புத்தக விமர்சனம்
மார்ட்டின் லூதர் கிங் சாத்வீகமாக போராடிக் கொண்டு இருந்தபோது அதே காலக்கட்டத்தில் தன் முஷ்டியையும் குரலையும் உயர்த்தி வெள்ளையர்களுக்கு எதிராக போர்ப்பிரகடனம் செய்த நாயகன் மால்கம் எக்ஸின் வரலாற்று நூல். உலகப் புகழ் நாயகர்கள் பலரை பற்றி எழுதியுள்ள மருதன் தனக்கே உரிய நடையில் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல் இது.
புத்தகம் படிக்க ஆரம்பித்து முதல் ஐந்தாம் அத்தியாயம் முடியும் வரை படிப்பது எல்லாம் Juvenile delinquent என்று அழைக்கப்படும் ஓர் இளம் குற்றவாளியைப் பற்றி படிப்பது போல் இருக்கிறது. மால்கம் எக்ஸ் என்னென்ன செய்தார் என்பதை தமிழ்ப்பட நாயகன் ஆரம்பத்தில் ஓர் தறுதலையாக அலைவதைப் போல் விளக்கியிருக்கிறார் ஆசிரியர். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டுக் கொள்கிறான் வெள்ளை காவலர்களிடம் பத்தாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படும் போது 20 வயது மட்டுமே நிறைந்த ஓர் தனியாள் மால்கம் எக்ஸ். மது, மாது, வழிப்பறி, கொள்ளை, போதை வஸ்துகள் விற்பனை என எல்லாவற்றிலும் ஈடுபட்டு கிடைத்ததை உண்டு, கிடைத்ததைக் குடித்து கிடைத்த இடத்தில் சுருண்டு படுத்து காலத்தைக் கழித்த ஓர் இளைஞனுக்கு இதைவீட வேறு என்ன கிடைத்துவிடப் போகிறது? குற்றப் பின்னனியை மட்டும் விவரிக்கவில்லை நூலின் ஆசிரியர். ஏன் ஓர் கறுப்பு இளைஞர் இப்படி வாழ்ந்தான்? என்பதற்கு கறுப்பர்களின் மேல் அரசும் வெள்ளையர்களும் காட்டிய பாகுபாட்டை விளக்கமாக எடுத்துச் சொல்லி நமக்கு புரிய வைக்கிறார் ஆசிரியர்.
கட்டுக்கடங்காத காளையாக திமிரோடு சுத்திக் கொண்டு அட்டூழியம் செய்து வரும் ஓர் ரவுடி யார் புத்திமதி சொன்னாலும் கேட்க மாட்டான். திடீரென அவன் வாழ்க்கையில் ஓர் அனுபவம் ஏற்படும். அந்த அனுபவம் அவன் வாழ்க்கை பாதையையே மாற்றி விடும். ரவுடி அவனைப் போல் ஓர் ஆள் இந்த ஞாலத்தில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு மிக மிக நல்லவனாக மாறி விடுவான். நல்லவன் கெட்டவனாகவும், கெட்டவன் நல்லவனாகவும் மாறுவது மட்டுமல்ல போரளி புனிதனாக மாறுவதும் இப்படித்தான். அரவிந்தர் ஆசிரமம் அமைத்தது ஆன்மீகப் பாதையில் அடியெடுத்து வைத்தது எல்லாமே அவர் தம்பிக்கு ஏற்பட்ட நோயும், அதில் இருந்து அவர் மீண்ட விதமும் தான். இதை உளவியலில் Quantum personality change என்று அழைக்கிறோம். அத்தகைய ஆளுமை மாற்றம் மால்கம் எக்ஸ் வாழ்வில் அவர் சிறையில் இருக்கும் போது ஏற்படுகிறது.
நேஷன் ஆப் இஸ்லாம், எலிஜா என மால்கமின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பைபிளை போதிக்கும் பாதிரியரை வெட்கிக் தலைகுனிந்து வெளியேற்றும் அளவுக்கு மால்கம் மனதில் insight ஏற்படுகிறது. கனவுகளோடு உழைக்கும் போது காதல் ஏற்படாமல் போகாது என்பதற்கேற்ப பெட்டி என்னும் பெண்ணை காதலித்து மணந்து கொள்கிறார் மால்கம் எக்ஸ். பெட்டியும் பெண் குழந்தைகளும் என வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டு இருக்கும்போது எலிஜா தன் வாழ்வில் ஏற்படுத்திக் கொண்ட மாற்றங்களால் எக்ஸ் கடும் மன உளைச்சளுக்கு எப்படி ஆளாகிறார் என்பதை சில அத்தியாயங்கள் விளக்குகின்றன.
மார்டின் லூதர் கிங், மால்கம் எக்ஸ் இருவரும் ஒரு நோக்கத்திற்காக இரு வேறு பாதைகளில் பயணம் செய்தவர்கள் என்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டுவதோடு இருவரும் சந்தித்து கொண்ட சூழ்நிலைஅயை தத்ரூபமாக நமக்கு படம் பிடித்து நமக்கு விளக்குகிறார். உலகம் ஓர் புத்தகம் அதை சுற்றிப்பார்க்க பார்க்கத்தான் ஒரு புத்தகத்தை படிக்கும் போது பல விஷயங்களை தெரிந்து கொள்வது போல நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் முடியும். எலிஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹஜ் பயணம் புறப்படும் மால்கம் ஆப்ரிக்க நாடுகள் பலவற்றையும் சுற்றி ஹஜ் பயணத்தை முடித்து அமெரிக்கா திரும்பும் போது அவர் சந்தித்த பல்லாயிரக்கணக்கான மக்கள், அவர்களோடு உரையாடியபோது கிடைத்த அனுபவங்கள் ஆகியவை மால்கமை முற்றிலும் மாற்றிவிடுகின்றன. வெறுப்புக்கு வெறுப்பே தீர்வாகாது என்பதை உணர்ந்து கொள்கிறார் மால்கம் இந்த மாற்றமே தான் அவர் மரணத்திற்கு காரணமாக இருக்குமோ என்பதை இறுதி அத்தியாயங்கள் மறைமுகமாக உணர்த்துகின்றன. ஆனால் உலகில் எந்த பிரச்சனைக்கும் தீர்வு அகிம்சையே என்ற அண்ணல் காந்தியின் தத்துவமே இப்புத்தகத்தை படிக்கும்போது மனதில் உயர்ந்து நிற்கிறது.
புத்தகத்தை முடிக்கும் ஆசிரியர் “மால்க்கம் எக்ஸின் தேவை முனெப்போதையும் விட இப்போது அதிகரித்து இருக்கிறது. ஆவேசமும் துடிதுடிப்பும் மிக்க ஒரு கலக்காரராக மால்க்கம் எக்ஸ் இன்று பார்க்கப்படுகிறார், கொண்டாடப்படுகிறார். மால்கம் எக்ஸின் சகாப்தம் முடிந்துவிடவில்லை” என முடிக்கிறார். கால வரிசைப்படி பின் இணைப்புகள் இரண்டு சேர்க்கப்பட்டிருக்கின்றன இவற்றில் மால்கம் எக்ஸின் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளையும் எழுத உதவிய நூல்கலையும் இணையத்தளங்களையும் விரிவாக கொடுத்திருக்கிறார் ஆசிரியர். இணையத்தளங்கள் மிகவும் தகவல் தரக்கூடியவையாக உள்ளன.
வெள்ளை இனவெறிக்கு எதிராகப் போர்க்குரல் கொடுத்த கருஞ்சிறுத்தையின் வீரகாவியம், தனிமனிதனின் வாழ்வில் ஓர் சமுதாயத்தின் தாக்கம், ஓர் இனம் தாழ்வு நிலையில் இருப்பதற்கான எதார்த்தமான காரணங்கள், தனிமனிதன் தான் உயர்வாக பூஜிக்கும் ஒருவரால் உயர்வதும் தாழ்வதும் இயல்பே என்பது என வாழ்வியல் தத்துவங்களை நமக்கு உணர்த்துகிறது. மருதனின் ”மால்கம் எக்ஸ்” மனதில் நிற்கக்கூடிய படைப்பே.
இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இங்கே செல்லுங்கள்:
http://nhm.in/shop/978-81-8368-866-6.html
0 comments:
Post a Comment