குழந்தைகளுக்கு ஏற்படும் அச்சம்
மூன்று வயது குழந்தை ஒன்று தன் பக்கத்து வீட்டில் இருந்த மிகப்பெரிய நாயைக் கண்டு பயந்து கொண்டது. நாய் குறைக்கும் சத்தத்தை கேட்ட குழந்தைக்கு குலை நடுங்கியது. அடுத்த நாள் அக்குழந்தை வெளியே
சென்று விளையாட வில்லை. ஏன் விளையாடவில்லை என்று கேட்ட அம்மாவிடம் தனக்கு வயிற்று வலி என்று கூறிவிட்டது ஆனால் இரவு சாப்பாட்டை மிச்சம் மீதி வைக்காமல் சாப்பிட்டது அக்குழந்தை. அதற்கு அடுத்த நாள் மீண்டும் வெளியே சென்று விளையாடாமல் வீட்டிற்குள்ளேயே விளையாடிக்கொண்டிருந்தான். அவனின் அப்பா வெளியே சென்று விளையாடுமாறு கட்டாயப்படுத்தியவுடன் தன் தந்தையை கட்டிப்பிடித்துக்கொண்டு ஓவென அழ ஆரம்பித்துவிட்டான். பயத்தின் காரணமாக இது போன்ற திடீரென்ற நடத்தை மாற்றங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படலாம். அல்லது ஏற்பட்டிருக்கலாம்.
எல்லா குழந்தைகளிடமும் மன பயம் காணப்படும். குழந்தை எந்த சூழ்நிலையில் வளர்ந்தாலும் பயம் இன்றி வளர வாய்ப்பில்லை. ஒவ்வொரு வயதிலும் குழந்தைகளுக்கு பயத்தை உண்டாக்கும் விசயங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இரண்டு வயது முதல் நான்கு வயதிற்கு உட்பட்ட காலத்தில் குழந்தைகள் நாய்களைக் கண்டும் பேய் பிசாசு என்பவைகளைப் பற்றிய பயமும் கொண்டிருக்கும். அருவருப்பான தோற்றம் கொண்ட மனிதர்களை கண்ட நான்கு வயதிலிருந்து ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயந்து கொள்கின்றனர். ஆறாவது வயதில் உள்ள குழந்தைகள் இருட்டைக் கண்டும், மருத்துவர்களை நினைத்தும், இடியோசைகளை கேட்டும், பேய், பூதம் பற்றிய கற்பனைகளாலும் மிகுந்த பயம் கொள்வர். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் உடலுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டு விடுமோ என்று நினைத்தும், தனக்கு என்னென்ன ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதை எண்ணியும் மனபயம் கொள்வர்.
குழந்தைகளின் பயத்திற்கு பல காரணங்கள் இருக்கலாம். பொதுவாக குழந்தைகள் அனைவருமே கற்பனை சக்தி அதிகம் கொண்டவர்கள்.அடிக்கடி தங்களின் கற்பனை உலகிற்கு சென்று விடுவர். அக்கற்பனை உலகில் உள்ள விசயங்கள் அவர்களை பயமுறுத்த வாய்ப்புண்டு. நன்றாக விளையாடிக்கொண்டிருக்கும் சிறு குழந்தைகள் திடீரென அழுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அவ்வாறு அழ கற்பனை உலக கதாபாத்திரங்களே காரணம். கற்பனை உலகில் உள்ள ஒரு சிங்கம் தன்னை கடித்துவிடுமோ என்றெண்ணி அக்குழந்தை அழலாம். சிறு குழந்தைகளுக்குக் உண்மையையும், நடிப்பையும் பிரித்து அறிந்துகொள்ளும் ஆற்றல் இல்லை. எனவே பெரியோர் நகைச்சுவையாக மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது குழந்தைகளின் மனபயத்திற்கு காரணமாக அமையலாம். ஒரு சில குழந்தைகளின் ஆழ் மனதில் நம்மால் அறிந்து கொள்ள முடியாத மனக்குழப்பம் இருக்கலாம். இவ்வாழ்மன குழப்பம் மனத்தவிப்பினை உருவாக்கி குழந்தைகளை பயம் கொள்ள வைக்கிறது. தொலைக்காட்சியில் வரும் கொடூரமான கதாபாத்திரங்கள், வன்முறைக்காட்சிகள் ஆகியவை குழந்தைகளின் மனதில் ஆழப்பதிந்து நிங்காத மனபயத்தை உண்டாக்கிவிடும்.
குழந்தைகள் வளர வளர அவர்களின் பயங்களும் பல்வேறு வடிவில் தொடர்ந்து கொண்டே இருக்கும். தான் தனிமையில் கைவிடப்பட்டு விடுவோமோ என்ற எண்ணமும் நன்கு வளர்ந்த குழந்தைகளின் மனபயத்திற்கு காரணமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எல்லா வளர்ந்த குழந்தைகளுக்கும் இவ்வுலகில் பயந்து கொள்ள நிறைய விசயங்கள் உண்டு என்ற அறிவு உண்டு.
பழைய அனுப்வங்களும் பயத்தை ஊக்குவிக்கின்றன. நாய்கடிக்கு ஆளான அனுபவம் ஓர் குழந்தைக்கு இருக்குமாயின் கடிக்காத நாயைப் பார்த்தால் கூட அக்குழந்தை பயந்து கொள்ளும். பெரியவரானாலும் இதுபோன்ற பயங்கள் தொடரலாம். சிறுவயதில் தந்தையுடன் மிதிவண்டியில் பின்னால் அமர்ந்து சென்ற குழந்தையின் கால் ஒன்று சக்கரத்தில் சிக்கி இரத்தம் வழிந்தோடியது. அக்குழந்தை பெரியவனாகிய பின்பு இன்றும் கூட மிதிவண்டியில் உட்காரவும் மிதிவண்டி ஓட்டவும் பயம் கொண்டிருப்பதை நான் அறிவேன்.
குழந்தைகள் இதனாலெல்லாம் பயந்து கொள்கிறார்கள் என பட்டியலிட்டு கூறினாலும் ஒரு சில பயங்கள் ஏன் நீண்ட நாட்களுக்கு அவர்களின் மனதில் நிலைத்திருக்கின்றன, ஒரு சில பயங்கள் ஏன் மறைந்து விடுகின்றன என்பதற்கு உளவியல் விளக்கம் ஏதுமில்லை. புரியாத புதிர் போன்ற பயங்களும் குழந்தைகளிடத்தில் உண்டு.
குழந்தைகளின் பயங்களை அதிகப்படுத்துவதில் பெற்றோருக்கு நிறைய பங்கு உண்டு. தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள பெற்றோர் குழந்தைகளை பயமுறுத்துவதில் ஈடுபடுவது சாதாரணமாக நடக்கக்கூடிய விசயம். பூச்சாண்டியை காட்டி பயமுறுத்துவதோடு நில்லாமல் ஆசிரியர்களையும், மருத்துவர்களையும் கூட பயமுறுத்தும் கருவிகளாக மாற்றிவிட்டனர். சிறு குழந்தைகள் பள்ளிக்கு செல்ல பயந்து கொள்வதற்கும், மருத்துவரிடம் செல்லும் போது பயந்து கொள்வதற்கும் இதுவும் ஒரு காரணம். பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளைவிட பயந்தவர்களாக உள்ளனர். இதற்கு பெற்றோரே காரணம். பயந்துகொள்ளும் பெண் குழந்தையை அரவணைத்துக் கொள்வதும், எப்போதும் அக்குழந்தைக்கு துணையாக இருப்பதும் அவர்களின் பயத்தை அதிகரிக்கச் செய்கிறது. பயந்துகொள்ளும் ஆண் குழந்தைகள் கேலிப்பொருளாக்கப்படுவதால் அவர்கள் தங்கள் பயக்களை வெளிக்காட்டாமல் நாளடைவில் தைரியசாலிகளாக மாறிவிடுகின்றனர்.
குழந்தைகளின் மனபயங்கள் வழக்கமான ஒன்று என்பதை உணர்ந்து பெற்றோர் அப்பயங்களுடன் குழந்தைகளை ஏற்று அரவணைதுக்கொள்ள வேண்டும். சாதாரனமான பயங்களை எல்லாம் நோய்போல் கருதிக்கொண்டு சிகிச்சை அளிக்கும் அணுகுமுறையை கொண்டிருக்கக்கூடாது. குழந்தைகள் பயந்துகொள்ளும் சயங்களில் அவர்களை கேலி செய்வதை தவிர்க்க வேண்டும். அதே போல் பயந்து கொள்வதற்கு எவ்வித தண்டனையும் அளிக்கக்கூடாது.
பயம் கொண்ட குழந்தைகள் பயம் உண்டாக்கும் சூழ்நிலையையும் பொருட்களையும் தவிர்க்க முனைவர் அதை பெற்றோர் அனுமதிக்காமல் பயம் கொள்ளும் சூழலுக்கும் பொருட்களுக்கும் குழந்தைகளை பழக்க வேண்டும். சிறிது சிறிதாக இதைச் செய்யலாம். மேலும் பயம் உண்டாக்கும் சூழலில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும், பயம் உண்டாக்கும் பொருட்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதையும் பெற்றோர் குழந்தைகளுக்கு செய்து காட்டலாம். அதைக் காணும் குழந்தைகள் தானும் அவ்வாறே பயமின்றி நடந்து கொள்வார்கள்.
இவ்வாறெல்லாம் தீர்க்க முடியாத பயம் கொண்ட குழந்தைகளை உளவியல் ஆலோசகரிடம் அழைத்துச் செல்லுங்கள். தற்கால உளவியல் ஆலோசகர்கள் குழந்தைகளின் மனபயங்களை போக்குவதற்கென்றே பல உளவியல் நுட்பங்களை வடிவமைத்துள்ளனர். அவைகளைப் பயன்படுத்தி உங்கள் குழந்தையின் மனபயத்தை உளவியல் ஆலோசார் விரைவில் போக்கி விடுவார்.
3 comments:
உங்கள் வலைதளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.
நேரம் கிடைக்கும்போடு
வந்து பாருங்கள்
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_03.html
நல்ல விரிவான அலசல், பயணுள்ள தகவல், பகிர்வுக்கு நன்றி..
குழந்தைகளின் பயம் குறித்த பெற்றோர்களின் பயத்தை போக்குகின்ற பதிவு...நன்றி
Post a Comment