"குழந்தைகளின் ஐ.யூ.வை வளர்ப்பது எப்படி?" - குமுதம் சிநேகிதி
குழந்தைகளின் ஐக்யூவை கண்டுபிடிக்க மனநல மருத்துவரிடம் அழைத்துப் போகலாம். அவர்கள் குழந்தைகளின் வயதுக்கேற்ப ஆக்டிவிட்டிஸ் கொடுப்பார்கள். சின்னச் சின்ன டெஸ்ட் வைத்து அதில் அவர்கள் தேறும்
விதத்தில் ஐக்யூவை கணித்துச் சொல்வார்கள்.
இப்போது பெற்றோர்ஆசிரியர் மத்தியில் அதிகமாக அடிபடுகின்ற வார்த்தை ஐ க்யூ என்பதுதான்! இந்த ஐ க்யூவுக்கும் குழந்தையின் படிப்புக்கும் என்ன தொடர்பு? இதோ விளக்குகிறார்கள் நிபுணர்கள்...
டாக்டர் பா. செல்வராஜ், கோவை அரசு கலைக்கல்லூரியின் உளவியல் துறையில் உதவிப் பேராசிரியர். மன நல ஆலோசகராகவும் 11 ஆண்டுகளாக பணிபுரிந்து பல மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உளவியல் ஆலோசனைகளும் வழங்கி வருகிறார். அவரிடம் பேசியபோது குழந்தைகளின் ஐ க்யூ லெவலை தெரிந்து கொள்வதன் அவசியம் பற்றிப் பேசினார்.
‘‘9 வயதுச் சிறுவன் அவன்... சுத்தமாக படிப்பதே இல்லை. சிறுவனின் புரிந்துகொள்ளும் திறன் குறைவாக உள்ளதாக அவன் பள்ளி ஆசிரியர்களிடம் இருந்து புகார் வரும். அந்தச் சிறுவன் மிகவும் ஒல்லியாக முழங்கைகள் சற்று வளைந்து சற்றே மன வளர்ச்சி குன்றியதுபோல் தோற்றத்தைக் கொண்டிருந்தான்.
அந்த சிறுவனை அவன் தந்தை என்னிடம் அழைத்து வந்த போது அவனிடம் இருக்கும் குறையை கண்டறிவதற்காக சிறுவனுக்கு ஐ க்யூ டெஸ்ட் செய்து பார்த்தேன். சோதித்துப் பார்த்தபோது அந்தச் சிறுவனுக்கு சராசரிக்கும் குறைவான ஐக்யூ மட்டுமே இருப்பது புரிந்தது.
ஐக்யூ குறைவாக - மன வளர்ச்சி குறைவாக இருப்பவர்களை பல தடவை சொல்லிக்கொடுத்து மேம்படுத்தும் வகையினர், பயிற்சியளித்து மேம்படுத்தும் வகையினர், ஒரு வகையிலும் மேம்படுத்த முடியாதவர்கள் என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
இந்தச் சிறுவன் இரண்டாவது வகை... அதாவது பயிற்சி அளித்து மேம்படுத்தும் அளவுக்கு ஐக்யூ கொண்டிருந்தான். அவனிடம் ‘உன் பெயர் என்ன? என்ன படிக்கிறாய்?’ என்பது போன்ற எளிய கேள்விகளை கேட்ட போதுகூட அவனால் சரியான முறையில் பதில் கூற முடியவில்லை.
குறிப்பாக பேசும்போது வேறு விஷயங்களில் கவனம் கொண்டு துறுதுறுவென்று எதையாவது செய்து கொண்டேயிருந்தான். பள்ளியிலும் குறைந்தாற்போல பத்து நிமிடம்கூட பாடத்தில் கவனம் செலுத்துவதில்லை. பிற குழந்தைகளை கிள்ளி வைத்து விடுகிறான். எப்போதும் அமைதியில்லாமல் துறுதுறுவென இருக்கிறான் என்று அவன் தந்தை கூறினார். இவையெல்லாமே மன வளர்ச்சி குன்றியதற்கான அறிகுறிகள்தான்.
சிறுவனின் இதுபோன்ற ஐக்யூ குறைவுக்கும் மனவளர்ச்சியின்மைக்கும் பல காரணங்கள் இருக்கலாம்.
கருவில் குழந்தையாக இருந்தபோது அவன் தாய் கருக்கலைப்புக்காக உட்கொண்ட மருந்து (அப்படி உட்கொண்டதாக அவன் தாய் கூறினார்) குழந்தையின் மூளையில் உள்ள செல்களைக் கொன்று அதன் மூலம் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்த சிறுவன் பிறக்கும் போது அவன் தந்தைக்கு ஏறக்குறைய நாற்பது வயது. வயதான தாய்க்கு மட்டுமல்ல... வயதான தந்தைக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் மன வளர்ச்சி குன்றிப்போக அரிதான வாய்ப்பு உள்ளது. அல்லது அவர்கள் குடும்பத்தில் ஏதாவது ஒரு தலைமுறையில் மனவளர்ச்சி குன்றியவர் இருந்திருக்கலாம். பல தலைமுறைக்குப் பிறகு இவர்கள் குழந்தை விஷயத்தில் மரபணு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். இவற்றில் எது உண்மையான காரணம் என்பதை உறுதியாக கூறுவது இயலாது. எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம்.
குழந்தைகளின் ஐக்யூ பிறப்பிலேயே குறைவாக இருந்தால் மருந்து மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை அளிக்க முடியாது. அவர்கள் சொல்லிக்கொடுத்தோ அல்லது பயிற்சி கொடுத்தோ மேம்படுத்த வேண்டியவர்கள். இதில் அவர்கள் எந்தவகையில் வருகிறார்கள் என கண்டறிந்து அதற்குப் பொருத்தமான கல்வியும் பயிற்சியும் அளிக்க வேண் டும். இந்தச் சிறுவனை மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்புப் பள்ளியில் சேர்ப்பது நல்ல பலனை அளிக்கும். சாதாரண பள்ளியிலும் படிக்க வைக்கலாம். ஆனால், ஆசிரியர்கள் இந்த சிறுவனின் மனவளர்ச்சி குறைப்பாட்டை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி அவனுக்கு சொல்லித்தர வேண்டும்.
நல்ல பள்ளியில் சேர்த்து நல்ல குடும்பச் சூழ்நிலையில் வளர்த்தால் இந்த சிறுவனை மற்ற சாதாரண குழந்தைகளைப்போல் வளர்த்து ஆளாக்கி விடலாம் என்று சொல்லி சில மன வளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்புப் பள்ளிகளின் அட்ரஸ்களையும் கொடுத்து அந்த சிறுவனையும் அவன் தந்தையையும் அனுப்பி வைத்தேன்’’ என்கிறார் டாக்டர் பா. செல்வராஜ்.
0 comments:
Post a Comment