உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Wednesday, June 13, 2012

குழந்தைகளுக்கு பணம் கொடுக்கலாமா?

வீட்டில் இருக்கும் சாப்பாட்டை உண்பதை விட கடைகளில் திண்பண்டங்களை வாங்கி உண்பதிலேயே குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகம். அதிலும் தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்க்கும் குழந்தைகளுக்கு திண்பண்டங்களைப் பற்றிய விபரங்கள் அதிகமாக தெரிவதால் அவற்றை வாங்கி உண்ண வேண்டும் என்ற அவா அவர்களிடம் அதிகம். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் ஏதேனும் வாங்கி உண்ண காசு கொடுத்து அனுப்புவது காலம் காலமாக இருந்து வரும் பழக்கம். அப்பழக்கம் தற்காலத்தில் சற்று வலிமையடைந்து இருக்கிறது. தங்கள் குழந்தைகளுக்கு குறைந்தது பத்து ரூபாய் முதல் அதிகப்பட்ச பணம் கொடுத்து அனுப்பும் பெற்றோர் தற்போது அதிகரித்து இருக்கிறார்கள்.

சிறுவயது குழந்தைகளுக்கு காசு கொடுத்து பழக்குவது அவர்களிடம் கெட்ட விளைவுகளையே உண்டாக்குகிறது. கையில் காசு இருப்பதால் நினைத்த போதெல்லாம் கடைக்குச் சென்று ஏதேனும் வாங்கி உண்ணும் குழந்தைகளுக்கு ஏதேனும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு விடுகிறது. கடைக்குச் சென்று தான் விரும்புவதை வாங்கி உண்ணும் குழந்தைகள் வீட்டு உணவுகளை நாளடைவில் வெறுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். குழந்தைகள் வாங்கும் திண்பண்டங்களில் சாக்லெட்டுக்கே முதலிடம். அதிகமாக சாக்லெட் உண்ணும் குழந்தைகளுக்கு பற்சொத்தை விரைவில் ஏற்பட்டு பல்லைப் பிடுங்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது. கடையில் கிடைக்கும் ஆரோக்கியமற்ற பிற பொருட்களை வாங்கி உண்பதால் ஏற்படும் உடல்நலக் கேடும் அதிகம். பெற்றோர் திண்பண்டங்களை வாங்கிக் கொடுப்பதாயிருந்தால் சரியான திண்பண்டத்தை வாங்கிக் கொடுக்கலாம். எந்த திண்பண்டத்தையும் அளவுக்கு அதிகமாக உண்ணாதவாறு குழந்தையைக் கண்காணித்துக் கொள்ளலாம். தரமான பொருட்களை வாங்கிக் கொடுக்கவும் வாய்ப்பு உண்டு.

சிறுவயதிலிருந்தே தன் விருப்பம் போல் பலவற்றையும் வாங்கி சாப்பிட்டு பழகிவிட்ட குழந்தைகளுக்கு மேல்நிலைப் பள்ளி அல்லது கல்லூரி செல்லும் போது திண்பண்டங்களின் மீது வெறுப்பு ஏற்பட்டு அலுப்புத் தட்டி விடுகிறது. எப்போதும் போல் பெற்றோரிடம் இருந்து பணம் பெறும் அவர்கள் கையில் காசை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று யோசிக்கும் போது தான் மனக்கிளர்ச்சியை உண்டாக்கும் மதுப் பழக்கம் மற்றும் போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாவதெல்லாம் நடக்கிறது. அதிலும் காசு வைத்திருக்கும் நான்கைந்து நண்பர்கள் கிடைத்து விட்டால் நிலைமை விரைவிலேயே மோசமாகிவிடும். குழந்தைகளுக்கு காசு கொடுத்து பழக்கிய பெற்றோர் இச்சமயத்தில் வருத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

செலவு செய்வதற்காக குழந்தைகளுக்குப் பணம் கொடுப்பதை விட சேமிக்க கொடுக்கலாம். பணம் கொடுத்து தன் முன்னிலையிலேயே உண்டியலில் போடுமாறு பெற்றோர் குழந்தைகளை ஊக்கப்படுத்தலாம். பின்னாளில் இந்நடத்தை சேமிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் வளர்க்கும். குழந்தைப் பருவத்தில் இருந்தே சேமித்துப் பழகியவர்கள் பிற்காலத்தில் படித்து முடித்தவுடன் வேலைக்குச் சென்று விடுகின்றனர். மேலும் தான் பெறும் சம்பளப் பணத்தை கண்ணும் கருத்துமாக செலவு செய்பவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு குடும்ப பொறுப்பும் அதிகமாக இருக்கிறது. திட்டமிட்டு பொருட்களை வாங்கும் திறமை வளர்ந்து விடுகிறது.

கிடைத்த பணத்தையெல்லாம் செலவு செய்து வளரும் குழந்தைகள் பின்னாளில் மனதில் நினைத்ததையெல்லாம் வாங்கிக் குவித்து விடும் இயல்பினராக மாறிவிடுவர். மேலும் கடன் வாங்கியாவது செலவு செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு பெரிய கடன் சுமையை தன் மீது இவர்கள் ஏற்றிக் கொள்வார்கள்.

பணம் இல்லாவிட்டால் என்ன நிகழும் என்பதை அவ்வப்போது குழந்தைகளுக்கு புரிய வைப்பது நல்லது. அப்போது தான் உதாரித்தனமாக செலவு செய்வதை பிற்காலத்தில் தவிர்ப்பார்கள். குறைவான பணத்தை எடுத்துக் கொண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்று பணம் போதவில்லை என்பதற்காக வேண்டிய பொருளை வாங்காமல் திரும்பி வரலாம். அப்படி வருவதை உணரும் குழந்தைகள் பணத்தின் அருமையை தானாகவே உணர்ந்து கொள்வார்கள். இதுபோன்ற மேலும் சில வழிமுறைகளை பயன்படுத்தி குழந்தைகளிடம் சிறுவயதிலேயே பணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். அதே சமயத்தில் குழந்தைகளை கஞ்சத்தனம் உள்ளவர்களாக உருவாக்கி விடக்கூடாது என்பதில் பெற்றோர் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவசியமான செலவுகளை செய்வதையும் அநாவசியமான செலவுகளை தவிர்ப்பதையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதே சரியானது.

Monday, June 11, 2012

படிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் கவனச்சிதைவை தடுப்பது எப்படி?

விழிப்புணர்வு முழுவதையும் ஒன்றின் மீது குவிப்பதே கவனமாகும். ஆப்பிள் கவனம் நம்மிடையே மிகவும் பிரபலமானது. அர்ச்சுனரின் ஆசிரியர் மற்ற மாணவர்களிடம் மரத்தில் என்ன தெரிகிறது என்று கேட்ட போது கவனச்சிதைவு உள்ள மாணவர்கள் இலை, பூ, கிளை போன்றவையெல்லாம் தெரிகிறது என்று பதிலளித்தனர். ஆனால் கவனம் சிதறல் இல்லாத அர்ச்சுனன் தான் அம்பு எய்து வீழ்த்த வேண்டிய ஆப்பிள் மட்டுமே தன் கண்களுக்கு தெரிவதாக ஆசிரியரிடம் கூறினார். ஆப்பிளை வீழ்த்தியும் காட்டினார். அது போன்ற கவனம் மட்டும் நம் குழந்தைகளுக்கு இருந்து விட்டால் எதையும் சாதித்து விடுவார்கள். ஆனால் நம் குழந்தைகளின் கவனமோ ஒரு நொடியில் ஓராயிர விஷயங்களுக்கு மாறிக் கொண்டிருக்கிறது. நுண்ணறிவு அதிகம் உள்ள குழந்தைகளுக்கும் கவனச்சிதைவு தான் முக்கிய தடைக்கல். மற்ற எல்லா விஷயத்திலும் குறையேதும் இல்லாத குழந்தைகளும் இந்த விஷயத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.

நாம் வாழும் சூழ்நிலையும் வளர்ந்த சூழ்நிலையுமே கவனச்சிதைவுக்குக் காரணம்.

நம் சூழ்நிலையில் எண்ணற்ற தூண்டுதல் இருக்கின்றன. ஒவ்வொரு நொடிப் பொழுதும் கணக்கிலடங்காத தூண்டல்கள் நம் ஐம்புலன்களையும் தாக்கிக் கொண்டிருக்கின்றன. அவைகளில் நம் ஆர்வத்தைத் தூண்டுவனவே அதிகம். சூழ்நிலையில் இருந்து விலகிக் கொள்வதைத் தவிர இத்தூண்டல்களில் இருந்து தப்பிக்க வேறு வழியேதும் இல்லை.

பச்சிளம் குழந்தை பிறந்து சில மணி நேரங்களிலேயே கவனம் தொடங்கி விடுகிறது. தாய் தன்னை தூக்கி கையாளும் போது மேலே கீழே சாய்வது, அதற்குப் பின் சூழ்நிலையில் பொருட்கள் அசைவது ஆகியவற்றை குழந்தை கவனிக்கத் தொடங்கி விடுகிறது. பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு ஒன்றின் மீதான கவனத்தை தக்கவைத்துக் கொள்ள குழந்தை பழகிக் கொள்கிறது. நீடித்த கவனம் (Sustained Attention) என்று அழைக்கப்படும் இக்கவனமே பிற்காலத்திற்கு தேவையானது. பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு நீடித்த கவனத்தைப் பொறுத்தே படிப்புத் திறன் அமைகிறது. சிறு வயதிலிருந்தே நீடித்த கவனத் திறனை வளர்த்துக் கொண்ட குழந்தைகள் பெரியவர்களானாலும் அத்திறன் தொடரும். பொதுவாக வீட்டின் முதல் குழந்தைக்கு நீடித்த கவனம் குறைவாகவே இருக்கும். பெற்றோர் குழந்தையின் மீது உள்ள அதீத பிரியத்தால் ஏராளமான விளையாட்டு சாமான்களை வாங்கிக் குவிப்பர். புதிய புதிய விளையாட்டு சாமன்கள் கிடைக்கும் போதெல்லாம் குழந்தை பழையனவற்றை விட்டுவிட்டு புதிய ஒன்றின் மீது கவனத்தை செலுத்த ஆரம்பித்து விடும். பிற்காலத்தில் அதுவே பழக்கமாகி எப்போதும் புதிய விஷயங்களின் மீதே கவனம் செலுத்த மனம் அலைபாயும்.

மேற்கண்ட காரணங்களினால் கவனச் சிதறலைக் கொண்ட குழந்தைகளுக்கு தீர்வு என்ன?

• கவனச்சிதறல் கொண்ட குழந்தைகள் படிக்கும் போது பெற்றோ உடனிருப்பது அவசியம். குழந்தை படித்து முடிக்கும் வரை கூடவே அமர்ந்திருக்க வேண்டும். படித்துக் கொண்டிருக்கும் போது வேறு ஏதேனும் விஷத்தில் குழந்தை கவனம் செலுத்துவதாக தெரிந்தால் உடனே அதை விடுத்து படிக்கத் திரும்பும் படி குழந்தைக்கு அறிவுறுத்த வேண்டும்.

• குழந்தைகள் படிக்கும் போது சில பொருட்கள் அல்லது சில நிகழ்வுகள் அவர்களின் கவனத்தை ஈர்க்கலாம். அவைகளுக்கு தடை கற்கள் (Road Blocks) என்று பெயர். முடிந்த வரை படிக்கும் சூழல் தடைக் கற்கள் இல்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

• படிக்கும் சமயத்தில் சில பொருட்கள் அல்லது சில நிகழ்வுகள் படிப்பை துரிதப்படுத்தும். அது போன்றவைகளுக்கு தூண்டிகள் (Triggers) என்று பெயர். அதிகளவு தூண்டிகள் படிக்கும் சூழலில் இருப்பது நல்லது. காற்றோட்டத்தை அளிக்கும் மின்விசிறி, தண்ணீர் பாட்டில் போன்றவை தூண்டிகள் பட்டியலில் அடங்குபவை.

• படிக்கும் சமயத்தில் பெற்றோர் தொலைபேசி, தொலைக்காட்சி போன்றவற்றை அணைத்து விடுவது நல்லது. முடிந்தவரை வீட்டில் பிற வேலைகள் நடப்பதை குறைத்து விடுவது அவசியம்.

• படிக்கும் குழந்தைகளின் கவனம் பல விஷயங்களிலும் அலைந்து பெற்றோரிடம் ஏதேனும் பேச முற்படுவர். அவற்றை பின்னர் கேட்பதாக கூறி படிப்பதை தொடரச் செய்ய வேண்டும். படித்து முடித்தவுடன் குழந்தை சொல்ல வந்த விஷயத்தை ஆர்வமுடன் கேட்டுக் கொள்ளலாம்.

• கவனச் சிதறல் கொண்ட குழந்தைகளை அதிகாலையில் படிக்க வைப்பது நல்லது. மற்றவர்கள் உறங்கி கொண்டிருக்கும் அமைதியான சூழலில் இடைஞ்சல்கள் குறைவாக இருக்கும்.

இந்த முறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் குழந்தைகளின் கவன சிதறலை பெருமளவு குறைக்க முடியும்.

Friday, June 8, 2012

குழந்தைகளை விடுதியில் சேர்த்து படிக்க வைக்கலாமா?

இக்கால குழந்தைகளுக்கு கல்வி மிக அவசியமானது. என்னவாவது செய்து தங்கள் குழந்தைகளை அதிக மதிப்பெண் பெற வைத்து விட்டால் பின்னர் தங்களுக்கு கவலை இல்லை என்பது பெற்றோர்களின் கருத்தாக இருக்கிறது. அதற்கேற்றால் போல நாடு முழுவதும் தரம் வாய்ந்த பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய எல்லா பள்ளிகளுமே விடுதி வசதி கொண்டவைகளாக இருக்கின்றன. குழந்தைகளை சேர்க்கப்போனால் விடுதியுடன் கூடிய சேர்க்கையையே பள்ளி நடத்துபவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அவ்வாறே விடுதியில் குழந்தைகளை சேர்த்து விட்டால் பெற்றோருக்கும் பெரிய பாரம் குறைகிறது. மாணவர்களின் மதிப்பெண்களும் உயருகின்றன. இதைப் பார்க்கும் பல பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளையும் விடுதியில் சேர்த்து படிக்க வைத்தால் என்ன என்ற யோசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

குழந்தைகளை வீட்டில் வைத்து வளர்ப்பது தற்காலத்தில் சற்று சிரமமான காரியம் தான். அதிலும் குறிப்பாக பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியராக இருந்தால் அவர்களை பராமரித்து படிக்க வைப்பது சிரமத்திலும் சிரமம். அதிகாலையில் எழுந்திருக்கவே எழுந்திருக்காத குழந்தையை எழுப்பி படிக்க வைக்க வேண்டும். சரியான நேரத்திற்குள் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். மாலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட டியூசன்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இதற்கிடையில் குழந்தைகளுக்கு ஏற்படும் கவனச்சிதைவை சரியாக கண்கானித்து அதை ஒழிக்க தக்க முயற்சி எடுக்க வேண்டும். இத்தனையும் செய்து அதிக மதிப்பெண் பெற வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. அதனால் ஒரு விடுதியுடன் கூடிய நல்ல பள்ளியில் குழந்தையை இளம் வயதிலேயே சேர்த்து விட்டால் பெற்றோர் தங்கள் வேலைகளைப் பார்க்கலாம். குழந்தையின் படிப்பும் நன்றாக இருக்கும்.

எண்ணிப்பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் ஒரு குழந்தையை விடுதியில் சேர்த்து படிக்க வைப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பெற்றோர் தங்கள் குழந்தைகளை வீட்டில் வைத்து வளர்ப்பதே நல்லது. அதுதான் சரியான முறையும் கூட. வீட்டில் வைத்து வளர்க்கப்படும் குழந்தைக்கு பெற்றோர் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை கவனித்து அதுபோல தங்கள் நடத்தையை அமைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. வீட்டையும் குடும்பத்தையும் பராமரிப்பது எப்படி? பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி? விருந்தினர்களை உபசரிப்பது எப்பது? மற்றவர்களும் இணங்கிப் போவது எப்படி? பிறருக்கு ஏன் உதவி செய்ய வேண்டும்? என்பது போன்ற முக்கியமான விஷயங்களை பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள். மேலும் குழந்தைகளுக்கு அவ்வப்போது அம்மா அப்பாவுடன் இருக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றும். அதுபோன்ற நேரத்தில் பெற்றோருடன் வளரும் குழந்தைகளுக்குப் பிரச்சனை இல்லை. ஒருநாள் பள்ளிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் பெற்றோருடன் இருந்து விளையாடி மகிழலாம். விடுதியில் வளரும் குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பு இல்லை. விடுதிக் குழந்தைகள் சற்று உடல் நலம் சரியில்லை என்றால் கூட விதிமுறைப்படி செய்ய வேண்டிய வேலைகளை செய்தே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தீவிரமாக உடல் நலம் பாதிக்கப்பட்டால் தான் கடமைகளிலுருந்து விலக்குப் பெற முடியும். சாப்பாட்டு விஷயத்திலும் அது போன்றே தான். வீட்டில் பல்வேறு வகையான சத்துப் பொருள்களை உண்டு வளரும் குழந்தைகள் விடுதியில் திட்டம் போட்டு வழங்கப்படும் தினசரி உணவுகளை உண்டு அலுப்புக்கு உள்ளாகிவிடுவர்.

விடுதியில் வளரும் குழந்தைகளிடம் ஒருசில ஆளுமை குறைபாடுகளும் காணப்படுகின்றன. பெரும்பான்மையான விடுதியில் வளர்ந்த குழந்தைகள் வெளிஉலகுக்கு வரும்போது மிக மென்மயானவர்களாக இருக்கின்றனர் அல்லது சற்று கோமாளித்தனம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு வீட்டில் வளர்ந்த குழந்தைகளைப் போல வாழ்க்கையின் நடைமுறைகள் அவ்வளவாக தெரிவதில்லை. தன்னைப் பற்றி அதிகம் சிந்திப்பவர்களாகவும் சற்றே சுயநலம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் பிறரைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. உறவினர்கள் மீதான மரியாதையும் இவர்களிடம் குறைவாக இருக்கிறது.

அப்படியானால் விடுதியில் குழந்தைகளை சேர்க்கவே கூடாதா என்ற கேள்வி எழலாம். சுழ்நிலை சந்தர்ப்பங்களை கருத்தில் கொண்டு ஒரு குழந்தையை விடுதியில் சேர்க்கலாமா வேண்டாமா என்பதை பெற்றோர்களே முடிவு செய்து கொள்ளலாம். என்னிடம் உளவியல் ஆலோசனை பெற வந்த ஓர் தாயிடம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அவர் பெண் குழந்தையை விடுதியில் சேர்த்து விடுமாறு நானே ஆலோசனை கூறினேன். அந்த முடிவு அத்தாயின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது. அவருக்கும் அவர் கணவருக்கும் தீராத சண்டை. அவர் கணவர் வேலையில்லாதவர். வீட்டிலேயே பெரும்பான்மையான நேரம் இருந்து கொண்டு குடும்பத்தினரிடம் வம்பு செய்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக குழந்தையையும் கொடுமைப் படுத்த ஆரம்பித்து விட்டார். எப்போது பார்த்தாலும் திட்டிக் கொண்டே இருப்பது, அடித்து துன்புறுத்துவது ஆகியவை சாதாரணமாகி விட்டது. இது போன்ற சூழ்நிலையில் வீட்டில் ஓர் குழந்தை வளர்வதை விட விடுதியில் வளர்வது எவ்வளவோ மேல். இதே போல் வெளியூர்களில் அல்லது வெளிநாடுகளில் பெற்றோர் வசித்தல், குழந்தை வளரும் சூழ்நிலை சரியில்லாமல் இருத்தல், யாரேனும் ஒரு பெற்றோர் இல்லாமல் இருத்தல் போன்ற காரணங்களுக்காகவும் விடுதியில் குழந்தையை சேர்ப்பது தவறல்ல.

தவிர்க்க முடியாத காரணங்களுக்காக குழந்தைகளை விடுதியில் சேர்க்கலாம். ஆனால் அத்தியாவசிய காரணம் எதுவுமே இல்லாமல் குழந்தையை விடுதியில் தள்ளுவது சரியல்ல. என்னால் என் குழந்தையை வளர்க்க முடியவில்லை, யாரேனும் வளர்த்துக் கொடுத்தால் அதற்கு பணம் கொடுத்து விடலாம் என்று நினைக்கும் பெற்றோர்களே குழந்தைகளை காரணமில்லாமல் விடுதியில் சேர்க்க முடிவெடுப்பர்.

திறமையான பெற்றோராக இருந்து நல்ல முறையில் குழந்தைகளை வளருங்கள்.

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP