உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Thursday, May 14, 2009

புத்தக விமர்சனம்

கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ரிச்சர்ட் டெம்ப்ளர் எழுதிய நிர்வாக விதிகள் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு நிர்வாகிகளுக்கான புத்தகம் மட்டுமல்ல சாதாரணமான, எதையாவது சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் கொண்ட மனிதர்களுக்கும் ஊக்கமூட்டும் நூல்.

ஒரு விளம்பரத்தில் ஒரு பெண் நோட்டீஸ்களை நிறைய கையில் வைத்துக் கொண்டு, அவ்வளியே போவோர், வருவோருக்கெல்லாம் கொடுத்துக் கொண்டிருப்பாள். நோட்டீஸை வாங்கும் அனைவருமே அதை பிரித்துக் கூட பார்க்க மாட்டார்கள். போகிற போக்கில் கசக்கி தூர எறிந்து விட்டு சென்று விடுவார்கள். இதைக் காணும் அப்பெண் மிகுந்த மனக் கவலையுடன் செய்வதறியாது நின்று கொண்டிருப்பாள். அப்போது அவ்வழியே வரும் ஒரு இளைஞன் அப்பெண்ணின் காதருகே சென்று ஓர் இரகசியத்தை கூறி விட்டுச் செல்வான். அடுத்ததாக ஒருவர் வரும்போது அப்பெண் ஒரு நோட்டீஸை எடுத்து நன்கு கசக்கி வருபவரின் கைகளில் கொடுப்பாள். வாங்கியவரோ அதிர்ச்சிக்குள்ளாகி விடுவார். ஏன் இந்தப் பெண் புதிய நோட்டீஸை கசக்கிக் கொடுக்கிறாரள்? என்ற கேள்வி அவரைத் துளைக்க நோட்டீஸை பிரித்து படிக்க ஆரம்பிப்பார். இதுதான் மனித இயல்பு. புதிதாக கொடுத்தால் கசக்கி வீசுவார்கள், கசக்கிக் கொடுத்தால் பிரித்துப் பார்ப்பார்கள். ரிச்சர்ட் பெம்ளரும் இதெ உத்தியைத் தான் பயன்படுத்துகிறார். என் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள் என்று கெஞ்சும் ஆசிரியர்களை விட்டு விலகி நின்று வித்தியாசமாக நான் கூறுவது போல் இல்லாவிட்டால் “வேறு புத்தகத்தை படிக்கச் செல்லுங்கள்” என்று வாசகர்களை மறைமுகமாக படிக்கத் தூண்டுகிறார். மேலும் தன் புத்தகம் எல்லோரிடமும் சென்றடைய எண்ணி “என் புத்தகத்தை படித்ததை இரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள், வேறு யாரையும் இதைப் பார்க்க அனுமதிக்காதீர்கள்” என்று சொல்லி புத்தகத்தை முடிக்கிறார்.

100 விதிகளைக் கொண்ட புத்தகத்தை இரண்டாக பிரித்துக் கொள்ளலாம். 34 விதிகள் பிறரை நிர்வகித்தல் பற்றியவை, 66 விதிகள் தன்னை ஒருவர் தரமாக்கிக் கொள்ள சொல்லப்பட்டிருப்பவை.

பிறரை நிர்வகித்தல் பகுதியில் நிறுவப்பட்டுள்ள விதிகள் பல நவீன மேலாண்மைக் கோட்பாடுகளை கடந்து வலுவான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியவை. கூட்ட நேரத்தை 3 மணி என்று போடாமல் 3.45 என்று அறிவிப்பவரே புதுமை விரும்பி, அவரே வெற்றியாளர், வித்தியாசமானவர் என்று கூறும் விதி 4 நிர்வாகத்தில் புதுமை புகுத்துதலின் அவசியத்தை வலியுறுத்துகிறது. நாணயத்தோடு பேச வைக்கும் நுட்பம் அணைவரையும் கவரக் கூடியது.

படுக்கையில் சிறுநீர் போகும் குழந்தையை அடித்துத் திருத்த முடியுமா? அதற்கு பதிலாக இன்று இரவு நீ படுக்க்கையில் சிறுநீர் கழிக்காமல் இருந்தால் நாளை காலை உனக்கு ஓர் மிட்டாய் கொடுப்பேன் என்று கூறிப்பாருங்கள் குழந்தை படுக்கையில் சிறுநீர் போய் விட்டு, “நான் படுக்கையில் சிறுநீர் கழிக்கக் கூடாது என்றுதான் இருந்தேன் ஆனால் அவசரத்தில் போய்விட்டேன், நாளை முயற்சி செய்கிறேன்” என்று அடுத்த நாள் காலையில் எழுந்ததும் உங்களிடம் வந்து கூறும். நல்லது, நீ முயன்றதே பெரிய விஷயம், இந்தா ஒரு மிட்டாய், நீ விரைவிலேயே படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்திக் கொள்வாய் என்று எனக்கு மிகுந்த நம்பிக்கையிருக்கிறது என்று கூறி மிட்டாய் கொடுத்துப்பாருங்கள். விரைவிலேயே அக்குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்திக் கொள்ளும். சீனப் பழமொழியோடு ஆரம்பிக்கும் விதி 10 (அவர்கள் தவறு செய்யட்டும்) நமக்கு உணர்த்துவது இதைத்தான்.

திருட்டுப் போகாமல் பொருட்களை ஒருவர் பத்திரமாக காப்பாற்றிக் கொள்கிறார். அதில் அவர் வல்லவர் ஏனெனில் அவர் திருட்டுக் கொடுத்தவர். பலரும் பாராட்டும் விதத்தில் துணி மணிகளை வாங்குவதில் ஒருவர் வல்லவர் ஏனெனில் அவர் அசிங்கமான சட்டைகள் பலவற்றை வாங்கி முடித்தவர். இவர்களைப் போல நல்ல நிர்வாகியாக மாற ஆட்டைத் தொழுவத்திலும் மாட்டை கொட்டிலிலும் கட்டுவதை போன்ற தவறான முடிவுகள் பலவற்றை இளம்வயதிலேயே எடுங்கள். விரைவிலேயே நீங்கள் முடிவெடுப்பதில் திறமையானவராக மாறி விடுவீர்கள் என்று உணர்த்துகிறது விதி 11.

செவிலியர் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சொல்லித்தரும் முதல் பாடம் மருத்துவமனைக்கு வரும் மனிதர்களை நோயாளிகளாகப் பார்க்காமல் நோயோடு வந்துள்ள ஓர் மனிதர் என்றே காண வேண்டும் என்று தான். அதுவே மனிதநேய அணுகுமுறை. இன்றைய சூழலில் மனிதநேய அணுகு முறையே வலிமை பெற்று வளர்ச்சியடைந்து வருகிறது இதையே

“மலைகளையே அசைக்கும் மாமனிதனாக இருந்தாலும் சரி,
கார் கதவை திறந்து விடும் சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி........
அவரவர்க்கு உரிய மரியாதையை தராவிட்டால் ..........
என விதி 20 எச்சரிக்கிறது.

வாயைத் திறந்து எதையும் சொல்லாமல் மனதுக்குள்ளேயே நினைத்துக் கொண்டிருந்தால் வேலை நடக்காது. அழுகின்ற பிள்ளைக்கே பாலூட்டப்படும் என்பதை விதி 30ன் சாராம்சத்தில்

“அவர்களிடத்தில் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை ஆரம்பத்திலேயே அறியச் செய்துவிடுவது நல்லது” என்று ஆசிரியர் வலியுறுத்துகிறார்.

மொத்தத்தில் 34 விதிகளையும் கடைபிடித்தோமானால் பிறரை நிர்வாகம் செய்வது 43% மேம்படும் என்பது என் கணிப்பு.

பகுதி 2 நம்மை மேபடுத்திக் கொள்ள உண்டாக்கப்பட்ட 66 விதிகளை கொண்டுள்ளது. இந்தப் பகுதியைப் படித்தபோது இரண்டு உளவியல் விஷயங்களை ஆசிரியர் எப்படி விதிகளாக மாற்றிக் கொடுத்துள்ளார் என்பது நினைவுக்கு வருகிறது. ஒன்று வேலை என்னும் போதைக்கு அடிமையாதல். சிலர் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டால் பின்னர் எப்போதும் போதை இல்லாமல் இருக்க மாட்டார்கள். அதைப்போல சிலர் வேலைக்கு அடிமையாகிவிடுவர். அவர்கள் எப்போது வேலை வேலை என்றே சுற்றிக் கொண்டு இருப்பார்கள். இரண்டு நாள் சேர்ந்தாற்போல் விடுமுறை வந்தால் அதை அவர்களால் கழிக்க முடியாது. இவ்வாறு இருப்பது ஓர் ஆளுமைக் குறைபாடே. இதையே விதி 38 விளக்குகிறது (வேலை உங்களை விழுங்கி விட வேண்டாம்.)

தங்கப்பதக்கம் சிவாஜி கனேசன் முதல் இன்று நேரமில்லாமல் உழைக்கும் பல காவல் துறை அதிகாரிகள் வரை பலருடைய குடும்பத்திலும் குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டுவர முடியவில்லையே என்ற கவலை மேகம் கண்ணீர் மழையை பொழிந்து கொண்டிருக்கிறது. ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியுமா? எப்போதும் வேலை – வேலை என்று தொழிலையே கவனத்தில் கொண்டிருப்பதால்தான். இந்தப் பிரச்சனை சரிசெய்ய தற்போது பணி-வாழ்வு சமநிலை என்ற கோட்பாடு உலகம் முழுவது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நேரமெ இன்றி உழைத்தால் முன்னேறி விடலாம் என்று இருப்பவர்களை பணி-வாழ்வு சமநிலை என்ற தத்துவத்தை முன்னிறுத்தி “என் இனிய நண்பர்களே, வீட்டுக்குச் செல்லுங்கள்” என்று விடைகொடிக்கிறார் ரிச்சர்ட் டெம்ளர் (விதி 71).

தொழில்நுட்ப கல்வி கற்று வெளிவரும் மாணவருக்கோ அல்லது மேலாண்மை கல்வி கற்று வரும் மாணவருக்கோ அவர் கற்ற கல்வியை அடிப்படையாக வைத்து தற்போது யாரும் வேலை அளிப்பதில்லை. நிகழ்காலத்தில் Soft skills எனப்படும் மென் திறன்களை சோதித்தே ஒருவருக்கு வேலை கொடுக்கிறார்கள் புதுவிதசிந்தனை, விரிந்த சிந்தனை, மன அழுத்த மேலாண்மை குறைவாக செயல்படும் நிர்வாகம் என மென் திறன்களை நிர்வாக விதிகளாக மாற்றி வாசகர்களின் மனதில் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.

ஒரு புத்தம் படிப்பது நீண்ட பயணம் செய்வதை போன்றது. வழியில் திடீரென ஓர் பசுமையான கிராமத்தை காண்போம். பின்னர் உயிர் உள்ளவரை எந்நாளும் அந்நினைவு நம் மனதை விட்டு அகலாது. ரிச்சர்ட் டெம்பலரோடு பயணம் செய்த போது நானும் ஓர் மனதை விட்டு அகலாத பசுமையான கிராமத்தைக் கண்டேன். அது

“என் அம்மா என்னிடம் சொன்னார்” நீ ஓர் படை வீரனானால் பின்பு அதற்குத் தளபதியாகவும் ஆவாய், நீ ஓர் பாதிரியானால் போப்பாக நிறைவு பெறுவாய், பதிலாக நான் ஓவியனாகி, பிக்காஸோவாக நிறைவு பெற்றேன்” என்ற பிகாஸோ சொன்ன வாக்கியங்கள் தான்.

இப்புத்தகம் நீங்களும் சுகமாக பயணம் செய்வதற்கேற்ற நல்ல பாதை. புறப்படுங்கள்.

இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இங்கே செல்லுங்கள்: http://nhm.in/shop/978-81-317-2559-7.html

1 comments:

Sai May 21, 2009 at 2:37 AM  

உளவியல்ரீதியாக விமர்சனம் செய்திருப்பது நன்றாக உள்ளது.

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP