குழந்தைகள் தங்களின் வயதிற்கு மீறிய வார்த்தைகள் பேசுவதையும், பெரிய மனிதர்கள் போல் நடந்துகொள்வதையும் சரி செய்வது எப்படி?
பெரியவர்களுக்கான எந்த பண்புகளையும் கொண்டிருக்காததால் தான் ‘குழந்தை’ என்று குழந்தைகளை அழைக்கிறோம். உணர்ச்சி பெருக்கு, கட்டுக்கடங்காத ஆற்றலை இயல்பாக வெளிப்படுத்துதல், எதையும் அடக்கி வைக்காமல் அவ்வப்போது வெளிப்படுத்துவது ஆகியவை குழந்தைகளின் முக்கியமான பண்புகள் ஆகும். ஆனால் சில குழந்தைகள் இத்தகைய பண்புகளை கொண்டுருக்காமல் முதிர்ந்த பெரியவர்களைப் போல் நடந்து கொள்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்கள் வளரும் குடும்ப சூழ்நிலை, பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு முறை, உறவினர்களின் ஊக்கம் ஆகியவையே ஆகும். சாதாரணமாக குடும்பத்தின் ஒரே குழந்தை, குடும்பத்தின் மூத்த குழந்தை ஆகியவர்களிடம் இப்பழக்கம் அதிகமாக காணப்படும். இதற்கு காரணம் இவர்களின் குடும்பத்தில் வேறு குழந்தைகள் யாரும் இல்லாததால் அவர்கள் தன் தாய் தந்தையைப் பார்த்தே பேசுவது, பிறரிடம் நடந்து கொள்வது போன்ற நடத்தைகளை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே அவர்களின் நடத்தை பெரியவர்களைப் போல் இருப்பதில் ஆச்சரியமில்லை. ஒரு சிலர் குழந்தைகள் பெரியவர்களைப் போல் பேசுவது, நடந்து கொள்வது ஆகியவற்றை விரும்புனாலும் பலர் குழந்தைதன்மையில்லாத குழந்தைகளை விரும்புவதில்லை. குழந்தைகள் பெரியவர்களின் பேச்சு, நடத்தைகளை கொண்டிருந்தால் அதை பின்வரும் வழிகளில் மாற்றலாம்.
பெற்றோர்களும், சுற்றியிருப்பவர்களும் குழந்தை பெரிய மனுஷத் தன்மையுடன் நடந்து கொள்ளும் போது அதை ஆச்சரியத்துடன் விவாதிக்காமல் அலட்சியப்படுத்த வேண்டும். எந்தவித எதிர்வினையும் வெளிக்காட்டக்கூடாது. தனது பேச்சை, நடத்தையை மற்றவர்கள் விரும்பவில்லை என்று உணர ஆரம்பித்தாலே குழந்தை தனது நடத்தையை விரைவில் மாற்றிக் கொள்ளும்.
பெற்றோர்கள் தனது குழந்தையின் பெரிய மனுஷத்தன்மையை பிறருடன் விவாதிப்பதை முழுமையான நிறுத்திக்கொள்ள வேண்டும். அதுவும் குறிப்பாக குழந்தையின் முன் இந்த பேச்சையே எடுக்கக் கூடாது.
எப்போதும் குழந்தையை தன் பாராமரிப்பிலேயே வைத்திருக்காமல் பிற சமவயது குழந்தைகளுடன் விளையாட, பழக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகள் பெரிய மனிதர்களைப் போல் பேசுவது, நடந்து கொள்வதில் தவறேதும் இல்லை. அவ்வப்போது அவ்வாறு நடந்து கொண்டால் நமக்கும் நகைச்சுவையாக இருக்கும். ஆனால் எப்போதும் அவ்வாறு நடந்து கொள்வது தான் வெறுப்பை ஏற்படுத்தும்.
0 comments:
Post a Comment