உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Tuesday, December 22, 2009

புத்தக விமர்சனம்

சோமவள்ளியப்பன் அவர்கள் எழுதி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ள புதிய நூல் நெ.1 சேல்ஸ்மேன். நுகர்வோர் உளவியல், சந்தையியல் போன்ற அயல்நாட்டு ஆங்கிலப் புத்தகங்களை படித்துவிட்டு ஜப்பானிலும், அமெரிக்காவிலும் என்ன நடந்தது என்று மொழிபெயர்ப்பு செய்யாமல், தன் சொந்த அனுபவத்தைக் கொண்டே நம் ஊரில் யார் யார் என்னென்ன செய்தார்கள், எப்படி முன்னேறினார்கள் என்ற உள்ளூர் உதாரணங்களோடு வெளிவந்திருக்கும் நூல் இதுவாகும்.

நீங்கள் வாங்க வேண்டாம், இது விற்பனை அல்ல, சும்மா பாருங்கள் என்று சொல்லியவரிடம் வாக்குவம் கிளினரை வாங்கியது, வாங்காத வீட்டு கடனுக்காக 7500 ரூபாய் கொடுத்தது, ரூ 2500 கொடுத்து நட்சத்திர ஓட்டலின் சிறப்பு அங்கத்தினராக மாறியது என தான் ஏமாந்த கதைகளைச் சொல்லி விற்பனையாளர் வேலையைப் பற்றி விளக்கமாக முதல் அத்தியாயத்திலேயே வாசகர்களுக்கு விளக்குகிறார் ஆசிரியர். சந்தை, சந்தையியல், நுகர்வோரியல், யார் நுகர்வோர், யார் வாடிக்கையாளர், நுகர்வோரியல் மற்றும் சந்தையியல் தத்துவங்கள் என ஒரு கல்லூரிப் பாட நூலில் சொல்ல வேண்டிய விஷயங்கள அனைத்தையும் முதல் அத்தியாயத்தில் மிக சுருக்கமாக புரியும்படி எளிமையாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

எனக்குத் தெரிந்து இன்று நாட்டில் யாரையும் வேண்டாம் என்று சொல்லாமல் சேர்த்துக் கொள்வது சேல்ஸ்மேன் வேலைக்கும் வாட்சுமேன் வேலைக்கும் தான். கல்லூரி படிப்பு முடித்த ஏராளமான இளைஞர்கள் திடீரென நவநாகரீக உடை, தோல்பை என சேல்ஸ்மேன்களாக மாறி விலாச அட்டைகளோடு கொஞ்ச நாட்களுக்கு திரிவார்கள். பின்னர் ஒரு மாதம் கழித்துப்பார்த்தால் தாடியோடு வேறு வேலை தேடி வலம் வருவார்கள். இதற்கு காரணம் சேல்ஸ்மேன் வேலையைப் பற்றி எதுவும் தெரியாமல் பையை கையில் எடுப்பதுதான். அவர்களைப் போன்றவர்களுக்கு இரண்டாம் அத்தியாயம் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. தொடர்ந்து கொட்டுகிற மழையோ, உடல் நலக் குறைவோ விற்பனை இலக்குகள் மாறாது என்ற உண்மையில் ஆரம்பித்து சேல்ஸ்மேன் வேலையின் இயல்பை இந்த அத்தியாயத்தில் சுவாரசியமான உதாரணங்களோடு தெரிந்து கொள்ளலாம்.

திட்டமிட்டு விற்பது எப்படி என்று விளக்கும் மூன்றாம் அத்தியாயம் சற்றே விரிவானது. சிறு வயதில் இருந்து கல்கண்டு புத்தகத்தில் லேனா தமிழ்வானன் அவர்களின் ஒரு பக்க கட்டுரையை படித்து வந்த நான் திட்டமிடல் பற்றிய அவரின் கருத்துக்களை ஒருபக்க கட்டுரையிலும் பயணக்கட்டுரையிலும் படித்திருக்கிறேன். ஆசிரியர் லேனா தமிழ்வானனின் இலங்கைப் பயணம் ஒன்றின் திட்டத்தை நேரடியாக பார்த்து அந்த அனுபவத்தோடு மூன்றாம் அத்தியாயத்தை தொடங்கியிருக்கிறார். நாம் அனைவருமே சிறந்த திட்டமிடுபவர்கள்தான். ஏராளமான திட்டங்கள் மனதில் போட்டுவைக்கப்பட்டுள்ளன. ஆனால் எந்த திட்டமாவது நினைத்ததுபோல் நிறைவேறியிருக்கிறதா? இதற்கு காரணம் நம் திட்டங்கள் இதைச் செய்ய வேண்டும், அதை முடிக்க வேண்டும் என்பது போன்ற பொது திட்டங்களாக இருப்பதுதான். இதை இப்படி முடிக்க போகிறேன். அதை அவரிடம் உதவி கேட்டு முடிக்கப் போகிறேன். என்பது போன்ற வழிமுறைகளோடு கூடிய குறிப்பான திட்டங்கள் நம்மால் தீட்டப்படுவதில்லை. அத்தகைய குறிப்பான திட்டங்களை தீட்ட வழிமுறைகளை பிண்ணிணைப்பு படிவங்களோடு மூன்றாம் அத்தியாயம் விளக்குகிறது. டேட்டாபேஸ் பற்றிய விளக்கங்கள் மூன்றாம் அத்தியாயத்தின் சிறப்பு. படிக்கும் வாசகர்கள் அனைவரையும் இவ்விளக்கங்கள் கவரும் என்பதில் ஐயமில்லை.

இந்த புத்தகத்தை நான் என் மேசை மீது வைத்திருந்த போது எங்கள் துறை பேராசிரியர் எடுத்துப் படித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் படித்து விட்டு புத்தகத்தை மேசை மீது வைத்து விட்டு சென்று விட்டார். அடுத்த நாள் என்னை பார்த்தவர் “நேற்று ஓர் புத்தகம் இங்கே வைத்திருந்தீர்களே? அந்தப் புத்தகம் எங்கே? படித்து விட்டு பின் கொடுக்கட்டுமா” என என்னைக் கேட்டார். அவர் தன் பாடநூல்களைத் தவிர பிற நூல்களை அதிகம் படிக்கமாட்டார். அவரைப் போன்றவர்களையே இந்த நூல் கவர்ந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் முதல் மூன்று அத்தியாயங்களின் ஈர்ப்பே ஆகும். மூன்று அத்தியாயங்களுமே சுவாரசியமான உதாரணங்கள், இயல்பான விளக்கங்கள், நடைமுறை பேச்சு வழக்கிலான தலைப்புகள் என எல்லோரையும் புத்தகத்தை படிக்கத் தூண்டுவது இந்த மூன்று அத்தியாயங்களே ஆகும்.

ஒரு சேல்ஸ்மேன் எப்படி தோற்றமளிக்க வேண்டும், எப்படி உடையனிய வேண்டும், என்னென்ன கையில் வைத்திருக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து நுகர்வோரை அனுகுவது, அவர்களோடு உரையாடுவது, விற்பனை செய்யும் விதம் என சேல்ஸ்மேன் பற்றிய அனைத்து தொழில்நுட்பங்களையும் நான்காம் அத்தியாயத்தில் ஆசிரியர் விளக்கியிருக்கிறார். வாங்க வாய்ப்புள்ள நுகர்வோரை வாவாக்கள் என பெயரிட்டுள்ளது ஆசிரியரின் ஒரிஜினாலிடி என்னும் தன்மையைக் காட்டுகிறது. ஆங்கில சொல்லை அப்படியே மொழிபெயர்த்து வாசகர்களுக்கு புரியாத சொல்லொன்றை புகுத்தாமல் எளிமையாக பெயர் ஒன்றை கண்டுபிடித்திருப்பது நன்று. இப்புத்தகம் மொழிபெயர்ப்பு புத்தகம் போலும், பாடநூல் போல அலுப்பு தட்டாமல் இருக்க இதுவே காரணம் என்று கொள்ளலாம்.

எதிர்கொள்ளும் மனப்பாங்கே எதையும் நிர்ணயிக்கிறது எல்லா நுட்பமும் தெரிந்த சேல்ஸ்மேனும் சரியான மனப்பாங்கு கொண்டிருக்காவிட்டால் தோல்வியே காண்பார். எனவே நேர்மறையான மன்ப்பாங்கு கொண்டிருப்பது அவசியம். அதற்கான விளக்கங்கள், யுத்திகள் ஐந்தாம் அத்தியாயத்திலும், விற்பனையாளரின் பண்புகளை ஆறாம் அத்தியாயத்திலும் ஆசிரியர் நன்கு விளக்கியிருக்கிறார். பின்னினைப்பு படிவங்கள், படித்ததை நடைமுறைப்படுத்த உதவும் செயல்முறை கருவிகள்.

மாணவர்களுக்கு நுகர்வோர் உளவியல் பாடம் கற்பித்து முடித்தவுடன் பருவ இறுதியில் அனைவரையும் 50 முதல் 100 பேனாக்களை வாங்கி விற்று வர பணிப்பேன். நுகர்வோர் பற்றி அறிந்து கொள்ளவும் தன் விற்பனைத் திறமையை தெரிந்து கொள்ளவும் இப்பயற்சி உதவும். இதில் நான் கண்டது யாதெனில் வகுப்பில் சுவாரசியமாக பாடம் கேட்ட, அதிக மதிப்பெண் பெறும் மாணவ மாணவியர் யாரும் பேனாக்களை விற்க முடியாமல் அவதிபடுகிறார்கள் என்பதே அதற்கு காரணம் ‘வெட்கம்’ என்னும் தடைக்கல்லும் ‘சேல்ஸ்மேன்ஸிப்’ என்ற பண்பும் இல்லாததே ஆகும். நம் கருத்துக்களை சொல்வது, நம் அன்பை வெளிப்படுத்துவது, நாம் சொல்லும் வேலையை பிறரை செய்யவைப்பது, என வாழ்வின் பல விஷ்யங்களில் மேற்கூறிய வெட்கமும், சேல்ஸ்மேன்ஸிப் பண்பும் அங்கம் வகிக்கின்றன. இவ்விரு பண்புகளின் குறைபாடு தோல்வியில் முடியலாம். இப்பண்புகளை வளர்த்துக் கொள்வது வளர்ச்சிக்கு உத்திரவாதம். என்னுடைய நண்பர் பெண் பேராசிரியையை இதற்காகக்கூட இப்புத்தகம் ஈர்த்திருக்கலாம்! படித்தால் உங்களையும் ஈர்க்கும் இப்புத்தகத்தை வாங்க இங்கே செல்லுங்கள்: http://nhm.in/shop/978-81-8493-165-5.html

0 comments:

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP