உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Thursday, August 20, 2009

புத்தக விமர்சனம்

இந்திய ஆட்சிப் பணியை பல ஆண்டுகள் ஆற்றி பழுத்த அனுபவம் பெற்ற அ.கி.வெங்கடசுப்ரமணியன் அவர்கள் எழுதி மூன்று இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே ”மக்களாகிய நாம்” என்னும் நூல் வடிவம் பெற்றுள்ளது. ஆட்சிப் பணி ஆற்றி ஓய்வு பெற்றவர் எழுதிய புத்தகம் எனினும், புத்தகம் சிறந்த கல்விமான் ஒருவரால் எழுதப்பெற்றது போன்று திருக்குறளும், பாரதியார் பாடல்களும், புள்ளி விபரங்களும் புத்தகம் முழுவதும் அவ்வப்போது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.

குடியாட்சி (13 கட்டுரைகள்), உள்ளாட்சி (8 கட்டுரைகள்), கல்வி (6 கட்டுரைகள்) மற்றும் வாழ்க்கை (1 கட்டுரை) என நான்கு தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளை பொருத்தமாக பிரித்து வழங்கியிருக்கிறார் ஆசிரியர். முற்சேர்க்கையாக சிந்திக்க சில கருத்துக்கள் என அறிவுஜீவிகளின் கருத்துக்களை வழங்கியிருக்கிறார். ஒருமுறை மாணவர்-ஆசிரியர் கூட்டுப் போராட்டம் நடைபெற்ற போது, போராட்டத்தில் பேசிய மாணவர் தலைவர் ஒருவர் “முதலில் அவர்கள் யூதர்களை...... என்ற கருத்தை மேற்கோள் காட்டி பேசிய போது உச்சந்தலையில் மயிர் கூச்செரிதல் ஏற்பட்டு உடல் முழுவதும் எனக்கு சிலிர்த்தது. மீண்டும் அதே மேற்கோளை இப்புத்த்கத்தின் ஆரம்பத்தில் படித்த போது புத்தகத்தை படித்து முடிக்கும் வரை அதே உணர்வு என்னுள் நீடித்தது.

குடியாட்சி பற்றிய தன் முதல் கட்டுரையிலேயே எத்தனையாவது சுதந்திர தினம் என பெருமையுடன் எழுதி கொண்டாடுகிறோமே அதற்கு சரியான சவுக்கடி கொடுத்திருக்கிறார். முதுமை என்பது நாம் எந்த முயற்சியும் செய்யாமலேயே நம்மை வந்து அடையும். ஆனால் முதிர்ச்சி நாமாக ஏற்படுத்திக் கொண்டால் தான் உண்டு. அது போல சுதந்திரத்திற்கு பிறகு வருடங்கள் பல ஆகிவிட்டன. ஆனால் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா என்று வாசகரை கேள்வி கேட்டு மூத்த குடிமகன் ஆகியும் முதிரா இளைஞனாகத்தான் இந்தியா இருக்கிறது என பதிலும் தந்து விடுகிறார். அதற்கு உதாரணமாக தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தினை விளக்கும் ஆசிரியர் “19-ம் நூற்றாண்டில் பஞ்ச நிவாரணத்துக்காக ஆங்கிலேயே அரசு மேற்கொண்ட பணிகளையே மிகப் பெரிய அளவில் தொழில் நுட்ப வளர்ச்சி அடைந்துவிட்ட 21-ம் நூற்றாண்டிலும் நாம் மேற்கொண்டு இருக்கிறோம்” என கூறுகிறார்.

பொது ஜனம் அத்தனை பேரும் மழையில் நனையும் எறுமை மாடுபோல் ஆகிப் போனோம் என்று ஒத்துக்கொள்ளும் போது, மனிதனிமன் அறிவையும், மனித நேயத்தையும் வளர்க்கும் கல்விக் கூடங்களை நடத்த வேண்டிய அரசு அவற்றை தனியாரை நடத்தச் சொல்லி விட்டு மதுக்கடைகளை நடத்துவதில் ஆச்சரியம் இல்லை என்கிறார். ஆசிரியர் தீண்டாமை ஒழிக்கப்படவில்லை என்பதை மிக ஆணித்தரமாக Evidence என்ற அமைப்பு வெளியிட்ட புள்ளி விபரங்களுடன் விளக்கியிருக்கிறார். எதையும் முற்போக்கு சிந்தனையோடு செய்யாமல் அந்நியரை கைகாட்டிக் கொண்டிருக்கும் நமக்கு ஆசிரியர் சொல்லும் அறிவுரை “விடுதலைக்குப் பிறகு, வெள்ளையர்களை பொறுப்பாக்க முடியாது” என்பது தான்.

குடியாட்சி பகுதியில் இரண்டு கட்டுரைகள் காவல் துறை செயல்படும் விதம் பற்றியது. அண்மையில் ஒருவரின் மோட்டார் சைக்கிள் திருட்டுப் போனது. அவர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கச் சென்றார். உதவி ஆய்வாளரோ புகாரை வாங்கிக் கொள்ளாமல் “போய் நன்றாக தேடிப் பார்த்துவிட்டு உண்மையிலேயே காணவில்லை என்றால் ஒருவாரம் கழித்து வா” என்று அவரை திருப்பி அனுப்பி விட்டார். 15 நாட்கள் கழித்து சென்ற போது ஒரு வார காலத்திற்கு காவல் நிலையத்தில் அந்த பொறுப்பு உதவி ஆய்வாளரை சந்திக்க இயலவில்லை. பின்னர் அறிமுகமான உயர் காவல் அதிகாரி ஒருவரிடம் விசயத்தை எடுத்துக் கூறி உதவி வேண்டிய போது “நீங்கள் போய் அந்த உதவி ஆய்வாளரை பாருங்கள், நான் அவரிடம் சொல்கிறேன் என்று அனுப்பி வைத்தார். இம்முறை அந்த உதவி ஆய்வாளரை சென்று விஷயத்தை எடுத்துச் சொன்ன போது அவர் புகாரை பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை தரத் தயாராக இருந்தார். ஆனால் மேல் அதிகாரியிடம் எக்காரணம் கொண்டும் தெரிவிக்கக் கூடாது என்றும் நிபந்தையோடு ரூபாய் 100-ஐ பெற்றுக் கொண்ட பின்னரே புகாரை பதிவு செய்தார். இதை காவல் துறை மீது அளிக்கப்படும் மூன்று முக்கிய புகார்கள் என்னும் பகுதியில் 3வது புகாராக ஆசிரியர் விளக்கியிருகிறார். அதில் துளி அளவும் மிகை இல்லை என்பதற்கு நடைமுறையில் நிறைய ஆதாரங்களைக் கூறலாம்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தினை மிக முக்கியத்துவம் கொடுத்து விவரித்து இருக்கும் ஆசிரியர். அதன் எதிர்மறை விளைவுகளையும் கூறி வாசகர்களிடையே நல்ல விஷயத்திற்கு மட்டுமே இச்சட்டத்தினை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்க வேண்டும். உதாரணமாக கல்லூரி ஒன்றில் தற்காலிகமாக பணிபுரியும் ஆசிரியர் நிரந்தரமாக பணிபுரியும் ஆசிரியர் ஒருவரைப் பற்றி அவர் எத்தனை மணி நேரம் வகுப்பு எடுக்கிறார், அவர் பதவியின் பெயர் பதிவேட்டில் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பது போன்ற தெரிந்த எளிய விஷயங்களை தெரிவிக்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் முதல்வரை பணிக்கிறார். முதல்வரும் வழக்குறைஞர் ஒருவரை அமர்த்திக்கொண்டு அக்கேள்விகளுக்கு சட்ட நுனுக்கங்களோடு பதிலளித்தார். உடனே அடுத்த சில விவரங்களை கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கும் பதில் அனுப்பப்பட்டது. இவ்வாறு வேலையற்றா வீனர்கள், மூடர்கள் சரியாக பயன்படுத்தப்பட வேண்டிய கருவியை தவறாகப் பயன்படுதிக்கொண்டு இருக்கிறார்கள். காலத்தை விரயமாக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதும் உண்மையே.

கல்வி பகுதியில் செயல்வழிக் கற்றல் என்ற புதிய அணுகு முறையினை விளக்கமாக சொல்லியிருப்பதும், அதனை அறிமுகப்படுத்தியவர் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் எம்.பி.விஜயகுமார். இ.சூ.ப அவர்கள் என பெயரை குறிப்பிட்டு அனைவரும் அறிந்து கொள்ள செய்திருப்பதும் பாராட்டக்குறியது. மேலும் அரசு பள்ளியிலேயே கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் கட்ட அண்டா, குண்டாவை அடமானம் வைத்து படிக்கும் மாணவர்களின் கண்ணீரை துடைக்க ஊர்தலைவரும் மக்களும் உழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருப்பதும் பாராட்டக்குறியது.

நோய் சிறிதென்றாலும், பெரிதென்றாலும் மருத்துவமனையின் வாசலை மிதித்து விட்டால் அலைச்சல் தான். மேலும் சிறு நோயாக இருந்து விட்டாலும் மருத்துவமனியிலிருந்து வெளிவர சிபாரிசு தேவைப்படுகிறது. திருட்டு கொடுத்துவிட்டு போனாலும் திருடிவிட்டு போனாலும் நம் காவல் நிலையங்களில் மரியாதையும், மனிதாபிமானமும் ஒன்றுதான். குறை நிவர்த்தி செய்ய போனாலும் குற்றவாளியாகப் போனாலும் வழக்கு முடிய வருடங்கள் பலவாகும் தான். இவற்றை மனதில் கொண்டுதான் எனது பேராசிரியர் “ஒரு நல்ல மனிதன் முடிந்த வரையில் மருதுவமனை, நீதிமன்றம், காவல் நிலையம் ஆகியவற்றின் படிகளை மிதிக்காமல் இருப்பது நலம்” என்று அடிக்கடி கூறுவார்.

எல்லாம் தெரிந்தும் ஏன் பொதுமக்கள் எதையுமே செய்வதில்லை? மேலே சொன்னது கூட விடையாக இருக்கலாம். ஆயினும் புத்தகத்தில் மண்டேலாவின் சுயசரிதத்தில் இருந்து எடுத்து சொல்லி இருப்பது போல் “நாம் விதைக்கும் விதைகளுக்கும் வளர்க்கும் பயிர்களுக்கும் நாமே பொறுப்பு” அ.கி.வேங்கடசுப்ரமணியன் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ”மக்களாகிய நாம்” நூல் இனிவரும் இளைய தலைமுறையினர் படிக்க வேண்டிய பாடநூல்.
இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இங்கே செல்லுங்கள்:
http://nhm.in/shop/978-81-8493-061-0.html

1 comments:

Badri Seshadri August 30, 2009 at 6:18 AM  

அன்புள்ள செல்வராஜ்: நீங்கள் எழுதும் புத்தக அறிமுகங்களை கூர்ந்து படித்து வருகிறேன். அதிலும் “மக்களாகிய நாம்” பற்றிய நீங்கள் எழுதியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்துள்ளது. நன்றி. இதனை வேங்கட சுப்ரமணியனுக்கு அனுப்பி வைக்கிறேன்.

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP