை உலவ விடும்.

பெற்றோரிடம் நிலவும் சண்டை, மகிழ்ச்சியற்ற குடும்ப நிலை, குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு, கடும் பொருளாதார பிரச்சனைகள் போன்றவையால் பாதிக்கப்படும் குழந்தைகளிடம் பயத்தை உண்டாக்கும் கனவுகள் அதிகமாக தோன்றும்.

குழந்தைகள் தூங்க ஆரம்பித்த பின் ஒருமணி நேரத்திற்குப் பின் இரண்டு மணிநேரத்த்திற்குப் பிறகு பயமுறுத்தும் கனவுகள் தொடங்கும். அவ்வாறு தோன்றும் பயமுறுத்தும் கனவு பத்து முதல் முப்பது நிமிடங்கள் வரை நீடிக்கும். இச்சமயத்தில் பயந்த குழந்தை திடீரென படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்து கொள்ளும். முகம் கதிகலங்கிப் போயிருக்கும். வீரிட்டுக் கத்தும். மூச்சு விடுதல் ஆழமாக இருக்கும். உடல் வியர்த்துப் போய்விடும். குழந்தை கால்களால் எட்டி உதைக்கும். கண்கள் பேயறைந்தது போல் பிதுங்கிக் கொள்ளும். இவையெல்லாம் நடக்கும் போது பெற்றோர் எவ்வளவு தேற்றினாலும் குழந்தை ஆறுதல் கொள்ளாது. பெற்றோருக்கு என்ன செய்வதென்றே தெரியாத குழப்பம் ஏற்படும். கனவு முடிந்தவுடன் குழந்தை மீண்டும் தூங்கத் தொடங்கிவிடும். தனக்கு ஓர் பயங்கரமான கனவு தோன்றியது என்ற நினைவே அக்குழந்தைக்கு இருக்காது. இக்கனவுகள் குழந்தையின் ஆளுமையோடோ அல்லது அதன் மனவெழுச்சிகளோடோ தொடர்பு கொண்டிருக்காது. நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் குழந்தையை திடீரென பின்னாலிருந்து தள்ளுதல், யாரேனும் மயங்கி விழுவதை குழந்தை பார்க்க நேரிடுதல், பிறருக்கு ஏற்படும் விபத்தொன்றினை குழந்தை பார்க்க நேரிடுதல் போன்ற சாதாரண காரணங்களால் தான் இது போன்ற பயமுறுத்தும் கனவுகள் குழந்தைகளுக்கு தோன்றுகின்றன.

குழந்தைகளுக்கு கனவு வராமல் தடுக்க வழியில்லை. ஆனால் கனவு வருவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை பெற்றோர்களால் குறைக்க முடியும். குழந்தை படுத்து உறங்கியதிலிருந்து ஒருமணி நேரம் வரை அருகிலேயே விழித்திருந்து உடலில் மாற்றங்கள் தோன்றும் போது தட்டிக் கொடுத்து ஆறுதல் அளிக்க வேண்டும். திடீரென குழந்தை விழித்துக் கொண்டு அழும்போது பதட்டப்படாமல் நிலைமையை சமாளிக்க பெற்றோர் கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் குழந்தைக்கு தாயத்து கட்டுதல், மந்தரித்தல் போன்ற மூட நம்பிக்கைகளில் இறங்காமல் இருப்பது நல்லது.

Monday, August 6, 2012

பிரச்சனைகளை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது எப்படி?

பெற்றோர்களில் இருவிதம் உண்டு. தங்கள் குழந்தைகளுக்கு எல்லாம் செய்து கொடுத்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பெற்றோர் முதலாவது வகை. முடிந்ததை செய்வோம், மற்றதை அவர்களாகவே அடைய வேண்டியது என்பதை கொள்கையாக வைத்துக் கொண்டு குழந்தைகளை இயன்ற வரை காப்பாற்றும் பெற்றோர் இரண்டாவது வகை. இதில் எது சரி என கேட்டால் இரண்டுமே தவறு என்றுதான் சொல்ல வேண்டும். எல்லாவற்றையும் செய்து கொடுத்து பாதுகாப்பாகவே வளர்த்தால் பின்னர் குழந்தைகள் தானாக எதையுமே செய்யும் திறமை இல்லாதவர்களாக வளர்ந்து விடுவர். எதையுமே கண்டு கொள்ளாமல் தானாகவே தெரிந்து கொள்ளட்டும் என விட்டால் எல்லாவற்றிற்கும் பயந்து கொள்பவர்களாக குழந்தைகள் வளர்வர். அதுவும் பிரச்சனைகளை எதிர்கொண்டு தீர்ப்பதில் திறமை இல்லாமல் வளர்வர்.

பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை வாய்ப்பது அரிது. எல்லோர் வாழ்க்கையுமே பிரச்சனைகளை கொண்டது தான். ஒரு பிரச்சனை தீர்வதற்குள்ளாகவே இன்னொரு பிரச்சனை தோன்றிவிடும். யார் தனக்கு ஏற்படும் பிரச்சனைகளை திறமையாக கையாண்டு அதை தீர்த்து விடுகிறார்களோ அவர்களே வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வதாக கொள்ளப்படுகிறது. எனவே நம் குழந்தைகளுக்கு பிரச்சனை தீர்க்கும் திறனை கற்றுக் கொடுப்பது அவசியம்.

சிக்கலைத் தீர்க்கும் திறன் ஒருநாளில் உருவாவதில்லை. வாழ்க்கையின் போக்கில் பல ஆண்டுகள் அனுபவத்தின் காரணமாகவே சிக்கலைத் தீர்க்கும் திறன் வளர்ச்சியடைகிறது. இந்த அடிப்படையில் பார்க்கும் போது இது போன்று பத்து நாட்கள் பயிற்சி செய்தால் சிக்கலைத் தீர்க்கும் திறன் வளர்ச்சி அடைந்து விடும் என்பது போன்ற குழந்தைகளுக்கு கற்றுத் தரும் விதமான பயிற்சிகள் உளவியலலில் எதுவுமே இல்லை. எதைக் கற்றுக் கொடுக்கிறோம் என்பதை சொல்லாமல் மறைநிலையில் மட்டுமே பிரச்சனைகளை தீர்க்கும் திறனை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க முடியும். பெற்றோர்கள் தங்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளை தீர்க்க முனையும் போது குழந்தைகளை அருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தங்கள் பெற்றோர் எவ்வாறு பிரச்சனைகளை அணுகுகிறார்கள், என்னென்ன உத்திகளை பயன்படுத்துகிறார்கள், பிரச்சனைகளைத் தீர்க்க முடியாவிட்டால் என்ன செய்கிறார்கள். தேவைப்படும் போது உதவி கேட்டு பிறரை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பனவற்றை குழந்தைகள் பார்த்தும், அருகிலிருந்து கேட்டும் தெரிந்து கொள்வார்கள். இது அவர்கள் படிக்கும் செயல்முறைப் பாடம். வளர வளர பல பிரச்சனைகளை பெற்றோர் தீர்ப்பதைப் பார்க்கும் குழந்தைகள் ஒரு கட்டத்தில் வாழ்க்கையின் எல்லா பிரச்சனைகளையும் எவ்வாறு தீர்ப்பது என்பதை தெரிந்து கொள்வார்கள். ஆனால் பல பெற்றோர்கள், தங்களுக்கு பிரச்சனை ஏற்படும் போது குழந்தைகள் அருகில் இல்லாதவாறு பார்த்துக் கொள்கிறார்கள். பிரச்சனைகளினால் குழந்தைகளின் மனம் பாதிக்க்கப்படக் கூடாது என்ற எண்ணமே இதற்குக் காரணம். இவ்வாறு குழந்தைகளை பிர்ச்சனைக்குரிய சூழ்நிலைகளில் இருந்து அப்புறப்படுத்துவது அவர்கள் பிற்காலத்தில் பிரச்சனைகளைக் கண்டாலே ஓடி ஒளியும் நிலைக்கு அடிகோலும்.

ஒருசில குழந்தைகள் எவ்வளவு கற்றுக் கொண்டாலும் தனியாக ஒரு பிரச்சனையைத் தீர்க்கும் நிலை ஏற்பட்டால் தவிப்பிற்குள்ளாகிவிடுவர். அது போன்ற நிலை தங்கள் குழந்தைகளிடம் நிலவுவதாக பெற்றோர் நினைத்தால் அக்குழந்தைக்கு அருகிலேயே இருந்து பிரச்சனைகளை தீர்க்குமாறு தைரியம் அளிக்க வேண்டும். அச்சமயத்தில் எல்லா உதவிகளையும், மனரீதியான ஆதரவினையும் அளிக்க வேண்டும். ஓரிரு முறை பெற்றோரின் உதவியோடு சிக்கலைத் தீர்ப்பதில் வெற்றி காணும் குழந்தை தன்னால் சிக்கலைத் தீர்த்து விட முடியும் என்ற மன தைரியத்தை வளர்த்துக் கொள்ளும். விரைவிலேயே தனியாக பிரச்சனைகளை எதிர் கொள்ளும் திறமை அக்குழந்தையினிடம் தோன்றி விடும்.

பிரச்சனை வந்த பின் அதனைத் தீர்க்க முற்படுவதும் தீர்ப்பதும் திறமை. அத்திறமை வாய்க்கப் பெற்றாலே போதுமானது. ஆனால் தற்கால உளவியலில் சிறந்த ஆளுமையினர் பலரிடம் நடத்தப்ப்பட்ட ஆய்வுகளில் புதிய ஆளுமைப் பரிமானம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அது பிரச்சனை வருமுன்னே பிரச்சனைகளை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஆளுமைப் பண்பாகும். இவ்வாறு அடுத்த பிரச்சனை எப்போதும் வரலாம் என்று ஒன்றைத் தீர்த்து விட்டு அடுத்ததை எதிர்பார்த்து காத்திருக்கும் மனநிலை கொண்டவர்கள் எப்போது பிரச்சனை வந்தாலும் கலங்குவதில்லை. இவர்களிடம் அவசர காலத்தில் சிக்கலை எதிர்கொள்ளத் தேவையான கூடுதல் மன ஆற்றலும் காணப்படுகிறது. அதனால் எந்த பிரச்சனை எப்போது வந்தாலும் அதனை சுலபமாக முடித்துவிட்டு அடுத்ததை எதிர்கொள்ள காத்திருக்கிறார்கள். பெற்றோர் முதலில் இத்திறனை வளர்த்துக் கொண்டால் அது குழந்தைகளிடம் ஆளுமைப் பண்பாக உருவெடுத்து விடும்.

குண்டுக் குழந்தைகளின் உடல் எடையைக் குறைக்க அவர்களை நடைப்பயிற்சி செய்ய வைக்க வேண்டும். அதற்கு பெற்றோரும் குழந்தைகளுடன் நடக்க வேண்டும். மெதுவாக நடைப் பயிற்சி செய்ய ஆரம்பித்த உடன் படிப்படியாக நடையைக் அதிகப் படுத்த வேண்டும். சோதனை ஒன்றில் பெற்றோர் ஒருநாளைக்கு 2000 எட்டுக்களும் குழந்தைகள் 1000 எட்டுக்களும் நடையை அதிகப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இச்சோதனையில் எந்தெந்த பெற்றோர் 2000 எட்டுக்கள் நடையை அதிகப்படுத்தினார்களோ அவர்களின் குழந்தைகள் ஒருநாளைக்கு 2117 எட்டுக்கள் நடையை அதிகப்படுத்தி விரைவிலேயே தங்கள் எடையைக் குறைத்துக் கொண்டனர். சுறுசுறுப்பான பெற்றோர்களால் சுறுசுறுப்பான குழந்தைகளை உருவாக்க முடிந்தது.

எடைக்குறைப்பில் மட்டுமல்ல, சிக்கலைத் தீர்ப்பதிலும் அதுவே உண்மை. எப்போது வேண்டுமானாலும் பிரச்சனைகள் வரலாம். எதிர்பார்த்துக் காத்திருங்கள் உங்கள் குழந்தைகளோடு!

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP