உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Sunday, February 22, 2009

புத்தக விமர்சனம்

அமெரிக்காவின் முகத்தையும் முகவரியையும் மாற்றப் புறப்பட்டிருக்கும் ஒரு புயலின் சாதனைச் சரித்திரம் என்ற முன் அட்டை அறிமுகத்தோடு வெளிவந்துள்ள பராக் ஒபாமாவைப் பற்றிய ஆர்.முத்துக்குமார் எழுதிய புத்தகம் கிழக்கு பதிப்பகத்தின் சிறந்த வெளியீடு.

இயல்பாக ஜன்னல் வழியே அவ்வப்போது வெளி உலகை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண்ணிடம், ‘இனிமேல் ஜன்னல் அருகே நின்று வெளியே பார்க்காதே’ என்று தாய் சொன்னால் என்ன நடக்கும்? எதிர்த்த வீட்டுக்கு ஒரு குடும்பம் குடிவந்துள்ளது. அக்குடும்பத்தில் வாலிபன் ஒருவனும் உள்ளான். எனவே அடிக்கடி ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தால் காதல்-கீதல் என்று எதாவது விபரீதத்தில் மகள் மாட்டிக் கொள்ளக்கூடாது என்ற எச்சரிக்கையிலேயே அம்மா அவ்வாறு சொல்லியிருப்பாள். பேசாமல் விட்டிருந்தால் பிரச்சனை இருந்திருக்காது. எச்சரிக்கை விடுத்தது முதல் மகள் மனதில் ‘ஏன் அம்மா அவ்வாறு சொன்னாள்? எதிர்த்த வீட்டில் என்ன இருக்கிறது? யார் வந்திருப்பார்கள்?’ என்ற கேள்விகள் ஏற்பட்டு ஜன்னல் வழியே எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் பன்மடங்கு அதிகமாகிவிடும். அம்மா இல்லாதபோது அடிக்கடி ஜன்னல் வழியே பெண் பார்த்துக் கொண்டிருப்பாள். ஆம்! அடக்கப் பட்டவைகளுக்கு ஆர்வம் அதிகம். தனியொருவரின் உணர்வுகளுக்கு மட்டுமல்ல, ஓர் இனத்தின் எழுச்சிக்கும் இது பொருந்தும். ஒபாமா என்ற ஒற்றை மனிதரின் வளர்ச்சி, அடக்கப்பட்ட கறுப்பினத்தின் எழுச்சி என்பதை புத்தகத்தில் ஆசிரியர் ஆப்ரிக்க அடிமைகளின் சுருக்கமான வரலாற்றின் மூலம் முன் வைத்திருக்கிறார்.

தாயின் காதலும், தந்தையின் கணக்கும் விவாகரத்தில் முடிந்தாலும் இளவயது ஒபாமா பரந்த உலகை திறந்த ஜன்னல் வழியே பார்க்க இரு தேசத்தை சேர்ந்த பெற்றோர்கள் தங்களையும் அறியாமல் அடித்தளம் அமைத்துக் விட்டிருக்கிறார்கள் என்பதை இளவயது ஒபாமாவின் ஆரம்ப அத்தியாயங்களில் புரிந்து கொள்ள முடிகிறது.

“கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்த ஒபாமா நூல் நிலையத்தின் மீது கவனம் கொண்டார். குண்டு குண்டு புத்தகங்களாக தேடித் தேடி படித்தார். பல நாயகர்கள் அந்த நூல் நிலையத்தில் தான் ஒபாமாவுக்கு அறிமுகம் ஆனார்கள். அரசியல், வாழ்க்கை என்ற அளவோடு தன்னுடைய வாசிப்பை ஒபாமா நிறுத்திக் கொள்ளவில்லை. இலக்கியம் படித்தார், பொருளாதாரம் படித்தார் வரலாற்றையும் விட்டு வைக்கவில்லை.”

என்று ஓர் அத்தியாயத்தில் சொல்லும் ஆசிரியர்,

“நண்பரே வணக்கம். என்னுடைய பெயர் பராக் ஒபாமா” என்று சகமனிதனின் தோளில் கைபோட்டு மனித உறவுகளை மேம்படுத்திக் கொண்ட ஒபாமாவின் யதார்த்த நடத்தையையும் விளக்கி

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம
யாஉள முன்நிற் பவை

என ஒபாமா பின்னாளில் பெருவெற்றி பெறப்போகிறவர் என்பதை முன் அத்தியாயங்களிலேயே விளக்கி விடுகிறார்.

புத்தகம் ஒபாமாவை உணர்ச்சிகள் நிரம்பிய ஓர் சாதாரண இளைஞனாக நம்முன்னே நிறுத்த தவறவில்லை. அம்மா அருகில் இருந்தால் அதீத உற்சாகம், போதைப் பழக்கம், புகைப்பழக்கம், மரியுவானாவும் மதுவும். மிஷெல் சொன்னதுகூட காதில் விழாமல் காதலில் விழுவது என இளவயது உணர்வுகளோடு ஒபாமா நமக்கு புத்தகத்தில் அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார்.

1992-ல் நான் டெமாக்ரடிக் கட்சிக்காரன் என்று பகிரங்கமாக வெளிப்படுத்தியதில் இருந்து புயல் வேகம் எடுக்கிறது ஒபாமாவின் அரசியல் வாழ்க்கை. வேகமெடுத்த வண்டி நவம்பர் 4, 2008-ல் வெள்ளை மாளிகையை அடையும் வரை ஓயாமல் பயணம் செய்திருக்கிறது.

சிகாகோவின் தெற்குப்பகுதியான சவுத்சயிட்டில் தன் சமூக பணியை துவக்கிய ஒபாமா, மாற்றத்தை அங்கிருந்துதான் ஆரம்பித்திருக்கிறார். ஆரம்பத்திலிருந்து அரசியல் வாழ்க்கைக்கு பொருந்திப் போவதை போன்றே ஒபாமாவுக்கு பணிகள் அமைந்தது ஆச்சரியம். நியூயார்க் சிடி காலேஜில் மாணவர்களை போராட தயார்படுத்துவது, ஹார்வர்ட் லா ரிவ்யூ பத்திரிக்கையில் ஓர் ஆசிரியராக இருந்தது என ஒபாமாவின் ஆரம்பகால வேலைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஆசிரியர் பட்டியலிட்டிருக்கிறார். இளைஞர்கள் தங்கள் நீண்டகால லட்சியங்களை ஒட்டி தங்கள் ஆரம்பகால தொழில்களை அமைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை நன்கு உணர்த்த இது உதவுகிறது.

எல்லோராலும் அரசியலில் எளிதாக பிரகாசிக்க முடியாது. கொஞ்சம் ஏமாந்தாலும் சக அரசியல்வாதிகள் குழிதோண்டி புதைத்து விடுவார்கள். அதனால் தான் அரசியல் களத்தில் ஒருவர் முன்னேற வேண்டுமானால் அதிகாரத்தின் மீது ஆசை கொண்டவராக, பிறரை எப்போதும் தன்கீழே வைத்திருப்பவராக, தேவைப்பட்டால் எதிராளியை ஒன்றுமில்லாதவராக ஆக்கக்கூடிய சக்தி கொண்டிருக்க வேண்டும் என்று மாக்கியவெல்லியின் தத்துவம் கூறுகிறது. ஒபாமாவுக்கு எதிராக உறுமிய புலி ஆலிஸ் பால்மரை அடக்கி இல்லியனாய்ஸ் மாநிலத்தின் 13-வது மாவட்டத்தின் செனட்டாக உயர்ந்த ஒபாமாவுக்கு மேற்கண்ட குணங்கள் மிகவும் மென்மையாக அமைந்திருந்ததை நிகழ்வுகளோடு விளக்கியிருக்கிறார் நூலாசிரியர்.

ஒபாமாவின் வளர்ச்சியை விளக்கிக் கொண்டே போகிற போக்கில், ஏற்றிவிட்ட ஏணியாக இருந்த டேவிட் ஆக்ஸெல்ராட், சூசன் ரைஸ், காரென் கார்ன்ப்ளு, அந்தோணி லேக், சமாந்தா பவர், பீட்ரெளஸ், டேவிட் ப்ளஃப், பென்னி பிரிட்ஸ்கர், ராபர்ட் கிப்ஸ் போன்ற அரவணைத்த தோழர்களையும், ஆலோசகர்களையும் குறிப்பிட ஆசிரியர் தவறவில்லை. ஓர் மனிதனின் வெற்றி தனியொருவரின் முயற்சியால் வருவதல்ல, கூட்டுமுயற்சியே என்பதையே இது வெளிக்காட்டுகிறது. தன் சகாக்களுடன் இணைந்து பணியாற்றிய ஒபாமா தனக்கு கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் சிந்தாமல் சிதறாமல் பயன்படுத்திக் கொள்கிறார். 70% வாக்குகள் பெற்று இல்லியனாய்ஸ் செனட்டராக உயர்ந்த ஒபாமா, அன்று தொடங்கி 136 மசோதாக்களை கொண்டுவந்ததை குறிப்பிட்டு ஒபாமா வாய்ப்புக்காக காத்திருந்தவர் அல்ல, வாய்ப்பை உருவாக்கிக் கொண்ட வெற்றியாளர் என்பதை விளக்குகிறார்.

இறுதிப் போர் அதிபர் தேர்தல். இதை விளக்கும் ஒரு சில இறுதி அத்தியாயங்களில் நூலாசிரியர் முத்துக்குமார் வாசகர்களை ஒபாமாவோடே பயணம் செய்ய வைக்கிறார். விறுவிறுப்புடன் பயணம் செய்யும் வாசகர்களுக்கு தேர்தல் களத்தை விட ஒபாமாவின்-ஓர் வெற்றியாளனின்-ஆளுமையை அதிகம் அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். ஓர் உளவியல் ஆய்வு எல்லா முன்னாள் அமெரிக்க அதிபர்களும் அளவான நுண்ணறிவோடு அதிகமான உணர்ச்சியறிவை கொண்டவர்கள் என்று கண்டறிந்துள்ளது. கல்லூரிகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர் வேலை கிடைக்காமல் சுற்றிக்கொண்டு இருப்பார். ஆனால் குறைவான மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவரோ சுய தொழில் தொடங்கி தொழிலதிபராக உயர்ந்திருப்பார். அதற்குக் காரணம் நூலறிவை விட உணர்ச்சியறிவு அதிகமாக இருப்பதுதான்.

நம்முடைய உணர்ச்சிகளை எப்போது, எங்கு, எப்படி, யாரிடம், எந்த அளவுக்கு வெளிப்படுத்த வேண்டும்?, எப்போது நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை தெரிந்த மனிதனே உணர்ச்சியறிவு கொண்டவர். ஒபாமாவுக்கு இத்தகைய உணர்ச்சியறிவு இருப்பதை

நிதானம் தேவை,
துளியும் ஆயாசப்பட வில்லை ஒபாமா,
தெளிவாக இருந்தார் ஒபாமா,
துளியும் அலட்டிக் கொள்ளவில்லை ஒபாமா,
வலியச் சென்று பேசுவது ஒபாமாவுக்கு பிடித்தமான விஷயம்,

என்ற வரிகளை ஆசிரியர் பயன்படுத்தி ஒபாமாவின் தேர்தல் பிரச்சாரத்தை விளக்கும் போது விளங்கிக் கொள்ள முடிகிறது.

“ஒபாமா, நகத்தை கடித்துக் கொண்டு இருக்கவில்லை, கடுகடுப்பை வெளிப்படுத்தவில்லை. நிதானமாக இருந்தார். நடையில், பேச்சில், சிரிப்பில் எல்லாவற்றிலும். மெல்ல மெல்ல தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கின. ஒபாமாவின் வாயில் புன்சிரிப்பு எட்டிப்பார்க்க தொடங்கியது” - ஒபாமாவின் உணர்ச்சியறிவை படம் போட்டு காட்டும் சரியான பத்தி.

இவை மட்டுமல்லாமல் ஒபாமாவின் பேச்சாற்றல், பிறருடன் பழகும் திறன், கூட்டத்தினரை வசியப்படுத்தும் மேடை ஆளுமை, ஓயாத உழைப்பு என அவரின் ஆளுமைக் கூறுகளையும் ஆசிரியர் சரியாக சுட்டிக் காட்டி இருக்கிறார்.

ஒபாமாவின் வெற்றியை அலசும் கடைசிப் பக்கங்கள், வெற்றியாளராக வரத்துடிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் வழிகாட்டி. பயன்படுத்தப்படாமல் இருப்பவற்றை மதிப்பு மிக்கதாக மாற்றும் மதிநுட்பம், பிறரின் அறிவை மட்டுமே தாக்கம் செய்யாமல் வாழ்க்கையை தீர்மாணிக்கும் அளவுக்கு தனி மனிதர்களிடம் கொள்ள வேண்டிய ஆர்வம், சமூக சிக்கல்களை சந்திகும்போது எதிர்கொள்ள வேண்டிய அவமானங்கள், சவால்களையும் சிக்கல்களையும், தடைகளையும் அச்சமின்றி முடிக்கும் துணிவு என வெற்றியின் மனிதக் கூறுகள் அணைத்தையும் கடைசிப் பக்கங்கள் எடுத்துரைக்கின்றன.

இந்த நூல் ஓபாமாவின் வாழ்க்கையையும், அவர் பெற்ற வெற்றிகளையும் மட்டுமே விளக்கும் நூல் எனக் கருதக்கூடாது. எங்கே எது நடந்தால் நமக்கென்ன? நாளைய சோற்றுக்கு நாம் எதாவது செய்வோம் என்று இருந்துவிட்ட சாமானியர்களுக்கு கறுப்பின அடிமைகள் பட்ட அவலத்தை விரிவாக சொல்லும் சுருக்கமான அத்தியாயங்கள் கொண்ட நூல் இது எனலாம். அமெரிக்காவில் அடிமை முறை எப்படி தோன்றியது, அடிமைகளின் இயல்பு என்ன, அவர்கள் பட்ட கஷ்டங்கள் என்னென்ன என்பவைகளை உணர்வுப்பூர்வமாக பல இடங்களில் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.

பரஸ்பரம் கைகுலுக்கிக் கொள்ள முடியாது, வெள்ளையர் அருகே அமர்ந்து சாப்பிட முடியாது, வெள்ளையர் ஒருவரை கறுப்பருக்கு அறிமுகப்படுத்தி வைக்க முடியாது, மரியாதையான வார்த்தைகளை கொண்டு கறுப்பரை அழைக்கக் கூடாது என எல்லா இடங்களிலும் தயவு தாட்சண்யமின்றி கறுப்பு வெள்ளைப் படம் ஓடிக் கொண்டிருந்தது என கறுப்பர் பட்ட அவலங்களை பட்டியலிடும் ஆசிரியர் வெள்ளையர்களின் நிறவெறியை தோலுரித்து காண்பிக்கிறார். அன்றாட அவலங்களில் ஆரம்பித்து மார்டின் லூதர் கிங் போராட்டத்திற்கு தலைமையேற்பது வரை மிக சுவாரசியமாக அடிமைகளின் அவலங்களை விளக்கிக் கொண்டே போகிறார்.

கறுப்பு டைரி என்ற தலைப்பில் அடிமைகள் அமெரிக்காவில் வாழ்க்கையை தொடங்கி பட்ட கஷ்டங்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு பின்னிணைப்பாக புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 20, 1619-ம் ஆண்டு இருபது ஆப்ரிக்கர்கள் கப்பல் மூலமாக அமெரிக்காவின் ஜேம்ஸ்டவுன் பகுதிக்கு அடிமைகளாக அழைத்து வரப்படுவதில் ஆரம்பித்து அதன்பின் நடைபெற்ற பல முக்கிய நிகழ்ச்சிகளும், 2008-ல் ஒபாமா அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக தேர்வு செய்யப்படுவது வரை, வருஷக்கிரமமாக தொகுக்கப்பட்டு சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த பகுதியைப் படித்தாலே பல புத்தகங்களை படித்து குறிப்பெடுத்தால் கிடைக்கக் கூடியது போன்ற விவரங்கள் நமக்கு கிடைக்கின்றன.

அமெரிக்க அடிமைகளின் வரலாற்றை ஆபிரகாம் லிங்கனை விட்டு விட்டு சொல்ல முடியாதல்லவா? புத்தக ஆசிரியர் ஆபிரகாம் லிங்கன் அடிமைகளின் துயர்துடைக்க பட்ட கஷ்டங்களையும், இவ்விஷயத்தில் எவ்வளவு தீர்மானமாக இருந்தார் என்பதையும் தெளிவாக கூறுகிறார். “வாருங்கள் பேசித்தீர்துக் கொள்ளலாம் இல்லை, தீர்த்துவிட்டுத்தான் பேச வேண்டும் என்றால் அதற்கும் நான் தயார்” என்ற லிங்கனின் உறுதியான நடவடிக்கைகளை வைத்து அடிமைகள் என்று இனி யாருமில்லை, அனைவரும் இங்கே மனிதர்கள் என்று லிங்கன் அமெரிக்காவை தலை நிமிர வைத்ததை அறியலாம்.

ஒபாமா வரலாற்றை படிக்கும் போதே அமெரிக்காவின் தேர்தல் முறை மற்றும் ஆட்சி அதிகார முறைகளை இப்புத்தகத்தின் மூலம் நன்கு விளங்கிக் கொள்ள முடிகிறது. தேவையான இடங்களில் கதையை தொடர்ந்து சொல்லிக் கொண்டு போகாமல், இடைச்செருகலாக அமெரிக்க அரசியலமைப்பு விஷயங்களை புகுத்தியுள்ள ஆசிரியர், அவற்றை புரியுபடி சொல்லிவிட்டு பின் கதையை தொடர்கிறார்.

அமெரிக்காவின் அதிகார மையங்கள் பற்றி மிகத்தெளிவாக மொத்தமுள்ள மாகாணங்கள், குடியரசுத் தலைவர், மத்திய நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகள், இவ்விரண்டு அவைகளுக்கும் உறுப்பிணர்களை தேர்ந்தெடுக்கும் முறைகள், மாகாணத்தின் ஆளுநர் பதவி, பதவிக் காலங்கள் என அனைத்தும் கூறி விவரிக்கிறார் ஆசிரியர்.

எல்லாவற்றையும் விட வெள்ளை மாளிகையை விவரித்துள்ள விதம் சுவையானது. வெள்ளை மாளிகையின் மொத்த அறைகள், சமையல் கூடம், புல்வெளி என எல்லா இடங்களுக்கும் வாசகர்களை அழைத்துச் செல்கிறார் ஆசிரியர். தொடர்ந்து அமெரிக்க அதிபரை தலைமை பீடாதிபதி என்று நாமம் சூட்டி அவருக்கும் அவர் கீழே உள்ளவர்களுக்குமான ஆட்சி அதிகாரங்களை விளக்கிக் கொண்டே செல்கிறார். இப்பகுதியில் பிரசிடென்ஷியல் இம்யூனிடி என்றால் என்ன? என்பது போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.

புத்தகத்தின் நடுவே திடீரென்று தீபாவளி வருவது போல் 14 வண்ண, பளபளக்கும், தற்போதைய புகைப்படங்கள். அனைத்து புகைப்படங்களும் வாசகர்களை பரவசமடைய செய்கின்றன.

உருவு கண்டு எள்ளல் வேண்டாம் என்பதற்கேற்ப மாற்றம் என்ற ஒற்றை வார்த்தையை தன் அரசியல் கோட்பாடாக முன்னிறுத்தி முன்னேறிய ஒபாமாவை பற்றிய இந்நூல் படித்து பாதுகாக்க வேண்டியது. ஒரு மனிதனைப் பற்றிய வரலாற்று நூல் என்பதை விட தன்னம்பிக்கை ஊட்டும் தமிழ் நூல் என இந்நூலைக் கொள்ளலாம். உழைப்புக்கு ஈடு இணை இல்லை என்ற தத்துவத்தின் அடிப்படையில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு கடுமையாக உழைத்தவர் ஒபாமா. முன்னால் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் முதல் முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது தன் அரசியல் வாழ்வை தொடங்கி சரியாக 16 ஆண்டுகளில் செல்வாக்கு நிறைந்த அவர் மனைவி ஹிலாரியை வேட்பாளர் போட்டியில் வென்று சாதித்த சாமானியன் ஒபாமாவின் வரலாற்றை சுவையாகச் சொல்லும் நூல் இது. மொத்தத்தில் அரைக் கறுப்பரை பற்றி அறிந்து கொள்ள உதவும் முழுமையான நூல்.

டாக்டர். B. செல்வராஜ் Ph.D.,
முதுநிலை உளவியல் விரிவுரையாளர்,
அரசு கலைக்கல்லூரி,
கோவை – 641 018

இந்த புத்தகத்தை பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழேயுள்ள
URL-க்கு செல்லுங்கள்

1 comments:

பட்டிக்காட்டான் February 26, 2009 at 4:45 AM  

தங்கள் வலைப்பூவைப் பற்றிய அறிமுகத்தை இங்கே தந்திருக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி!

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP