உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Thursday, November 19, 2009

புத்தக விமர்சனம்

தமிழீழ விடுதலைக்காக தனிப் பெரும் தலைவனாக இருந்து முப்பத்தி மூன்று ஆண்டு காலம் ஆயுதப் போராட்டம் நடத்திய போராளி, பெரும்பான்மையான தமிழ் இளைஞர்களின் நாயகன் பிரபாகரனின் மரணச் செய்தி வெளிவந்த சூட்டோடு சூடாக பதிப்பிக்கப்பட்டுள்ள புத்தகம் “பிரபாகரன்-வாழ்வும் மரணமும்”. நூல் ஆசிரியர் பா.ராகவன் பிரபாகரன் பற்றிய தகவல்களையெல்லாம் வேகமாக திரட்டி கோர்வையாக தொகுத்து எழுதியிருக்கும் இந்நூல் சுவாரசியமானது. ஒர் தலைவனின் வாழ்க்கை வரலாறு, ஓர் இனத்தின் விடுதலை போராட்ட வரலாறு, உரிமைப் போர் வீழ்ந்து போனதன் விளக்கம். ஆசிரியர், சரித்திரம் வெற்றிகளுக்கு மட்டுமல்லாமல் சமயத்தில் சரிவுகளுக்கும் அபாய விலை சொல்லிவிடும் என்று குறிப்பிட்டு இருப்பது போல பிரபாகரனின் மரணம் என்னும் விலையை விவரமாக சொல்லும் புத்தகம்.

போராட்டத்தின் தொடக்கப் பலியாடு ஆல்பிரட் துரையப்பாவின் கொலையிலிருந்து மாத்தையாவின் மரண தண்டனை, புலிகள் செய்த மாபெரும் தவறான முன்னால் பாரதப் பிரதமர் ராஜிவ் காந்திப் படுகொலை வரை ஆராய்ந்து பார்த்தால் பிரபாகரன் என்றொரு தனி மனிதனின் ஆளுமையே தமிழர் விடுதலைப் போரை நடத்தியிருப்பதை இப்புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை கூர்ந்து கவணிக்கும் போது கண்டறிய முடிகிறது.

என் மண்ணில் என் விருப்படி அலைந்து திரியவும் வாழ்ந்து மகிழவும் இன்னொருவன்ன் எப்படித் தடைபோடலாம் என்று எளிமையான தர்க்கத்தை கருவாகக் கொண்டு எவ்வித அச்சுறுத்தல்களுக்கும் அடங்க மறுத்து சிலிர்த்து எழுந்த அத்தனை பேரையும் கண்டு அக்காட்சியை உரமாகக் கொண்டு வளர்ந்த வீரத் தமிழ் மகன் பிரபாகரன் என்பதை சொல்லும் இப்புத்தகம் அவரின் ஆளுமைக் கூறுகள் என சில குணங்களை படமிட்டு காட்டுகிறது. ”அவர் நண்பர்களுக்கெல்லாம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது, செய்து முடிக்கும் வல்லமை பிரபாகரனுக்கு மட்டுமே இருந்தது” என ஆசிரியர் குறிப்பிட்டு இருப்பதில் இருந்து சிறந்த செயல் வீரனின் ஆளுமையே பிரபாகரனின் ஆளுமை என்பதையும்

”உயரம் சற்று மட்டுத்தான் ஆனால் உறுதியான தேகம் எதையும் தாங்கும் என்பது போல பலசாலி போலிருக்கிறது. ஆனால் முகத்தில் என்ன ஒரு வசீகரப் புன்னைகை கண்ணில் தீப் பொறி மாதிரி ஏதோ ஒன்று” என்று குறிப்பிட்டு இருப்பதிலிருந்து பிரபாகரனின் நல்ல உடல் பலத்தையும், அதுவே அவரின் மன பலத்திற்கு காரணம் என்பதையும்

”பிரபாகரனிடம் இயல்பான ஒரு வழக்கம் உண்டு, அவரால் எந்த கூட்டத்திலும் சகஜமாக இருக்க முடியும். ஆனால் எந்தக் கூட்டத்தின் சட்டை சாயமும் ஒட்டாமல் பார்த்துக் கொள்வார்” என்று குறிப்பிட்டு இருப்பதில் இருந்து பிரபாகரனின் தனித்து நிற்கும் தாகத்தையும்

”நாமே சமைத்து சாப்பிட்டால் தான் சாப்பாட்டு ருசி குறித்து அதிகம் யோசிக்காமல் இருப்போம்” என புலிகளூக்கு அறிவுறுத்தியிருப்பதிலிருந்து இலட்சியத்தை அடைவதற்கான துறவற மனநிலையையும் அறிந்து கொள்ளலாம்.

ஒருவரின் வாழ்க்கையையும் வாழ்க்கையில் ஒருவர் செய்யும் செயல்களையும், அவர் வாழ்வின் முடிவையும் தீர்மானிப்பது லைப் ஸ்கிரிப்ட் என்னும் உளவியல் கூறுதான். சிறுவயதில், குறிப்பாக ஏழு வயதிற்குள்ளாக, இந்த லைப் ஸ்கிரிப்ட் நம் மனதில் உருவாகி விடுகிறது. பின்னர் ஒருவர் மரணம் அடையும் வரை அந்த லைப் ஸ்கிரிப்ட் அவரின் வாழ்வை தீர்மானிக்கிறது. ஒருவரின் லைப் ஸ்கிரிப்டை தெரிந்துகொள்ள அவருக்கு பிடித்த கதைகளைத் தெரிந்து கொண்டாலே போதுமானது. போராளி பிரபாகரனுக்கு பிடித்த கதைகள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் மாவீரன் பக்த்சிங் ஆகியோருடையது என்று ஆசிரியர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். விளையாட வேண்டும். பள்ளிக்கூடம் போக வேண்டும் வீட்டுக்கு வந்தால் தாய்மடி என எல்லா பையன்களைப் போல் இல்லாமல் அடிக்கடி தனியே போய் உட்கார்ந்து யோசித்து, தனித்துவம் மிக்க பையனாக உருவெடுத்தது ஆகியவைக்கான காரணம் பிரபாக்ரனின் மனதில் உருவான புரட்சியாளன் லைப் ஸ்கிரிப்ட்தான் என்பதை புரிந்து கொள்ளலாம். இறுதிவரை போர் களத்திலேயே இருந்து உயிர்விட்டதற்கான ஊக்கியும் இதுவே. பலரும் கூறி வருத்தப்படுவது போல் பிரபாகரன் இலங்கையின் ஒரு பகுதியை ஆட்சி செய்தாலும் ஜனநாயக வழிக்கு வராமல் போனதற்கு காரணமும் அவருடைய லைப் ஸ்கிரிப்டாக இருக்கலாம்.

முன்னால் இந்திய பிரதமர் ராஜிவ் படுகொலை பற்றி ஸ்ரீபெரும்புதூர் அத்தியாயம் விவரமாக அலசியிருக்கிறது. ராஜிவ் காந்தி பற்றிய பிரபாகரனின் புரிதலை ஆசிரியர் நன்கு விளக்கியிருக்கிறார். தொடர்ந்து இரண்டு மூன்று அத்தியாயங்களைப் படிக்கும் போது சாதாரன வாசகனுக்கு புரிவது ஒரு பேரரசின் ஆட்சியாளருக்கு சிறு இனக் கூட்டத்தின் இன்னல்கள் புரிவது கடினம் என்பதும், ஓர் இனப் போராளிக்கு ஓர் பேரரசின் இராஜதந்திர முடிவை புரிந்து கொள்வது கடினம் என்பது மட்டுமே விளங்குகிறது. இந்திய இலங்கை ஒப்பந்தமும் அதைத் தொடர்ந்து ராஜிவ் காந்தி படுகொலையையும் தவறான புரிதல்களால் ஏற்பட்ட சரிசெய்யவே முடியாத விரிசல்கள் என்பதையும் சாதாரன வாசகனுக்கு இந்த அத்தியாயங்கள் புரிய வைக்கின்றன.

போர்க்களத்தில் விடுதலைப்புளிகள் நீண்ட நாள் போராடி தாக்குபிடித்ததற்கு அவர்களின் யதார்த்த போர்கள அனுப்வங்களே காரணம் என்பதையும் சில அத்தியாயங்களைப் படிக்கும் போது தெரிந்துகொள்ளலாம். ”இலங்கை வீரர்களுக்கு குறி பார்த்து சுடத் தெரியாது என்பது ஒன்று. வெட்டவெளியில் சுற்றி வளைக்கப்பட்டு சிக்கிக் கொண்டாலும் விடுதலைப் புலிகளுக்கு தப்பிக்கத் தெரியும் என்பது இரண்டாவது” என புலிகள் உணர்ந்ததாக ஆசிரியர் எழுதியிருப்பது இதற்கு ஓர் உதாரணம்.

இறந்த கதை என்னும் 25ம் அத்தியாயத்தில் உலகத் தமிழர்களின் மனநிலையை உணர்ந்து கொள்ள ஓர் வாய்ப்பை வழங்கியிருக்கிரார் ஆசிரியர். பிரபாகரன் மரணம் பற்றிய வதந்திகளை தொகுத்து வழங்கி இருக்கிறார் ஆசிரியர். இவ்வதந்திகளையே உலகத் தமிழர்களின் வெளிப்பட்ட எதிர்பார்புகளாகக் கொண்டால் பிரபாகரன் பற்றிய மற்றவர்களின் மனப்பாங்கை நன்கு புரிந்து கொள்ளலாம். பிரபாகரன் இறந்த செய்தி கேட்ட இரவில் அழுத, பகலில் வருத்தம் கொண்ட, தொலைக்காட்சி முன்பே அமர்ந்திருந்தவர்களின் மனநிலையே இறுதி அத்தியாயம் நன்கு விளக்குவது.

புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ள பிரபாகரன் தொடர்பான படங்கள் ஒரு சிரத்தையுள்ள தலைவனின் வாழ்க்கையை நம் கண்முன்னே நிறுத்துகின்றன. பிரபாகரனின் திருமணப்படம் ஓர் பாலைவனச் சோலை. போர், போராட்டம் என தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையானாலும் தனிமனித உணர்வுகளும் முக்கியமானவை, தவிர்க்க இயலாதவை என்பதை பிரபாகரனின் காதலும், கல்யாண படமும், குழந்தைகளுடனான குடும்ப படமும் நமக்கு உணர்த்துகின்றன.

விடுதலைப் போராட்டமோ, அல்லது வேறு எதுவானாலும் கொண்ட முயற்சியில் வெற்றி பெற விழையும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய செயல்வீரன் ஒருவரைப் பற்றிய நூல் இது. கிழக்கு பதிப்பகத்தின் சிறந்த நூல் பிரபாகரன்-வாழ்வும் மரணமும். இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இந்த முகவரிக்கு செல்லுங்கள்: http://nhm.in/shop/978-81-8493-150-1.html

0 comments:

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP