உளவியல் சந்தேகங்கள்
உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

குழந்தைகள் இன்ப விதியின் அடிப்படையில் வளர்பவர்கள். அதாவது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், ஒரு போதும் துன்பத்தை அனுபவிக்க கூடாது என்பதே அவர்களின் வாழ்க்கைக் கோட்பாடு. எனவே அவர்கள் தன் மனதில் எழும் ஆசைகளை உடனுக்குடனே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என நினைப்பதும், தன் தேவைகளை உடனுக்குடன் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதும் இயற்கையானது தான். இந்த நடத்தையின் காரணமாகத்தான் எதாவது ஒரு பொம்மையைக் கேட்கும் குழந்தை “ எனக்கு ஒரு பொம்மை வேண்டும், இப்போதே, இன்றைக்கே வேண்டும்” என கேட்பது. அதற்காக குழந்தையின் ஆசையை நாம் உடனே நிறைவேற்றி விடவேண்டும் என்று துடிதுடிக்க வேண்டியதில்லை. அது நம்மால் முடியவும் முடியாது. மேலும் ஓரிரு முறை அவ்வாறு உடனுக்குடன் குழந்தையின் ஆசையை உடனே தீர்த்து வைத்தால் அதுவே பழக்கமாகி பின்னர் நாம் எப்போது அவ்வாறு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். பிற்காலத்தில் தான் நினைப்பது உடனே நடக்கவில்லை என்றால் அக்குழந்தைக்கு மனச்சோர்வும், மன முறிவும் ஏற்படும். அது ஓர் ஆளுமைக் குறைபாடாக உருவெடுத்து வாழ்க்கையின் பல தோல்விகளுக்கு காரணமாக அமைந்துவிடும்.
தற்கால உளவியல் ஆய்வுகள் யார் தன் உள்ளுணர்வு ஆசைகளை கட்டுப்படுத்தி சிறிது பொறுத்திருந்து பின்னர் சரியான வேளை வரும்போது தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் திறமை பெற்றிருக்கிறார்களோ அவர்களே சிறந்த வெற்றியாளர்களாக திகழ்கிறார்கள் எனக் கண்டறிந்துள்ளன. இத்திறமை படைத்தவர்களுக்கு நுண்ணறிவு சற்று குறைவாக இருந்தாலும் அது அவர்களின் வெற்றியைப் பாதிப்பதில்லை எனவும் தெரியவந்துள்ளது. இத்திறமையை நாம் குழந்தைப் பருவத்திலேயே வளர்த்து விட்டால் குழந்தைகள் பெரியவர்களாகும் போது அது ஓர் வாழ்க்கை முறையாக மாறிவிடும்.
இப்போதே ஓர் பொம்மை வேண்டும் என்று குழந்தை கேட்டால், இரண்டு மணி நேரம் வேலை இருக்கிறது. முடித்துவிட்டு நாம் இருவருமே சென்று வாங்கி வரலாம் என்று கூறுங்கள். இன்றே ஐஸ்கிரீம் வேண்டும் என்றால் இன்று முடியாது நாளை வாங்கித்தருகிறேன் என்று கூறி அடுத்த நாள் வாங்கித் தாருங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் “சற்றே தள்ளிப்போடும் மனநிலையையும்” பொறுமையையும் குழந்தைகளிடத்தில் இளம் வயதிலேயே விதைத்து விடலாம்.
ஓடு மீன் ஓட உறுமீன் வரும்வரை காத்திருக்க வையுங்கள் உங்கள் கொக்கை. உலகில் வெற்றியாளராக்குங்கள்.

ஒரு மனிதனின் வெற்றிக்கு அடிப்படையாகத் திகழ்வது நுண்ணறிவாகும். இதை ஐ.க்யூ என்று குறிப்பிடலாம். நுண்ணறிவு அதிகமாக உள்ள யாவரும் வெற்றியாளராகத் திகழ வாய்ப்புள்ளது. நுண்ணறிவு பற்றிய உளவியல் கோட்பாடுகளில் வலியுறுத்திக் கூறப்படும் விஷயம் யாதெனில் எல்லா மனிதர்களுக்கும் பொதுவான நுண்ணறிவும் அதோடு சிறப்பு நுண்ணறிவும் இருக்கும் என்பதுதான். உதாரணமாக ஒருவருக்கு பொது நுண்ணறிவும் அதோடு கணிதத்தில் சிறந்து விளங்குவதற்கான சிறப்பு நுண்ணறிவும் இருக்கலாம். மற்றொருவருக்கு பொது நுண்ணறிவும் அறிவியலில் சிறந்து விளங்குவதற்கான சிறப்பு நுண்ணறிவும் இருக்கலாம். அதைப்போல உங்கள் குழந்தைக்கும் பொது நுண்ணறிவோடு எதாவதொரு சிறப்பு நுண்ணறிவு கட்டாயம் இருக்கும். பிற்காலத்தில் எந்த சிறப்பு நுண்ணறிவு தங்களிடம் இருக்கிறதோ அந்தத் துறையிலேயே குழந்தைகள் வல்லுநர்களாக விளங்குவார்கள்.
ஒரு குழந்தை பொம்மைகளை உடைத்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து “என் மகன் பெரிய இஞ்ஜினியராக வருவான்” என்றெல்லாம் குழந்தைகளின் எதிர்காலத்தை கணிக்க முடியாது. அதற்கு மாறாக உளவியல் முறை சோதனைகளைக் கொண்டு குழந்தைகளின் திறன்களைக் கணிக்கலாம். தற்போது குழந்தைகளின் நுண்ணறிவு, படிப்புத்திறன், எந்தப் பாடத்தில் சிறப்பாக படிக்கிறார்கள் என்பதை கண்டறிதல் போன்றவற்றை அளவிட உளவியல் சோதனைகள் உள்ளன. மேலும் குழந்தைகள் எந்தத் துறையில் ஆர்வம் கொண்வர்களாக இருக்கிறார்கள்? அவர்களின் நாட்டங்கள் யாவை போன்றவைகளைச் சோதிக்க தனித்தனி உளவியல் சோதனைகள் தற்போது உள்ளன. குழந்தைகளை அச்சோதனைகளுக்கு உட்படுத்துவதன் மூலம் அவர்களின் திறன்களையும், துறைசார் ஆர்வங்களையும் கண்டறியலாம்.
பொதுவாக எந்த வயதில் குழந்தைகளை இச்சோதனைகளுக்கு உட்படுத்தலாம் என்ற கேள்வி எழும். நுண்ணறிவுச் சோதனைகளை எந்த வயதிலும் செய்து பார்க்கலாம். ஆர்வச் சோதனை, நாட்டச் சோதனை ஆகியவற்றை 10 வயதிற்கு மேல் 13 வயதிற்குள் செய்து குழந்தைகளின் ஆர்வம், நாட்டம் ஆகியவைகளை கண்டறிவது நல்லதாகும். பெற்றோர்களும் நாட்டில் என்னென்ன துறைகள் உள்ளன, அதற்கான வேலை வாய்ப்புகள் யாவை? புதிதாகத் தோன்றியுள்ள வேலை வாய்ப்புகள் யாவை? அவ்வேலைகளைப் பெற என்ன படிக்க வேண்டும் என்பனவற்றை தெரிந்தவர்களாக, விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியம். வேலைப் பெயர் அகராதி போன்ற நூல்களை படிப்பதன் மூலம் இவ்வறிவைப் பெறலாம்.
பழைய காலத்தைப் போல் என்ன வியாதிக்கு என்ன மருந்து கொடுத்தால் என்ன? மருத்துவர் சொல்வதை செய்வோம் என்று சொன்னதை மட்டுமே செய்தவர்கள் இப்போது இல்லை மாறாக சொல்லாததையும் செய்து முடிக்கும் நோயாளிகளே தற்போது அதிகம். மருத்துவ அறிவியல் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து இருப்பதுதான் இதற்கு காரணம் ஆகும். காய்ச்சல் என்றால் கூட கையோடு சிறுநீர்ப் பரிசோதனை செய்து கொண்டு மருத்துவரைப் போய் பார்க்கலாம் என்பவர்களும், குழந்தைகளுக்கு உடம்புக்கு முடியவில்லை என்றால் டெர்மோமீட்டரை வைத்து காய்ச்சலின் அளவு தெரிந்து கொண்டு குழந்தையின் வயதுக்கேற்ப 5, 6, அல்லது 7 மில்லி பாராசெடமால் மருந்து கொடுத்துவிட்டு பின்னர் மருத்துவரை சென்று பார்க்கும் தாய்மார்களும் தற்போது சர்வசாதாரணம்.
இச்சூழ்நிலையில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் பற்றிய அடிப்படைத் தகவகளை விளக்கிச் சொல்லும் விதமாக டாக்டர்.சு.முத்து செல்லக்குமார் எழுதிய கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி என்ற நூல் நலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. கொழுப்பு என்றால் என்ன என்று தொடங்கி எந்தெந்த உணவுப் பொருள்களில் எவ்வளவு கொழுப்பு இருக்கின்றன என விளக்கும் முழுமையான புத்தகம் இது.
இல்லாத ஒன்றை உப்பி ஊதி பெரிதாக்கி விடுவது மனித இயல்பு. கொழுப்பினால் உண்டாகும் ஆபத்து பற்றிய விஷயத்திலும் நடந்து இருப்பது இதுதான் என்பதை முதல் அத்தியாயத்திலேயே விளக்குகிறார். எல்லோரும் சேர்ந்துதான் கொழுப்பை அதிபயங்கர வில்லனாக்கி விட்டார்கள். உண்மையில் கொழுப்பு அப்படிப்பட்ட வில்லன் இல்லை என ஒரு மருத்துவரே சொல்லிவிட்டால் பிறகு நாம் ஏன் பயப்படவேண்டும் என்ற உணர்வை முதல் அத்தியாயம் ஏற்படுத்துகிறது. உடலுக்குத் தேவையான சக்தியைத் தருவது, உடல் நலத்துக்குத் தேவைப்படும் பல்வேறு செயல்பாடுகளிலும் பங்கு கொள்வது செல்களின் செயல்பாட்டை சீராக்குதல் என கொழுப்பு நல்ல வேலைகளை செய்வதை ஆசிரியர் விளக்கமாக எழுதியிருக்கிறார். இந்த விஷயங்கள் பலரும் சொல்லாமல் மறைத்த விஷயங்களாகத் தெரிகின்றன.
இரண்டாம் அத்தியாயம் கொழுப்பு நல்லதா, கெட்டதா என்ற கேள்வியோடு தொடங்கி கொழுப்பின் நற்செயல்களை முழுவதுமாக விளக்குகிறது. ஒரு சிலர் கொழுப்பு அதிகமானால் இதய நோய் வரும் என்ற ஒரே எண்ணத்துடன் கொழுப்பு உணவுகளை அறவே ஒதுக்கி விடுகிறார்கள். ஆனால் அவர்கள் இதய நோய் இல்லாமல் இருந்தாலும் கூட வேறு பல நோய்களை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஏன் அவர்களுக்கு அப்படி பிற நோய்கள் வருகின்றன என்பதை இந்த அத்தியாயத்தை படிக்கப்படிக்கவே புரிந்து கொள்ளலாம். கொழுப்பை அறவே ஒதுக்கும் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டியது இரண்டாம் அத்தியாயம்.
சாதாரணமாக கடையில் வாங்கி உண்ணும் பொருள்களில் என்ன கொழுப்பு இருக்கும், எவ்வளவு கொழுப்பு இருக்கும் என்பது யாருக்குத் தெரியும்? விபரங்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் அதை புரிந்து கொள்வதற்கு தேவையான அடிப்படை அறிவு நிறையப் பேருக்கு இருப்பதில்லை. ஆசிரியர் நல்ல கொழுப்பு என்றால் எது? கெட்ட கொழுப்பு என்றால் எது என கொழுப்பின் வகைகளை விளக்கி, டப்பாவில் எழுதப்பட்டிருக்கும் விவரங்களை வைத்து நல்ல கொழுப்பின் அளவை கண்டுபிடிப்பதற்கு கூறியுள்ள வழி மிக எளிமையானதாக இருக்கிறது. பெரிய வியாதிகள் வராமல் தடுக்கும் ஆபத்பாந்தவனாக ஒமேகா-3, ஒமேகா-6 கொழுப்பு வகைகளின் நற்செயல்களை நாம் யாரும் சாதாரணமாக கேள்விப்பட்டிருக்க முடியாது.
உடல் பருமனாகும் போது உடலில் ஒரு சில பகுதிகள் தான் பெருத்துப் போகின்றன. உதாரணமாக நடுவயதைத் தாண்டிய ஆண்கள் அனைவருமே ஏறத்தாழ பெருத்த வயிறு கொண்டவர்களாகவே தோற்றமளிக்கிறார்கள். ஏன் வயிறு மட்டும் இப்படி பெருத்துப் போகிறது என்ற கேள்வி தொந்தியுள்ள ஆண்களைப் பார்க்கும் போதெல்லாம் தோண்ரும் கேள்வி. ஆசிரியர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எந்தெந்த இடத்தில் கொழுப்பு திசுக்கள் அதிகமாக இருக்கின்றன என கூறியிருக்கிறார். அதைப் படிக்கும் போதுதான் நம் கேள்விக்கு சரியான விடை தெரிகிறது.
கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்றாக மன அழுத்தத்தையும் ஆசிரியர் எழுதியிருக்கிறார். உதாரணமாக மன அழுத்தத்தில் இருப்பவர்கள் தங்களின் பிரச்சனைக்கு வடிகாலாக சிப்ஸ் போன்ற கொழுப்பு நிறைந்த நொறுக்குத் தீனிகளை அதிகமாக சாப்பிடுகின்றனர். இதனால் இவர்களையும் அறியாமல் உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கிறது என்பது மிகச் சரியான விளக்கம். மன அழுத்தம் அதிகரிக்கும் போது அதிகமாக உணவு உண்டு தன் மன அழுத்தத்தை போக்கிக் கொள்வது ஒரு சிலரின் ஆளுமைக் கூறு. இந்த நடத்தையை பற்றி உளவியலில் நிறைய ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதிக கொலஸ்ட்ரால் உண்டாக்கும் நோய்கள் அனைத்தையும் ஆசிரியர் பட்டியலிட்டு இருக்கிறார். இதன்மூலம் தெரியவருவது எல்லா நோய்களுக்குமே கொலஸ்ட்ரால் அதிகரிப்பு காரணமாக இருக்கிறது என்பதுதான். அதிகக் கொலஸ்ட்ராளுக்கான அறிகுறிகளை எவ்வாறு கண்டறியலாம் என்பது படங்களுடன் விளக்கப்பட்டிருக்கிறது. கொலஸ்ட்ராலின் அளவை கண்டறிய செய்யப்படும் சோதனைகளையும் விரிவாகவே விவரித்திருக்கிறார் ஆசிரியர். கொலஸ்ட்ரால் சோதனைகள் பற்றிய அடிப்படை அறிவு பெறவும், யார் எப்போது கொலஸ்ட்ரால் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற ஐயங்களைப் போக்கிக் கொள்ளவும் இவ்விவரங்கள் உதவியாக இருக்கும்.
கொலஸ்ட்ரால் என்னென்ன உணவுப் பொருள்களில் இருக்கின்றன? அதன் அளவு யாது? என்ற விவரப்பட்டியலையும், கொலஸ்ட்ராலை தடுக்க செய்ய வேண்டிய உடல் பயிற்சிகளையும், கொலஸ்ட்ரால் பற்றி நமக்கு ஏற்படும் பொதுவான சந்தேகங்களுக்கான விளக்கங்களையும் ஆசிரியர் எழுதியிருக்கிறார்.
புத்தகத்தை படிக்கும் உங்களை ஆச்சரியப்படுத்தும் சில விஷயங்களும் இருக்கின்றன:
1. உணவில் உள்ள கொழுப்பை நீங்கள் கட்டுப்படுத்தினாலும் உடலுக்குள் கொழுப்பு உற்பத்தியாகிக்கொண்டு தான் இருக்கும்!
2. அதிகப்படியான கொழுப்பினால்தான் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன என்ற கருத்தை ஆராய்சியாளர்கள் மறுக்கிறார்கள்!
3. முட்டையின் மஞ்சல் கருவில் கொலஸ்ட்ரால் மிகுதியாக இருந்த போதிலும் அதனால் பாதிப்பு பெரிதாக இருப்பதில்லை என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்!
4. குழந்தைகளுக்கு 2 வயதிலேயே கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்யலாம்!
5. மது அருந்தினால் மாரடைப்பை தடுக்கலாம் என்பது உண்மையே! என்பனதான் அந்த ஆச்சரியமான செய்திகள்.
மருத்துவ துறை சார்ந்த புத்தகமானாலும் ஆசிரியர் ஜனரஞ்சகமான முறையில் புத்தகத்தை எழுதியுள்ளார். “கொழுப்பு எம்.ஜி.யாரா அல்லது எம்.என்.நம்பியாரா! என கேட்பது, “ஒருவரது நடத்தையை வைத்து உனக்கு கொழுப்பு அதிகம்டா எனக் கடுப்பில் சொல்லாமே தவிர, அவரைப் பார்த்தவுடன் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் அல்லது இருக்காது என்று சொல்ல முடியாது” என்று எழுதியிருப்பது படிக்கும்போது மருத்துவ புத்தகம் படிக்கிறோம் என்ற உணர்வை குறைக்கிறது.
வயதில் மூத்த பேராசிரியர் ஒருவர் உடல் நலமின்மையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு போகும்போது மிகுந்த மன உளைச்சலுடன் வேண்டா வெறுப்பாகத்தான் போனார். ஒருவாரம் மருத்துவமனை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். சில மாதங்கள் கழித்து பேசிக்கொண்டிருக்கும் போது அவர் தான் மருத்துவனையில் சிகிச்சை பெற்ற அனுபவத்தை சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தார். இறுதியாக அவர் சொன்னது “வருடம் ஒரு முறை நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மருத்துவமனையில் 10 நாட்கள் அட்மிட் ஆகிவிடவேண்டும். வெளியே வரும்போது உடல் முழுவதும் ஓவர்ஹால் செய்தது போன்ற உணர்வும் தெம்பும் கிடைக்கும்” என்பது தான். மருத்துவமனையின் சிகிச்சை முறை பயந்து கொண்டு சென்றவரையே பாசம் கொள்ளச் செய்து விட்டது. அதைப்போல கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி என்ற இந்த நூலைப் முழுவதுமாக படிபவர்கள் மருத்துவ அறிவியலின் மீது நாட்டம் கொள்வார்கள்.
இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இங்கே செல்லுங்க: http://nhm.in/shop/978-81-8368-974-8.html
பெரியவர்களுக்கான எந்த பண்புகளையும் கொண்டிருக்காததால் தான் ‘குழந்தை’ என்று குழந்தைகளை அழைக்கிறோம். உணர்ச்சி பெருக்கு, கட்டுக்கடங்காத ஆற்றலை இயல்பாக வெளிப்படுத்துதல், எதையும் அடக்கி வைக்காமல் அவ்வப்போது வெளிப்படுத்துவது ஆகியவை குழந்தைகளின் முக்கியமான பண்புகள் ஆகும். ஆனால் சில குழந்தைகள் இத்தகைய பண்புகளை கொண்டுருக்காமல் முதிர்ந்த பெரியவர்களைப் போல் நடந்து கொள்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்கள் வளரும் குடும்ப சூழ்நிலை, பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு முறை, உறவினர்களின் ஊக்கம் ஆகியவையே ஆகும். சாதாரணமாக குடும்பத்தின் ஒரே குழந்தை, குடும்பத்தின் மூத்த குழந்தை ஆகியவர்களிடம் இப்பழக்கம் அதிகமாக காணப்படும். இதற்கு காரணம் இவர்களின் குடும்பத்தில் வேறு குழந்தைகள் யாரும் இல்லாததால் அவர்கள் தன் தாய் தந்தையைப் பார்த்தே பேசுவது, பிறரிடம் நடந்து கொள்வது போன்ற நடத்தைகளை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே அவர்களின் நடத்தை பெரியவர்களைப் போல் இருப்பதில் ஆச்சரியமில்லை. ஒரு சிலர் குழந்தைகள் பெரியவர்களைப் போல் பேசுவது, நடந்து கொள்வது ஆகியவற்றை விரும்புனாலும் பலர் குழந்தைதன்மையில்லாத குழந்தைகளை விரும்புவதில்லை. குழந்தைகள் பெரியவர்களின் பேச்சு, நடத்தைகளை கொண்டிருந்தால் அதை பின்வரும் வழிகளில் மாற்றலாம்.
பெற்றோர்களும், சுற்றியிருப்பவர்களும் குழந்தை பெரிய மனுஷத் தன்மையுடன் நடந்து கொள்ளும் போது அதை ஆச்சரியத்துடன் விவாதிக்காமல் அலட்சியப்படுத்த வேண்டும். எந்தவித எதிர்வினையும் வெளிக்காட்டக்கூடாது. தனது பேச்சை, நடத்தையை மற்றவர்கள் விரும்பவில்லை என்று உணர ஆரம்பித்தாலே குழந்தை தனது நடத்தையை விரைவில் மாற்றிக் கொள்ளும்.
பெற்றோர்கள் தனது குழந்தையின் பெரிய மனுஷத்தன்மையை பிறருடன் விவாதிப்பதை முழுமையான நிறுத்திக்கொள்ள வேண்டும். அதுவும் குறிப்பாக குழந்தையின் முன் இந்த பேச்சையே எடுக்கக் கூடாது.
எப்போதும் குழந்தையை தன் பாராமரிப்பிலேயே வைத்திருக்காமல் பிற சமவயது குழந்தைகளுடன் விளையாட, பழக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகள் பெரிய மனிதர்களைப் போல் பேசுவது, நடந்து கொள்வதில் தவறேதும் இல்லை. அவ்வப்போது அவ்வாறு நடந்து கொண்டால் நமக்கும் நகைச்சுவையாக இருக்கும். ஆனால் எப்போதும் அவ்வாறு நடந்து கொள்வது தான் வெறுப்பை ஏற்படுத்தும்.
மன அழுத்த மேலாண்மை – 2
நமது உடலின் செயல்பாடுகள் எல்லாவற்றையும் நரம்பு மண்டலமே கட்டுப்படுத்தி உடலின் சீரான செயல்பாட்டிற்கு காரணமாக விளங்குகிறது. நரம்பு மண்டலம் பல பிரிவுகளாக பிரிந்து உடலின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்கிறது. தானியங்கி நரம்பு மண்டலம் என்பது நரம்பு மண்டலத்தின் ஓர் முக்கிய பிரிவாகும். இந்த தானியங்கி நரம்பு மண்டலம் சிம்பதடிக் நரம்பு மண்டலம் மற்றும் பாரா – சிம்பதடிக் நரம்பு மண்டலம் என இரண்டு பிரிவாக பிரிந்து செயல்படுகிறது. சூழ்நிலை சாதாரணமாக இருக்கும் போது தானியங்கி நரம்பு மண்டலத்தின் பாரா – சிம்பதடிக் நரம்பு மண்டலம் நமது உடலின் செயல்பாடுகளை கவனித்துக் கட்டுப்படுத்தி வரும். இச்சாதாரண சமயங்களில் நாம் மூச்சை ஆழமாக இழுத்து விடாமல் மேலோட்டமாக மூச்சு விடுவோம். இரத்த அழுத்தம் சரியான அளவில் இருக்கும். இதயத்துடிப்பும் இயல்பாக இருக்கும். உடல் வியர்க்காது. சுரப்பிகள் இயல்பாக செயல்பட்டு சரியான அளவில் ஹார்மோன்களை சுரந்து கொண்டிருக்கும்.நாட்டில் சாதாரண் சமயங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட போலீஸ் படை உள்ளது. திடீரெனெ ஏதாவது கலவரம், அடிதடி, ரகளை போன்றவை ஏற்பட்டு விட்டால் அவைகளை சமாளிக்க உள்ளது தான் அதிரடிப்படை. சாதாரண போலீஸ் படையால் சமாளிக்க முடியாத விஷயங்களை இந்த அதிரடிப்படை கட்டுப்படுத்தி விடும். இவர்களுக்கு என சிறப்பு பயிற்சிகளும், ஆயுதங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதைப் போலவே தானியங்கி நரம்பு மண்டலத்தின் அதிரடிப் பிரிவே சிம்பதடிக் நரம்பு மண்டலம் ஆகும். நமக்கு உணர்ச்சிகளும் மனவெழுச்சிகளும் சூழ்நிலையின் காரணமாக ஏற்படும் போது அச்சூழ்நிலையை சமாளிக்க ஏதுவாக பல உடலியல் மாற்றங்களை ஏற்படுத்துவது சிம்பதடிக் நரம்பு மண்டலமே ஆகும்... தொடர்ந்து படிக்க பதிவுகள் தளத்திற்கு செல்லுங்கள் http://www.geotamil.com/pathivukal/DR_SELVARAJA_ULAVIYAL_2.htm
இந்திய ஆட்சிப் பணியை பல ஆண்டுகள் ஆற்றி பழுத்த அனுபவம் பெற்ற அ.கி.வெங்கடசுப்ரமணியன் அவர்கள் எழுதி மூன்று இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே ”மக்களாகிய நாம்” என்னும் நூல் வடிவம் பெற்றுள்ளது. ஆட்சிப் பணி ஆற்றி ஓய்வு பெற்றவர் எழுதிய புத்தகம் எனினும், புத்தகம் சிறந்த கல்விமான் ஒருவரால் எழுதப்பெற்றது போன்று திருக்குறளும், பாரதியார் பாடல்களும், புள்ளி விபரங்களும் புத்தகம் முழுவதும் அவ்வப்போது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.
குடியாட்சி (13 கட்டுரைகள்), உள்ளாட்சி (8 கட்டுரைகள்), கல்வி (6 கட்டுரைகள்) மற்றும் வாழ்க்கை (1 கட்டுரை) என நான்கு தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளை பொருத்தமாக பிரித்து வழங்கியிருக்கிறார் ஆசிரியர். முற்சேர்க்கையாக சிந்திக்க சில கருத்துக்கள் என அறிவுஜீவிகளின் கருத்துக்களை வழங்கியிருக்கிறார். ஒருமுறை மாணவர்-ஆசிரியர் கூட்டுப் போராட்டம் நடைபெற்ற போது, போராட்டத்தில் பேசிய மாணவர் தலைவர் ஒருவர் “முதலில் அவர்கள் யூதர்களை...... என்ற கருத்தை மேற்கோள் காட்டி பேசிய போது உச்சந்தலையில் மயிர் கூச்செரிதல் ஏற்பட்டு உடல் முழுவதும் எனக்கு சிலிர்த்தது. மீண்டும் அதே மேற்கோளை இப்புத்த்கத்தின் ஆரம்பத்தில் படித்த போது புத்தகத்தை படித்து முடிக்கும் வரை அதே உணர்வு என்னுள் நீடித்தது.
குடியாட்சி பற்றிய தன் முதல் கட்டுரையிலேயே எத்தனையாவது சுதந்திர தினம் என பெருமையுடன் எழுதி கொண்டாடுகிறோமே அதற்கு சரியான சவுக்கடி கொடுத்திருக்கிறார். முதுமை என்பது நாம் எந்த முயற்சியும் செய்யாமலேயே நம்மை வந்து அடையும். ஆனால் முதிர்ச்சி நாமாக ஏற்படுத்திக் கொண்டால் தான் உண்டு. அது போல சுதந்திரத்திற்கு பிறகு வருடங்கள் பல ஆகிவிட்டன. ஆனால் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா என்று வாசகரை கேள்வி கேட்டு மூத்த குடிமகன் ஆகியும் முதிரா இளைஞனாகத்தான் இந்தியா இருக்கிறது என பதிலும் தந்து விடுகிறார். அதற்கு உதாரணமாக தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தினை விளக்கும் ஆசிரியர் “19-ம் நூற்றாண்டில் பஞ்ச நிவாரணத்துக்காக ஆங்கிலேயே அரசு மேற்கொண்ட பணிகளையே மிகப் பெரிய அளவில் தொழில் நுட்ப வளர்ச்சி அடைந்துவிட்ட 21-ம் நூற்றாண்டிலும் நாம் மேற்கொண்டு இருக்கிறோம்” என கூறுகிறார்.
பொது ஜனம் அத்தனை பேரும் மழையில் நனையும் எறுமை மாடுபோல் ஆகிப் போனோம் என்று ஒத்துக்கொள்ளும் போது, மனிதனிமன் அறிவையும், மனித நேயத்தையும் வளர்க்கும் கல்விக் கூடங்களை நடத்த வேண்டிய அரசு அவற்றை தனியாரை நடத்தச் சொல்லி விட்டு மதுக்கடைகளை நடத்துவதில் ஆச்சரியம் இல்லை என்கிறார். ஆசிரியர் தீண்டாமை ஒழிக்கப்படவில்லை என்பதை மிக ஆணித்தரமாக Evidence என்ற அமைப்பு வெளியிட்ட புள்ளி விபரங்களுடன் விளக்கியிருக்கிறார். எதையும் முற்போக்கு சிந்தனையோடு செய்யாமல் அந்நியரை கைகாட்டிக் கொண்டிருக்கும் நமக்கு ஆசிரியர் சொல்லும் அறிவுரை “விடுதலைக்குப் பிறகு, வெள்ளையர்களை பொறுப்பாக்க முடியாது” என்பது தான்.
குடியாட்சி பகுதியில் இரண்டு கட்டுரைகள் காவல் துறை செயல்படும் விதம் பற்றியது. அண்மையில் ஒருவரின் மோட்டார் சைக்கிள் திருட்டுப் போனது. அவர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கச் சென்றார். உதவி ஆய்வாளரோ புகாரை வாங்கிக் கொள்ளாமல் “போய் நன்றாக தேடிப் பார்த்துவிட்டு உண்மையிலேயே காணவில்லை என்றால் ஒருவாரம் கழித்து வா” என்று அவரை திருப்பி அனுப்பி விட்டார். 15 நாட்கள் கழித்து சென்ற போது ஒரு வார காலத்திற்கு காவல் நிலையத்தில் அந்த பொறுப்பு உதவி ஆய்வாளரை சந்திக்க இயலவில்லை. பின்னர் அறிமுகமான உயர் காவல் அதிகாரி ஒருவரிடம் விசயத்தை எடுத்துக் கூறி உதவி வேண்டிய போது “நீங்கள் போய் அந்த உதவி ஆய்வாளரை பாருங்கள், நான் அவரிடம் சொல்கிறேன் என்று அனுப்பி வைத்தார். இம்முறை அந்த உதவி ஆய்வாளரை சென்று விஷயத்தை எடுத்துச் சொன்ன போது அவர் புகாரை பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை தரத் தயாராக இருந்தார். ஆனால் மேல் அதிகாரியிடம் எக்காரணம் கொண்டும் தெரிவிக்கக் கூடாது என்றும் நிபந்தையோடு ரூபாய் 100-ஐ பெற்றுக் கொண்ட பின்னரே புகாரை பதிவு செய்தார். இதை காவல் துறை மீது அளிக்கப்படும் மூன்று முக்கிய புகார்கள் என்னும் பகுதியில் 3வது புகாராக ஆசிரியர் விளக்கியிருகிறார். அதில் துளி அளவும் மிகை இல்லை என்பதற்கு நடைமுறையில் நிறைய ஆதாரங்களைக் கூறலாம்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தினை மிக முக்கியத்துவம் கொடுத்து விவரித்து இருக்கும் ஆசிரியர். அதன் எதிர்மறை விளைவுகளையும் கூறி வாசகர்களிடையே நல்ல விஷயத்திற்கு மட்டுமே இச்சட்டத்தினை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்க வேண்டும். உதாரணமாக கல்லூரி ஒன்றில் தற்காலிகமாக பணிபுரியும் ஆசிரியர் நிரந்தரமாக பணிபுரியும் ஆசிரியர் ஒருவரைப் பற்றி அவர் எத்தனை மணி நேரம் வகுப்பு எடுக்கிறார், அவர் பதவியின் பெயர் பதிவேட்டில் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பது போன்ற தெரிந்த எளிய விஷயங்களை தெரிவிக்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் முதல்வரை பணிக்கிறார். முதல்வரும் வழக்குறைஞர் ஒருவரை அமர்த்திக்கொண்டு அக்கேள்விகளுக்கு சட்ட நுனுக்கங்களோடு பதிலளித்தார். உடனே அடுத்த சில விவரங்களை கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கும் பதில் அனுப்பப்பட்டது. இவ்வாறு வேலையற்றா வீனர்கள், மூடர்கள் சரியாக பயன்படுத்தப்பட வேண்டிய கருவியை தவறாகப் பயன்படுதிக்கொண்டு இருக்கிறார்கள். காலத்தை விரயமாக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதும் உண்மையே.
கல்வி பகுதியில் செயல்வழிக் கற்றல் என்ற புதிய அணுகு முறையினை விளக்கமாக சொல்லியிருப்பதும், அதனை அறிமுகப்படுத்தியவர் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் எம்.பி.விஜயகுமார். இ.சூ.ப அவர்கள் என பெயரை குறிப்பிட்டு அனைவரும் அறிந்து கொள்ள செய்திருப்பதும் பாராட்டக்குறியது. மேலும் அரசு பள்ளியிலேயே கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் கட்ட அண்டா, குண்டாவை அடமானம் வைத்து படிக்கும் மாணவர்களின் கண்ணீரை துடைக்க ஊர்தலைவரும் மக்களும் உழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருப்பதும் பாராட்டக்குறியது.
நோய் சிறிதென்றாலும், பெரிதென்றாலும் மருத்துவமனையின் வாசலை மிதித்து விட்டால் அலைச்சல் தான். மேலும் சிறு நோயாக இருந்து விட்டாலும் மருத்துவமனியிலிருந்து வெளிவர சிபாரிசு தேவைப்படுகிறது. திருட்டு கொடுத்துவிட்டு போனாலும் திருடிவிட்டு போனாலும் நம் காவல் நிலையங்களில் மரியாதையும், மனிதாபிமானமும் ஒன்றுதான். குறை நிவர்த்தி செய்ய போனாலும் குற்றவாளியாகப் போனாலும் வழக்கு முடிய வருடங்கள் பலவாகும் தான். இவற்றை மனதில் கொண்டுதான் எனது பேராசிரியர் “ஒரு நல்ல மனிதன் முடிந்த வரையில் மருதுவமனை, நீதிமன்றம், காவல் நிலையம் ஆகியவற்றின் படிகளை மிதிக்காமல் இருப்பது நலம்” என்று அடிக்கடி கூறுவார்.
எல்லாம் தெரிந்தும் ஏன் பொதுமக்கள் எதையுமே செய்வதில்லை? மேலே சொன்னது கூட விடையாக இருக்கலாம். ஆயினும் புத்தகத்தில் மண்டேலாவின் சுயசரிதத்தில் இருந்து எடுத்து சொல்லி இருப்பது போல் “நாம் விதைக்கும் விதைகளுக்கும் வளர்க்கும் பயிர்களுக்கும் நாமே பொறுப்பு” அ.கி.வேங்கடசுப்ரமணியன் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ”மக்களாகிய நாம்” நூல் இனிவரும் இளைய தலைமுறையினர் படிக்க வேண்டிய பாடநூல்.
இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இங்கே செல்லுங்கள்:
http://nhm.in/shop/978-81-8493-061-0.html
மன அழுத்த மேலாண்மை – 1
கோடி கோடியாய் பணத்தைக் கொட்டி வியாபாரம் செய்யும் பெரும் வியாபாரியோ, அல்லது மரம் ஏறிப் பிழைக்கும் மிகச் சாதாரண தொழிலாளியோ அல்லது இவ்விருவருக்கும் இடைப்பட்ட நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த ஒருவரோ, யாராக இருந்தாலும் செல்போன் இல்லாமல் இனி அன்றாட வாழ்க்கையை வாழ முடியுமா?
கிரைண்டர், மிக்ஸி, வாஷிங்மெசின் போன்ற வீட்டு உபகரணங்கள் இல்லாமல் ஓர் குடும்பத்தலைவியால் இனி குடித்தனம் நடத்த முடியுமா? கவலைகள் இல்லாமல் இக்காலத்தில் குடும்பத்தலைவர் ஒருவரால் காலந்தள்ள முடியுமா? இவையாவும் இனி முடியாது. அப்படியே முடிந்தாலும் அடுத்தவர் உங்களை விடமாட்டார்.
இவைகளைப் போல, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தகவல் தொடர்பு வளர்ச்சியும், மக்களிடம் பரஸ்பர உறவை பராமரிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ள இக்காலத்தில் மன அழுத்தம் இல்லாமல் மனிதர்களால் இனி வாழ முடியாது. மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் மன அழுத்தம் ஏற்படுத்தும் விஷயங்களைத் தேடிப் போய் கொண்டு இருக்கிறார்கள். இல்லையேல் உங்களுக்கு மன அழுத்தம் தரும் ஏராளமான விஷயங்களோடு உங்கள் உறவினர்களும் நண்பர்களும் உங்களை தேடி வந்து கொண்டிருக்கிறார்கள். . .
கட்டுரையை முழுமையாக படிக்க பதிவுகள் தளத்திற்கு செல்லுங்கள்:
http://www.geotamil.com/pathivukal/DR_SELVARAJ_ULAVIYAL_1.htm
ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வலைப்பதிவு விருதை திரு.பெரியார்தாசன் அவர்கள் வழங்கினார்.