உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Wednesday, August 6, 2014

திருக்குறள் – உளவியல் உரை


அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் (அதிகாரம் 4 – 35)

மனிதர்கள் அறிவானவர்கள் என்பதை விட உணர்ச்சி மயமானவர்கள் என்பதே மிகச் சரியானதாகும். மகிழ்ச்சி, சோகம், ஆர்ச்சரியம், சிரிப்பு, கோபம் மற்றும் பயம் ஆகியவையே மனிதரிடத்தில் காணப்படும் அடிப்படையான உணர்ச்சிகள் ஆகும்.  இவ்வுணர்ச்சிகள் மனித வாழ்க்கையை ஆர்வமுள்ளதாக்குகின்றன.  இவையில்லாவிட்டால் நம் வாழ்க்கை அலுப்பைத் தரும்.   அடிப்படை உணர்ச்சிகளில் சில நேர்மறையானவை.  சில உணர்ச்சிகள் எதிர்மறையானவை.  இரவு பகல் இரண்டும் நமக்கு இன்றியமையாதவை போல நேர்மறை உணர்ச்சிகளைப் போல எதிர்மறை உணர்ச்சிகளும் நமக்கு முக்கியமானவையே.  பிறந்த குழந்தை அழுகை என்னும் எதிர்மறை உணர்ச்சியின் வாயிலாகவே தன் தாயின் கவனத்தை ஈர்த்து உணவைப் பெறுகிறது.  அழாத குழந்தையை கவனிப்பாரில்லை.  தனியவர் ஒருவர் உயிர்வாழ எதிர்மறை உணர்ச்சிகளும் உதவி செய்கின்றன.  எதிர்மறை உணர்ச்சிகள் இல்லாமல் வாழ்வது சாத்தியமாகாது என்றாலும் பலர் கட்டுக்கடங்காத அளவுக்கு எதிர்மறை உணர்ச்சிகளை வெளிப்படுத்தி வாழ்க்கையில் கடும் துன்பத்திற்கு ஆளாகின்றனர்.  மேயர்-சலோவி என்னும் உளவியல் அறிஞர்கள் எல்லா உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் போது பின்வரும் கேள்விகளை மனதிற்குள் கேட்டுவிட்டு பின் வெளிப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். 

  • யாரிடம் உணர்ச்சியை வெளிக்காட்டுகிறேன்? சரியான நபரிடம் தானா?
  • எங்கே உணர்ச்சியை வெளிக்காட்டுகிறேன்? சரியான இடம் தானா?
  • எப்போது உணர்ச்சியை வெளிக்காட்டுகிறேன்? சரியான நேரம் தானா?
  • எப்படி உணர்ச்சியை வெளிக்காட்டுகிறேன்? சரியான முறைதானா?
  • எவ்வளவு உணர்ச்சியை வெளிக்காட்டுகிறேன்? சரியான அளவில்தானா?
  • எப்போது நிறுத்த வேண்டும்? சரியான நேரத்தில் என் உணர்ச்சி வெளிப்பாட்டினை நிறுத்திக் கொள்கிறேனா?
இக்கேள்விகளுக்கு விடையளிக்கும் விதத்தில் ஒருவரின் உணர்ச்சி வெளிப்பாடு இருக்குமாயின் அது எவ்வகை உணர்ச்சியாயிருப்பினும் அவருக்கு கெடுதல் எதுவுமில்லை. மேலும் தனியவரின் கட்டுப்பாட்டில் அனைத்து உணர்ச்சிகளும் இருக்கும்.  இவ்வாறில்லாமல் பலர் கட்டுக்கடங்காமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவர்.  அவ்வுணர்ச்சிகள் நேர்மறையானவையாக இருக்கும் போது தீங்கில்லை.  ஆனால் வெளிப்படுத்தப்படும் உணர்ச்சிகள் எதிர்மறையாக இருக்கும் போது கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தி இன்னல்களைத் தோற்றுவிக்கும்.  மேற்காண் குறளில் குறிப்பிட்டுள்ள பொறாமை, ஆசை, சினம் மற்றும் கடுஞ்சொல் ஆகியவற்றை உணர்ச்சி மேலாண்மைத் திறனோடு வெளிப்படுத்துவதே ஒருவருக்கு நன்மை பயக்கும்.  

0 comments:

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP