உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Monday, May 14, 2012

வீட்டிலேயே அடைந்து கிடக்கும் குழந்தையை பிறருடன் பழகச் செய்வது எப்படி?

”மனிதன் சமூகத்தில் வாழக்கூடிய விலங்கு” என்று கூறி பிறரோடு கலந்து பழக வேண்டிதன் அவசியத்தை உணர்த்துகிறார் உளவியலின் தந்தை சிக்மண்ட் ப்ராய்ட். பிறரோடு பழகுதல் என்னும் இத்திறன் ஒரு குழந்தை தாயின் கருப்பையில் இருக்கும்போதே தொடங்கி விடுகிறது. முதலில் தன் தாயுடன் இணக்கம் கொண்டு இருக்கும் கருவே குழந்தையாகப் பிறந்த பின் பிறர் அனைவரோடும் இணைந்து வாழும் திறனைப் பெற்று வளரும். கருவாக இருக்கும்போது தாய் வயிற்றில் இணக்கம் கொண்டு இருக்க முடியாத குழந்தைகளுக்கே பிறந்ததற்கு பின் மற்றவர்களோடு பழகுவதில் பல பிரச்சனைகள் உண்டாகும். பிறரோடு பழகும் திறமியில்லாத சமூகத் திறன் குறைந்த குழந்தைகளே எப்போதும் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பர். சமூகத் திறன் இல்லாத குழந்தைகளுக்கு குழந்தைப் பருவத்தில் கூடி விளையாட நண்பர்கள் இருக்க மாட்டார்கள். வாலிப வயதில் தவறான நடத்தைகளில் ஈடுபட்டு தன் வாழ்க்கையை கெடுத்துக் கொள்வர். வயது வந்த நடுத்தர பருவத்தில் தன் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ள யாருமே இல்லாமல் பல மனப்பிரச்சனைகளுக்கு உள்ளாவர்.

குழந்தைகள் வெளியே சென்று யாருடனும் விளையாடாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அக்காரணங்கள் யாவை என்பதையும் குழந்தைகளிடத்தில் சமூகத் திறன்களை வளர்ப்பது எப்படி என்பதையும் காண்போம்:

குழந்தைகளின் சமூகத் திறன் பெற்றோர்களின் சமூகத் திறமையை பொறுத்து அமைகிறது. அதிலும் குறிப்பாக தாயின் சமூகத் திறனை பொறுத்து அமைகிறது. தாய் பிறருடன் நன்கு பேசி பழகக்கூடிய திறமையையும், பிறரின் மனநிலையை புரிந்து கொள்ளக்கூடிய திறனையும், பிறரோடு இணங்கி வாழும் திறனையும் பெற்றிருந்தால் அத்திறனை குழந்தை பிறப்பிலேயே பெற்று விடுகிறது. சமூகத் திறன் இல்லாத தாயால் வளர்க்கப் படும் குழந்தைகளுக்கு எதிர்மறை விளைவுகள் பல ஏற்படும். உதாரணமாக ஒரு தாய் தன் கணவன் வேலைக்குச் சென்றவுடன் நன்றாக சாப்பிட்டு விட்டு கதவைச் சாத்தி குழந்தையுடன் தூங்க ஆரம்பித்து விடுவார். வெளியில் யாரையும் பார்க்காமல் பிற குழந்தைகளுடன் விளையாடாமல் வளர்ந்த அக்குழந்தைக்கு பேச்சே வராமல் போய்விட்டது.

ஆடிசம் என்று கூறப்படும் நோயுள்ள குழந்தைகள் சமூகத் திறன் குறைந்த குழந்தைகளாக இருப்பர். சாதாரணமாக வளர்ச்சிப் பருவத்தில் குழந்தைகள் தானாகவே சமூக உறவுக்கான ஆயத்த நிலையை அடைந்து பெற்றோரைத் தவிர பிறருடன் பழக வேண்டும் என்ற உந்துதல் கொள்வர். ஆனால் ஆடிச நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் அவ்வாறான ஆயத்த நிலை எதுவும் காணப்படுவதில்லை. மேலும் பிறருடன் பழகுவதில் முக்கிய பங்கு வகிப்பது பேசும் திறமை தான். ஆடிசக் குழந்தைகளின் மொழித்திறன் குன்றி இருப்பதால் அவர்களால் அதிக வார்த்தைகள் பேசி திறமையாக பிறருடன் பழக முடியாது. ஆடிச குழந்தைகள் சைகைகளையே அதிகம் பயன்படுத்துவர்.

சில ஆண் குழந்தைகள் பிற ஆண் குழந்தைகளுடனே விளையாட விரும்புவர். ஆனால் அவர்களுக்கு ஆண் நண்பர்கள் அருகில் இருக்க மாட்டார்கள். எனவே பெண் குழந்தைகளுடன் விளையாட கூச்சப்பட்டுக் கொண்டு வீட்டுக்குள்ளேயே ஏதாவது விளையாடிக் கொண்டு இருந்து விடுவர். இதைப் போன்றே பெண் குழந்தைகளுக்கும் ஏற்படலாம். வசிப்பிடத்தின் அருகே ஒத்த வயதுள்ள பெண் குழந்தைகள் இல்லாத போது ஆண் நண்பர்களுடன் விளையாடுவதை தவிர்த்து பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து விடுவர். பத்து வயதுக்கு மேல் தான் இதுபோன்ற எதிர்பார்ப்புகளும் பிடித்தங்களும் தோன்றுகின்றன. மிகச்சிறு வயதில் இதுபோன்ற பிடித்தங்கள் குழந்தைகளிடம் காணப்படுவதில்லை. எல்லா குழந்தைகளுடன் விளையாடுவதையே சிறு குழந்தைகள் விரும்புவர். உங்கள் குழந்தைக்கு இது போன்ற ஏதேனும் பிரச்சனை உள்ளதா என ஆராய்ந்து பாருங்கள்.

சில பெற்றோர் தங்கள் குழந்தைகள் வசிப்பிடம் அருகே உள்ள பிற குழந்தைகளுடன் விளையாடுவதை விரும்ப மாட்டார்கள். எனவே குழந்தைகள் வெளியே போகாதவாறு வீட்டுக்குள்ளேயே விளையாடும் அளவுக்கு தேவையான விளையாட்டு சாமான்களை வாங்கிப் போட்டு விடுவர். அதனால் குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே விளையாடப் பழகி கொள்வர். இத்தகைய குழந்தைகள் பெரியவர்களானதும் பெற்றோர் விரும்பினால் கூட யாருடனும் நட்பு வைத்துக் கொள்ளாமல் தனித்து இருக்கவே விரும்புவர். நாளடைவில் அத்தனிமையே பல மனப் பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்து விடும்.

ஒருசில குழந்தைகள் வெளியே சென்று பிறருடன் கலந்து விளையாடும் போது அக்குழந்தையை பிற குழந்தைகள் யாவரேனும் உருட்டி மிரட்டி பயமுறுத்தலாம். கேலி கிண்டல் செய்யலாம். இவ்வாறு பிறரால் மிரட்டப்பட்டு, கேலி கிண்டல் செய்யப்படும் குழந்தைகள் வெளியே செல்லவே பயந்து கொண்டு வீட்டுக்குள்ளேயெ அடைந்து கிடப்பர்.

மேற்கண்ட காரணங்களால் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் குழந்தைகளை வெளியே சென்று பிறரோடு கலந்து பழக என்ன செய்யவேண்டும்?

பெற்றோர் அதிலும் குறிப்பாக தாய் குழந்தைகள் முன்பு பிறரோடு நன்கு பேசிப் பழக வேண்டும். அடிக்கடி பக்கத்துவீடு அல்லது உறவினர் வீட்டுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று பிறரிடம் அறிமுகப் படுத்தி கலந்துரையாட செய்ய வேண்டும்.

குழந்தைகள் முன்பு எப்போதும் பிறரைப் பற்றிய குறைகளைக் பெற்றோர் பேசிக் கொண்டு இருக்கக் கூடாது. யாரைப் பற்றி குறை கூறி பேசுகிறோமோ அவர்களிடம் குழந்தைகள் பேசாது. நாம் பேசுவதை குழந்தைகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தால் பிறரைப் பற்றிய நேர்மறையான நல்ல விஷயங்களையே பேச வேண்டும். இந்த உலகில் உள்ள அனைவரும் நல்லவர்களே என்ற அபிப்பிராயத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்துவது நல்லது.

சிறு குழந்தைகள் சைகைகளைப் பயன்படுத்தி பிறரோடு தொடர்பு கொள்வதை முளையிலேயே கிள்ள வேண்டும். ஆமாம் என்பதற்கு பதிலாக தலையசைத்து பதில் சொல்லும் குழந்தைகளை ‘ஆமாம்’ என்று சொல் என பெற்றோர் பேசிப் பழக்க வேண்டும்.

உங்கள் குழந்தை குறைவான வெளிஉலகப் தொடர்பு கொண்டுள்ளது என நீங்கள் கருதினால் வீட்டுக்குள் ஏராளமான விளையாட்டுக் பொருட்களை வாங்கிப் போடாதீர்கள். அதிலும் குறிப்பாக கம்ப்யூட்டரில் விளையாடும் வீடியோ விளையாட்டுக்கள், செல் போன்களில் விளையாடும் விளையாட்டுக்கள் ஆகியவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது. தொலைக்காட்சி பார்ப்பதைக் கூட ‘குறிப்பிட்ட நேரம் மட்டும் தான் தொலைக்காட்சி பார்க்க வேண்டும்’ என்று அறிவுறுத்தி அளவாக அனுமதிப்பது நல்லது.

குழந்தைகள் வெளியே சென்று விளையாடும் சமயம் ஆரம்பத்தில் சிறிது காலம் பெற்றோரும் குழந்தைகளுடன் இருக்கலாம். பெற்றோர் உடனிருக்கிறார்கள் என்ற மன தைரியம் குழந்தைகள் மனதில் ஏற்பட்டு விட்டால் பயந்து கொள்ளாமல் வெளியில் விளையாட ஆரம்பிப்பர். மேலும் நம் குழந்தைகளை யாரேனும் கேலி கிண்டல் செய்து, மிரட்டுகிறார்களா அல்லது வேறு ஏதேனும் எதிர்மறை பிரச்சனைகள் உள்ளனவா என பெற்றோர்களால் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் பிற குழந்தைகளை மிரட்டி விடாமல் பிரச்சனைகளை பெற்றோர்கள் சமாளிக்க வேண்டும்.

இப்படியெல்லாம் செய்வதன் மூலம் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் குழந்தையின் சமூகத் திறனை வளர்க்கலாம்.

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP