உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Thursday, April 2, 2009

புத்தக விமர்சனம்

பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர் வோல்ட்டேரின் நாவல் கேண்டீட் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளில் ஒன்றாக கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடப்படும் இந்த ப்ரெஞ்சு நாவல் கேண்டீட்டை பத்ரி சேஷாத்ரி மொழிபெயர்த்துள்ளார். கிழக்கு பதிப்பகம் நூலை வெளியிட்டுள்ளது.

மனிதர்களின் இயல்புகளைப் பற்றி இரண்டு கோட்பாடுகள் உள்ளன. ஒன்று கோட்பாடு X. இன்னொன்று கோட்பாடு Y. மனிதர்கள் சோம்பேரிகள், அடிப்படையில் பொறுப்புள்ளவர்கள், அறிவீனர்கள், ஏமாற்றுக்காரர்கள், அவர்களை எப்போதும் கண்கானித்து மேலாண்மை செய்து வந்தால் மட்டுமே நல்ல நிலையில் வைத்திருக்க முடியும். கொஞ்சம் தளர்வான அணுகுமுறையைக் காட்டினாலும் வேலையைக் காண்பிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்ற கோட்பாடுகளை வழியுறுத்துவதே கோட்பாடு X ஆகும். இதனடிப்படையில் பார்த்தால் உள்ளுணர்வின் அடிப்படையில் இயங்கி இச்சையை நாடும் விலங்கைப் போன்றவனே மனிதன். மாறாக மனிதர்கள் அறிவுள்ளவர்கள், சுயனலமில்லாதவர்கள், நன்முறையில் சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்கள். பொறுப்பேற்று செய்ல்படக்கூடியவர்கள், அவர்களை கண்கானிக்கத் தேவையில்லை, அவர்கள் போக்கிலேயே விட்டுவிடலாம். அவரவர் வாழ்க்கையை நிர்ணயித்துக் கொள்ள அவரவர் வழிகளைத் தேடி இயங்குவர் என்ற கருத்துக்களை கொண்டது கோட்பாடு Y ஆகும். இதனடிப்படையில் பார்த்தால் மனிதர்கள் போற்றத்தகுந்தவர், மரியாதைக்குரியவர்கள்.

இந்த இரண்டு கோட்பாடுகளில் சரியானது எது என்று இன்னும் தீர்மாணமாக யாரும் சொல்லவில்லை. ஒரு சமயத்தில் கோட்பாடு X தான் சிறந்தது என்பதை நிரூபிக்க பல ஆதாரங்கள் அடுக்கடுக்காக கிடைக்கும். இன்னொரு சமயத்தில் கோட்பாடு Y தான் சரி என்று எடுத்துரைக்கும் வண்ணம் ஏராளமான நிகழ்வுகள் ஏற்படும். எனவே இரண்டு கோட்பாடுகளுமே இன்றளவும் இருக்கின்றன. கேண்டீட், கதாநாயகி குனிகொண்டே, ஜமீந்தார், தத்துவவாதி பாங்க்லாஸ், இன்னொரு தத்துவவாதி மார்ட்டின், விசுவாசி ககாம்போ என பல பாத்திரப்படைபுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த நாவலும் மனிதர்கள் நல்லவர்களா? அல்லது கெட்டவர்களா? என்று அலசி ஆராய்ந்து விட்டு தீர்வு எதுவும் சொல்லாமல், நல்லவர்களும் உண்டு, சுயநலவாதிகளும் உண்டு. ஆனால் அதைப்பற்றிக் கவலைப்படவேண்டாம், வேலையைப் பார்ப்போம் என வேறு பாதையில் வண்டியை திருப்பி விடுகிறது.

எளிமை, அடுத்தவரை நம்பும் தன்மை ஆகிய பண்புகளைக் கொண்ட கதாநாயகன் கேண்டீட் கதையில் முதல் அத்தியாயத்திலேயே காதல் வயப்பட்டு விடுகிறான். ஜமீந்தாரின் பதினேழு வயதான அழகான மகள் குனிகொண்டே தான் காதலி. சூடான தோசைக் கல்லை தொட்டவுடன் கை பழுத்துவிடுவது போல் காதலை தொடங்கியவுடன் சரியான அடி கொடுக்கிறார் ஜமீந்தார். கோட்டையை விட்டு துரத்தப்படும் கேண்டீட், இந்த உலகத்தின் இயல்பு என்ன என்று உங்களுக்கு காண்பிக்கிரேன் வாருங்கள் வாசகரே என்று நம்மை அழைத்துக் கொண்டு புறப்படுகிறான். இரண்டாவது அத்தியாயத்திலேயே இது ஆரம்பித்து விடுகிறது.

பல்கேரியர்களிடம் அடிவாங்கி கழுத்திலிருந்து அடித்தொடை வரை ஒவ்வொரு தசையும் நரம்பும் பிய்ந்து தொங்கும் போதும் சரி, வாழ்க்கையில் கடுமையாக நோய்வாய்ப்படும் சமயத்திலும் சரி, அல்லது தன் காதலி குனிகொண்டேயை மீண்டும் மீண்டும் இழக்கும்போதும் சரி, கேண்டீட்டை வழிநடத்துவது தத்துவவாதி பாங்க்லாஸின் தத்துவங்கள் தான். எதுவும் இப்போது இருப்பதை விட சிறப்பானதாக இருக்க முடியாது, உருவாக்கப்பட்ட அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காகவே எண்ணும் போது, அந்தக் காரணம் மிகச் சிறப்பான காரணமாகத்தான் இருக்க வேண்டும். எல்லாம் மிகச் சிறப்பானதற்கே என்பதே பாங்காலாக்ஸின் அடிப்படைத் தத்துவம். அடுத்தடுத்த சோதனைகளை கதாநாயகன் சந்திக்கும் போது இந்த தத்துவத்தின் அடிப்படையிலேயே எல்லாவற்றையும் எதிர் கொள்கிறான். இறுதியில் வாழ்க்கையைப் புரிந்து கொள்கிறான்.

இந்த நாவல் முழுவதுமே வோல்டேரின் தத்துவங்கள் தான். நம்பிக்கையிழந்த மனிதனுக்கு நம்பிக்கையை ஊட்டி வாழ்க்கையின் அடுத்த நிகழ்வை நோக்கி முன்னேறிச் செல்ல ஏதுவானதாக நிறைய நம்பிக்கை வாசகங்களை நாவல் முழுவதும் தூவியிருக்கிறார் வோல்டேர்.

வீழ்தலும் மனிதனின் சாபமும் வேண்டுமென்றே தான் இந்த மிகச்சிறந்த உலகத்துக்குள் புகுத்தப்பட்டுள்ளது என்று மனிதர்களின் தோல்விகளுக்கு விளக்கம் சொல்லும் ஆசிரியர், தோல்வி ஏற்படும்போது மனிதர்கள் என்ன சொல்வார்கள் என்பதை ஓர் கிழவியைக் கொண்டு உணர்த்துகிறார். “ஒரு நூறு முறையாவது தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்திருப்பேன் ஆனால் வாழ்வின் மீது இன்னமும் காதல் உள்ளது” என்ற கிழவியின் நம்பிக்கையை வெளிக்காட்டுகிறார். துன்பங்களை சுமந்து செல்வதுதான் வாழ்க்கை எல்லா கட்டத்திலும் எறிந்து விடாமல் அச்சுமைகளை தூக்கிச் செல்கிறோம். எல்லோருடைய வாழ்விலும் இது நடக்கத்தான் செய்கிறது. இதை சமாளிக்க என்ன வழி? உன் நினைவை வேறு பக்கம் திருப்பு, உன் சமமனிதன் ஒவ்வொருவனுடைய வாழ்க்கையையும் உற்று நோக்கு, உனக்கு தீர்வு கிடைக்கும் என்று வோல்ட்டேர் கூறுகிறார். பிரச்சனைகள் ஏற்படும் போது அதையே நினைத்துக் கொண்டே இருக்காமல் கவனத்தை பிற விஷயங்களில் திருப்பு, மனம் தளர்வடையும், நம்பிக்கை பூ பூக்கும் என்று கதைப் பாத்திரங்கள் வாசகர்களுக்கு அறிவுரை சொல்கிறார்கள்.

அவ்வப்போது அனைவருக்கும் ஏற்படும் மனப்பிரச்சனைகள் கேண்டீட்டுக்கும் ஏற்படுகிறது. 36 முறை கசையடி வேண்டுமா அல்லது மூளையில் 12 குண்டுகள் வேண்டுமா என்று அவனைக் கேட்கும் போது, இரண்டில் எதையும் தேர்ந்தெடுக்க அவன் விரும்பவில்லை. ஆனால் சூழ்நிலை அவனை விடுவதில்லை. இரண்டில் ஒன்றை கட்டாயம் தேர்ந்தெடுத்தே ஆகவேண்டும். Avoidance-avoidance மனக்குழப்ப நிலை கேண்டீட்டுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் ஏற்படுவது தானே!

நம் நடத்தையைத் தீர்மாணிப்பது சூழ்நிலையா? மரபுநிலையா? ஒருவன் நல்லவனாக இருப்பது சூழ்நிலையாலா? அல்லது ஒருவன் பிறப்பினாலேயே கெட்டவனாகப் பிறக்கிறானா? விவாதத்திற்குரிய இந்த கேள்விகளுக்கு நாவலாசிரியர் விடை சொல்லியிருக்கிறார். மனிதர்கள் பிறக்கும்போது ஓநாய்களாக பிறப்பதில்லை ஆனால் ஒநாய்களாக மாறிவிடுகிறார்கள் என்று சொல்லும் வோல்ட்டேர் சூழ்நிலையே நம்மை உருவக்குகிறது அல்லது உருக்குலைக்கிறது என்று எடுத்துரைக்கிரார். நல்ல பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன், படிக்காத தாய் தந்தையருக்கு பிறந்திருந்தாலும் கூட, முதல் மதிப்பெண் பெறுவதில்லையா? அதைப் போன்றது தான். கெட்ட நண்பனோடு சேர்ந்த நல்ல பையன் திருடனாக மாறிவிடுவதில்லையா? அதைப் போன்றது தான் சூழ்நிலையின் தாக்கமும்.

கதாநாயகி குனிகொண்டே நகைகளையும் பணத்தையும் திருட்டு கொடுத்து விட்டு வருந்துகிறாள். நமக்கு இதே போல் ஏற்பட்டால் எப்படி நம்மை தேற்றிக் கொள்வது. வழியிருக்கிறது இந்த உலகில் உள்ள எல்லாப் பொருட்களும் எல்லோருக்கும் சமமாகவே சொந்தம் என்று நம் புரிதலை மாற்றிக் கொள்வது தான் அந்த வழி, இதுதான் குனிகொண்டேவுக்கு பாங்க்லாஸ் சொல்லும் வழி.

உலகம் என்பது ஓர் புத்தகம், அதில் அதிக பக்கங்களை படிப்பவனே அனுபவசாலி, அறிவாளி. பயணம் செய்வது தான் இந்த பரந்த உலகை படிப்பதற்கான சிறந்த வழி. கதாநாயகன் கேண்டீட் பல நாடுகளுக்கும், புதியதோர் வளமான உலகத்திற்கும் சுற்ற வைக்கிறார் நாவலாசிரியர். பல்வேறு மனிதர்கள், பல்வேறு சூழ்நிலைகளைப் பார்த்த கேண்டீட் இறுதியாக நினைப்பது “ஒர் உலகத்தில் நம் கணக்கைத் தொடங்க முடியாவிட்டாலும் இன்னோர் உலகத்தில் தொடங்கலாம் புது விஷயங்களைப் பார்ப்பதும் சொல்வதும் எவ்வளவு மகிழ்ச்சியானது” என்பதை தான். எனவே ஓரிடத்திலேயே கிடப்பது புத்திசாலித்தனமல்ல. புதிய புதிய இடங்களுக்கு புறப்பட்டு செல்வது நல்லதுதான், அங்கே நடப்பவைகள் மகிழ்ச்சியானதாக இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் புதுமையானதாகவாவது இருக்கும் என்று நம்மை பயணம் செய்து பண்பட சொல்கிறார் வோல்டேர்.

வாழ்க்கையில் துன்பங்கள் இல்லாமல் இருக்க வழி ஏதும் இல்லை. கவலைகள் இல்லாமல் வாழ வழியில்லை. கவலைகளோடு வாழ்வது எப்படி என்று வேண்டுமானால் கற்றுக் கொள்ளலாம் என்பது தான் சுற்றித்திரிந்து கதாபாத்திரங்கள் சோர்ந்து ஓரிடத்தில் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் போது உணரும் தத்துவம். தேடியலைந்து ஆசைப்பட்டவைகளை அடைந்த பின்னும் ஒருவருக்கும் நிம்மதியில்லை திருப்தியுமில்லை. அடுத்தடுத்து புதிது புதிதான ஆசைகளையும், நோக்கங்களையும் நாம் ஏற்படுத்திக் கொள்கிறோம் அதனால் தொடர்ந்து வேதனைகளையும், விரக்தியையும், அவமானங்களையும் சந்தித்தே ஆகவேண்டும் என்பதை இறுதி அத்தியாயத்தில் எல்லா கதாபாத்திரங்களும் நன்கு உணர்ந்து கொள்கிறார்கள், நாமும் தான்.

இன்னல்கள் நிறைந்த இந்த வாழ்க்கையை வாழ என்ன வழி? ஆரஞ்சுத் தோட்டத்தில் அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டிருக்கும் கிழவர் பதில் சொல்கிறார் – “எனக்குத் தெரியாது”. இன்னோர் இடத்தில் நடைபெறுவது, அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவது இவையெல்லாம் பற்றி நான் கவலைப்பட்டு என் தலையைக் குழப்பிக் கொள்வதில்லை என்றும் சொல்கிறார் கிழவர்.

அப்படியானால் என்னதான் செய்வீர்கள்? என்று கேட்கும் போது “என் தோட்டத்தில் விளையும் பழங்களை விற்பனைக்கு அனுப்புவதோடு நிறுத்திக் கொள்வேன்” என்று தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பதை எடுத்துச் சொல்கிறார் கிழவர்.

நாவலின் மூலம் வோல்ட்டேர் நமக்குச் சொல்லும் செய்தியும் இதுதான். அனைத்து உலகங்களிலும் எல்லா நிகழ்வுகளும் தொடர்ச்சியாக நடந்து கொண்டேதான் இருக்கின்றன. நிகழ்வுகள் நம்மை சந்தோஷப்படுத்தவோ அல்லது சோகப்படுத்தவோ முடியாது. அவைகள் நமக்கு அனுபவங்கள் மட்டுமே. எல்லாம் முடியும் போது எஞ்சியிருப்பது இந்த அனுபவங்கள் மட்டுமே. எனவே நிகழ்வுகளையே அடிப்படையாக கொண்டு உணர்வுகளோடு வாழ்க்கையை நடத்தத் தேவையில்லை. உழைப்பே எல்லாவற்றுக்கும் தீர்வு. உழைப்பு, நம்மை சோர்வு, பாவம் செய்தல், ஆசை ஆகிய மூன்று பெரும் தீமைகளில் இருந்து நம்மைக் காக்கும் என்பது தான் இந்தக் கதையின் சாராம்சம்.

நல்ல பல விஷயங்களை சொன்னாலும், நாவல் பாடப்புத்தகம் போல்தான் உள்ளது. தத்துவவாதிகளுக்கான புத்தகம் என்றே மனதில் நினைத்துக் கொண்டு எழுதப்பட்டது போல் தெரிகிறது. எனவே படித்து முடிக்கும் முன் சற்றே அழுப்புத் தட்டி விடுகிறது. சினிமாத்தனமான திருப்பங்கள் இல்லாமல் இல்லை. கதையின் முக்கிய பாத்திரங்கள் இறந்த பின் மீண்டும் உயிருடன் வருவது இதற்கு நல்ல உதாரணம்.

நாவலில் பொகோராண்டே ஒரு புத்தகத்தைப் பற்றி கூறும் போது “ஒரு சமயத்தில் அவற்றைப் படிப்பதால் எனக்கு மகிழ்ச்சி உண்டாவது போல் தோன்றியது. ஆனால் ஒன்றைப் போலவே இன்னொன்றும் இருக்குமாறு திரும்பத் திரும்ப வரும்...” என்று கூறிக் கொண்டு போவார். அது இப்புத்தகத்திற்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

தத்துவார்த்தமான நாவல்களை அதன் சுவை குன்றாமல், உணர்வுகளை சிதைகாமல் மொழிபெயர்ப்பது மிக மிக கஷ்டமான வேளை. அந்த நாவலை ஆத்மார்த்தமாக விரும்பினால் ஒழிய இந்த பணியை செவ்வனே செய்ய இயலாது. ஆனால் மொழிபெயர்பாளர் பத்ரி சேஷாத்ரி மிகவும் ஈடுபாடுடன் மொழிபெயர்ப்பை செய்திருக்கிறார். ஆனாலும் சில இடங்களில் மொழிபெயர்ப்பை சற்றே எளிமையாக்கி இருக்கலாம்.

தெலுங்குப் படங்களை தமிழில் டப் செய்து வெளியிடுவார்கள் அதில் தெலுங்கிளிருந்து மொழிபெயர்க்கப்பட்ட டெலிபோன் உரையாடல் இப்படி இருக்கும்;

ஒருவர்: ஹலோ, நான் சவுக்கியம் இங்க, நீ சவுக்கியமா, அங்க.
இன்னொருவர்: சவுக்கியம் நான் இங்க, மேலே போ
நாவலின் சில இடங்களில் மொழிபெயர்ப்பும் இப்படித்தான் இருக்கிறது. சற்றே மொழிபெயர்ப்பை சாதாரணமாக ஆக்கியிருந்தால் கதை இன்னும் நன்றாக புரிய ஏதுவாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.

நாவலின் கடைசி வரியான ‘அதெல்லாம் சரி, தோட்டத்தில் வேலை செய்யப் போவோம்’ என்பது நடந்தவைகள், நடப்பவை, நடக்க இருப்பவை என பலவற்றையும் எண்ணிக் கொண்டு அமர்ந்து வியாக்கியானம் பேசிக் வீனாய் போய்க் கொண்டிருப்பவர்களை தட்டி எழுப்புகிறது. உழைத்துக் களைத்து பிழைக்க புறப்படச் சொல்கிறது.


டாக்டர். B. செல்வராஜ் Ph.D.,
முதுநிலை உளவியல் விரிவுரையாளர்,
அரசு கலைக்கல்லூரி,
கோவை – 641 018

இந்த புத்தகத்தை பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும், புத்தகத்தை வாங்கவும் கீழேயுள்ள URL-க்கு செல்லுங்கள்

URL of the book is: http://nhm.in/printedbook/881/Candide


2 comments:

Unknown April 8, 2009 at 4:56 AM  

உங்களுடைய விமர்சனப் பதிவை பார்க்க நேர்ந்தது. நல்ல முயற்சி. இன்னும் நிறைய எழுதுங்கள். நன்றி.

சாணக்கியன் April 27, 2009 at 7:09 AM  

/* வீழ்தலும் மனிதனின் சாபமும் வேண்டுமென்றே தான் இந்த மிகச்சிறந்த உலகத்துக்குள் புகுத்தப்பட்டுள்ளது என்று மனிதர்களின் தோல்விகளுக்கு விளக்கம் சொல்லும் ஆசிரியர், */

மன்னிக்க வேண்டும் முனைவர் அவர்களே. நான் உங்கள் இந்தப் புரிதலிலிருந்து வேறுபடுகிறேன். உண்மையில், இப்படி ஒரு காரண காரியத்துக்காகவே எல்லாம் நடக்கின்றன என்ற கருத்தை பலமாக கிண்டல் செய்து அதை மறுக்கிறார் ஆசிரியர். அதற்காகவே கேண்டீட் ஒவ்வொரு முறை துன்பம் அடையும் போது பாங்லாஸின் தத்துவத்தை கேண்டிடால் சொல்லவைத்து அப்படி நம்புபவர்கள் எப்படி பட்ட முட்டாள்கள் என்று வாசகர்களை உணர வைக்கிறார். எல்லா துன்பங்களுக்கும் சக மனிதர்களின் பொறாமை, சுய நலம், போலித்தன்மை, வெறி போன்ற குணங்கள்தான் காரணம் என்று கதையின் போக்கில் சொல்லிச் செல்கிறார்.

என்னுடைய விமர்சனம்
http://vurathasindanai.blogspot.com/2009/04/blog-post.html

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP