உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Thursday, February 9, 2012

குழந்தைகளுக்கு ஏற்படும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி?

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். நல்ல ஆரோக்கியமான உடலே நல்வாழ்வுக்கும் மகிழ்ச்சிக்கும் அடிப்படை ஆகும். குழந்தைகள் விசயத்தில் இது இரண்டு விதத்தில் மிகவும் முக்கியமானது. முதலாவது குழந்தைகளின் ஆரோக்கியம் பெற்றோர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கிறது. இரண்டாவது உடல்நலக் குறைபாட்டினால் ஏற்படும் வலி போன்ற அசௌகரியங்களை குழந்தைகளால் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால் கூடுமானவரை குழந்தைகளின் உடல்நலம் கெடாமல் பார்த்த்துக் கொள்வது பெற்றோரின் கடமை.

பிறந்த குழந்தைகள், முதல் இரண்டு வாரத்தில் தாயின் கருப்பையிலிருந்து வெளியே வந்தவுடன் வெளிவுலகுக்கு ஏற்றவாறு நான்கு முக்கிய திறன்களை கற்றுக் கொள்ள வேண்டும். பாலை உறிஞ்சிக் குடித்தல், வெளி உலக சீதோஷ்ண நிலைக்குப் பொருந்திப் போதல், சுவாசிக்கக் கற்றுக் கொள்ளுதல், மலம் சிறுநீர் போன்றவற்றை வெளியேற்றக் கற்றுக் கொள்ளுதல் ஆகியவை அத்திறன்கள் ஆகும். இவற்றில் எதுவொன்றில் திறன் குறைந்தாலும் குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். அதனால் முதல் இரண்டு வாரங்களுக்கு குழந்தையை பகலிரவு பாராமல் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். ஏதேனும் பிரச்சனை என்றால் உடனே மருத்துவமனைக்கு சென்று விட வேண்டும். அதுவே மிகவும் பாதுகாப்பானது. இந்த காலகட்டத்தில் கூடுமானவரை மருத்துவமனை அருகில் இருக்கின்ற இடங்களில் தங்கியிருப்பது நல்லது. மருத்துவமனை தங்கியிருக்கும் இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு மருத்துவமனை இல்லாத இடத்திலும், மருத்துவமனை நீண்ட தொலைவு சென்றால் தான் உண்டு என்ற சூழ்நிலை இருக்கும் இடத்திலும் தங்கி இருப்பதை தவிர்ப்பது அவசியம்.

இரண்டு வாரம் முதல் இரண்டு வயது வரை குழந்தைகளின் வளர்ச்சிக் காலம். இச்சமயத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை எளிதாக குழந்தைகளுக்கு ஒட்டிக் கொள்ளும். அடிக்கடியும் இவை குழந்தைகளைத் தாக்கலாம். சீதோஷ்ண நிலை, பயணம், தூசி, அசுத்தங்கள், அழுக்குத் துணிமணிகள், சுத்தமற்ற தண்ணீர், குடிக்கும் பால், ஜன்னல் கதவுகளின் மூலம் வீட்டின் உள்ளே நுழையும் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் போன்றவைகளே இந்த வயதில் குழந்தைகளுக்கு நோய்களை உண்டாக்கும் காரணிகள். முடிந்தவரை இவைகளில் கவனம் செலுத்தி நோய் தாக்காதவாறு குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். அதே வேளையில் என்னதான் பாதுக்காப்பாக இருந்தாலும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு சளி பிடிப்பது சாதாரணமானதே. அவ்வப்போது காய்ச்சல் வருவதும் அதுபோன்றது தான். அதுபற்றி கவலைப்பட தேவையில்லை. ஆனால் மருத்துவரிடம் சென்று குழந்தைகளை காண்பித்து வருவது நல்லது. அதே வேளையில் எப்போதும் ஐந்தாறு மருந்துகளை குழந்தைகளுக்குக் கொடுத்துக் கொண்டிருப்பது நல்லதல்ல என்பது என் சொந்த அபிப்பிராயம். ஏனென்றால் பின் விளைவுகள் இல்லாத மருந்து என்று எதுவுமே இல்லை என்பதை எல்லா மருந்தியல் நூல்களும், ஆராய்ச்சிகளும் தெரிவிக்கின்றன. நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சத்து மருந்துகள் கூட சில பின் விளைவுகளை ஏற்படுத்தலாம். அதனால் சத்து மருந்துகளை விடுத்து சத்துணவை அளிப்பதே நல்லது.

இரண்டு வயது முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், இருமல் ஆகிய நோய்கள் வருவது குறைந்து வேறு விதமான் தொல்லைகள் ஆரம்பமாகும். ஓடி விளையாடும் போது கீழே விழுந்து ஏற்படும் காயங்கள், தவறுதலாக எதிர்பாராமல் ஏற்படும் சிறுசிறு விபத்துக்கள், உணவின் நச்சுத் தன்மையினால் ஏற்படும் வயிற்றுப் போக்கு ஆகியவை பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகள். இவைகளைத் தவிர்க்க குழந்தைகள் விளையாடும் போது முடிந்தவரை உடனிருந்து பாதுகாப்பை உறுதி செய்து கொண்டே இருக்க வேண்டும். குழந்தைகள் கீழே விழ வாய்ப்புள்ள இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். கூர்முனை கொண்ட அலமாரி, மேஜை நாற்காலி போன்றவற்றை இடம் மாற்றி வைக்க வேண்டும்.

அளவான, தரமான உணவை மட்டுமே குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். பேராசைப்பட்டு அளவுக்கு அதிகமான உணவை குழந்தைகளுக்கு அளிப்பது அவர்களை அதிக எடையுள்ள குழந்தைகளாக உருவாக்கிவிடும். பிற்காலத்தில் அதுவே பெரிய பிரச்சனையாக மாறலாம். உடல் எடை தாங்க முடியாமல் கால் வளைந்து நடக்குமளவுக்கு ஓர் பையனுக்கு அவன் தாய் உணவளித்து வந்தார் என்றால் அன்னையரின் பேராசையை நீங்கள் புரிந்து கொள்ளலாம். அப்படியெல்லாம் செய்வதை தவிருங்கள்.

ஐந்து வயது முதல் இரண்டு வருடங்கள் பால்பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் முளைக்கும் சமயத்தில் குழந்தைகளால் தேவையான அளவு உணவு உண்ண முடியாது. அச்சமயத்தில் அடிக்கடி பழரசம் போன்ற சத்தான திரவ ஆகாரங்களை கொடுத்து வருதல் வேண்டும். அதற்குப் பின் பன்னிரண்டு வயது வரை பெரிய ஆரோக்கியப் பிரச்சனைகள் தோன்ற வாய்ப்புகளில்லை.

பொதுவாக குழந்தைகள் சீக்கிரமே நோய்த் தாக்குதலுக்குள்ளாவார்கள். அதைப் போன்றே சீக்கிரமே நோயிலிருந்து மீண்டும் விடுவார்கள். நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தை இரண்டும் மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கு நோயுற்று விடும். மருத்துவமனை சென்றவுடன் விளையாடத் தொடங்கி விடும். எனவே குழந்தைகளுக்கு வரும் நோய் பற்றிய விழிப்புணர்வு கொண்டு விட்டால் எதையும் தைரியமாக பெற்றோர்கள் சமாளித்து விடலாம்.

2 comments:

Rathnavel Natarajan February 9, 2012 at 4:05 AM  

நல்ல பதிவு.
நன்றி.

இரவு வானம் February 10, 2012 at 12:39 AM  

Very Usefull Information Sir, Thanks.

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP