உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Monday, August 10, 2009

சிறந்த வலைப்பதிவு விழா

சிறந்த வலைப்பதிவு விழா

Wednesday, July 22, 2009

புத்தக விமர்சனம்

மார்ட்டின் லூதர் கிங் சாத்வீகமாக போராடிக் கொண்டு இருந்தபோது அதே காலக்கட்டத்தில் தன் முஷ்டியையும் குரலையும் உயர்த்தி வெள்ளையர்களுக்கு எதிராக போர்ப்பிரகடனம் செய்த நாயகன் மால்கம் எக்ஸின் வரலாற்று நூல். உலகப் புகழ் நாயகர்கள் பலரை பற்றி எழுதியுள்ள மருதன் தனக்கே உரிய நடையில் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல் இது.

புத்தகம் படிக்க ஆரம்பித்து முதல் ஐந்தாம் அத்தியாயம் முடியும் வரை படிப்பது எல்லாம் Juvenile delinquent என்று அழைக்கப்படும் ஓர் இளம் குற்றவாளியைப் பற்றி படிப்பது போல் இருக்கிறது. மால்கம் எக்ஸ் என்னென்ன செய்தார் என்பதை தமிழ்ப்பட நாயகன் ஆரம்பத்தில் ஓர் தறுதலையாக அலைவதைப் போல் விளக்கியிருக்கிறார் ஆசிரியர். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டுக் கொள்கிறான் வெள்ளை காவலர்களிடம் பத்தாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படும் போது 20 வயது மட்டுமே நிறைந்த ஓர் தனியாள் மால்கம் எக்ஸ். மது, மாது, வழிப்பறி, கொள்ளை, போதை வஸ்துகள் விற்பனை என எல்லாவற்றிலும் ஈடுபட்டு கிடைத்ததை உண்டு, கிடைத்ததைக் குடித்து கிடைத்த இடத்தில் சுருண்டு படுத்து காலத்தைக் கழித்த ஓர் இளைஞனுக்கு இதைவீட வேறு என்ன கிடைத்துவிடப் போகிறது? குற்றப் பின்னனியை மட்டும் விவரிக்கவில்லை நூலின் ஆசிரியர். ஏன் ஓர் கறுப்பு இளைஞர் இப்படி வாழ்ந்தான்? என்பதற்கு கறுப்பர்களின் மேல் அரசும் வெள்ளையர்களும் காட்டிய பாகுபாட்டை விளக்கமாக எடுத்துச் சொல்லி நமக்கு புரிய வைக்கிறார் ஆசிரியர்.

கட்டுக்கடங்காத காளையாக திமிரோடு சுத்திக் கொண்டு அட்டூழியம் செய்து வரும் ஓர் ரவுடி யார் புத்திமதி சொன்னாலும் கேட்க மாட்டான். திடீரென அவன் வாழ்க்கையில் ஓர் அனுபவம் ஏற்படும். அந்த அனுபவம் அவன் வாழ்க்கை பாதையையே மாற்றி விடும். ரவுடி அவனைப் போல் ஓர் ஆள் இந்த ஞாலத்தில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு மிக மிக நல்லவனாக மாறி விடுவான். நல்லவன் கெட்டவனாகவும், கெட்டவன் நல்லவனாகவும் மாறுவது மட்டுமல்ல போரளி புனிதனாக மாறுவதும் இப்படித்தான். அரவிந்தர் ஆசிரமம் அமைத்தது ஆன்மீகப் பாதையில் அடியெடுத்து வைத்தது எல்லாமே அவர் தம்பிக்கு ஏற்பட்ட நோயும், அதில் இருந்து அவர் மீண்ட விதமும் தான். இதை உளவியலில் Quantum personality change என்று அழைக்கிறோம். அத்தகைய ஆளுமை மாற்றம் மால்கம் எக்ஸ் வாழ்வில் அவர் சிறையில் இருக்கும் போது ஏற்படுகிறது.

நேஷன் ஆப் இஸ்லாம், எலிஜா என மால்கமின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பைபிளை போதிக்கும் பாதிரியரை வெட்கிக் தலைகுனிந்து வெளியேற்றும் அளவுக்கு மால்கம் மனதில் insight ஏற்படுகிறது. கனவுகளோடு உழைக்கும் போது காதல் ஏற்படாமல் போகாது என்பதற்கேற்ப பெட்டி என்னும் பெண்ணை காதலித்து மணந்து கொள்கிறார் மால்கம் எக்ஸ். பெட்டியும் பெண் குழந்தைகளும் என வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டு இருக்கும்போது எலிஜா தன் வாழ்வில் ஏற்படுத்திக் கொண்ட மாற்றங்களால் எக்ஸ் கடும் மன உளைச்சளுக்கு எப்படி ஆளாகிறார் என்பதை சில அத்தியாயங்கள் விளக்குகின்றன.

மார்டின் லூதர் கிங், மால்கம் எக்ஸ் இருவரும் ஒரு நோக்கத்திற்காக இரு வேறு பாதைகளில் பயணம் செய்தவர்கள் என்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டுவதோடு இருவரும் சந்தித்து கொண்ட சூழ்நிலைஅயை தத்ரூபமாக நமக்கு படம் பிடித்து நமக்கு விளக்குகிறார். உலகம் ஓர் புத்தகம் அதை சுற்றிப்பார்க்க பார்க்கத்தான் ஒரு புத்தகத்தை படிக்கும் போது பல விஷயங்களை தெரிந்து கொள்வது போல நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் முடியும். எலிஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹஜ் பயணம் புறப்படும் மால்கம் ஆப்ரிக்க நாடுகள் பலவற்றையும் சுற்றி ஹஜ் பயணத்தை முடித்து அமெரிக்கா திரும்பும் போது அவர் சந்தித்த பல்லாயிரக்கணக்கான மக்கள், அவர்களோடு உரையாடியபோது கிடைத்த அனுபவங்கள் ஆகியவை மால்கமை முற்றிலும் மாற்றிவிடுகின்றன. வெறுப்புக்கு வெறுப்பே தீர்வாகாது என்பதை உணர்ந்து கொள்கிறார் மால்கம் இந்த மாற்றமே தான் அவர் மரணத்திற்கு காரணமாக இருக்குமோ என்பதை இறுதி அத்தியாயங்கள் மறைமுகமாக உணர்த்துகின்றன. ஆனால் உலகில் எந்த பிரச்சனைக்கும் தீர்வு அகிம்சையே என்ற அண்ணல் காந்தியின் தத்துவமே இப்புத்தகத்தை படிக்கும்போது மனதில் உயர்ந்து நிற்கிறது.

புத்தகத்தை முடிக்கும் ஆசிரியர் “மால்க்கம் எக்ஸின் தேவை முனெப்போதையும் விட இப்போது அதிகரித்து இருக்கிறது. ஆவேசமும் துடிதுடிப்பும் மிக்க ஒரு கலக்காரராக மால்க்கம் எக்ஸ் இன்று பார்க்கப்படுகிறார், கொண்டாடப்படுகிறார். மால்கம் எக்ஸின் சகாப்தம் முடிந்துவிடவில்லை” என முடிக்கிறார். கால வரிசைப்படி பின் இணைப்புகள் இரண்டு சேர்க்கப்பட்டிருக்கின்றன இவற்றில் மால்கம் எக்ஸின் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளையும் எழுத உதவிய நூல்கலையும் இணையத்தளங்களையும் விரிவாக கொடுத்திருக்கிறார் ஆசிரியர். இணையத்தளங்கள் மிகவும் தகவல் தரக்கூடியவையாக உள்ளன.

வெள்ளை இனவெறிக்கு எதிராகப் போர்க்குரல் கொடுத்த கருஞ்சிறுத்தையின் வீரகாவியம், தனிமனிதனின் வாழ்வில் ஓர் சமுதாயத்தின் தாக்கம், ஓர் இனம் தாழ்வு நிலையில் இருப்பதற்கான எதார்த்தமான காரணங்கள், தனிமனிதன் தான் உயர்வாக பூஜிக்கும் ஒருவரால் உயர்வதும் தாழ்வதும் இயல்பே என்பது என வாழ்வியல் தத்துவங்களை நமக்கு உணர்த்துகிறது. மருதனின் ”மால்கம் எக்ஸ்” மனதில் நிற்கக்கூடிய படைப்பே.

இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இங்கே செல்லுங்கள்:
http://nhm.in/shop/978-81-8368-866-6.html

Monday, June 29, 2009

ஆபாச சி.டி மோகம் (page 1) – ஜுனியர் விகடன் 01-07-2009

ஆபாச சி.டி மோகம் (page 2) – ஜுனியர் விகடன் 01-07-2009

Sunday, June 21, 2009

புத்தக விமர்சனம்

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு

என்ற ஒரு குறளை மட்டும் மையமாக வைத்து அதற்கு விரிவான விளக்கவுரை எழுதினாற் போன்று வெளிவந்துள்ள புத்தகம் தான் “செல்வம் சேர்க்கும் விதிகள்” நூலாசிரியர் ரிச்சர்ட் டெம்ப்ளர் செல்வ செழிப்போடு விளங்க சிறப்பான 100 விதிகளை முன்வைத்திருக்கிறார். இந்த நூல் ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் அதனோடு தொடர்புடைய விதிகள் விளக்கப்பட்டுள்ளன.

‘நினைப்புதான் பிழைப்பை கெடுக்கிறது’ என்று சொல்லியே நம்மை எதையும் நினைத்துப்பார்க்க கூட விடாத மனநிலையை கொண்டிருக்கும் சமயத்தில், அதுதான் செல்வந்தராக விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது என்ற விழிப்புணர்வை 18 விதிகளைக் கொண்டு விளக்கியிருக்கிறார் ரிச்சர்ட் டெம்ப்ளர் இந்த பகுதியை படிக்கப் படிக்கவே தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட்டு நம்மை உயர்வு மனப்பான்மை கொள்ளச் செய்கிறார். சமுதாயத்தில் ஒருபுறம் பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் இன்னொரு புறம் மேலும் மேலும் ஏழைகளாகவும் ஆகிக் கொண்டிருக்கிறார்கள் என்ற அங்கலாய்ப்புக்குக் காரணம் ஏழைகள் தங்களுடைய சூழ்நிலை, பின்புலம், வளர்ப்பு ஆகியவற்றின் காரணமாக ‘எனக்கு வேண்டாம்’ என்ற மனநிலையுடன் பணம் சேர்க்கும் விஷயங்களை அனுகுவது தான் என்ற ஏழ்மையின் உளவியலை எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.

நூலைப் படித்தால் பணக்காரர்களின் பண்புகளை தெரிந்து கொள்ளலாம். கடுமையாக உழைப்பவர்கள், ஒரு மாதத்தில் செய்யக் கூடிய வேலையை ஒரு நாளில் செய்பவர்கள், பணம் சம்பாதிப்பதை வேடிக்கை போல புன்னகையுடனே செய்பவர்கள் என பணக்காரர்களின் குணங்களை கூறியிருக்கிறார் ஆசிரியர். பணக்காரர்கள் பணத்தால் வாழ்கிறார்கள், பணத்தால் மூச்சு விடுகிறார்கள், பணத்தால் தூங்குகிறார்கள் எனவே நீங்களும் பணக்காரராக வேண்டுமானால் அவர்களோடு பேசிப்பாருங்கள், அவர்களை எப்படி பணக்காரர்களாக மாறினீர்கள் என்று வேள்வி கேளுங்கள், அவர்களின் வாழ்க்கை முறையை கூர்ந்து கவனியுங்கள் என்று கூறியிருப்பது யதார்த்த அணுகுமுறையும் பயிற்சியும் ஆகும். முதல் பகுதி மொத்தமாக உங்களின் மனோதத்துவத்தை மாற்றியமைக்கும். பணக்காரராக மாற வேண்டும் என்று மன அளவில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வரை பணக்காரராக வாய்ப்பில்லை. அதுவே மிகவும் முக்கியம் என்ற அடிப்படையை மையமாக வைத்தே முதல் பகுதியின் எல்லா விதிகளும் எழுதப்பட்டுள்ளன.

நிறையப் பேர் பணத்தை தேடிப் போகாததற்கு காரணம் அவர்கள் நிம்மதியை நாடிச் செல்வது தான். பணம் வரவர நிம்மதி குறையும் என்பது பரவலான நம்பிக்கை. ஓசோவும் கூட

“பணத்தை அடைந்தான் தூக்கத்தை இழந்தான்,
தூக்கத்தை அடைந்தான், பணத்தை இழந்தான்’ என்று கூறி எதாவது ஒன்றைத்தான் உங்களால் அடைய முடியும் என்று போதனை செய்திருக்கிறார். ஆனால் இப்படியெல்லாம் நடந்தால் நீங்கள் பணத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம் என கூறும் டெம்ப்ளர், பணமும் சம்பாதிக்கலாம் – நிம்மதியாகவும் தூங்கலாம் என அதற்கான வழிமுறைகளையும் சொல்கிறார்.

இரண்டாவது பகுதியில் விவரிக்கப்பட்டுள்ள விதிகள் அனைத்துமே செல்வந்தராவதற்கான நடைமுறை சாத்தியங்களை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளன. செல்வந்தராவதற்கு அவர்களைப் போன்ற தோற்றம் அவசியம். நேர்த்தியாக உடையணிந்து உற்சாகமாக செல்லும்போது பிறர் நம்மை வரவேற்பதற்கும் சற்றே சரியில்லாமல் ஏனோதானோ என்று உடையணிந்து செல்லும்போது பிறர் நம்மை வரவேற்பதற்கும் நிறைய வித்தியாசத்தை நான் கண்டிருக்கின்றேன். ஒருநாள் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது வேகவேகமாக கார்கள் சென்று கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது ஒரு காரே இவ்வளவு வேகமாக செல்கிறதே, இரண்டு கார்கள் ஒன்று சேர்ந்தால் எல்லா கார்களையும் விரைவில் கடந்து சென்று விடுமே என்று நினைத்தேன். வீட்டுக்கு வந்து சேரும் போது நாம் ஒரு ஆள் வேலையை மட்டுமெ செய்து கொண்டிருக்கிறோம் இரண்டு ஆள் வேலையை செய்தால் முன்னேறி விடுவேன் என்ற யோசனை மனதில் தோன்றியது. கடுமையாக உழைப்பைத் தவிர வேறு எதையும் டெம்ப்ளர் முன் வைப்பதில்லை. ஆனால் சிறுசிறு குறிப்புகளை கொடுக்கிறார். நமக்காக உழைக்க வேண்டும், பணம் வரும் வழியிலேயே உழைக்க வேண்டும். பணக்காரராக வேண்டும் என்பதற்காக சிறு சிறு செலவுகளை கூட செய்யாமல் கஞ்சனாக இருக்க வேண்டியதில்லை என்பது போன்ற நுணுக்கமான குறிப்புகள் நாம் நம்பி வந்தவைகளை மற்றி சரியான பாதைய்யில் நம்மை செலுத்தும் வல்லமை கொண்டவை. பங்கு மார்கெட் பற்றியும் விரிவாக விளக்கியிருக்கிறார் டெம்ப்ளர். அதற்கென சில விதிகளை நிறுவி பங்கு மார்கெட்டின் அடிப்படையை புரிந்து கொள்ள செய்திருக்கிறார்.

பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் இல்லையே என நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு டெம்ப்ளர் சொல்வது “வாய்ப்புகள் நிறைய உள்ளன, அவைகளை நீங்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டால் போதும் உதைத்து ஸ்டார்ட் செய்ய வேண்டியது தான் நம் வேலை” என்பதாகும்.

செல்வந்தராவதற்கான வழிகளை சொன்ன இரண்டாம் பகுதியை கடந்து மூன்றாம் பகுதிக்குள் நுழைந்தால் இன்னும் பெரிய செல்வந்தராக அங்கே பல வழிகள் கூறப்பட்டுள்ளன. முயல் பண்ணை உதாரணம் மிகவும் சிறப்பானது. புதுவித சிந்தனை கொண்டிருப்பது, நவீன அறிவியில் முன்னேற்றங்களை பயன்படுத்திக் கொள்வது, விசய ஞானத்தை வளர்த்துக் கொள்வது, தன்னைம்பிக்கை ஆகியவற்றை இப்பகுதியில் விளக்கியுள்ளார் ஆசிரியர்.

செல்வந்தராக நிலைக்கவைக்க 4ம் பகுதி விதிகளைச் சொல்கிறது . குறைவாக செலவு செய்து பணக்காரனாகப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டு சீக்கு கோழியையும் சாயம் போகும் சட்டைகளையும் வாங்கி பணம் முழுவதையும் எப்படி வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள் சிலர் என்று விளக்கியிருப்பது இந்த பகுதியின் சிறப்பாகும்.

பகுதி 5 சம்பாதித்த செல்வத்தை பிறரோடு பகிர்ந்து கொள்வதை விளக்கும் விதிகளை கொண்டுள்ளது. உங்களிடம் இருப்பதை உலகிற்கு கொடுங்கள். அது இரட்டிப்பாக உங்களுக்கு திரும்ப வரும் என்ற தத்துவத்தை அடிப்படையாக கொண்டது இப்பகுதி. ஆனால் எப்படி கொடுக்க வேண்டும் எவற்றுக்கில்லாம் கொடுக்க வேண்டும் என்ற எச்சரிக்கைகள் பல தெரிவிக்கப்பட்டுள்ளன.

புத்தகத்தில் உள்ள 100 விதிகளையும் படித்து முடித்தவுடன் நிறைய விதிகள் நமக்கு முன்பே தெரிந்தவைகள் போன்ற உணர்வு ஏற்படுகிறது அதை உணரும்முன்பே “நிறைய விதிகள் உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கலாம். ஆனால் தெரிந்தவற்றை எத்தனை பேர் நடைமுறையில் செயல் படுத்துகிறீர்கள்” என்று கேள்வி கேட்டு நடைமுறையில் பலவீனர்களாக இருப்பதையும் சுட்டிக்காட்டி விடுகிறார் டெம்ப்ளர்.

“வாத்தை போலவே வாலாட்டுகிறது வாத்தை போலவே கத்துகிறது என்றால், அது வாத்தாகத்தான் இருக்கும்” என்று ஒரு விதியில் டெம்ப்ளர் குறிப்பிடுகிறார் அதைப்போல ஒரு சிறந்த புத்தகத்தைப் போல தோற்றமளிக்கிறது. ஒரு சிறந்த புத்தடகத்திற்கான கருப்பொருளை கொண்டுள்ளது. அப்படியானால் செல்வம் சேர்க்கும் விதிகள் ஒரு ...............

இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இங்கே செல்லுங்கள்:
http://nhm.in/shop/978-81-317-2560-3.html

Wednesday, June 17, 2009

பள்ளிகள்தோறும் வேலைவாய்ப்பு வழிகாட்டு நிகழ்ச்சி – தினமணி 14.06.2009

Thursday, May 14, 2009

புத்தக விமர்சனம்

கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ரிச்சர்ட் டெம்ப்ளர் எழுதிய நிர்வாக விதிகள் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு நிர்வாகிகளுக்கான புத்தகம் மட்டுமல்ல சாதாரணமான, எதையாவது சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் கொண்ட மனிதர்களுக்கும் ஊக்கமூட்டும் நூல்.

ஒரு விளம்பரத்தில் ஒரு பெண் நோட்டீஸ்களை நிறைய கையில் வைத்துக் கொண்டு, அவ்வளியே போவோர், வருவோருக்கெல்லாம் கொடுத்துக் கொண்டிருப்பாள். நோட்டீஸை வாங்கும் அனைவருமே அதை பிரித்துக் கூட பார்க்க மாட்டார்கள். போகிற போக்கில் கசக்கி தூர எறிந்து விட்டு சென்று விடுவார்கள். இதைக் காணும் அப்பெண் மிகுந்த மனக் கவலையுடன் செய்வதறியாது நின்று கொண்டிருப்பாள். அப்போது அவ்வழியே வரும் ஒரு இளைஞன் அப்பெண்ணின் காதருகே சென்று ஓர் இரகசியத்தை கூறி விட்டுச் செல்வான். அடுத்ததாக ஒருவர் வரும்போது அப்பெண் ஒரு நோட்டீஸை எடுத்து நன்கு கசக்கி வருபவரின் கைகளில் கொடுப்பாள். வாங்கியவரோ அதிர்ச்சிக்குள்ளாகி விடுவார். ஏன் இந்தப் பெண் புதிய நோட்டீஸை கசக்கிக் கொடுக்கிறாரள்? என்ற கேள்வி அவரைத் துளைக்க நோட்டீஸை பிரித்து படிக்க ஆரம்பிப்பார். இதுதான் மனித இயல்பு. புதிதாக கொடுத்தால் கசக்கி வீசுவார்கள், கசக்கிக் கொடுத்தால் பிரித்துப் பார்ப்பார்கள். ரிச்சர்ட் பெம்ளரும் இதெ உத்தியைத் தான் பயன்படுத்துகிறார். என் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள் என்று கெஞ்சும் ஆசிரியர்களை விட்டு விலகி நின்று வித்தியாசமாக நான் கூறுவது போல் இல்லாவிட்டால் “வேறு புத்தகத்தை படிக்கச் செல்லுங்கள்” என்று வாசகர்களை மறைமுகமாக படிக்கத் தூண்டுகிறார். மேலும் தன் புத்தகம் எல்லோரிடமும் சென்றடைய எண்ணி “என் புத்தகத்தை படித்ததை இரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள், வேறு யாரையும் இதைப் பார்க்க அனுமதிக்காதீர்கள்” என்று சொல்லி புத்தகத்தை முடிக்கிறார்.

100 விதிகளைக் கொண்ட புத்தகத்தை இரண்டாக பிரித்துக் கொள்ளலாம். 34 விதிகள் பிறரை நிர்வகித்தல் பற்றியவை, 66 விதிகள் தன்னை ஒருவர் தரமாக்கிக் கொள்ள சொல்லப்பட்டிருப்பவை.

பிறரை நிர்வகித்தல் பகுதியில் நிறுவப்பட்டுள்ள விதிகள் பல நவீன மேலாண்மைக் கோட்பாடுகளை கடந்து வலுவான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியவை. கூட்ட நேரத்தை 3 மணி என்று போடாமல் 3.45 என்று அறிவிப்பவரே புதுமை விரும்பி, அவரே வெற்றியாளர், வித்தியாசமானவர் என்று கூறும் விதி 4 நிர்வாகத்தில் புதுமை புகுத்துதலின் அவசியத்தை வலியுறுத்துகிறது. நாணயத்தோடு பேச வைக்கும் நுட்பம் அணைவரையும் கவரக் கூடியது.

படுக்கையில் சிறுநீர் போகும் குழந்தையை அடித்துத் திருத்த முடியுமா? அதற்கு பதிலாக இன்று இரவு நீ படுக்க்கையில் சிறுநீர் கழிக்காமல் இருந்தால் நாளை காலை உனக்கு ஓர் மிட்டாய் கொடுப்பேன் என்று கூறிப்பாருங்கள் குழந்தை படுக்கையில் சிறுநீர் போய் விட்டு, “நான் படுக்கையில் சிறுநீர் கழிக்கக் கூடாது என்றுதான் இருந்தேன் ஆனால் அவசரத்தில் போய்விட்டேன், நாளை முயற்சி செய்கிறேன்” என்று அடுத்த நாள் காலையில் எழுந்ததும் உங்களிடம் வந்து கூறும். நல்லது, நீ முயன்றதே பெரிய விஷயம், இந்தா ஒரு மிட்டாய், நீ விரைவிலேயே படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்திக் கொள்வாய் என்று எனக்கு மிகுந்த நம்பிக்கையிருக்கிறது என்று கூறி மிட்டாய் கொடுத்துப்பாருங்கள். விரைவிலேயே அக்குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்திக் கொள்ளும். சீனப் பழமொழியோடு ஆரம்பிக்கும் விதி 10 (அவர்கள் தவறு செய்யட்டும்) நமக்கு உணர்த்துவது இதைத்தான்.

திருட்டுப் போகாமல் பொருட்களை ஒருவர் பத்திரமாக காப்பாற்றிக் கொள்கிறார். அதில் அவர் வல்லவர் ஏனெனில் அவர் திருட்டுக் கொடுத்தவர். பலரும் பாராட்டும் விதத்தில் துணி மணிகளை வாங்குவதில் ஒருவர் வல்லவர் ஏனெனில் அவர் அசிங்கமான சட்டைகள் பலவற்றை வாங்கி முடித்தவர். இவர்களைப் போல நல்ல நிர்வாகியாக மாற ஆட்டைத் தொழுவத்திலும் மாட்டை கொட்டிலிலும் கட்டுவதை போன்ற தவறான முடிவுகள் பலவற்றை இளம்வயதிலேயே எடுங்கள். விரைவிலேயே நீங்கள் முடிவெடுப்பதில் திறமையானவராக மாறி விடுவீர்கள் என்று உணர்த்துகிறது விதி 11.

செவிலியர் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சொல்லித்தரும் முதல் பாடம் மருத்துவமனைக்கு வரும் மனிதர்களை நோயாளிகளாகப் பார்க்காமல் நோயோடு வந்துள்ள ஓர் மனிதர் என்றே காண வேண்டும் என்று தான். அதுவே மனிதநேய அணுகுமுறை. இன்றைய சூழலில் மனிதநேய அணுகு முறையே வலிமை பெற்று வளர்ச்சியடைந்து வருகிறது இதையே

“மலைகளையே அசைக்கும் மாமனிதனாக இருந்தாலும் சரி,
கார் கதவை திறந்து விடும் சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி........
அவரவர்க்கு உரிய மரியாதையை தராவிட்டால் ..........
என விதி 20 எச்சரிக்கிறது.

வாயைத் திறந்து எதையும் சொல்லாமல் மனதுக்குள்ளேயே நினைத்துக் கொண்டிருந்தால் வேலை நடக்காது. அழுகின்ற பிள்ளைக்கே பாலூட்டப்படும் என்பதை விதி 30ன் சாராம்சத்தில்

“அவர்களிடத்தில் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை ஆரம்பத்திலேயே அறியச் செய்துவிடுவது நல்லது” என்று ஆசிரியர் வலியுறுத்துகிறார்.

மொத்தத்தில் 34 விதிகளையும் கடைபிடித்தோமானால் பிறரை நிர்வாகம் செய்வது 43% மேம்படும் என்பது என் கணிப்பு.

பகுதி 2 நம்மை மேபடுத்திக் கொள்ள உண்டாக்கப்பட்ட 66 விதிகளை கொண்டுள்ளது. இந்தப் பகுதியைப் படித்தபோது இரண்டு உளவியல் விஷயங்களை ஆசிரியர் எப்படி விதிகளாக மாற்றிக் கொடுத்துள்ளார் என்பது நினைவுக்கு வருகிறது. ஒன்று வேலை என்னும் போதைக்கு அடிமையாதல். சிலர் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டால் பின்னர் எப்போதும் போதை இல்லாமல் இருக்க மாட்டார்கள். அதைப்போல சிலர் வேலைக்கு அடிமையாகிவிடுவர். அவர்கள் எப்போது வேலை வேலை என்றே சுற்றிக் கொண்டு இருப்பார்கள். இரண்டு நாள் சேர்ந்தாற்போல் விடுமுறை வந்தால் அதை அவர்களால் கழிக்க முடியாது. இவ்வாறு இருப்பது ஓர் ஆளுமைக் குறைபாடே. இதையே விதி 38 விளக்குகிறது (வேலை உங்களை விழுங்கி விட வேண்டாம்.)

தங்கப்பதக்கம் சிவாஜி கனேசன் முதல் இன்று நேரமில்லாமல் உழைக்கும் பல காவல் துறை அதிகாரிகள் வரை பலருடைய குடும்பத்திலும் குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டுவர முடியவில்லையே என்ற கவலை மேகம் கண்ணீர் மழையை பொழிந்து கொண்டிருக்கிறது. ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியுமா? எப்போதும் வேலை – வேலை என்று தொழிலையே கவனத்தில் கொண்டிருப்பதால்தான். இந்தப் பிரச்சனை சரிசெய்ய தற்போது பணி-வாழ்வு சமநிலை என்ற கோட்பாடு உலகம் முழுவது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நேரமெ இன்றி உழைத்தால் முன்னேறி விடலாம் என்று இருப்பவர்களை பணி-வாழ்வு சமநிலை என்ற தத்துவத்தை முன்னிறுத்தி “என் இனிய நண்பர்களே, வீட்டுக்குச் செல்லுங்கள்” என்று விடைகொடிக்கிறார் ரிச்சர்ட் டெம்ளர் (விதி 71).

தொழில்நுட்ப கல்வி கற்று வெளிவரும் மாணவருக்கோ அல்லது மேலாண்மை கல்வி கற்று வரும் மாணவருக்கோ அவர் கற்ற கல்வியை அடிப்படையாக வைத்து தற்போது யாரும் வேலை அளிப்பதில்லை. நிகழ்காலத்தில் Soft skills எனப்படும் மென் திறன்களை சோதித்தே ஒருவருக்கு வேலை கொடுக்கிறார்கள் புதுவிதசிந்தனை, விரிந்த சிந்தனை, மன அழுத்த மேலாண்மை குறைவாக செயல்படும் நிர்வாகம் என மென் திறன்களை நிர்வாக விதிகளாக மாற்றி வாசகர்களின் மனதில் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.

ஒரு புத்தம் படிப்பது நீண்ட பயணம் செய்வதை போன்றது. வழியில் திடீரென ஓர் பசுமையான கிராமத்தை காண்போம். பின்னர் உயிர் உள்ளவரை எந்நாளும் அந்நினைவு நம் மனதை விட்டு அகலாது. ரிச்சர்ட் டெம்பலரோடு பயணம் செய்த போது நானும் ஓர் மனதை விட்டு அகலாத பசுமையான கிராமத்தைக் கண்டேன். அது

“என் அம்மா என்னிடம் சொன்னார்” நீ ஓர் படை வீரனானால் பின்பு அதற்குத் தளபதியாகவும் ஆவாய், நீ ஓர் பாதிரியானால் போப்பாக நிறைவு பெறுவாய், பதிலாக நான் ஓவியனாகி, பிக்காஸோவாக நிறைவு பெற்றேன்” என்ற பிகாஸோ சொன்ன வாக்கியங்கள் தான்.

இப்புத்தகம் நீங்களும் சுகமாக பயணம் செய்வதற்கேற்ற நல்ல பாதை. புறப்படுங்கள்.

இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இங்கே செல்லுங்கள்: http://nhm.in/shop/978-81-317-2559-7.html

Sunday, May 10, 2009

தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்களின் பெற்றோருக்காக – தினமலர் 10.05.2009

Thursday, April 2, 2009

புத்தக விமர்சனம்

பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர் வோல்ட்டேரின் நாவல் கேண்டீட் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளில் ஒன்றாக கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடப்படும் இந்த ப்ரெஞ்சு நாவல் கேண்டீட்டை பத்ரி சேஷாத்ரி மொழிபெயர்த்துள்ளார். கிழக்கு பதிப்பகம் நூலை வெளியிட்டுள்ளது.

மனிதர்களின் இயல்புகளைப் பற்றி இரண்டு கோட்பாடுகள் உள்ளன. ஒன்று கோட்பாடு X. இன்னொன்று கோட்பாடு Y. மனிதர்கள் சோம்பேரிகள், அடிப்படையில் பொறுப்புள்ளவர்கள், அறிவீனர்கள், ஏமாற்றுக்காரர்கள், அவர்களை எப்போதும் கண்கானித்து மேலாண்மை செய்து வந்தால் மட்டுமே நல்ல நிலையில் வைத்திருக்க முடியும். கொஞ்சம் தளர்வான அணுகுமுறையைக் காட்டினாலும் வேலையைக் காண்பிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்ற கோட்பாடுகளை வழியுறுத்துவதே கோட்பாடு X ஆகும். இதனடிப்படையில் பார்த்தால் உள்ளுணர்வின் அடிப்படையில் இயங்கி இச்சையை நாடும் விலங்கைப் போன்றவனே மனிதன். மாறாக மனிதர்கள் அறிவுள்ளவர்கள், சுயனலமில்லாதவர்கள், நன்முறையில் சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்கள். பொறுப்பேற்று செய்ல்படக்கூடியவர்கள், அவர்களை கண்கானிக்கத் தேவையில்லை, அவர்கள் போக்கிலேயே விட்டுவிடலாம். அவரவர் வாழ்க்கையை நிர்ணயித்துக் கொள்ள அவரவர் வழிகளைத் தேடி இயங்குவர் என்ற கருத்துக்களை கொண்டது கோட்பாடு Y ஆகும். இதனடிப்படையில் பார்த்தால் மனிதர்கள் போற்றத்தகுந்தவர், மரியாதைக்குரியவர்கள்.

இந்த இரண்டு கோட்பாடுகளில் சரியானது எது என்று இன்னும் தீர்மாணமாக யாரும் சொல்லவில்லை. ஒரு சமயத்தில் கோட்பாடு X தான் சிறந்தது என்பதை நிரூபிக்க பல ஆதாரங்கள் அடுக்கடுக்காக கிடைக்கும். இன்னொரு சமயத்தில் கோட்பாடு Y தான் சரி என்று எடுத்துரைக்கும் வண்ணம் ஏராளமான நிகழ்வுகள் ஏற்படும். எனவே இரண்டு கோட்பாடுகளுமே இன்றளவும் இருக்கின்றன. கேண்டீட், கதாநாயகி குனிகொண்டே, ஜமீந்தார், தத்துவவாதி பாங்க்லாஸ், இன்னொரு தத்துவவாதி மார்ட்டின், விசுவாசி ககாம்போ என பல பாத்திரப்படைபுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த நாவலும் மனிதர்கள் நல்லவர்களா? அல்லது கெட்டவர்களா? என்று அலசி ஆராய்ந்து விட்டு தீர்வு எதுவும் சொல்லாமல், நல்லவர்களும் உண்டு, சுயநலவாதிகளும் உண்டு. ஆனால் அதைப்பற்றிக் கவலைப்படவேண்டாம், வேலையைப் பார்ப்போம் என வேறு பாதையில் வண்டியை திருப்பி விடுகிறது.

எளிமை, அடுத்தவரை நம்பும் தன்மை ஆகிய பண்புகளைக் கொண்ட கதாநாயகன் கேண்டீட் கதையில் முதல் அத்தியாயத்திலேயே காதல் வயப்பட்டு விடுகிறான். ஜமீந்தாரின் பதினேழு வயதான அழகான மகள் குனிகொண்டே தான் காதலி. சூடான தோசைக் கல்லை தொட்டவுடன் கை பழுத்துவிடுவது போல் காதலை தொடங்கியவுடன் சரியான அடி கொடுக்கிறார் ஜமீந்தார். கோட்டையை விட்டு துரத்தப்படும் கேண்டீட், இந்த உலகத்தின் இயல்பு என்ன என்று உங்களுக்கு காண்பிக்கிரேன் வாருங்கள் வாசகரே என்று நம்மை அழைத்துக் கொண்டு புறப்படுகிறான். இரண்டாவது அத்தியாயத்திலேயே இது ஆரம்பித்து விடுகிறது.

பல்கேரியர்களிடம் அடிவாங்கி கழுத்திலிருந்து அடித்தொடை வரை ஒவ்வொரு தசையும் நரம்பும் பிய்ந்து தொங்கும் போதும் சரி, வாழ்க்கையில் கடுமையாக நோய்வாய்ப்படும் சமயத்திலும் சரி, அல்லது தன் காதலி குனிகொண்டேயை மீண்டும் மீண்டும் இழக்கும்போதும் சரி, கேண்டீட்டை வழிநடத்துவது தத்துவவாதி பாங்க்லாஸின் தத்துவங்கள் தான். எதுவும் இப்போது இருப்பதை விட சிறப்பானதாக இருக்க முடியாது, உருவாக்கப்பட்ட அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காகவே எண்ணும் போது, அந்தக் காரணம் மிகச் சிறப்பான காரணமாகத்தான் இருக்க வேண்டும். எல்லாம் மிகச் சிறப்பானதற்கே என்பதே பாங்காலாக்ஸின் அடிப்படைத் தத்துவம். அடுத்தடுத்த சோதனைகளை கதாநாயகன் சந்திக்கும் போது இந்த தத்துவத்தின் அடிப்படையிலேயே எல்லாவற்றையும் எதிர் கொள்கிறான். இறுதியில் வாழ்க்கையைப் புரிந்து கொள்கிறான்.

இந்த நாவல் முழுவதுமே வோல்டேரின் தத்துவங்கள் தான். நம்பிக்கையிழந்த மனிதனுக்கு நம்பிக்கையை ஊட்டி வாழ்க்கையின் அடுத்த நிகழ்வை நோக்கி முன்னேறிச் செல்ல ஏதுவானதாக நிறைய நம்பிக்கை வாசகங்களை நாவல் முழுவதும் தூவியிருக்கிறார் வோல்டேர்.

வீழ்தலும் மனிதனின் சாபமும் வேண்டுமென்றே தான் இந்த மிகச்சிறந்த உலகத்துக்குள் புகுத்தப்பட்டுள்ளது என்று மனிதர்களின் தோல்விகளுக்கு விளக்கம் சொல்லும் ஆசிரியர், தோல்வி ஏற்படும்போது மனிதர்கள் என்ன சொல்வார்கள் என்பதை ஓர் கிழவியைக் கொண்டு உணர்த்துகிறார். “ஒரு நூறு முறையாவது தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்திருப்பேன் ஆனால் வாழ்வின் மீது இன்னமும் காதல் உள்ளது” என்ற கிழவியின் நம்பிக்கையை வெளிக்காட்டுகிறார். துன்பங்களை சுமந்து செல்வதுதான் வாழ்க்கை எல்லா கட்டத்திலும் எறிந்து விடாமல் அச்சுமைகளை தூக்கிச் செல்கிறோம். எல்லோருடைய வாழ்விலும் இது நடக்கத்தான் செய்கிறது. இதை சமாளிக்க என்ன வழி? உன் நினைவை வேறு பக்கம் திருப்பு, உன் சமமனிதன் ஒவ்வொருவனுடைய வாழ்க்கையையும் உற்று நோக்கு, உனக்கு தீர்வு கிடைக்கும் என்று வோல்ட்டேர் கூறுகிறார். பிரச்சனைகள் ஏற்படும் போது அதையே நினைத்துக் கொண்டே இருக்காமல் கவனத்தை பிற விஷயங்களில் திருப்பு, மனம் தளர்வடையும், நம்பிக்கை பூ பூக்கும் என்று கதைப் பாத்திரங்கள் வாசகர்களுக்கு அறிவுரை சொல்கிறார்கள்.

அவ்வப்போது அனைவருக்கும் ஏற்படும் மனப்பிரச்சனைகள் கேண்டீட்டுக்கும் ஏற்படுகிறது. 36 முறை கசையடி வேண்டுமா அல்லது மூளையில் 12 குண்டுகள் வேண்டுமா என்று அவனைக் கேட்கும் போது, இரண்டில் எதையும் தேர்ந்தெடுக்க அவன் விரும்பவில்லை. ஆனால் சூழ்நிலை அவனை விடுவதில்லை. இரண்டில் ஒன்றை கட்டாயம் தேர்ந்தெடுத்தே ஆகவேண்டும். Avoidance-avoidance மனக்குழப்ப நிலை கேண்டீட்டுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் ஏற்படுவது தானே!

நம் நடத்தையைத் தீர்மாணிப்பது சூழ்நிலையா? மரபுநிலையா? ஒருவன் நல்லவனாக இருப்பது சூழ்நிலையாலா? அல்லது ஒருவன் பிறப்பினாலேயே கெட்டவனாகப் பிறக்கிறானா? விவாதத்திற்குரிய இந்த கேள்விகளுக்கு நாவலாசிரியர் விடை சொல்லியிருக்கிறார். மனிதர்கள் பிறக்கும்போது ஓநாய்களாக பிறப்பதில்லை ஆனால் ஒநாய்களாக மாறிவிடுகிறார்கள் என்று சொல்லும் வோல்ட்டேர் சூழ்நிலையே நம்மை உருவக்குகிறது அல்லது உருக்குலைக்கிறது என்று எடுத்துரைக்கிரார். நல்ல பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன், படிக்காத தாய் தந்தையருக்கு பிறந்திருந்தாலும் கூட, முதல் மதிப்பெண் பெறுவதில்லையா? அதைப் போன்றது தான். கெட்ட நண்பனோடு சேர்ந்த நல்ல பையன் திருடனாக மாறிவிடுவதில்லையா? அதைப் போன்றது தான் சூழ்நிலையின் தாக்கமும்.

கதாநாயகி குனிகொண்டே நகைகளையும் பணத்தையும் திருட்டு கொடுத்து விட்டு வருந்துகிறாள். நமக்கு இதே போல் ஏற்பட்டால் எப்படி நம்மை தேற்றிக் கொள்வது. வழியிருக்கிறது இந்த உலகில் உள்ள எல்லாப் பொருட்களும் எல்லோருக்கும் சமமாகவே சொந்தம் என்று நம் புரிதலை மாற்றிக் கொள்வது தான் அந்த வழி, இதுதான் குனிகொண்டேவுக்கு பாங்க்லாஸ் சொல்லும் வழி.

உலகம் என்பது ஓர் புத்தகம், அதில் அதிக பக்கங்களை படிப்பவனே அனுபவசாலி, அறிவாளி. பயணம் செய்வது தான் இந்த பரந்த உலகை படிப்பதற்கான சிறந்த வழி. கதாநாயகன் கேண்டீட் பல நாடுகளுக்கும், புதியதோர் வளமான உலகத்திற்கும் சுற்ற வைக்கிறார் நாவலாசிரியர். பல்வேறு மனிதர்கள், பல்வேறு சூழ்நிலைகளைப் பார்த்த கேண்டீட் இறுதியாக நினைப்பது “ஒர் உலகத்தில் நம் கணக்கைத் தொடங்க முடியாவிட்டாலும் இன்னோர் உலகத்தில் தொடங்கலாம் புது விஷயங்களைப் பார்ப்பதும் சொல்வதும் எவ்வளவு மகிழ்ச்சியானது” என்பதை தான். எனவே ஓரிடத்திலேயே கிடப்பது புத்திசாலித்தனமல்ல. புதிய புதிய இடங்களுக்கு புறப்பட்டு செல்வது நல்லதுதான், அங்கே நடப்பவைகள் மகிழ்ச்சியானதாக இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் புதுமையானதாகவாவது இருக்கும் என்று நம்மை பயணம் செய்து பண்பட சொல்கிறார் வோல்டேர்.

வாழ்க்கையில் துன்பங்கள் இல்லாமல் இருக்க வழி ஏதும் இல்லை. கவலைகள் இல்லாமல் வாழ வழியில்லை. கவலைகளோடு வாழ்வது எப்படி என்று வேண்டுமானால் கற்றுக் கொள்ளலாம் என்பது தான் சுற்றித்திரிந்து கதாபாத்திரங்கள் சோர்ந்து ஓரிடத்தில் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் போது உணரும் தத்துவம். தேடியலைந்து ஆசைப்பட்டவைகளை அடைந்த பின்னும் ஒருவருக்கும் நிம்மதியில்லை திருப்தியுமில்லை. அடுத்தடுத்து புதிது புதிதான ஆசைகளையும், நோக்கங்களையும் நாம் ஏற்படுத்திக் கொள்கிறோம் அதனால் தொடர்ந்து வேதனைகளையும், விரக்தியையும், அவமானங்களையும் சந்தித்தே ஆகவேண்டும் என்பதை இறுதி அத்தியாயத்தில் எல்லா கதாபாத்திரங்களும் நன்கு உணர்ந்து கொள்கிறார்கள், நாமும் தான்.

இன்னல்கள் நிறைந்த இந்த வாழ்க்கையை வாழ என்ன வழி? ஆரஞ்சுத் தோட்டத்தில் அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டிருக்கும் கிழவர் பதில் சொல்கிறார் – “எனக்குத் தெரியாது”. இன்னோர் இடத்தில் நடைபெறுவது, அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவது இவையெல்லாம் பற்றி நான் கவலைப்பட்டு என் தலையைக் குழப்பிக் கொள்வதில்லை என்றும் சொல்கிறார் கிழவர்.

அப்படியானால் என்னதான் செய்வீர்கள்? என்று கேட்கும் போது “என் தோட்டத்தில் விளையும் பழங்களை விற்பனைக்கு அனுப்புவதோடு நிறுத்திக் கொள்வேன்” என்று தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பதை எடுத்துச் சொல்கிறார் கிழவர்.

நாவலின் மூலம் வோல்ட்டேர் நமக்குச் சொல்லும் செய்தியும் இதுதான். அனைத்து உலகங்களிலும் எல்லா நிகழ்வுகளும் தொடர்ச்சியாக நடந்து கொண்டேதான் இருக்கின்றன. நிகழ்வுகள் நம்மை சந்தோஷப்படுத்தவோ அல்லது சோகப்படுத்தவோ முடியாது. அவைகள் நமக்கு அனுபவங்கள் மட்டுமே. எல்லாம் முடியும் போது எஞ்சியிருப்பது இந்த அனுபவங்கள் மட்டுமே. எனவே நிகழ்வுகளையே அடிப்படையாக கொண்டு உணர்வுகளோடு வாழ்க்கையை நடத்தத் தேவையில்லை. உழைப்பே எல்லாவற்றுக்கும் தீர்வு. உழைப்பு, நம்மை சோர்வு, பாவம் செய்தல், ஆசை ஆகிய மூன்று பெரும் தீமைகளில் இருந்து நம்மைக் காக்கும் என்பது தான் இந்தக் கதையின் சாராம்சம்.

நல்ல பல விஷயங்களை சொன்னாலும், நாவல் பாடப்புத்தகம் போல்தான் உள்ளது. தத்துவவாதிகளுக்கான புத்தகம் என்றே மனதில் நினைத்துக் கொண்டு எழுதப்பட்டது போல் தெரிகிறது. எனவே படித்து முடிக்கும் முன் சற்றே அழுப்புத் தட்டி விடுகிறது. சினிமாத்தனமான திருப்பங்கள் இல்லாமல் இல்லை. கதையின் முக்கிய பாத்திரங்கள் இறந்த பின் மீண்டும் உயிருடன் வருவது இதற்கு நல்ல உதாரணம்.

நாவலில் பொகோராண்டே ஒரு புத்தகத்தைப் பற்றி கூறும் போது “ஒரு சமயத்தில் அவற்றைப் படிப்பதால் எனக்கு மகிழ்ச்சி உண்டாவது போல் தோன்றியது. ஆனால் ஒன்றைப் போலவே இன்னொன்றும் இருக்குமாறு திரும்பத் திரும்ப வரும்...” என்று கூறிக் கொண்டு போவார். அது இப்புத்தகத்திற்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

தத்துவார்த்தமான நாவல்களை அதன் சுவை குன்றாமல், உணர்வுகளை சிதைகாமல் மொழிபெயர்ப்பது மிக மிக கஷ்டமான வேளை. அந்த நாவலை ஆத்மார்த்தமாக விரும்பினால் ஒழிய இந்த பணியை செவ்வனே செய்ய இயலாது. ஆனால் மொழிபெயர்பாளர் பத்ரி சேஷாத்ரி மிகவும் ஈடுபாடுடன் மொழிபெயர்ப்பை செய்திருக்கிறார். ஆனாலும் சில இடங்களில் மொழிபெயர்ப்பை சற்றே எளிமையாக்கி இருக்கலாம்.

தெலுங்குப் படங்களை தமிழில் டப் செய்து வெளியிடுவார்கள் அதில் தெலுங்கிளிருந்து மொழிபெயர்க்கப்பட்ட டெலிபோன் உரையாடல் இப்படி இருக்கும்;

ஒருவர்: ஹலோ, நான் சவுக்கியம் இங்க, நீ சவுக்கியமா, அங்க.
இன்னொருவர்: சவுக்கியம் நான் இங்க, மேலே போ
நாவலின் சில இடங்களில் மொழிபெயர்ப்பும் இப்படித்தான் இருக்கிறது. சற்றே மொழிபெயர்ப்பை சாதாரணமாக ஆக்கியிருந்தால் கதை இன்னும் நன்றாக புரிய ஏதுவாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.

நாவலின் கடைசி வரியான ‘அதெல்லாம் சரி, தோட்டத்தில் வேலை செய்யப் போவோம்’ என்பது நடந்தவைகள், நடப்பவை, நடக்க இருப்பவை என பலவற்றையும் எண்ணிக் கொண்டு அமர்ந்து வியாக்கியானம் பேசிக் வீனாய் போய்க் கொண்டிருப்பவர்களை தட்டி எழுப்புகிறது. உழைத்துக் களைத்து பிழைக்க புறப்படச் சொல்கிறது.


டாக்டர். B. செல்வராஜ் Ph.D.,
முதுநிலை உளவியல் விரிவுரையாளர்,
அரசு கலைக்கல்லூரி,
கோவை – 641 018

இந்த புத்தகத்தை பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும், புத்தகத்தை வாங்கவும் கீழேயுள்ள URL-க்கு செல்லுங்கள்

URL of the book is: http://nhm.in/printedbook/881/Candide


Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP