உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Monday, February 3, 2020

Telephone Counselling and Guidance Centre


Wednesday, August 6, 2014

திருக்குறள் – உளவியல் உரை


சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு (அதிகாரம் 3 – 27)

புலன் உறுப்புக்களின் துணைகொண்டு சூழ்நிலையிலிருந்து வரும் செய்திகளை சேகரிப்பதே புலன் உணர்ச்சி எனப்படும்.  மனிதர்களுக்கு கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் என ஐந்து புலன் உறுப்புக்கள் உள்ளன.  இவற்றையே ஐம்புலன்கள் என்கிறோம்.  இப்புலன்களால் சுழ்நிலையிலிருந்து தகவல்களை நாம் சேகரித்துக் கொள்வது நம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே ஆகும்.  உதாரணமாக பாதையில் இருக்கும் கல்லை சரியாக பார்க்காமல் கால் இடறி கீழே விழுவது நம் அனைவருக்கும் நிகழக் கூடிய ஒன்று. நன்கு பார்த்து நடப்பவருக்கு கீழே விழும் பிரச்சனை இல்லை.  அடுப்பறையில் சமையல் எரிவாயு கசிந்து கொண்டிருந்தால் கெட்ட வாடை வீசும்.  அக்கெட்ட வாடையை நுகரும் பெண் சமையலறையில் நுழைந்தவுடன் உஷாராகி தீ விபத்து எதுவும் நடக்காமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்வார்.  கெட்ட வாடையை அலட்சியப்படுத்தினாலோ பெரும் தீ விபத்தும் உயிரிழப்பும் ஏற்படலாம்.  இதைப் போலவே எல்லா புலன் உறுப்புக்களும் நமக்கு உதவுகின்றன.  ஒருவர் கூர்மையான புலன் உணர்ச்சியைக் கொண்டிருப்பாரானல் மிகத் திறனுடன் விளங்கலாம்.  ஒருவரின் புலன் உறுப்புக்கள் நன்முறையில் செயல்பட்டால் அவரின் புலன் உணர்ச்சியும் மிகக் கூர்மையாக இருக்கும்.  உளவியலர் மனித புலன் உறுப்புக்கள் நன்கு செயல்படுகின்றனவா என்பதைக் கண்டறிய பின்வரும் நியதிகளைத் தெரிவித்துள்ளனர்.

கண்        :நள்ளிரவில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் எரியும்     மெழுகுவர்த்தி சுடரை காண வேண்டும்.

காது        :இருபது அடி தொலைவில் வைக்கப்பட்டுள்ள கடிகாரத்தின் டிக்டிக் ஓசையைக் கேட்க வேண்டும்.

மூக்கு       :நான்கு அறை கொண்ட ஒரு வீட்டில் இரண்டு துளி வாசனை திரவியத்தை தெளித்தால் அவ்வாசனையை உணர வேண்டும்.

நாக்கு       :ஒரு பீப்பாய் தண்ணீரில் கலக்கப்பட்டுள்ள ஒரு கரண்டி உப்பு அல்லது சர்க்கரையின் சுவையை உணர்ந்து கொள்ள வேண்டும்.

தோல்       :கன்னத்தைத் தொடாமல் ஒரு செண்டி மீட்டர் தொலைவில் பறக்கும் பட்டாம்பூச்சியின் சிறகடிப்பை உணர வேண்டும்.

இவ்வாறு நம் புலன் உறுப்புக்கள் கூருணர்வுடன் செயல்படும் போது நம் நடத்தையும் மிகத் திறமையுடன் விளங்கும்.       

மனிதருக்கு ஐந்து புலன்கள் என்பது பொதுக்கருத்து.  மனிதருக்கு ஏழு புலன்கள் உள்ளன என உளவியல் தெரிவிக்கிறது.  நம் உடல் சமநிலையுடன் இருக்கிறதா என்பதை உணர்வது ஆறாவது புலனாகும்.  நடுக்காதில் காணப்படும் மூன்று அரைவட்ட குழாய்கள் உடற்சமநிலையை நமக்கு உணர்த்தும் புலன் உறுப்புகளாக செயல்படுகின்றன.  இவை சரியாக செயல்படாவிட்டால் நமக்கு வாந்தியும் தலைசுற்றலும் ஏற்படும்.  உடலின் இயக்கத்தையும் உடல் இருக்கும் நிலையையும்  உணர்ந்து கொள்வது ஏழாவது புலனாகும்.  கால் கை மூட்டுகளில் காணப்படும் சில அணுக்கள் நம் உடல் இயங்குவதை நமக்கு உணர்த்துகின்றன.   


உலகை வெற்றி கொள்ள ஏழு புலன் உறுப்புகளும் நன்கு செயல்படுவதே இன்றியமையாதது.

திருக்குறள் – உளவியல் உரை


அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் (அதிகாரம் 4 – 35)

மனிதர்கள் அறிவானவர்கள் என்பதை விட உணர்ச்சி மயமானவர்கள் என்பதே மிகச் சரியானதாகும். மகிழ்ச்சி, சோகம், ஆர்ச்சரியம், சிரிப்பு, கோபம் மற்றும் பயம் ஆகியவையே மனிதரிடத்தில் காணப்படும் அடிப்படையான உணர்ச்சிகள் ஆகும்.  இவ்வுணர்ச்சிகள் மனித வாழ்க்கையை ஆர்வமுள்ளதாக்குகின்றன.  இவையில்லாவிட்டால் நம் வாழ்க்கை அலுப்பைத் தரும்.   அடிப்படை உணர்ச்சிகளில் சில நேர்மறையானவை.  சில உணர்ச்சிகள் எதிர்மறையானவை.  இரவு பகல் இரண்டும் நமக்கு இன்றியமையாதவை போல நேர்மறை உணர்ச்சிகளைப் போல எதிர்மறை உணர்ச்சிகளும் நமக்கு முக்கியமானவையே.  பிறந்த குழந்தை அழுகை என்னும் எதிர்மறை உணர்ச்சியின் வாயிலாகவே தன் தாயின் கவனத்தை ஈர்த்து உணவைப் பெறுகிறது.  அழாத குழந்தையை கவனிப்பாரில்லை.  தனியவர் ஒருவர் உயிர்வாழ எதிர்மறை உணர்ச்சிகளும் உதவி செய்கின்றன.  எதிர்மறை உணர்ச்சிகள் இல்லாமல் வாழ்வது சாத்தியமாகாது என்றாலும் பலர் கட்டுக்கடங்காத அளவுக்கு எதிர்மறை உணர்ச்சிகளை வெளிப்படுத்தி வாழ்க்கையில் கடும் துன்பத்திற்கு ஆளாகின்றனர்.  மேயர்-சலோவி என்னும் உளவியல் அறிஞர்கள் எல்லா உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் போது பின்வரும் கேள்விகளை மனதிற்குள் கேட்டுவிட்டு பின் வெளிப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். 

  • யாரிடம் உணர்ச்சியை வெளிக்காட்டுகிறேன்? சரியான நபரிடம் தானா?
  • எங்கே உணர்ச்சியை வெளிக்காட்டுகிறேன்? சரியான இடம் தானா?
  • எப்போது உணர்ச்சியை வெளிக்காட்டுகிறேன்? சரியான நேரம் தானா?
  • எப்படி உணர்ச்சியை வெளிக்காட்டுகிறேன்? சரியான முறைதானா?
  • எவ்வளவு உணர்ச்சியை வெளிக்காட்டுகிறேன்? சரியான அளவில்தானா?
  • எப்போது நிறுத்த வேண்டும்? சரியான நேரத்தில் என் உணர்ச்சி வெளிப்பாட்டினை நிறுத்திக் கொள்கிறேனா?
இக்கேள்விகளுக்கு விடையளிக்கும் விதத்தில் ஒருவரின் உணர்ச்சி வெளிப்பாடு இருக்குமாயின் அது எவ்வகை உணர்ச்சியாயிருப்பினும் அவருக்கு கெடுதல் எதுவுமில்லை. மேலும் தனியவரின் கட்டுப்பாட்டில் அனைத்து உணர்ச்சிகளும் இருக்கும்.  இவ்வாறில்லாமல் பலர் கட்டுக்கடங்காமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவர்.  அவ்வுணர்ச்சிகள் நேர்மறையானவையாக இருக்கும் போது தீங்கில்லை.  ஆனால் வெளிப்படுத்தப்படும் உணர்ச்சிகள் எதிர்மறையாக இருக்கும் போது கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தி இன்னல்களைத் தோற்றுவிக்கும்.  மேற்காண் குறளில் குறிப்பிட்டுள்ள பொறாமை, ஆசை, சினம் மற்றும் கடுஞ்சொல் ஆகியவற்றை உணர்ச்சி மேலாண்மைத் திறனோடு வெளிப்படுத்துவதே ஒருவருக்கு நன்மை பயக்கும்.  

Friday, August 1, 2014

திருக்குறள் – உளவியல் உரை



எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் (அதிகாரம் 67 – 666)

இவ்வுலகில் அறிவுப் பற்றாக்குறையுடையோர் வெகுசிலரே.  சாதாரண வாழ்க்கையில் வெற்றியாளராக திகழ்வதற்கு சாதாரண அளவு அறிவே போதுமானது. அச்சாதாரண அளவு அறிவு அனைவருக்கும் உள்ளது.  ஆளுமைப் பிரச்சனையுடையவர்களே இவ்வுலகில் அதிகமாக காணப்படுகின்றனர்.  அறிவிருந்தும் தேவையான ஆளுமைப் பண்புகள் இல்லாததாலேயே பலர் வாழ்க்கையில் பிரச்சனைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள்.  ஒருவர் சிறந்த ஆளுமைப் பண்புகளைக் கொண்டிருந்தால் அவரை திண்ணியர் எனலாம்.  நவீன உளவியலில் பல்வேறு ஆளுமைப் பரிமாணங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.  அவற்றில் ஒன்று கடின ஆளுமையாகும்.  எண்ணற்ற பணிகளை திறம்பட முடித்துக்காட்டும் மிகச்சிறந்த வழக்குரைஞர்களையும் செயலர்களையும் உளவியலர் பேட்டி கண்டு அவர்களின் ஆளுமையை ஆராய்ந்த போது இவ்வாளுமை பரிமானம் கண்டறியப்பட்டது.  உதாரணமாக டிபேக்கி என்னும் இதய நோய் வல்லுநர் ஒருவர் இருந்தார்.  அவர் ஒருநாளைக்கு பத்து முதல் பதினைந்து மணிநேரம் சிகிச்சை அளிப்பதில் ஈடுபட்டிருந்தார்.  ஒரு சாதாரண இதயநோய் மருத்துவர் ஒரு வருடத்தில் சராசரியாக செய்யும் அறுவை சிகிச்சைகளை டிபேக்கி ஒரு மாதத்தில் செய்து முடித்து விடுவார்.  இதில் ஆர்ச்சரியமான செய்தி டிபேக்கியின் வயது 80க்கும் மேலாகும்.  இவ்வளவு கடின உழைப்பிலும் எவ்வித மனவழுத்தமும் அவரிடம் காணப்படவில்லை.  எவ்வாறு இப்படி மனவழுத்தம் இல்லாமல் வெற்றிகரமாக எண்ணற்ற சிக்கலான இதய அறுவை சிகிச்சைகளை செய்கிறீர்கள் என டிபேக்கியிடம் கேட்ட போது அவர் தான் செய்யும் ஒவ்வொரு இதய அறுவை சிகிச்சையையும் சவாலாக எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.  மேலும் தன்னால் அறுவை சிகிச்சை சூழ்நிலைகளை தன் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார். எல்லாவற்றையும் விட தான் சிறந்த இதய அறுவை சிகிச்சை வல்லுநராக இருப்பது மக்களுக்கு சிகிச்சையளிக்கவே என்றும் தான் இத்தகைய சிக்கலான அறுவை சிகிச்சைகளை செய்யாவிட்டால் பின் யார்தான் செய்வார் என்று கடமை உணர்வு கொண்டவராகவும் காணப்பட்டார்.  அதனாலேயே டிபேக்கி மிகச்சிறந்த இதய நோய் வல்லுநராக புகழ் பெற்று விளங்கினார். 

டிபேக்கியிடம் காணப்பட்ட கடமையுணர்வு, சூழ்நிலையை கட்டுப்படுத்தும் திறன் மற்றும் முடிக்க வேண்டிய செயல்களை சவாலாக எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கு ஆகிய மூன்றும் கடின ஆளுமையின் பண்புகளாகும்.  ஒருவர் இப்பண்புகளை உடைய ஆளுமையினராக இருந்தால் அவரால் முடிக்க முடியாத செயல் என எதுவுமே இல்லை. 

Wednesday, July 30, 2014

திருக்குறள் – உளவியல் உரை


குணமென்னும் குன்றேரி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது. (அதிகாரம் 3 – 29)

ஒருவர் அமைதியானவராக இருந்தாலும் வாழ்க்கையின் போக்கில் பிறர் மீது, மற்றவர்களின் செயல்களின் மீது, இச்சமூகத்தின் மீது என பலவற்றின் மேல் கோப உணர்ச்சி கொள்ள வாய்ப்புண்டு.  அவ்வாறு ஏற்படும் கோப உணர்ச்சியை பலர் கத்துதல், திட்டுதல் போன்ற நடத்தைகளின் வழியாக வெளிக்காண்பித்து விடுகின்றனர்.  ஒரு சிலரோ கோபத்தை வெளிக்காண்பித்தால் தன்னை தவறாக நினைத்துக் கொள்வார்களோ என நினைத்து அக்கோபத்தை அடக்கியே வைத்துக் கொள்வர்.  அடக்கி வைக்கப்படும் அனைத்திற்கும் ஆற்றல் பன்மடங்கு அதிகம். அடிமனதில் அடக்கி வைக்கப்பட்ட கோபமும் பன்மடங்கு ஆற்றல் பெற்று வெளிப்பட வாய்ப்புக்காக காத்திருக்கும்.  வாயு நிரப்பப்பட்ட சோடாபுட்டி பட்டெனெ வெடித்து சுக்கு நூறாகி விடுவது போல் இதற்குமேல் அடக்க முடியாது என்னும் நிலை ஏற்படும் போது திடீரென வெளிப்படும் கோப உணர்ச்சி கட்டுக்கடங்காமல் போய் பல விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடும். பல்லாண்டு காலம் நெருங்கிய நண்பர்களாக இருந்த இருவரிடையே ஒருநாள் ஒரு ரூபாய்க்காக தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி திடீரென ஒருவர் தன் நண்பரை கத்தியால் குத்தி கொலையே செய்து விட்டார். மேம்போக்காக இது ஒரு ரூபாய் தகராறாகத் தெரிந்தாலும் கொலையாளி தன் நண்பன் மீதான கோபத்தை பல நாட்களாக அடக்கி வந்திருக்கிறார்.  அது உச்சகட்ட நிலையை எட்டியபோது நடந்த ஒரு ரூபாய் சண்டையில் கொலை நடந்து விட்டது என்பதே உண்மை.  நீண்ட நாட்களாக தான் கோபத்தை வெளிப்படுத்தாமல் அடக்கிக் கொண்டு வருகிறோம் என்னும் விழிப்புணர்வே அடக்கப்பட்ட கோபத்தை கையாள நாம் எடுக்கும் முதல் முயற்சியாகும்.  

Wednesday, December 25, 2013



Thursday, October 17, 2013


Wednesday, July 17, 2013

TRP ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான உளவியல் வினா விடை





Sunday, January 6, 2013

உணர்ச்சி மேலாண்மை பயிற்சி அளிப்பது அவசியம் - தினமலர் 07.01.2013


Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP