புத்தக விமர்சனம்
பழைய காலத்தைப் போல் என்ன வியாதிக்கு என்ன மருந்து கொடுத்தால் என்ன? மருத்துவர் சொல்வதை செய்வோம் என்று சொன்னதை மட்டுமே செய்தவர்கள் இப்போது இல்லை மாறாக சொல்லாததையும் செய்து முடிக்கும் நோயாளிகளே தற்போது அதிகம். மருத்துவ அறிவியல் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து இருப்பதுதான் இதற்கு காரணம் ஆகும். காய்ச்சல் என்றால் கூட கையோடு சிறுநீர்ப் பரிசோதனை செய்து கொண்டு மருத்துவரைப் போய் பார்க்கலாம் என்பவர்களும், குழந்தைகளுக்கு உடம்புக்கு முடியவில்லை என்றால் டெர்மோமீட்டரை வைத்து காய்ச்சலின் அளவு தெரிந்து கொண்டு குழந்தையின் வயதுக்கேற்ப 5, 6, அல்லது 7 மில்லி பாராசெடமால் மருந்து கொடுத்துவிட்டு பின்னர் மருத்துவரை சென்று பார்க்கும் தாய்மார்களும் தற்போது சர்வசாதாரணம்.
இச்சூழ்நிலையில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் பற்றிய அடிப்படைத் தகவகளை விளக்கிச் சொல்லும் விதமாக டாக்டர்.சு.முத்து செல்லக்குமார் எழுதிய கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி என்ற நூல் நலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. கொழுப்பு என்றால் என்ன என்று தொடங்கி எந்தெந்த உணவுப் பொருள்களில் எவ்வளவு கொழுப்பு இருக்கின்றன என விளக்கும் முழுமையான புத்தகம் இது.
இல்லாத ஒன்றை உப்பி ஊதி பெரிதாக்கி விடுவது மனித இயல்பு. கொழுப்பினால் உண்டாகும் ஆபத்து பற்றிய விஷயத்திலும் நடந்து இருப்பது இதுதான் என்பதை முதல் அத்தியாயத்திலேயே விளக்குகிறார். எல்லோரும் சேர்ந்துதான் கொழுப்பை அதிபயங்கர வில்லனாக்கி விட்டார்கள். உண்மையில் கொழுப்பு அப்படிப்பட்ட வில்லன் இல்லை என ஒரு மருத்துவரே சொல்லிவிட்டால் பிறகு நாம் ஏன் பயப்படவேண்டும் என்ற உணர்வை முதல் அத்தியாயம் ஏற்படுத்துகிறது. உடலுக்குத் தேவையான சக்தியைத் தருவது, உடல் நலத்துக்குத் தேவைப்படும் பல்வேறு செயல்பாடுகளிலும் பங்கு கொள்வது செல்களின் செயல்பாட்டை சீராக்குதல் என கொழுப்பு நல்ல வேலைகளை செய்வதை ஆசிரியர் விளக்கமாக எழுதியிருக்கிறார். இந்த விஷயங்கள் பலரும் சொல்லாமல் மறைத்த விஷயங்களாகத் தெரிகின்றன.
இரண்டாம் அத்தியாயம் கொழுப்பு நல்லதா, கெட்டதா என்ற கேள்வியோடு தொடங்கி கொழுப்பின் நற்செயல்களை முழுவதுமாக விளக்குகிறது. ஒரு சிலர் கொழுப்பு அதிகமானால் இதய நோய் வரும் என்ற ஒரே எண்ணத்துடன் கொழுப்பு உணவுகளை அறவே ஒதுக்கி விடுகிறார்கள். ஆனால் அவர்கள் இதய நோய் இல்லாமல் இருந்தாலும் கூட வேறு பல நோய்களை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஏன் அவர்களுக்கு அப்படி பிற நோய்கள் வருகின்றன என்பதை இந்த அத்தியாயத்தை படிக்கப்படிக்கவே புரிந்து கொள்ளலாம். கொழுப்பை அறவே ஒதுக்கும் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டியது இரண்டாம் அத்தியாயம்.
சாதாரணமாக கடையில் வாங்கி உண்ணும் பொருள்களில் என்ன கொழுப்பு இருக்கும், எவ்வளவு கொழுப்பு இருக்கும் என்பது யாருக்குத் தெரியும்? விபரங்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் அதை புரிந்து கொள்வதற்கு தேவையான அடிப்படை அறிவு நிறையப் பேருக்கு இருப்பதில்லை. ஆசிரியர் நல்ல கொழுப்பு என்றால் எது? கெட்ட கொழுப்பு என்றால் எது என கொழுப்பின் வகைகளை விளக்கி, டப்பாவில் எழுதப்பட்டிருக்கும் விவரங்களை வைத்து நல்ல கொழுப்பின் அளவை கண்டுபிடிப்பதற்கு கூறியுள்ள வழி மிக எளிமையானதாக இருக்கிறது. பெரிய வியாதிகள் வராமல் தடுக்கும் ஆபத்பாந்தவனாக ஒமேகா-3, ஒமேகா-6 கொழுப்பு வகைகளின் நற்செயல்களை நாம் யாரும் சாதாரணமாக கேள்விப்பட்டிருக்க முடியாது.
உடல் பருமனாகும் போது உடலில் ஒரு சில பகுதிகள் தான் பெருத்துப் போகின்றன. உதாரணமாக நடுவயதைத் தாண்டிய ஆண்கள் அனைவருமே ஏறத்தாழ பெருத்த வயிறு கொண்டவர்களாகவே தோற்றமளிக்கிறார்கள். ஏன் வயிறு மட்டும் இப்படி பெருத்துப் போகிறது என்ற கேள்வி தொந்தியுள்ள ஆண்களைப் பார்க்கும் போதெல்லாம் தோண்ரும் கேள்வி. ஆசிரியர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எந்தெந்த இடத்தில் கொழுப்பு திசுக்கள் அதிகமாக இருக்கின்றன என கூறியிருக்கிறார். அதைப் படிக்கும் போதுதான் நம் கேள்விக்கு சரியான விடை தெரிகிறது.
கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்றாக மன அழுத்தத்தையும் ஆசிரியர் எழுதியிருக்கிறார். உதாரணமாக மன அழுத்தத்தில் இருப்பவர்கள் தங்களின் பிரச்சனைக்கு வடிகாலாக சிப்ஸ் போன்ற கொழுப்பு நிறைந்த நொறுக்குத் தீனிகளை அதிகமாக சாப்பிடுகின்றனர். இதனால் இவர்களையும் அறியாமல் உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கிறது என்பது மிகச் சரியான விளக்கம். மன அழுத்தம் அதிகரிக்கும் போது அதிகமாக உணவு உண்டு தன் மன அழுத்தத்தை போக்கிக் கொள்வது ஒரு சிலரின் ஆளுமைக் கூறு. இந்த நடத்தையை பற்றி உளவியலில் நிறைய ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதிக கொலஸ்ட்ரால் உண்டாக்கும் நோய்கள் அனைத்தையும் ஆசிரியர் பட்டியலிட்டு இருக்கிறார். இதன்மூலம் தெரியவருவது எல்லா நோய்களுக்குமே கொலஸ்ட்ரால் அதிகரிப்பு காரணமாக இருக்கிறது என்பதுதான். அதிகக் கொலஸ்ட்ராளுக்கான அறிகுறிகளை எவ்வாறு கண்டறியலாம் என்பது படங்களுடன் விளக்கப்பட்டிருக்கிறது. கொலஸ்ட்ராலின் அளவை கண்டறிய செய்யப்படும் சோதனைகளையும் விரிவாகவே விவரித்திருக்கிறார் ஆசிரியர். கொலஸ்ட்ரால் சோதனைகள் பற்றிய அடிப்படை அறிவு பெறவும், யார் எப்போது கொலஸ்ட்ரால் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற ஐயங்களைப் போக்கிக் கொள்ளவும் இவ்விவரங்கள் உதவியாக இருக்கும்.
கொலஸ்ட்ரால் என்னென்ன உணவுப் பொருள்களில் இருக்கின்றன? அதன் அளவு யாது? என்ற விவரப்பட்டியலையும், கொலஸ்ட்ராலை தடுக்க செய்ய வேண்டிய உடல் பயிற்சிகளையும், கொலஸ்ட்ரால் பற்றி நமக்கு ஏற்படும் பொதுவான சந்தேகங்களுக்கான விளக்கங்களையும் ஆசிரியர் எழுதியிருக்கிறார்.
புத்தகத்தை படிக்கும் உங்களை ஆச்சரியப்படுத்தும் சில விஷயங்களும் இருக்கின்றன:
1. உணவில் உள்ள கொழுப்பை நீங்கள் கட்டுப்படுத்தினாலும் உடலுக்குள் கொழுப்பு உற்பத்தியாகிக்கொண்டு தான் இருக்கும்!
2. அதிகப்படியான கொழுப்பினால்தான் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன என்ற கருத்தை ஆராய்சியாளர்கள் மறுக்கிறார்கள்!
3. முட்டையின் மஞ்சல் கருவில் கொலஸ்ட்ரால் மிகுதியாக இருந்த போதிலும் அதனால் பாதிப்பு பெரிதாக இருப்பதில்லை என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்!
4. குழந்தைகளுக்கு 2 வயதிலேயே கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்யலாம்!
5. மது அருந்தினால் மாரடைப்பை தடுக்கலாம் என்பது உண்மையே! என்பனதான் அந்த ஆச்சரியமான செய்திகள்.
மருத்துவ துறை சார்ந்த புத்தகமானாலும் ஆசிரியர் ஜனரஞ்சகமான முறையில் புத்தகத்தை எழுதியுள்ளார். “கொழுப்பு எம்.ஜி.யாரா அல்லது எம்.என்.நம்பியாரா! என கேட்பது, “ஒருவரது நடத்தையை வைத்து உனக்கு கொழுப்பு அதிகம்டா எனக் கடுப்பில் சொல்லாமே தவிர, அவரைப் பார்த்தவுடன் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் அல்லது இருக்காது என்று சொல்ல முடியாது” என்று எழுதியிருப்பது படிக்கும்போது மருத்துவ புத்தகம் படிக்கிறோம் என்ற உணர்வை குறைக்கிறது.
வயதில் மூத்த பேராசிரியர் ஒருவர் உடல் நலமின்மையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு போகும்போது மிகுந்த மன உளைச்சலுடன் வேண்டா வெறுப்பாகத்தான் போனார். ஒருவாரம் மருத்துவமனை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். சில மாதங்கள் கழித்து பேசிக்கொண்டிருக்கும் போது அவர் தான் மருத்துவனையில் சிகிச்சை பெற்ற அனுபவத்தை சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தார். இறுதியாக அவர் சொன்னது “வருடம் ஒரு முறை நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மருத்துவமனையில் 10 நாட்கள் அட்மிட் ஆகிவிடவேண்டும். வெளியே வரும்போது உடல் முழுவதும் ஓவர்ஹால் செய்தது போன்ற உணர்வும் தெம்பும் கிடைக்கும்” என்பது தான். மருத்துவமனையின் சிகிச்சை முறை பயந்து கொண்டு சென்றவரையே பாசம் கொள்ளச் செய்து விட்டது. அதைப்போல கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி என்ற இந்த நூலைப் முழுவதுமாக படிபவர்கள் மருத்துவ அறிவியலின் மீது நாட்டம் கொள்வார்கள்.
இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இங்கே செல்லுங்க: http://nhm.in/shop/978-81-8368-974-8.html
3 comments:
tramadol no prescription can i get high off tramadol - tramadol constipation
Buy this Book Online @ MyAngadi.com
http://www.myangadi.com/cholesterol-kuraippathu-eppadi-nalam-publications
Buy this Book Online @ MyAngadi.com
Post a Comment